வஞ்சனை - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை (1960களில் வெளிவந்தது)
இரவின் அமைதியில் ஊரே அடங்கிக் கிடக்கிறது. மண்ணுருகப் பெய்த பகல் கோடையின் வெப்பத்தில் வாடி வதங்கியிருந்த நிலங்களை இரக்கத்துடன் வருடிவிட்டுக் கொண்டிருந்த இளம் காற்றின் சுகத்தில், நான் மட்டும் உடல் களைத்திருந்தும் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்த எண்ணற்ற எண்ண அலைகளினால் துயிலின்றிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடக்கிறேன்.
சிருஷ்டியின் தத்துவம், அதன் ரகசியம் எனக்குப் புரியத்தானில்லை. இன்பத்தைக் கொடுக்கக் கூடிய இயற்கைக்குள் மனித சமூகத்தை அழிக்க வைக்கும் பயங்கர எரிமலையை ஏன் ஒளித்து வைக்க வேண்டும்?
என் மனத்துள் குமுறும் எண்ணங்களை என் வாழ்வின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஒரே ஜீவனிடம் வெளியிட நான் ஆவல் கொள்கிறேன். ஏனென்றால் இம்மாதிரி எண்ணங்கள் என் மனத்தில் தோன்றுவதற்கே மூலகாரணம் கமலாவிடமுள்ள குறைதான். ஆனால் என் மனத்தின் வேட்கையை அவள் அறிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் பெண்களுக்குக் கற்பனை குறைவு. நம்பிக்கை அதிகம். இந்த நம்பிக்கையினாலேயே அவள் கடந்த ஐந்து வருடங்களாகப் பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு என்னை இழுத்துச் சென்றிருக்கிறாள்!
நாங்கள் திருமணம்செய்து கொண்டபோது எந்த விதமான எதிர்காலத்தைப் பற்றியும் நினைக்க முடியாமலே எட்டு வருடங்கள் ஆற்றுச் சுழல் போல மறைந்துவிட்டன. முன்போல் வீட்டுக்கு நேரத்தில் வருவது படிப்படியாக நின்று விட்டது. உத்தியோகத்தில் சிரத்தையும் பிடிப்பும் ஏற்பட்டன. பத்து மணிக்குமேல் வீட்டுக்கு வந்து, 'கமலா' என்று அழைக்கும்போது, இவ்வளவு பெரிய வீட்டுக்குள்ளிருந்து தனியாக அவள் மட்டும் அமைதி சூழ்ந்த ஏகாந்த வெளியிலிருந்து என்னை நோக்கி வரும்போது உள்ளத்தில் ஒரு சூன்யம் சூழ்வதை உணர்கிறேன். களைப்படைந்த என் மனத்துக்கும் உடலுக்கும் அவளது உபசரணையும் ஸ்பரிசமும் இதத்தைக் கொடுத்தாலும் அதில் ஒரு ரசிப்புத் துலங்கவில்லை. அவளும் அதை நன்கு உணர்ந்து இருக்க வேண்டும்.
திருமணமாகிப் பல வருடங்களாகியும் வீட்டில் குழந்தை விளையாடவில்லை என்ற குறை எங்கள் முன் விஸ்வரூபமெடுத்து நின்றது. 'வேலை' முடிந்து வந்ததும் "கமலா!" என்று குரல் கொடுக்கும்போது, அவளுடைய புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு நெற்றியில் சுருள் கேசம் புரள, குறும்புப் புன்னகையுடன், குறுகுறுத்த பார்வையுடன் தளர்நடை பயின்று கொண்டு மழலை மொழி உதிர்த்தவாறு ஒரு குழந்தை வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். படுக்கையில் புரளும் போது மலரினும் மெல்லிய கரங்களைக் கொண்டு மார்பிலும் கன்னத்திலும் அழுந்தி ஸ்பரிசிக்க என் உள்ளம் விழைகிறது. பத்திரிகைகளில் பிரசுரமாகும் குழந்தைகளின் புகைப்படங்களைக் கமலா தன்னை மறந்த லயத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். எங்கிருந்தோ கேட்கும் குழந்தையின் அழுகுரலும், தாலாட்டுப் பாட்டும் அவளுடைய உள்ளத்தின் மெல்லிய உணர்ச்சிகளைப் பலமாகத் தூண்டிவிட்டிருக்கின்றன. துயிலும்போது அவளது கரங்கள் எதையோ அணைத்துக் கொள்ளப் பக்கத்தில் துழாவும்.
