Please read and comment. Original post and comments here:
தாடகா வனத்தில் ஒரு நாள்
----------------------------------
இராமையா அரியா
நானும், ராமனும், ரிஷியும் அடர்ந்த வனத்துக்குள் புகுந்த ஓரிரு நாட்களிலேயே சற்றே பயமுறுத்தும் காட்சிகளைக் கண்டோம்.
பாழடைந்த ஒரு பிரதேசம். பாறைகள் அங்குமிங்கும் உருண்டிருந்தன. செம்மண்ணில் வெயில் தகித்தது. அங்கங்கே பெரிய மரங்கள். சில இடங்களில் முள் காடுகள்.
இரண்டு மூன்று இடங்களில் சில மண்டை ஓடுகள் கிடந்தன. ரிஷி சுற்றுமுற்றும் பார்த்தவாறே நடந்தார். நான் ஆவலுடன், "ஏதோ யுத்தம் நடந்த மாதிரி இருக்கிறது?" என்றேன்.
"இலக்குவா, தாடகை என்னும் அரக்கியின் உறைவிடம் இது",என்றார் ரிஷி. அந்த மண்டை ஓடுகளைச் சுட்டிக் காட்டி, "அவளுடைய இரை ", என்றார்.
என் உடம்பு நடுங்கியது. "மிதிலைக்கு இந்த வழியாகத் தான் சென்றாக வேண்டுமா?" என்றேன்.
சற்றுத் தள்ளி கோணல் மாணலாக ஒரு எலும்புக் கூடு கிடந்தது. அதைக் காட்டி, "என் சிஷ்யன் பிங்கலன்", என்றார் ரிஷி.
அன்று இரவு ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறி படுத்துத் தூங்கினோம்.
மரத்தின் கடினமான கிளையில் படுத்தவாறே நான் வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன். பல நாட்களுக்கு முன்னால் அயோத்தியில் வில்லையும், அம்பையும் வைத்துக் கொண்டு மாங்காய் அடித்துத் தின்று கொண்டிருந்தோம். இந்த ரிஷி வந்து அழைத்துப் போனார். எனக்கு என் தந்தை தசரத மன்னர் என்னை அனுப்பி வைத்ததில் ஆச்சரியமில்லை. அவருக்குப் பாதி நேரம் எனக்கும் என் இரட்டைச் சகோதரன் சத்ருக்னனுக்கும் வித்தியாசமே தெரியாது. இன்னும் யாரை அனுப்பினோம் என்று அவருக்குத் தெரிந்திருக்காது.
ஆனால் ராமனை, பட்டத்து இளவரசனை எப்படி இந்த தாடி மீசை முனிவருடன் காட்டுக்கு அனுப்பி வைத்தார்? ராமன் மேல் அவருக்கு அடங்காத பாசம். மிகவும் நல்லவன் என்று ஒரு நினைப்பு.
லேசாக நான் கண்ணயரத் தொடங்கிய நேரம். வானத்தில் கொக்கு போலிருக்கும் நட்சத்திரக் கூட்டம் நேர் மேலே மிதந்தது. சில நேரமாக உயிரே போவது போலக் கத்திக் கொண்டிருந்த கோட்டான் கூட அடங்கி விட்டது.
'கரக்' என்று ஒரு மெலிதான சத்தம், ஒரு கல் நகர்வது போலக் கேட்டது. நான் தூக்கக் கலக்கத்தினூடே உற்றுக் கேட்டேன். மறுபடி அந்தச் சத்தம் கேட்கவில்லை.
**********************************************
ரிஷி பொதுவாக அதிகாலையில் தானும் எழும்பி, மற்றவர்களையும் எழுப்பி உயிரை வாங்குவார். 'பிரம்ம முகூர்த்தம்' என்பார். தேவையே இல்லாமல் இருட்டில் குளிர்ந்த நீரில் இறங்கிக் குளிக்க வேண்டும். பிறகு அவர் சொல்லும் மந்திரங்களைத் திருப்பிச் சொல்ல வேண்டும்.
மரத்தில் நாங்கள் படுத்துத் தூங்கிய மறு நாள் வெகு நேரத்திற்கு யாரும் மரத்தில் இருந்து இறங்கவில்லை. காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு கீழே பார்த்தவாறு இருந்தோம். எந்த நேரத்திலும் தாடகை பாய்ந்து வந்து காலைக் கடிப்பாள் என்று பயம்.
விஸ்வாமித்திரர் கடைசியில், "ஹூம்.. இந்நேரம் தூங்கியிருப்பாள். இலக்குவா, நீ முதலில் இறங்கு", என்றார்.
"அண்ணா, நீ தான் பெரியவன். நீ முதலில் இறங்கு", என்றேன் ராமனிடம், பயபக்தியுடன்.
