Monday, August 15, 2022

பிரிட்டிஷ் போலீஸ் vs தமிழ்நாடு போலீஸ்


 காந்தி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் போலீஸ் தேசத்துரோகம் அது இது என்றெல்லாம் செக்ஷன் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

யோசித்துப் பார்த்தால் இதுவே இந்திய மக்கள் அவர்கள் பின் திரள வழியாகி விட்டது.
இன்றைய தமிழக போலீஸ் அக்காலத்தில் இருந்திருந்தால் காந்தி மேல் "அரசு குப்பைத் தொட்டியை ஓங்கி மிதித்தார்" என்று Public Property damage செக்ஷனில் கேஸ் போட்டிருப்பார்கள்.
உடனே இந்திய மக்களில் பாதிப் பேர் "குப்பைத் தொட்டியை என்ன இருந்தாலும் மிதித்திருக்கக் கூடாது," என்று சொல்லி வீட்டில் அமர்ந்த வண்ணம் காந்தியைக் கை கழுவி விட்டிருப்பார்கள்.
சுதந்திர போராட்டம் அப்படியே அமுங்கி இருக்கும்.
2015-ல் அதிமுக பொதுக்குழுவின் போது சென்னை நகரம் முழுவதும் பெரிய பெரிய வளைவுகளையும் கட்-அவுட்டுக்களையும் ஜெயலலிதா படத்துடன் அக்கட்சி வைத்தது.
பல பேருந்து நிறுத்தங்களை மூடி பேனர் வைத்திருந்தார்கள்.
இதைக் கண்டிக்கும் வண்ணம் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம், அத்தர் மற்றும் சந்திரமோகன் ஆகிய மூவரும் மயிலாப்பூரில் பேனர்களை அகற்றினார்கள்.
பிரிட்டிஷார் போலீசாக இருந்தால் "மகாராணியை அவமதித்தார்" என்று நேரடியாக வழக்குப் பதிவு செய்து மக்கள் எல்லோரையும் கடுப்படையச் செய்திருப்பார்கள்.
தமிழக போலீஸ் சிம்பிளாக Public property damage என்று பிடித்து மேஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துப் போய், அவர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ரிமாண்ட் செய்து விட்டார்கள்.
திமுக ஆட்சியில் அவர்களுக்குப் பிடிக்காததை எழுதினால் அது போலவே "முறைகேடாகப் பணம் வாங்கியிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது," என்று ரிமாண்டில் வைத்து விடுவார்கள்.
நாம் எல்லோரும் பணம் வாங்கினாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதிலேயே அவர்கள் வென்று விடுவார்கள்.
இன்றைய காந்திகள் பலர் இப்படியே மறைந்து விட்டார்கள்.

No comments: