Sunday, July 03, 2016

உயிர் - 1995 Kalki Second Prize winning Short story


உயிர்
-------------------------------------------------------------------------------------------------------
     - ராமையா அரியா

மனதைச் சுண்டி இழுக்கும் ஓலத்தைக் கேட்டு அலமந்து போய் நிமிர்ந்து உட்கார்ந்தான் சித்தார்த்தன். மனம் மறுநாளுக்குப் போட்ட கணக்குகளைத் தப்பி, பிரசவ வார்டில் இருக்கும் மனைவியின் மேல் குவிந்தது. அவன் திடுக்கிட்டதைப் பார்த்து எதிர் பென்ச் மாமி, "இப்போ தான் தொடங்கியே இருக்கு," என்றாள். கணவனிடம் சொல்லி விட்டு சித்து கவனிக்கிறானா என்று பார்த்தாள்.
ஹர்யான்விகளுக்கு மத்தியில் சண்டிகாரின் ஒரு பிரபலமான, பணக்காரத்தனமான தனியார் மருத்துவமனையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் இந்த சித்து ஒரு தமிழன் தான்.
ஐந்து வயதில் அனாதையான இந்த சித்துவிற்கு ஹரியானாவில் தமிழ் மனைவி வாய்த்தது அதிர்ஷ்டம் தான்.
ஐந்து வயதில் இருந்து உறவினர் தயவை எதிர்பார்த்து, முட்டி மோதி மேலே படித்து நாயாய் அலைந்து லோன் வாங்கி, கடை வைத்து சகலத்துக்கும் சண்டை போட்டுச் சலித்த வாழ்வில், என்ன விபரீதம் நடக்குமோ என்று பயந்து, காதலியைப் பெண் கேட்கப் போன இடத்தில், "சித்தார்த்! நீங்க எந்த ஜாதின்னு எல்லாம் நாங்க கவலைப்படலை. எங்க பேமிலி கொஞ்சம் முற்போக்கு. நீங்க இப்ப ஒரு ஸ்டோர் வைச்சு நடத்தறீங்க. உங்களுக்கு இருக்கிற திறமைக்கு பின்னால பெரிய பிசினஸ்மேன் ஆயிடுவீங்க. கல்யாணத்துக்கு எங்களுக்குச் சம்மதம்," என்ற பஞ்சாபகேசன், இவன் மாமனார்.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சித்துவிற்குச் சிரிப்பு வந்தது. மாமா நம்பியது வீண் போகவில்லை. ஒரு ஸ்டோரில் இருந்து, பல ஸ்டோர்கள் சண்டிகார் முழுதும், ஹரியானா முழுதும், இந்தியா முழுதும் என்று அவர் போட்ட கனக்குத் தான் தப்பியது. கவர்மெண்ட் வேலையில், கிளார்க்காக இருக்கும் மாமாக்களுக்கு ஒரு பிசினஸ் துறையில் இருந்து மற்றொன்றுக்குத் தாவுவது என்பது விபரீதமாகத் தோன்றுகிறது. இவ்வளவு சீக்கிரம் பெண்டாட்டியின் முதல் பிரசவத்தை இந்த மேன்மையான தனியார் மருத்துவமனையில் நடத்துமளவு தான் உயர்ந்ததற்குக் காரணம், தன்னுடைய பிசினஸ் மாற்றமே என்று உறுதியாக நம்பினான் சித்து. அவன் மாமா அப்படி நினைக்கவில்லை. அதனால் தான் எதிர் பெஞ்சில் உட்கார்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது அலறல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, சிந்துவின் முகம் வெளிறியது. அருகில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சர்தார்ஜி,"சில பேரால இந்தச் சத்தத்தைப் பொறுக்க முடியாது. ரொம்ப மென்மையான மனசு," என்று பஞ்சாபியில் தான் பக்கம் இருந்த மகனுக்கு விளக்கம் கொடுத்தார்.
நர்ஸ் ஒருத்தி சிந்துவின் கலவர முகத்தைப் பார்த்து அருகில் வந்து,"எல்லாம் நல்லா நடக்கும். கவலைப்படாதீர்கள்," என்றால் ஹிந்தியில்.
சித்து எழுந்து வெளியே வந்தான். முதல் மாடியில் இருந்து இருந்த உலகத்தைப் பார்த்துச் சோம்பல் முறித்தான். சற்று மனம் சாந்தமாக இருந்தது. கரம்சந்த் நினைவுக்கு வந்தான்.