ராமன் பயப்படுவான். ஆனால் முகத்தில் காட்ட மாட்டான். அவன் முகம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். எனவே சிரித்தவாறே என்னைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டான்.
மூன்று பேரும் காலைக் கடன்களைக் கழித்து விட்டு வில்லை இறுக்கிப் பிடித்தவாறே நடந்தோம். ரிஷி சற்று முன்னால் போன பொழுது ராமன் என்னைப் பிடித்து நிறுத்தினான். நாங்கள் தூங்கிய மரத்தின் அடிப் பகுதியைக் காட்டினான். அந்தக் கடினமான அடிமரத்தில் நான்கு கோடுகள், ஆழமான கிழிசல்கள் தெரிந்தன.
"கரடியா ?" என்றேன்.
"தாடகை", என்றான் ராமன்.
நாங்கள் ரிஷியைத் தொடர்ந்தோம்.
நான் சற்றுத் தைரியத்துடன்,"ரிஷியே, இவள் யார்? இவள் ஏன் இப்படிச் சாதுக்களைத் துன்புறுத்துகிறாள்?" என்று கேட்டேன்.
ரிஷி தொண்டையைக் கனைத்துக் கொண்டார். பிரமாதமாகக் கதை சொல்லுவார். "ஹூம்.." என்றார். "உங்கள் குரு வசிஷ்டன் இருக்கிறானே" என்று தொடங்கிச் சற்று நேரம் வசிஷ்டரைத் திட்டினார்.
தாடகை உண்மையில் மனிதப் பெண் (பூர்வ ஜன்மத்தில்). பயங்கர புத்திசாலி (இதுவும் பூர்வ ஜன்மத்தில்). வசிஷ்டரிடம் வேதம் பயிலச் சென்றிருக்கிறாள். வசிஷ்டர் தத்துப்பித்தென்று ஏதோ சொல்லித் தர, அவள், "மந்திரம் தப்பு" என்று வாதிட்டாள். பிடி சாபம். பார்த்தால் அடுத்த ஜன்மத்தில் ராக்ஷசி.
ராமன், "பூர்வ ஜன்மம் என்று ஒன்றே கிடையாது என்று ஜாபாலி சொல்கிறார்", என்றான்.
"அவன் ஒரு மடையன்", என்றார் ரிஷி.
"கார்கியும் அப்படியே சொல்கிறார்".
"அவள் ஒரு மடச்சி. பூர்வ ஜன்மம் என்று ஒன்று இல்லா விட்டால் இந்தத் தாடகை ஏன் இப்படி அரக்கியாக, மகாபாவியாக வந்து பிறக்க வேண்டும்?"
நான் ஆச்சரியத்துடன், "உங்களுக்கு எல்லோருடைய பூர்வ ஜன்மமும் தெரியுமா?" என்று கேட்டேன்.
"வந்தது, வரப் போவது எல்லாம் தெரியும்."
எனக்குப் பல நாட்களாக இருக்கும் சந்தேகத்தை இவரிடம் கேட்டால் என்ன?
இந்த நேரத்தில் மரங்களின் அடர்த்தி மிகவும் குறைந்து விட்டது. இன்னும் பல பாறைகள் உருண்டு கிடந்தன. நாங்கள் மேட்டுப் பாதையில் போய்க் கொண்டு இருந்தோம். ராமன் சுற்றிப் பார்த்தவாறே முன்னால் சென்றான்.
நான் ஆர்வமாக, "நான் எப்போதாவது, ஒரு நாளேனும், ஒரு நாட்டுக்கு அரசனாகும் வாய்ப்பு உண்டா?" என்று கேட்டேன்.
ராமன் சிரித்தான். "நீ எல்லா ஜன்மத்திலும் என் தம்பி தான்", என்றான்.
"ரிஷியே, சொல்லும்" என்றேன் நான்.
ரிஷி, "இங்கிருந்து தெற்கே வெகு தூரத்தில் குரங்குகளின் மஹா சாம்ராச்சியம் ஒன்று உள்ளதாம். கேள்விப்பட்டிருக்கிறேன்", என்றார்.
ராமன் மறுபடி சிரித்தான். "இலக்குவா, நீ கட்டாயம் குரங்கு மன்னனாவாய்" என்றான்.
திடீரென்று அவன் சிரிப்பு மறைந்தது. வில்லைத் தரையில் ஊன்றிச் சுற்றிப் பார்த்தான். "அது என்ன சத்தம்", என்றான்.
நான் திகிலுடன் உற்றுக் கேட்டேன்.
மெலிதாக மரத்தை அரம் அறுப்பது போல ஒரு ஒலி கேட்டது.
ரிஷி, "சிறிது நேரத்தில் நீங்களே பார்ப்பீர்கள்", என்றார்.