பிறகு என்ன? வீட்டுக்கு ஜோசியர் வந்து போய்க்கொண்டிருந்தார். கோவிலுக்குப் பாலும் தயிரும் எண்ணெயுமாகப் போய்க் கொண்டிருந்தது. மூன்று மாத விடுமுறை எடுத்துக்கொண்டு புண்ணிய கட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்றோம். ரயில் பிரயாணத்தில் ஒரு சம்பவம் மறக்க முடியாதது. ஏதோ ஒரு ஜங்ஷனில் வண்டி நின்றுகொண்டிருக்கும்போது கமலாவுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். பொட்டலத்தைப் பிரித்து ஒரு பிடி வாயின் அருகே கொண்டு போகையில் வெளியிலிருந்து
ஜன்னல் வழியாக “அம்மா!” என்ற குரல் கேட்டது. பரட்டைத் தலையும் நீட்டிய கரங்களுமாக நின்று கொண்டிருந்த பிச்சைக்காரச் சிறுமியைக் கண்டதும் சாப்பாட்டை அப்படியே தூக்கி, நீட்டிய கரங்களில் போட்டுவிட்டாள் கமலா. வியப்பால் விரிந்த கண்களுடன் அந்தச் சிறுமி, “நல்லா இருக்கணும், தாயே!” என்று ஆசிர்வாதம் செய்தபோது கமலாவின் இதழ்க் கடையில் புன்னகை நெளிந்தது.
“ஆசிர்வாதத்தினால் மட்டும் வயிறு நிறைந்து விடாது, கமலா!” என்றேன்.
“உஸ்! உங்களுக்கு ஒன்றும் தெரியாது. பகவான் ஒருவேளை இந்தச் சின்னஞ்சிறு ரூபத்தில் வந்து சோதிக்கிறாரோ என்னமோ!” என்றாள் அவள்.
நம்பிக்கையின் அஸ்திவாரத்தில் கற்பித்துக் கொண்ட எண்ணத்தை நினைந்து எனக்கு ஆத்திரமாகவும் அவள்மேல் வருத்தமாகவும் இருந்தது. ‘கடவுள் உலகத்தைப் படைத்து விட்டுத் தூங்கப் போய் விட்டானோ என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்’ என்று விவேகானந்தர் கூறுகிறார். ஆனால் எனக்கு எங்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது அவன் தூங்கியே போய் விட்டானோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
வேலை முடிந்து ஒரு நாள் வீட்டுக்குள் நுழைந்தபோது ஊஞ்சலில் உட்கார்ந்து மடியில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றை வைத்துக் கொஞ்சிக்கொண் டிருந்தாள் கமலா. எனக்குத் திகைப்பாக இருந்தது. ஹாலுக்குள் பிரவேசித்ததும், கீழே உட்கார்ந்திருந்த ஒரு பெண் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். படபடப்புடன் நாணத்தில் உடல் நெகிழச் சரேலென்று கமலாவின் பின் பக்கம் போய் நின்று கொண்டாள். அவளது கையைப் பிடித்துக்கொண்டு ஆறு வயதுச் சிறுவனொருவன் காக்கி உடைக்குள்ளிருக்கும் என் போலீஸ் உருவத்தை முகத்தில் திகில் பரவ வியப்புடன் நோக்கிக் கொண் டிருந்தான்.
"இதோ பாருடா, போலீஸ் மாமா வந்து விட்டார். ஒரு ‘சல்யூட்’ போடுடா!" என்று இடுப்பில் இருக்கும் குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டே என் அருகில் வந்தாள் என் மனைவி கமலா.
"பயல் யாரு?" என்று கேட்டு வைத்தேன்.
"உங்களுக்கு ஞாபகமில்லை? நம்ம ஊரிலே சிவன் கோவில் தெரு முனையில் தாடித்தாத்தா என்று ஒருவர்.....