*

"சித்து, நீ எனக்குத் தம்பி மாதிரி. அதான் இந்த பிளான் உன்கிட்ட எடுத்துட்டு வரேன். உன்னை விட எனக்கு நம்பகமான ஆள் வேறு யார் உண்டு?"
"சொல்லுங்க அண்ணே."
"நம்ம ரத்தன் சேட் தெரியுமில்ல.அந்தாள் பேமிலியோட குஜராத் போறான். இங்க பிசினஸ் பிடிக்கலையாம். சொத்து வேற நிறைய இருக்கு. குஜராத் போய் வேற பிசினஸ் பிடிக்கப் போறானாம். இங்க லோக்கல்ல அவன் ப்ராஜக்டை நம்மளுக்குக் குடுக்க அவன் ரெடி. முழுசா நானே பாத்துக்கறதுக்குப் பதில் உன்னையும் சேத்துக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்ற?"
கரம்சந்த் பெரிய புள்ளி. அவனே பார்ட்னர்ஷிப் அழைப்பது பெரிய கௌரவம் என்று கனக்குப் போட்டான் சித்து.
"என்ன பிசினஸ்?"

*

கேரள-தமிழக எல்லையில் பாலக்காடு ரோடில் சூரியன் உதயமாகும் நேரம் நின்று கிழக்கே பார்த்தால், ஐந்து, ஆறாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, உணவும், நீருமின்றி எலும்புகள் தெரிய இருந்த, உயிரற்ற கண்களுடன் நடக்கும் துயர மூட்டைகளை அடிமாடுகள் என்பார்கள். நாட்டின் பல பகுதிகளில் இவற்றை லாரிகளில் ஏற்றி கசாப்புக்கு அனுப்புவார்கள்.
"இங்க லோக்கல்ல மாடு வாங்கி, அங்க கசாப்புக்கு அனுப்பணும். இங்க இருந்து பெங்கால் போகும். நம்ம இடையில. நான் சின்ன வயசுல கொஞ்ச நாள் இந்த வேலை பாத்திருக்கேன். புத்திசாலித்தனம் இருந்தா நிறைய லாபம். ஹரியானால பசு வதைத்த தடுப்பு வேற வரப்  போவுது. நல்ல சமயம் இது. இந்த ஹரியான்வி முட்டாப் பசங்களை ஏமாத்த உன்னோட மதராஸி மூளையும், என்னோட குஜராத்தி மூளையும் போதும்."
சேட் எல்லாம் ரெடியாக வைத்திருந்ததால் எளிதில் எடுத்துக் கொண்டார்கள்.
அதன் பயன் தான் இந்த வசதி என்று நினைத்தான் சித்து. வாரிசு உருவாகிறது என்றதும் தன்னுடைய சிறு வயது நினைவுகள் மனதுள் சலசலப்பது தனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்கும் பொதுவா? சித்து திரும்பி வார்டுக்கு வந்தான்.
எல்லோரும் கொஞ்சம் கவலையாக இருப்பது போல் பட்டது. அவனைக் கவலையோடு பார்க்க, பழைய இடத்தில் வந்து அமர்ந்ததும் மாமா முனகத் தொடங்கினார். அந்த நர்ஸ் அவனைத் தாண்டிப் போக, "என்ன ஆச்சு?" அவள் பதில் சொல்லாமல் போனாள். பக்கத்தில் சர்தார்ஜி, "ஏதோ சின்னப் பிரச்சினை. பயப்பட வேண்டாம்," என்றார். மாமாவின் முனங்கல் சத்தம் அதிகமானது. சித்து தரையைப் பார்த்துக் குனிந்து உட்கார்ந்தான்.