நாங்கள் நடக்க நடக்க மேட்டின் உச்சி தெரிந்தது. சத்தமும் பலப்பட்டது. உச்சியில் இருந்த ஒரு பெரிய பாறை அருகே ரிஷி நின்றார். கீழே சுட்டிக் காட்டினார்.
நாங்கள் பாறைக்கு பின்னாலிருந்து மெதுவாக எட்டிப் பார்த்தோம். கீழே கிடுகிடுவென்று இறக்கம். அதன் முடிவில் பல பாறைகள் அரண் போல நின்றன.
அதில் ஒரு பாறை ஏறி ஏறி இறங்கியது.
நான் உற்றுப் பார்த்தேன். அது பாறையே அல்ல. ஒரு மனித உருவம் தான். அங்கே படுத்து நல்ல வெயிலில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.
நான் ரிஷியிடம் திரும்பி, "தெரிந்தவர்களா?" என்றேன்.
"தாடகை", என்றார் ரிஷி.
*************************************************
மூன்று பேரும் பாறைக்கு பின்னால் பதுங்கி உட்கார்ந்து கொண்டோம். ரிஷி அவசரத்துடன், "ராமா , உச்சி வேளை. நல்ல நேரம். அவளைக் கொல்", என்றார்.
ராமன் சந்தேகத்துடன், "நாம் ஏன் இவள் இருப்பிடத்திற்கு வந்தோம்? காட்டைத் தாண்டி மிதிலைக்கு அல்லவா போகிறோம்?" என்றான்.
ரிஷி பெருமூச்சு விட்டார். சற்று யோசித்தார். பிறகு, "ராமா, உன்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது", என்றார்.
குருகுலத்தில் இப்படி யாராவது சொன்னால் பொய் சொல்லப் போகிறார்கள் என்று அர்த்தம் என்று சொல்லி கொடுத்திருந்தார்கள்.
"ராமா, இவளுக்குச் சாபம் என்று சொன்னேன் இல்லையா? அதற்கு விமோசனம் உண்டு. உன் கையால், தசரத புத்திரன் ராமன் கையால் இறந்தால் இவளுக்கு உடனடி மோட்சம்", என்றார்.
ராமன், "நீர் சொல்வது நம்புகிற மாதிரி இல்லையே", என்றான்.
"சத்தியமாக", என்றார் விஸ்வாமித்திரர்.
ராமன், "இவள் ராக்ஷசியாக இருந்தாலும் பெண். என்னை எந்தத் தொந்திரவும் செய்யவில்லை. எனவே நான் அவளைக் கொல்ல முடியாது", என்றான்.
"நீ சொல்வது தர்ம நியாயம். அது ராட்சதர்களுக்குப் பொருந்தாது. அவளுக்கு நீ வெறும் இரை. காட்டு மிருகத்தை, புலியை இப்படிக் கண்டால் விட்டுப் போவாயா?"
நான், "ராமா, ரிஷியே...", என்று தொடங்கினேன்.
"நீ சும்மா இரு" என்றார் ரிஷி.
"இல்லை...குறட்டைச் சத்தம் கேட்கவில்லை..அது தான்..", என்றேன்.
*****************************************
மூவரும் காட்டு வழியாகத் தலை தெறிக்க ஓடினோம். நான் தான் முதலில் ஓடிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு இடத்தில் இளைக்க இளைக்க நின்றோம்.
ராமன், "கவுசிகரே, நான் அவளைக் கொல்ல மாட்டேன். இது அவளுடைய நிலம். இங்கிருந்து எம்மை வெளியே அழைத்துச் செல்லும்" என்றான்.
"சரி. உன் இஷ்டம்" என்றார் ரிஷி.
"ஓடிக் கொண்டே பேசலாமே", என்றேன் நான்.
******************************************
அன்று கிட்டத்தட்ட ஒரு காத தூரம் ஓடியிருப்போம். விஸ்வாமித்திரர் முன்னால் வழி காட்டிக் கொண்டு போனார். அந்தி சாயும் பொழுது ஒரு சிறு கானகத்தருகே வந்து சேர்ந்தோம்.
ரிஷி தரையைச் சுத்தம் செய்தார். இரவு தங்குவதற்குத் தயாரானோம். அரணிக் கட்டையைக் கடைந்து தீயைப் பெருக்கினார் ரிஷி. நானும் ராமனும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். கால்கள் வலித்தன.
"தாடகை கட்டாயம் இங்கே வர மாட்டாளே? பேசாமல் மரத்தின் மேலேயே தூங்கி விடலாமே?" என்றேன் நான்.
"சூரர்களே! நாம் அவள் எல்லையைத் தாண்டி வெகு தூரம் வந்தாகி விட்டது. எப்பொழுதும் மரத்தில் தூங்கிப் பழக வேண்டாம்", என்றார் ரிஷி.
