Wednesday, October 16, 2024

குறுங்கதை - ஓர் பதிவு


குறுங்கதை - ஓர் பதிவு  

--------------------------------------

தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு மயங்கி கிடந்தான் பட்டாபியின் மகன் வினோத். ஆம்புலன்சின் சத்தம். வெளியே மழையின் ஓலம். எதுவும் காதில் விழவில்லை பட்டாபிக்கு. மழை நீர் சாலையில் வெள்ளமாக ஓடுவதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை.  

வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு டிராபிக் சந்திப்பின் நகர முடியாத நிலையில் நனவுக்கு வந்து சுற்றி பார்த்தார். கை பாக்கெட்டில் தேடியது. பிறகு சுற்றித் தடவிப் பார்த்து விட்டு அருகில் இருந்த சுதாவிடம், "போன் விட்டுட்டேன்டி," என்றார் பதட்டத்துடன்.

"என் கிட்ட இருக்கு," என்றாள் அவள். தூக்கிக் காட்டினாள். 

அவர் பதட்டம் குறையவில்லை. சுற்றி, வினோத்தை படுக்கப் போட்டிருந்த ஸ்ட்ரெச்சருக்கு கீழே என்று பார்த்தார்.  

ஆஸ்பத்திரியில் வினோத்தை ICU அழைத்துச் சென்றார்கள். 

"Pulse is not bad," என்றார்  டாக்டர். "சின்ன பையன் தான? என்ன வயசு?"

"பதினேழு, டாக்டர். இப்போ தான் ப்ளஸ் டூ எழுதினான்."

அவர், "ஓ," என்று தலையாட்டி, பின், "போலீஸ் வருவாங்க," என்று விட்டுச் சென்றார்.

பட்டாபியும் சுதாவும் வெளியே அமர்ந்தார்கள். 

"நான் வீட்டுக்குப் போய் போன எடுத்திட்டு வந்திர்றேன்," என்றார் பட்டாபி.

"இந்த மழையிலயா? அப்படி எதுக்கு அந்தச்  சனியன்? எப்போ பாத்தாலும் அதை பாத்தே பையனை விட்டாச்சு," என்றாள் சுதா.

பட்டாபி அதிசயமாக பதில் எதுவும் சொல்லவில்லை. உம்மென்று அமர்ந்திருந்தார்.

"என் போனை வேணா பாருங்க, " என்றாள் சுதா, ஐந்து நிமிடம் கழித்து.

"வேண்டாம். அதுல ஆபீஸ் கால் எடுக்க முடியாது."

சுதா, குழப்பத்துடன், "எதுக்கு எடுக்கணும் ?" என்னும் போது போலீஸ் வந்து விட்டார்கள்.


*


சுதா பாத்ரூம் போய் முகம் கழுவி வந்த போது, பட்டாபி அங்கே இல்லை. சுற்றித் தேடிப் பார்த்தாள். கீழே போய் பார்த்த போது ஆட்டோ ஸ்டாண்டில் நின்று பேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அவள் ஓடிப் போய், "என்னை விட்டு எங்க போறீங்க?" என்றாள்.

"வீட்டுக்கு போயிட்டு வந்திர்றேன்."

"போனுக்கா? பையன் இங்க சாகக் கிடக்கான்?  அப்படி என்ன நாசமாய் போன ஆபீஸ்?"

ஆட்டோக்காரர்கள் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவள் அவரை உள்ளே இழுத்துப் போனாள். 

"ஆபீஸ்ல சொல்லணும்டி."

"இங்க ஏதாவது கம்பியூட்டர்லேருந்து சொல்லுங்க."

"என் VPN வேணும்."

"உங்கம்மாவுக்கு தான் இங்கிலீஷ், யூடியூப் எல்லாம்  தெரியுமே. என் போனை வச்சு கூப்பிட்டு ஆபீஸ்ல சொல்ல சொல்லுங்க."

பட்டாபி அவள் போனை வாங்கிக் கொண்டார். 

"அவளுக்கு எம்பது வயசாச்சு. நீ போ, நான் வரேன்."


*


"அம்மா, பட்டாபி."

"சொல்லுப்பா...என் குழந்தை இருக்கானா?"

"ஐயோ அதெல்லாம் இருக்கான்.  நீ கொஞ்சம் என் கம்பியூட்டருக்கு போயேன்."

அவர் அம்மா ஓவென்று அழுதாள். அவர் கண்கள் பனித்தன.

"அம்மா, கொஞ்சம் அவசரம். நான் சொல்றத முதல்ல பண்ணேன்?"

அம்மா மூக்குச் சிந்தியவாறே நடப்பது கேட்டது. 

"கம்பியூட்டர் ஆன்ல தான் இருக்கா?"

"எப்பவும் ஆன்ல தான் இருக்கும். ஸ்க்ரீன்ல என்ன இருக்கு?"

"பேஸ்புக்."

"நான் ஒரு லிங்க் அதுல அனுப்பி இருக்கேன். வந்திருக்கா?"

சற்று அமைதி.

"சுதான்னா அனுப்பிருக்கா?"

"அவ போன்ல இருந்து நான் தான் அனுப்பினேன். அத க்ளிக் பண்ணு."

மறுபடி அமைதி. பின், "என்னடா இது? ஏதோ ஆஃபீஸ் வேலைன்னு நினைச்சேன்?"

"நீ அத கொஞ்சம் delete பண்ணேன்."

"உன்ன யாரு இப்படி கன்னாபின்னானு ஊர் விவகாரம் பத்தில்லாம் பேஸ்புக்ல எழுதச் சொல்றது?"

"அம்மா, அதெல்லாம் அப்புறம். முதல்ல delete பண்ணு."

சுதா படியில் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் புன்னகை.