*

புது பிசினஸ் பற்றி முதலில் மனைவியிடம் சொன்ன போது அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவள் சொன்னாள்: "ஏங்க, வேற தொழிலே அகப்படலியா? ஏன் இதைப் போய்?"
"நீ வேற வியாபாரம் வேண்டாம்னு சொல்லப் போறன்னு பாத்தா...," என்று அவன் சிரித்தான். "பிஸினஸ்ல நல்லது கேட்டது கிடையாதும்மா. மத்த மனுஷனுக்குத் தொந்தரவில்லாம செய்றதே பெரிசு. அத்தோட, எப்படியும் கசாப்புக்குப் போற  மாட்டை நாங்க வாங்கி, விக்கிறோம். அவ்வளவு தான். நாங்களா மாட்ட வெட்டப் போறோம்? சீக்கிரம் நிறைய பணம் பாக்கலாம்."
"எங்க அப்பா கிட்ட சொல்லிப் பாருங்க."
அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது.
அடிமாட்டு வியாபாரத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. பேரம் பேசி ஏரியாவில் மாடு விற்பவர்களிடம் மாடுகளை மொத்தமாக வாங்குவது. பிறகு பெங்காலில் உள்ள கசாப்பு சென்டருக்கு மாடுகளை ட்ரக்குகளில் ஏற்றி அனுப்புவது. ட்ரான்ஸ்போர்ட் மைதானம் போன முதல் நாள் நினைவு வந்தது. ரத்தன் சேட்டின் பழைய ஆட்கள் மாடுகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கரம்சந்த்  அவர்கள் வேலையைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு கத்தினான்.
"ஹலோ, யாருய்யா அது வண்டிய லோட் பண்றது?"
பழைய ஆட்கள் நின்று பார்த்தார்கள்.
"ஏய்யா, இவ்வளவு இடம் இருக்கு உள்ள. இன்னும் மாடு ஏத்துய்யா. மேல ரெண்டு ட்ரிப் போகணுமா?"
கொஞ்சம் சுமாராக உடுத்தி சூப்பர்வைசர் போல இருந்தவன் முன்னால்  வந்தான். "சார், லைவ்ஸ்டாக் ட்ரான்ஸ்போர்ட் ஆக்ட்படி, இவ்வளவு மாடு தான் இந்த சைஸ் ட்ரக்கில் ஏத்தலாம்னு..."
கரம்சந்த் அவனை முறைத்தான். பிறகு சித்துவைத் தனியே அழைத்துப் போய், "சித்து, இவங்க சரியில்லை. நான் இவங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, புது ஆளுங்க அனுப்பி வைக்கறேன்."
மறு நாள் ஆறு பேர் வந்தார்கள். ட்ரக்கில் இருந்த தடுப்புகள், மாடு சாப்பிட உள்ள சட்டிகள் என்று எல்லாவற்றையும் களைந்தார்கள். பிறகு மாடுகளை ஏற்றத் தொடங்கினார்கள். சித்து அவர்களை ஒருவிதமான கவர்ச்சியால் உந்தப்பட்டு, கண்கொட்டாமல் பார்க்க, முன்பு முப்பது மாடுகள் இருந்த இடத்தில் எண்பது மாடுகளை அடைத்து, அவை அசையக் கூடா வண்ணம் இருக்க ட்ரக்கின் பின்புறக் கதவை அறைந்து மூடினார்கள். அடைக்க முடியவில்லை.  கதவுடன் சற்றுப் போராடிய ஒருவன் கோபத்துடன் கதவைத் திறந்தான். அவர்கள் மத்தியில் தடிப்பாக இருந்தவன் சற்று எக்கி, மிக எளிதாக மாட்டின் முன்காலை முறித்தான். பின்காலையும் முறித்து, வளைத்து உள்ளே தள்ளி, ட்ரக் கதவை மூடி...