சாப்பிட்டு விட்டு கால்களை நீட்டிக் கொண்டு தீயைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
"இந்த ராட்சதர்கள் இப்படிப் போகிற வருகிறவர்களை எல்லாம் பிடித்துத் தின்கிறார்கள் என்று தெரியும். வேறு வழி இல்லையா?" என்றேன் நான்.
"ஆஹா! அருமையான கேள்வி! நீ கேட்ட கேள்வி எனக்குப் புரிகிறது."
"அப்படியா?"
"சாதுக்கள் வாழும் இந்த உலகத்தில் ராட்சதர்களைக் கொன்று சாதுக்களை யார் காப்பது? நல்ல கேள்வி."
"அப்படி அல்ல. காட்டைச் சுற்றிப் போக வேறு வழி இல்லையா?"
ரிஷி என்னைப் பொருட்படுத்தாமல்," சாதுக்களைக் காக்கத் தான் காக்கும் கடவுள் விஷ்ணு இந்த உலகத்தில் அவதரிக்கிறான். அசுரர்களைக் கொல்வது அவன் கடமை", என்றார் ராமனைப் பார்த்து.
"நான் கடவுள் அல்ல", என்றான் ராமன்.
"ராமா, நீ விஷ்ணுவின் அம்சம்."
நான் ஆத்திரத்துடன், "நான்? நான் யாருடைய அம்சம்?", என்றேன்.
யாருமே பதில் சொல்லவில்லை. ரிஷியும் ராமனும் முறைத்துக் கொண்டே தூங்கச் சென்றார்கள்.
நான் மரவுரியை விரித்துப் படுத்தேன். வானத்தைப் பார்த்தவாறே தூங்க முயற்சி செய்தேன். வானத்தில் கொக்கி போன்ற அந்த நட்சத்திரக் கூட்டம் தெரிந்தது.
கண்ணயரும் போது அந்தக் கோட்டான் அலறியது.
"க்க்க்ரீச்"
நான் திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
காலையில் தென்மேற்காகச் சென்றோம். பிறகு தாடகையின் உறைவிடத்தில் இருந்து விரைந்து சென்ற பொழுது எந்தத் திசையில் போனோம்?
நன்றாக யோசித்துப் பார்த்தேன். எனக்கென்னவோ மறுபடி வடகிழக்கில் வந்திருக்கிறோம் என்று தோன்றியது.
காலையில் கிளம்பிய இடத்திற்கு மறுபடியும் வந்திருக்கிறோமோ?
**************************************************
ராமன் தூங்கி கொண்டிருந்தான். தூங்கும் போதும் அவன் முகம் அப்படியே இருந்தது. நான் அவனைத் தட்டி எழுப்பினேன்.
தூக்கக் கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்தான்.
"என்ன?"
"என்னுடன் வா", என்றேன்.
அவன் கேள்வி கேட்காமல் வந்தான். எரியும் தீக்கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டேன்.
ரிஷி இன்னும் தூங்கவில்லை போலும். "எங்கே போகிறீர்கள்?" என்றார்.
"எனக்குக் கழிக்க வேண்டும்", என்றேன்.
"துணைக்கு அண்ணனா?" என்று சிரித்தார்.
"காக்கும் கடவுளாயிற்றே", என்றேன் நான் நடந்து கொண்டே.
கானகத்தின் உள்ளே புகுந்தோம். ராமனுக்குத் தூக்கம் போய் விட்டது. "என்ன விஷயம்", என்றான்.
நான் பக்கத்தில் இருந்த மரங்களைச் சுற்றிப் பார்த்தேன். ஒரு பெரிய மராமரம் ஒன்றின் அடியில் சென்று பந்தத்தை உயர்த்திப் பிடித்தேன்.
அந்த மரத்தின் அடியில் நாங்கள் காலையில் பார்த்தது போலவே நான்கு நகங்கள் அழுத்தமாகக் கீறியிருந்தன .
"ரிஷி நம்மைத் தாடகையின் எல்லைக்குள் சுற்றி அழைத்து வந்திருக்கிறார்", என்றேன்.
ராமனின் கைகள் உடை வாளை நாடின.
**********************************************
நாங்கள் திரும்பி வரும் போது ரிஷி எங்களைப் பார்த்துப் படுத்திருந்தார். ஆனால் அவர் விழித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தாடகையின் காட்டில் எந்த மனிதனுக்குத் தூக்கம் வரும்?
"ரிஷியே, எழுந்திரும்", என்றான் ராமன்.
அவர் கண் விழித்துப் பார்த்தார்.
"ஏன் இப்படிச் செய்தீர்?" என்றேன் நான்.
ரிஷி பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தார்.