"அவருடைய பேத்திதான் இதோ வந்திருக் கிறது. நாம் இந்த ஊருக்கு மாற்றி வந்திருப் பது கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் தெரியுமாம். உங்களை ஒரு முக்கிய காரியமாகப் பார்க்க வந்திருக்கிறார்கள்!"
"ம்....அப்படியா என்ன தலை போகிற காரியமோ?" என்று பார்வையைத் தாடித் தாத்தாவின் பேத்தியின் பக்கம் திருப்பிக் கேள்வியைக் கமலாவிடம் கேட்டேன்.
"டேய் சீனு! உங்க அப்பாவை அழைத்துக் கொண்டு வாயேண்டா!" என்று சிறுவனிடம் அந்தப் பெண் முணுமுணுத்ததும் பயல் வாச லுக்கு வேகமாக ஓடினான்.
"முக்குக் கடைவரை போய்விட்டு வரு கிறேன் என்று இப்பொழுதுதான் சென்றார். அவருக்கு அடிக்கடி சிகரெட் குடிக்க வேண்டு மாம்!" கமலாவின் விளக்கம் முடிவதற்குள் வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய மெலிந்த ஒரு மனிதர் "நமஸ்காரம்" என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தார்.
பரஸ்பர அறிமுகம் ஆனதும் அவர் விஷயத்தைக் கூறினார். அவருடைய மைத்துனன்! அதாவது இந்தப் பெண்ணின் சகோதரன் வேலை பார்க்கும் காரியாலயத்து 'யூனியன்' தலைவனாம். நான்கு நாட்களுக்கு முன் நடந்த வேலை நிறுத்தத்தில் விஷமிகள் சிலர் காரியாலயக் கட்டிடத்துக்குள் கல்லெறிந்து கலாட்டா செய்திருக்கிறார்கள். அதற்கு முழுப் பொறுப் பும் அவன்மேல் சுமத்தப்பட்டு அவனைச் சிறைப்படுத்தி யிருக்கிறார்கள். அப்படித் தப்பு, தண்டாவுக்கெல்லாம் போகிறவனில்லையாம் அவன். எப்படியாவது இந்தத் தடவை மன்னித்து விட வேண்டும்," என்றார் அவர்.
"என்னாலானதைச் செய்கிறேன்," என்று கூறியதும் அவர்கள் விடை பெற்றுக் கொண்டார்கள். தன் இடுப்பில் அத்தனை நேரம் இருந்த குழந்தையை அந்தப்பெண் வாங்கி கொண்ட போது கமலாவின் முகம் எதையோ பறி கொடுப்பது போல மாறியது. குழந்தை தாயின் இடுப்பில் ஏறிய பிறகும் ஏதோ ஒரு வெறியால் இந்தப்பட்டு தன் சிநேகிதியையும் அனைத்துக் கொண்டு குழந்தையின் கன்னங்களிலும் கரத்திலும் மாறி மாறி முத்தமாரி பொழிந்தாள் கமலா.
" 'இப்படிக் குழந்தை மூச்சுத் திணறும்படி முத்தமிட்டால் நான் வரவே மாட்டேன், அம்மா!' என்று லக்ஷ்மி அபிநயத்துடன் கூறியதும் இரு சினேகிதிகளும் கலகல வென்று சிரித்தார்கள்.
இரவு குளுமையான நிலவொளி பரவிய அறைக்குள் படுத்திருக்கும்போது கமலா கேட்டாள்.
" 'அந்தக் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்த்தீர்களா?' "
" 'ஹூ....ம்!' "
" 'அடேயப்பா! அதற்குத்தான் எத்தனை பெரிய நீல விழிகள்! எப்படி என்னிடம் ஒட்டிக்கொண்டது தெரியுமா, ஒரு நிமிடத்தில்?' "
" 'உன்னுடைய சினேகிதியின் தம்பியை எப்படி காப்பாற்றுவது என்று நான் யோசித்துக்கொண் டிருக்கிறேன், கமலா!' "
" 'என்ன சாமர்த்தியமாக உங்களுக்கு 'சல்யூட்' அடித்தது அது?... அவருக்குச் சொற்பச் சம்பளம்தானாம். அடுக்கடுக்காக ஐந்து குழந்தைகளாம். அவள் தாபியினால் தான் குடும்பம் சற்று நிமிர்ந்து நிற்க முடிகிறதாம்!' "
மண்டைக்குள் பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது. என் கண்ணின் முன் சிருஷ்டியின் ஓரவஞ்சனை விசுவரூபம் எடுத்து நின்றது. சிருஷ்டி தேவன் ஏன் இப்படிப் பழுதடைந்த தராசைக் கையில் பிடித்திருக்கிறான்?