*

சித்து தலையை உலுக்கிக் கொண்டான். அது இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் நினைவு வருகிறது என்று அலுத்துக் கொண்டான். மாமாவின் முனகல் தாங்க முடியவில்லை. மீண்டும் வெளியே வந்து நின்றான்.
கரம்சந்திடம், "ட்ரான்ஸ்போர்ட் சைடு இன்னும் கொஞ்ச நாள் பாத்துக்கறேன். அதுல நிறைய விஷயம் இருக்கு. தெரிஞ்சுக்கணும்," என்றான்.
"அப்பப்ப ஏதாவது சிக்கலாச்சுன்னா உன்னைக் கூப்பிட்டு விடறேன்."
சிறிது காலத்திலேயே மாடுகளை அடைப்பதில் சித்து திறமைசாலியானான். அவனே அவ்வப்பொழுது வேலையில் இறங்கினான். "இன்னும் ரெண்டு இருக்கே, என்ன பண்றது?" என்ற வேலையாளைக் கெட்ட வார்த்தையால் திட்டி, அவன் உதவியுடன் அவற்றைக் கை, கால்களைக் கட்டி நிற்க இடமின்றி அடைந்த மாடுகளின் மேலே மூட்டை போலத்  தூக்கிப் போட்டான். ட்ரக்கின் விளிம்பில் நின்றவாறே உள்ளே திருப்தியுடன் பார்க்கும் போது அது நடந்தது. பெரிய மாட்டின் பக்கலில் இருந்த சிறியது உடல் மரத்து, எந்தப் பாகமும் அசைக்க இயலாமல், கழுத்தைச் சட்டென்று திருப்ப, அதன் கூரான கொம்பு பெரிய மாட்டின் கண்ணுக்குள் குத்திக் கிழித்து...

*

தலையை மறுபடி மறுபடி, அப்படியும் இப்படியும் ஆட்டினான் சித்து. இப்போது மனைவியின் பிரசவத்தை விடப் புது  பயம் பிடித்துக் கொண்டது. முன்னெப்போதும் இல்லாமல் இந்த நினைவுகள் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி வந்து அம்முகின்றன? ஆனால் அவை விடவில்லை. அவன் உத்தரவை எதிர் கொள்ளவில்லை. கலங்கி அடித்துக் கருப்பு வெள்ளமாகப் பெருக்கெடுத்தன.
லோடிங் முடிந்து ஓய்வாக ஒரு நாள் ஆட்களுடன் உட்கார்ந்து டீ குடித்த போது ஒருவன் சொன்னான்.: "சார், ஆனா நீங்க பெரிய ஆள். உங்கள மாதிரி யாரும் லோடிங் பண்ணி நான் பார்த்ததில்லை. செம வேலை."
சித்து பெருமையாகச் சிரித்துக் கொண்டான். "இது ஒரு சவால் மாதிரி இருக்கா. அதான் எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட்."
மனம் ஏன் குழம்புகிறது என்று வெளியே தெரிந்த டீக்கடைக்குக் கிளம்பும் போது விடை கிடைத்தது. தன் மாமனாரை நினைத்துப் பல்கலைக் கடித்தான்.
மனைவி கர்ப்பிணி என்று தெரிந்த முதல் சில உற்சாகமான நாட்களில் ஒரு நாள் வீட்டினுள் நுழையும் போது மாமனார் வந்திருப்பதைப் பார்த்தான்.
"வாங்க மாமா! கங்கிராட்ஸ்! நீங்க தாத்தாவாகப் போறீங்க."
"எனக்கு ஏற்கனவே ரெண்டு பேரப்  பிள்ளைங்க இருக்கு சித்து. உனக்கு நான் தான் கங்கிராட்ஸ் சொல்லணும்."
பேச்சு எங்கெங்கோ சென்ற போதும், கடைசியில் மாமா, "உன்னோட பிசினஸ் அவ்வளவு நல்ல தொழில் இல்லை சித்து."
"ஏன் மாமா, இவ உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா?"
"அவ எதுவும் சொல்ல வேண்டாம். நான் 'எஸ்.பி.ஸி.ஏ.'ல இருக்கேன். நான் சொல்றதைக் கேளு. உங்க பிசினஸ் எங்களோட கண்காணிப்புல இருக்கு. ரொம்பக் கொடுமை அது. வேற ஏதாவது பண்ணேன்?"
லேசாகக் கிளர்ந்தெழுந்த கோபத்துடன் சித்து அவரைப் பார்த்தான். "சட்டப்படி நாங்க மாடு ட்ரான்ஸ்போர்ட் பண்றதுல தப்பு எதுவும் இல்லை."
"யார் சொன்னது? நீங்க மாடுகளைக் கொடுமையா நடத்தறீங்க. ட்ரக்ல மாட்டுக்குச் சாப்பாடு வைக்கிறீங்களா?"
சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர், " சித்து, உங்க ட்ரக் நம்பரை நான் போலீசுக்குப் போன் போட்டுச் சொன்னா போதும். பிடிச்சு வச்சுடுவாங்க, தெரியுமா?"
"சும்மா மிரட்டாதீங்க. நாங்க மட்டும் தான் இதச் செய்யுறோமா, என்ன. உங்களால ஆனதைப் பாருங்க."
பஞ்சாபகேசன் எழுந்து போகும் போது, "உனக்கு முன்னாடி இங்க இருந்த  ரத்தன் சேட் ஏன் வித்துட்டுப் போனான்னு தெரியுமா? பசுவைத் துன்புறுத்தினா பாவம்; வம்சத்தையே அழிச்சிடும்," என்றார்.
மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்த சித்து, அவளது வெளுப்பான முகம் இன்னும் வெளிறுவதைக் கவனித்தான்.