"ராமா, இலக்குவா, நீங்கள் சத்திரியர்கள். உங்களுக்குப் புரியும் என்று நினைத்தேன்", என்றார்.
"ஏன் தாடகையைக் கொல்ல இப்படி ஒரு அவசியம்?" என்று கேட்டான் ராமன்.
***************************************
தாடகா வனத்தில் இருந்து ஒரு யட்சனைப் போல வானில் எழுந்து, இரண்டு யோசனை உயரச் சென்று நின்றால் கீழே என்ன தெரியும்?
வட கிழக்கில் வெகு தூரத்தில் மலை அரசனாம் இமவானின் ராச்சியம். பிறகு பெரும் காடுகள். அவற்றின் முடிவில் முதல் நகரம் அயோத்தி. அந்த நகரத்தினூடே ஓடும் சரயு நதி அயோத்திக்கு அருகே சிறிது தூரத்தில் கங்கையில் கலக்கிறது. கங்கை தென்மேற்காக வளைந்து சென்று ஒரு சிறு மலைத் தொடரைத் தாண்டி மிதிலையை அடைகிறாள். மிதிலை, விஷாலம், ராஜகிருஹம், பொன்னால் கூரையிட்ட அரண்மனைகளைக் கொண்ட பாடலிபுத்திரம் - பெரு நகரங்களும், ஜனசங்கங்களும் பரந்து விரிந்த ஆரியவர்த்தம் மிதிலையில் இருந்து தொடங்குகிறது.
இவை யாவும் ஒரு காலத்தில் யட்சர்களும், நாகர்களும், ராட்சதர்களும் வாழ்ந்த காடுகள். நாகர்கள் கிழக்கே ஓடி விட்டார்கள். கடைசியாக மிஞ்சிய யட்சர்களின் நாடு அயோத்திக்கும் மிதிலைக்கும் இடையே இருந்த - மாலடம் என்று ரிஷிகளால் அழைக்கப்பட்ட - தாடகா வனம்.
இரண்டு யோசனை உயரத்தில் இருந்து உற்றுப் பார்த்தால் அயோத்தியில் இருந்து ஒரு பெரும் சாலை ஒன்று கிளம்புகிறது. தசரதனின் பாட்டன் ரகு பாவிய அந்தச் சாலை கங்கைக் கரையில் வந்து நிற்கிறது.
தென் மேற்கே, அது போலவே மிதிலையில் இருந்து ஒரு சாலை ஒன்று கிளம்புகிறது. அதுவும் தாடகா வனத்தின் மரங்களிடையே மறைந்து விடுகிறது.
யாருமே பயன்படுத்த முடியாத அந்தச் சாலைகளின் நடுவே, மலையும், முள்ளும், பாறைகளும் அடர்ந்த அந்த வனத்தில் யட்சர்கள் தம் கடைசி யுத்தத்தை நடத்துகிறார்கள்.
யட்சர்களின் தலைவன் சுகேதுவும் அவனுடைய மருமகன் சுனந்தனும் திரும்பத் திரும்ப மிதிலையில் இருந்தும், அயோத்தியில் இருந்தும் வரும் ரிஷிகளையும், அவர்கள் பின்னால் வரும் படைகளையும் தடுத்து நிறுத்துகிறார்கள்.
தாடகை சுகேதுவின் பெண். குகைகளில் தன கணவனுக்காகவும் தந்தைக்காகவும் காத்திருக்கிறாள்.
யட்சர்களின் அந்தப் போர் நல்லபடியாக முடிய வழியே இல்லை. தாடகை பயந்தது நடந்து விட்டது. ஒரு நாள் சுகேது கொல்லபட்டான். சுனந்தனின் தலை அயோத்தி கோட்டை வாசலில் ஏற்றி வைக்கப்பட்டது.
சுற்றி அயோத்தி மக்கள் கொண்டாடினார்கள். மிதிலைக்குப் போகும் சாலை, ரகு வம்சத்தின் பல தலைமுறைக் கனவு நிறைவேறும் என்று நம்பினார்கள்.
அவர்கள் தாடகையை, கணவனை இழந்த அந்த யட்சியின் கோபத்தை எதிர்பார்க்கவில்லை.
யுத்தம் அவள் தலைமையில் தொடர்ந்தது. இருபது வருடங்களாகத் தசரதனின் சாலை தூங்கிக் கிடக்கிறது. பல யட்சர்கள் இடை விடாத யுத்தத்தால் தளர்ந்தார்கள். ஆனால் தாடகை அயரவில்லை. இன்னும் கங்கையின் கரையை அவள் கண்கள் பார்த்தபடி இருக்கின்றன.