லக்ஷ்மி தினமும் வீட்டுக்குக் குழந்தையுடன் வந்தாள். கமலாவுக்கும் குழந்தைக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. அவளுடைய வெறியைப் பார்க்கும்போது எனக்குத் திகிலாகக்கூட இருந்தது. தூக்கத்தில் குழந்தையின் பெயரைச் சொல்லிப் பிதற்றினாள்.
என்னுடைய முயற்சியினால் லக்ஷ்மியின் தம்பி சிறிய தொகை அபராதத்துடன் விடுதலை பெற்றான். லக்ஷ்மி தன் கணவன் சகிதம் வந்து உணர்ச்சிப் பெருக்கால் நன்றியால் நனைந்த உள்ளத்துடன் கண்ணீர் ததும்பத் தட்டுத் தடுமாறி வந்தனத்தைத் தெரிவித்துக் கொண்டாள். அவர்கள் விடைபெற்றுக் கொள்ளும் சுமுகமான சூழ்நிலையில் கமலா ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள். “உன் தம்பி விடுதலையாகி விட்டான். உன் காரியம் ஆகிவிட்டது. இனிமேல் நீ இங்கு வருவாயோ என்னமோ?”
'அப்படிப்பட்டவனல்ல நான். நீங்கள் செய்த நன்றியை மறக்க முடியுமா, என்ன?' '' 'ஆமாம்! நான் செய்த உதவிக்கு நீ என்ன பரிசளிக்கப் போகிறாய்?'
'' ' 'என்ன வேண்டும் சொல்லேன். தருகிறேனா இல்லையா என்று பார்!' "'உண்மையாகவா?'
" 'சத்தியமாக!' "
" 'உன் குழந்தையைக் கொஞ்ச நாட்களுக்கு என்னிடம் விட்டு வையேன். நான் அருமை யாகப் பார்த்துக் கொள்வேன். நான் சொல்வது புரிகிறதல்லவா?' " இப்படிச் கூறும் போதே கமலாவின் குரலில் ஓர் இரக்கம். சட்டென்று ஒரு மாறுதல் லக்ஷ்மியின் முகத்தில் பரவி மறைந்தது. தன் கணவனின் முகத்தைச் சிரமப்பட்டு வருவித்துக் கொண்ட புன்னகையுடன் நோக்கினாள்.
" 'என்னைப் பார்ப்பானேன், லக்ஷ்மி! அவர் களுக்கோ குழந்தையில்லை. கொடுத்து நாட்கள் தான் விட்டு வையேன். சரியான இடத்தில் நம் குழந்தை நன்றாக வளரட்டுமே!' " என்றார் அவர் கணவன்.
அடுத்த நிமிடம் லக்ஷ்மியின் இடுப்பிலிருந்த குழந்தை கமலாவிடம் தாவியது. 'கேட்' டைத் திறந்துகொண்டு, அவர்கள் வெளியில் செல்லும் போது லக்ஷ்மி மட்டும் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றாள்.
அன்றிரவு நாங்கள் தூங்கவில்லை. குழந்தையையும் தூங்க விடவில்லை!
பெறாமல் பெற்று விட்ட மழலையைப் பெற்றெடுத்ததாகவே பார்த்துப் பூரித்துப் போனாள் கமலா. ‘ஓ’ வென்று கிடந்த வீடு கலகலப்படைந்தது. இரண்டு பேர்கள் மட்டும் புழங்கி வந்த இல்லம் அமர்க்களப்பட்டது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு மூலை யிலும் ஏதாவதொரு விளையாட்டுச் சாமான் உருண்டுக் கிடக்கும். தாவித் தாவிச் செல்லும் குரங்கும், ‘கீச் கீச்’ சென்று கத்தும் கிளியும், ஜாஜாஜா கொட்டும் கரடியும், நீலக் கண்ணுடிக் கண்ணணாரால் மிரண்டு விழிக்கும் முயலும் வீட்டில் குடியேறின. பொம்மைகளின் வசீகரத்தால் மயங்கிக் குழந்தை வாய் விட்டுச் சிரிக்கும்போது நாங்கள் மனக்கவலையை மறந் தோம். முத்து உதிரும் சிரிப்பைக் கண்டு, தேன் சிந்தும் வாயைக் கண்டு நாங்கள் தேன் குடித்த நரிகளானோம். அதனுடைய கள்ளச் சிரிப்பினில் எங்கள் எண்ணங்கள் சுழலக் காலமும் சுழன்றது.