*

சூடான டீ உள்ளே இறங்கினால் மனசு லேசாகும் என்று எதிர்பார்த்துக் கடையில் உட்கார்ந்த பொழுது, மனப்பாறையின் உள்ளே, ஒரு கரிய பிளவில் இருந்து  வெளிப்பட்டு நீந்தி மேலே வந்த வண்ணம், வேண்டாம், வேண்டாம் என்று அமுக்க, மேலே எதிர் கொண்டு எழும்பி அவன் கண் முன்னே மிதந்து வந்து நிலை பெற்றது.
கைகால் பதற திரும்பி மருத்துவமனைக்குள் வந்தான் சித்து. மாமியின் கண்களில் நீர். "ஈசுவரா," என்று புலம்பிக் கொண்டிருந்தாள். மாமா அவனைப் பார்த்து முனங்கவில்லை. அவர் முகம் இருண்டிருந்தது. விபரீதமாக அறைக்குள் இருந்து கிளம்பிய சப்தம் சகிக்காமல் அருகில் இருந்த தூண் மேல் சாய்ந்து, கண் மூடி...யாரை வேண்டுவது, என்னவென்று வேண்டுவது?
வீட்டுக்குக் கிளம்புமுன் கடைசி லோடுக்கு வேண்டியது எல்லாம் செய்து விட்டுப் பார்வையிடும் போது, ஒருவன், சற்றுப் புதியவன், அழைத்தான்.
"ஸாப், கதவு மூடவில்லை."
"காலை ஒடிப்பது தானே, முட்டாள்!"
"இல்லை ஸாப், அந்த மாடு..."
சிறிது அருகில் போய்ப் பார்த்த மாடு சினைப் பசு. "எந்த மடையன் இதைப் போய் வித்தது..." என்று முனங்கிய சித்து, "என்ன இருந்தாலும் சாகத்  தானே போகுது. காலை ஓடி," என்றான். தயங்கியவாறே ட்ரக்கின் உள்ளே ஏறியவனை யோசனையுடன் பார்த்துப் பிறகு, "இரு. நீ இறங்கு," என்று மேலே  ஏறி வேலையை முடித்து திரும்பி நடந்து மைதான எல்லைக்கு வரும் போது மனைவி நிற்பதைப் பார்த்தான்.
நர்ஸ் ஒருத்தி ஓடும் சத்தத்தால் திடுக்கிட்டு விழித்துப் பார்த்த போது கண்கள் பனித்திருப்பதை உணர்ந்தான். மீண்டும் தூங்கிப் போக...
கை, கால்கள் வளைந்து இருந்தன அவன் குழந்தைக்கு. வில் போன்று வளைந்த கால்களைப் பார்த்து விட்டு மேலே, முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடித்து, யாரோ தலையைப் பின்னால் இருந்து அழுத்த, குழந்தையின் முகத்தைப் பார்த்துக் குனிந்து, அதன் கண்ணைப் பார்த்து, ஐயோ! அந்தக் கண்...