பெரும் படையுடன் யட்சர்களை மோதிப் புண்ணியமில்லை என்பதைத் தசரதன் கண்டான். அயோத்தியில் ரிஷிகள் தசரதனுக்கு யோசனை சொன்னார்கள். தாடகைக்கு வயதாகி விட்டது. சிங்கக்குட்டி போல, வில் வித்தையில் கை தேர்ந்த ராமன் இருக்கிறான். அவன் விஷ்ணு அம்சம். சப்தவேதி - ஒலியைக் கொண்டே குறி பார்த்துக் கொல்லும் வித்தையைக் கற்றவன். அவன் நம்மைக் காப்பான்.
துஷ்டர்களை அழிப்பது காக்கும் கடவுளின் பொறுப்பு.
எனவே, யட்சர்களின் கடைசி ராணியைக் கொன்று போடத் தாடகா வனத்தில் இரு இளைஞர்களை அழைத்து வந்தார் ரிஷி விஸ்வாமித்திரர்.
வந்த வேலையை முடிக்காமல் எப்படி மிதிலைக்குப் போவது?
**********************************************************
ராமன் ரிஷியை அருவருப்புடன் பார்த்தான். "யட்சர்களை விரட்டிச் சாலை கட்டுவதற்காக நான் ஒருக்காலும் ஒரு அப்பாவியைக் கொல்ல மாட்டேன். அவள் பக்கம் நியாயம் இருக்கிறது. இலக்குவா, வா போகலாம்", என்றான்.
ரிஷி, "ராமா, நில்", என்றார்.
அந்த நேரத்தில், காட்டு வழியே, தூரத்தில், அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு பயங்கர உறுமல் கேட்டது.
எனக்குப் புல்லரித்தது. மூவரும் காட்டில் உறுமல் வந்த திசையை உற்றுப் பார்த்தோம்.
"அவள் வருகிறாள்", என்றார் ரிஷி.
*********************************************************
ராமன் கீழே கிடந்த வில்லை எடுத்துத் தரையில் நிறுத்தினான். நாணை நன்றாக இழுத்துப் பூட்டினான். காட்டில் மரங்கள் சலசலவென்று ஆடின. என்னுடைய நண்பனாகி விட்ட அந்தக் கோட்டான் காள்...காள் என்று கத்தியபடியே பறந்து சென்று விட்டது.
என்னுடைய முதல் யுத்தம் எப்படி இருக்கும் என்று சிறு வயதில் பெரும் கற்பனை செய்து வைத்திருந்தேன். குதிரைகள் என்ன, யானைகள் என்ன...சதுரங்க சேனைகளும் அணிவகுத்து நிற்கும் என்றும் , நான் ஒரு யானை மேல் அமர்ந்து பலப்பல வியூகங்கள் வகுப்பேன் என்றும் எண்ணியிருந்தேன். இப்படி நடுக்காட்டில் எவளோ ஒரு காட்டுமிராண்டிப் பெண்ணால் பிறாண்டப்பட்டு இறக்கும் நிலையை எதிர்பார்க்கவில்லை. ராமன் விஷ்ணு அம்சம்...எப்படியாவது தப்பி விடுவான். நான் ஏன் இந்தக் காட்டில் வந்து மாட்டிக் கொள்ள வேண்டும்?
காட்டுக்குள் பல பேர் ஓடி வருவது போலிருந்தது. நான், "யட்சர் படையே வருகிறதோ?" என்றேன்.
ராமன் உற்றுக் கேட்டு விட்டு, "இல்லை. அவள் மட்டும் தான். இது ஒரு அசுர தந்திரம்", என்றான்.
திடீரென்று ஒரு பெரும் மரக் கிளை எங்களை நோக்கிப் பறந்து வந்தது. ராமனின் நாண் ஒலித்தது. அம்பு பறந்து கிளையை அடித்து வீழ்த்தியது.
"பலே", என்றார் ரிஷி.
இப்பொழுது சட சடவென்று கற்கள் பல பறந்து வந்தன. நாங்கள் மூவரும் அவற்றில் இருந்து தப்ப அங்குமிங்கும் ஓடினோம். சில கற்கள் எங்கள் மேலே வந்து அடித்தன. வந்த வேகத்திலேயே கல் வீச்சு நின்றது.
நான், "ஏதாவது மரத்தில் ஏறித் தப்பலாமே?" என்றேன்.
"வீரர்களுக்கு அது அழகல்ல", என்றான் ராமன்.
சற்று நேரம் முன்னால் அவன் குனிந்து ஓடியதை மறந்து விட்டான் போலும்.
அதற்குள் சில மரங்கள் வந்து விழுந்தன. மிகவும் குறி வைத்து எறியப்பட்டது போலத் தோன்றவில்லை. ராமனின் அம்புகள் அவற்றை எளிதாகப் புறம் தள்ளின.
காட்டில் இருந்து பெரும் உறுமல் ஒன்று மறுபடி கிளம்பியது. நாங்கள் சலிப்புடன் ஆயத்தமானோம்.