ஒரு வாரத்துக்கு முன் ஒரு நாள் படுக்கை யில் படுத்த எனக்கு இன்று போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தலையணையில் சாய்ந்த வாறே அருகில் படுத்திருக்கும் குழந்தையையும் அதை அரவணைத்துத் துயிலும் கமலாமையையும் நோக்கினேன். திடீரென்று என் மனத்துள் ஒரு சலனம். குளத்தில் கல்லைப் போட்டால், 'களுக்' என்ற சத்தத்துடன் சிறு அலை எழுப்புமே, அது போல ஓர் அசைவு ஏற் பட்டது. அந்தச் சலனத்தின் அலைகள் வினாடிக்கு வினாடி, நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிப் பெரிதாகிக் கொண்டிருந்தன.
அவர்களையே இமையாமல் பார்த்துக் கொண் டிருந்தேன். அவர்களிடமிருந்து என் கண் களைத் திருப்பும் சக்தி என்னிடமிருந்து நழுவிச் சென்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் என்னுள் கிளர்ந்தெழுந்த வேதனை என் உடல் நரம்புகளையெல்லாம் உலுப்பியது. அது ஒரு வேதனை என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதில் இன்பம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதே மாதிரி அனுபவம் அடிக்கடி ஏற்பட்டது. அத்தகைய அனுபவம் என் கண்களைத் திறந்து விட்டது. குழந்தையின் மேலுள்ள பாசத்தினால் ஆர்ப்பரித்துக் கொண் டிருந்த உணர்ச்சிகளை ஒடுக்கிச் சரியான பாதையில் என்னை உந்தித் தள்ளியது. ஒரு சிறு உபகாரம் செய்து கொடுத்த பக்கபலத்தில் எக்கச்சக்கமான கோரிக்கையின் மூலம் லக்ஷ்மியின் குழந்தையை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கும் போது குற்றமிழைத்து விட்ட உணர்ச்சிதான் குத்துகிறது. குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும் நோக்கும் போது கொடுத்துவைத்த சாபமாகத் திருட்டுத்தனமாக அனுபவிப்பது போலத் தோன்றுகிறது.
குழந்தை எங்களைக் கண்டு ஆத்மார்த்தமாகச் சிரிக்க வில்லை. எங்களுடைய கோமாளித்தனமான கொஞ்சல்களினாலும் சுற்றிலும் பரப்ப்படுத்தும் விளையாட்டுப் பொம்மைகளினாலும் அதைச் சிரிக்க வைக்கிறோம் நாங்கள். கமலாவின் முகத்தில் துள்ளும் குதூகலத்தையும், மனத்தில் பொங்கி வழியும் இன்பத்தையும் பார்க்கும் போது வேதனை ஏற்படுகிறது. லக்ஷ்மி அடைய வேண்டிய குதூகலத்தையும், லக்ஷ்மிக்கு உரிமையாக வேண்டிய இன்பத்தையும் கமலா அனுபவிக்கிறாள். அவளுடைய உரிமையையும் சந்தோஷத்தையும் நாங்கள் பிடுங்கிக் கொண்டது ஒரு துரோக மில்லையா? குழந்தையைக் கொடுக்கும் போது அவள் முகத்தில் மின்னலெனத் தோன்றி மறைந்த தயக்கத்தின் நிழல் என் கண்முன் தோன்றுகிறது. 'கேட்' டைத் தாண்டும் போது லக்ஷ்மி திரும்பிப் பார்த்ததற்கு இப்போது பொருள் பல தோன்றுகிறது.