ஒரு உரத்த அலறலுடன் தாடகை மரங்களின் உள்ளிருந்து வெளிப்பட்டாள். தீயின் மங்கிய வெளிச்சத்தில் அவள் உருவம் பல மடங்கு பெரிதாகத் தெரிந்தது. அவள் கையில் இருந்த ஒரு கூரிய கம்பத்தை எங்களை நோக்கி எறிந்தாள். வேகத்துடன் வந்த கம்பை ராமனின் அம்பு சந்தித்து அப்பால் விலக்கியது. அவள் காட்டுக்குள் சென்று மறைந்தாள்.
ராமன், "நம்மிடம் அம்புகள் குறைவு", என்றான்.
நான் வியப்புடன், "திட்டமிட்டுத் தான் இப்படிச் செய்கிறாளோ?" என்றேன்.
"அப்படித் தான் தோன்றுகிறது. எல்லா அம்புகளும் தீர்ந்த பின் நாம் வெறும் வில் குச்சிகளுடன் சண்டையிட வேண்டியது தான்", என்றான் ராமன்.
தாடகையின் உருவத்தை முதன்முதல் பார்த்தது என் மனதில் பதிந்து விட்டது. மிகவும் உயரமாய், பனைமர நீளக் கை கால்களுடன், அரை அடி நீளக் கோரைப் பற்களுடன் கனவுகளில் வரும் பேயைப் போல இருந்தாள். அவளை எங்களால் நிச்சயம் சமாளிக்க முடியாது. அகோர மரணம் எனக்குக் காத்திருக்கிறது.
மீண்டும் பயங்கரக் கூச்சல்...மீண்டும் கல்லெறிப் போர்...மீண்டும் ஓட்டம். ராமன் மேல் ஒரு கூரிய கல் பட்டு ரத்தம் ஒழுகியது.
நான் களைப்புடன், "நாமும் பதிலுக்குக் கற்களை எறிவோமா?" என்றேன்.
அவளுடைய மரக்கிளைத் தாக்குதலில் ராமனின் அம்புகள் முக்கால்வாசி தீர்ந்து விட்டன. எங்களால் நடக்கவே முடியவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் களைப்பில் விழுந்து விடுவோம். எதிரி மேல் எங்கள் அம்புகள் ஒன்று கூடப் பாயவில்லை. தாடகை வென்று விடுவாள். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு? இன்னும் பெரிய படைகள் வரும். இளவரசர்களின் மரணத்தை அயோத்தி மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இரு அனுபவமற்ற இளைஞர்களை இப்படி எதிரியுடன் மோத அனுப்பிய தசரத மன்னரை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள்.
காட்டுமிராண்டி தாடகை இரு பச்சிளம் பாலகர்களைக் கொன்று விட்டதாகக் கதையைத் திரித்து விடுவார்கள். சிறிது சிறிதாக யட்சர்களையும் ஒழித்து, தாடகையும் கொல்லப்படுவாள்.
முடிவில் அந்தச் சாலை நிறைவு பெறும். மிதிலைக்கும் அயோத்திக்கும் இடையே வணிகர்களும் வண்டிகளும் போய் வரும் ராஜபாட்டையின் ஒரு திருப்பத்தில் எங்களுடைய சமாதிகள் சிறு வீரக்கல்லுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கும். நாளடைவில் அதுவும் அழிந்து போகும்.
எனக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. ராமனின் கடைசி இரண்டு அம்புகள் மிச்சமிருந்தன. எங்களைச் சுற்றி எதிரிகளின் தலைகளுக்குப் பதிலாக வெட்டப்பட்ட மரக் கிளைகளும் பல வகைக் கற்களும் கிடந்தன.
தாடகையின் உறுமல் சத்தம் அதிகரித்தது. ராமன் வில்லின் மேல் சற்றுச் சாய்ந்து நின்றான். ரிஷி, அவனிடம், "ராமா, நீ சப்தவேதி அல்லவா? ஏன் தயங்குகிறாய்?" என்றார்.
ராமன் அவரைத் திரும்பிப் பார்த்தான். பிறகு ஒரு அம்பை எடுத்து வில்லில் பூட்டினான்.
"அவளைக் கொல்லாமல் நீ இந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல இயலாது", என்றார் ரிஷி.
அவன் மெளனமாக இருந்தான். வில் வளைந்து குறி பார்த்தது. தாடகை மறுபடி உறுமினாள். அம்பு பறந்தது.
"ஓ" என்று ஒரு அலறல். தாடகையின் பெருத்த உடல் தரையில் "தொம்" என்று விழும் சத்தம் கேட்டது.
மூவரும் காட்டைப் பார்த்தபடி நின்றோம்.