இரவு முழுவதும் வான வெளியைப் பார்த்துக் கொண்டு சஞ்சலப்பட்டுக் கொண் டிருக்கிறேன். சந்திரன் அடிவானத்தில் மறைகிறது. என்னுள் சாந்தி ஒளி பரவுகிறது. மனநிறைவுடன் பெருமூச்சு விடும்போது கொழுவிய வளைக்கரமொன்று பின்னால் தலைக்குமேல் கவிந்து நெற்றியை ஸ்பரிசிக் கிறது, சூடேறிப் போன தலைக்கு அந்தக் குளிர்ந்த ஸ்பரிசம் இதத்தை அளிக்கிறது.
" 'காலைப் பனி உடம்புக்கு ஆகாதே, உள்ளே வாருங்கள்!' "
நான் எழுந்து அவளைத் தொடர்ந்து உள்ளே செல்கிறேன்.
" 'ராத்திரி முழுதும் தூங்காமல் என்ன யோசிச்சிண் டிருந்தேளாம், ஆகாசத்தைப் பார்த்துண்டு? ரெண்டு தடவை வந்தேன் நீங்க கவனிக்கல்லே, என்னிடம் சொல்லக் கூடாதா?...' " கட்டிலில் படுத்துக் கொண் டிருந்த கமலா கேட்டாள். பக்கத்தில் கண் வளரும் குழந்தையின் மென் கன்னங்களை நான் மெதுவாக முத்தமிட்டேன். " 'கமலா! இந்தக் குழந்தையை நாம் வைத்துக் கொண் டிருப்பது அழகல்ல. லக்ஷ்மியிடம் அதைக் கொடுத்து விடு!' "
அவள் வதனம் தொட்டாற் சுருங்கி போல் சுருங்கியது.
" 'ஏனாம் திடீர்னு?' "
'இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை; கமலா எனக்கு, எனக் கென்னமோ குழந்தையையும் தாயையும் பிரிப்பது சரியென்று தோன்றவில்லை. அதனால் தான் இரவு முழுவதும் தூங்கமுடிய வில்லை!'
சிறிது நேரம் கசப்பான மௌனம் நிலவியது. பிறகு அவள் சொன்னாள்: ‘‘உங்களுக்கு விருப்ப மில்லாத காரியத்தைச் செய்யும் அளவுக்கு நான் சுயநலக்காரி யல்ல!’’
மறுநாள் நான் வேலை முடிந்து திரும்பும் போது மணி எட்டாகி விட்டது. ‘இன்று வீட்டில் நுழையும் போது குழந்தையின் மழலை மொழி என்னை வரவேற்காது. மறுபடியும் பழைய அந்தகாரம் சூழ்ந்து விடும். ஆனால் மனத்தில் நேற்றுவரையில் அழுத்திக் கொண்டு இருந்த பளு இன்று இல்லை.’
வீட்டைச் சமீபிக்கும் போது எதிர்ச் சாலையில் இருவர் பேசிக் கொண்டு சென்றது என் காதில் விழுந்தது.
‘‘குழந்தையை ஏன் கொடுத்து விட்டார்கள்?’’
‘‘தெரியவில்லை. நான் நினைத்தேன்.....’’
‘‘என்ன?’’
‘‘வீட்டில்தான் நாலு சீரழிகிறதே, இந்த ஒண்ணாவது நல்ல இடத்தில் வளரட்டும் என்று! நமக்கும் பாரம் குறையுமே. இதெல்லாம் இல்லை என்று யார் அழுதார்கள்?’’
நான் சட்டென்று திரும்பிப் பார்த்தேன். லக்ஷ்மியும் அவளது கணவனும் தான் குழந்தையுடன் நடந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பார்க்கவில்லை போலும்!
இவர்கள் பேச்சைக் கேட்டு என் மனம் அதிர்ச்சியுற்றது. நான் கற்பித்துக் கொண்ட தாயுள்ளம் படைத்த லக்ஷ்மிக்கும் இந்த லக்ஷ்மிக்கும் எவ்வளவு வேற்றுமை?
சிருஷ்டி தேவந்தான் என்னை வஞ்சித்து விட்டான் என்று நினைத்தேன். என் கற்பனையுமா என்னை வஞ்சிக்க வேண்டும்?
No comments:
Post a Comment