"செத்தாள்", என்றார் ரிஷி.
"இல்லை...நான் அவளைக் கொல்லவில்லை", என்றான் ராமன்.
காட்டில் இருந்து எந்த அசைவும் இல்லை. பிறகு யாரோ, ஒரு சாதாரண மனிதப் பெண், தீனமாக முனகும் சத்தம் கேட்டது.
"போய்த் தலையில் ஒரு கல்லைப் போட்டு மோட்சம் கொடுக்கலாம்", என்றார் ரிஷி.
****************************************************
காட்டுக்குள் நாங்கள் நுழைந்தோம் - நான், நடுங்கிக் கொண்டே ஒரு தீப்பந்தத்துடன் முதலில் சென்றேன். எனக்குப் பின்னால் ரிஷி. கடைசியில் விஷ்ணு அம்சம். என்ன நியாயமோ.
எந்த நேரத்திலும் அவள் என் மேல் பாய்வாள் என்று முதலில் எண்ணினேன். ஆனால் அந்த மெலிதானப் புலம்பல் சத்தம் நெஞ்சை உருக்கியது.
ஒரு மரத்தின் மேல் சாய்ந்து தாடகை அமர்ந்திருந்தாள். அவள் காலில் அம்பு பாய்ந்து நின்றது. கீழே ரத்தம் குளம் போலத் தேங்கியிருந்தது.
அவள் எங்களைப் பார்த்து பயப்படவில்லை. முறைத்தபடி இருந்தாள்.
"ராமா, இன்னும் ஒரு அம்பு இருக்கிறது", என்று நினைவுபடுத்தினார் ரிஷி.
ராமன் கோபத்துடன் அந்த அம்பை எடுத்து முறித்துத் தரையில் போட்டான். "ரிஷியே, அவளை நன்றாகப் பாரும். என் தாய் கௌசல்யாதேவியைப் போல அல்லவா இருக்கிறாள்?" என்றான்.
நான் பந்தத்தைத் தூக்கிப் பிடித்தேன். உண்மையிலேயே தாடகை ஒரு மானுடப் பெண்ணைப் போலத் தான் இருந்தாள். மிகப் பலசாலி. ஆனால் மானுடப் பெண் தான். அவள் முகம் அயோத்தியில் உள்ள பல பெண்களைப் போலத் தான் இருந்தது.
ரிஷி மெளனமாக இருந்தார்.
ராமன், "உமக்கு யட்சர்களின் மொழி தெரியும் அல்லவா?" என்று கேட்டான்.
"ஆம்", என்றார் ரிஷி.
"நான் சொல்வதை அவளிடம் திருப்பிச் சொல்லும்", என்று என் கையில் இருந்த தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டான்.
"என் கையில் உள்ள அக்கினி சாட்சியாக, இந்த மாலடம் என்னும் தாடகா வனம் இனி யட்சர்களுக்குச் சொந்தம். அயோத்யாபுரிக்கு இந்த நிலத்தில் எந்த உரிமையும் கிடையாது. இது பட்டத்து இளவரசனான என் மேல் ஆணை. என் தாயின் மேல் ஆணை", என்றான்
******************************************************
தாடகையின் காயத்திற்கு மருந்திட்டுக் கட்டுப் போட்டோம். பிறகு அவளிடம் பிரியாவிடை பெற்றுக் கிளம்ப வேண்டி இருந்தது. எங்களுடைய மூட்டைகளைப் போர்க்களத்தில் இருந்து எடுத்துக் கொண்டு நடந்த பொழுது லேசாக விடியத் தொடங்கியது.
விஸ்வாமித்திரர்,"ராமா, என்னை மன்னித்து விடு", என்றார்.
"இப்பொழுது மிதிலைக்குத் தானே அழைத்துச் செல்கிறீர்?" என்றான் ராமன்.
"ஆம். கவலைப்படாதே. இருந்தாலும் எனக்கு உன்னைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. உன் பாட்டனார் காலத்தில் இருந்து போர் புரிந்து வரும் நிலத்தை எப்படித் தியாகம் செய்ய உனக்கு மனது வந்தது?"
நான், " நமக்குச் சொந்தமே இல்லாத ஒன்றைத் தியாகம் செய்வதில் நம்மைப் போல வராது", என்றேன்.
தூரத்தில் யட்சர்களின் சிரிப்பொலி கேட்டது.
*********************************************************
My new story, a Chola period Tamil historical novella, is at
Tamil Story - ஒற்றாடல்
Update I:
Thaadaka's story as described in the Valmiki Raamyana is in the links below:
http://valmikiramayan.net/bala/sarga24/bala_24_prose.htm
http://www.valmikiramayan.net/bala/sarga25/bala_25_prose.htm
http://www.valmikiramayan.net/bala/sarga26/bala_26_prose.htm