*

"சித்து! சித்து!"
யாரோ எழுப்புவது உணர்ந்து, கனவு என்று தெளிந்து கண் திறந்தால் மாமா! "வா, உன் பெண்ணை வந்து பாரு," என்று இழுத்தார். வார்த்தை விபரீதமாய் அர்த்தம் செய்து கொண்டு முன்னே சென்று பயத்துடன் அவள் படுக்கையருகே போய்ப் பார்த்தான். பக்கத்தில் அலறி அழும் குழந்தையுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவன் அருமைப் பெண்டாட்டி.

*********************************************************************************

Trotsky Marudhu's Drawing for this short story is below:

Tuesday, April 26, 2016

மனைவி அமைவதெல்லாம் - Tamil Short Film Script 4


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

மனைவி அமைவதெல்லாம்

FADE IN:

உட்புறம் – முதலிரவு அறை – இரவு

கதவு திறக்கிறது. மாலா உள்ளே வருகிறாள். 25 வயது மதிக்கத் தக்க பெண். தலையில் பூ வைத்திருக்கிறாள். கட்டில் அலங்காரத்துடன் இருக்கிறது. சுற்றிப் பார்க்கிறாள்.
பாத்ரூமில் பிரதாப் குளிக்கும் சத்தம் கேட்கிறது.
மாலா சற்று நேரம் அறையில் அமர்ந்திருக்கிறாள். கண்களை மூடுகிறாள்.
Screen fades.
உட்புறம் – முதலிரவு அறை – இரவு

மாலா கண்களைத் திறக்கிறாள். உள்ளே குளிக்கும் சத்தம் கேட்கிறது. எழுந்து அமர்கிறாள். சற்று நேரம் தரையைப் பார்க்கிறாள்.

உட்புறம் – பிரதாப் வீட்டு வாசல் – பகல்

பிரதாப்பும் மாலாவும் வலது கால் எடுத்து வைத்து வீட்டில் நுழைகிறார்கள். பின்னால் அவன் அப்பா, அம்மா. வீட்டுக்குள் பாட்டி டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மாலா ஒரு நாற்காலியில் உட்கார்கிறாள். அம்மா உள்ளே செல்கிறாள். அப்பா உள்ளே அறைக்குச் செல்கிறார்.
பிரதாப்
நீ இரு. நான் குளிச்சிட்டு வந்திர்றேன்

அவன் உள்ளே போகிறான். மாலா குழப்பத்துடன் அவன் போவதையே பார்க்கிறாள்.
பாட்டி
வா. இப்பிடி வந்து உக்காரு.

மாலா
இல்ல...ஏதாவது வேலை இருந்தா.

பாட்டி
இன்னைக்கு உனக்கு லீவு

சொல்லி விட்டு “ஹா ஹா” என்று சிரிக்கிறாள்.

உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.
மாலா
நீங்க ஏன் ஒரு நாளைக்கு இவ்வளவு முறை குளிக்குறீங்க?
பிரதாப்
(ஆச்சரியத்துடன்)
எவ்வளவு முறை?
மாலா
இன்னைக்கு மட்டும் ஒன்பது முறை
பிரதாப்
(யோசித்து)
அப்போ ரவுண்டா பத்தாவது முறை குளிச்சிட்டு வந்திர்றேன்.
மாலா அவன் ஜோக்கடிப்பதாக நினைத்துச் சிரிக்கிறாள். ஆனால் பிரதாப் துண்டை மறுபடி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் போகிறான். மாலாவின் சிரிப்பு உறைகிறது.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.பிரதாப், மாலா, பாட்டி, அவன் அம்மா,
அப்பா எல்லோரும் தரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலாவுக்குப் பின்னால் டி.வி. அதில் ஏதோ சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. பாட்டி அதையே உற்றுப் பார்க்கிறாள்.
விளம்பர இடைவெளியில் பாட்டி சுற்றிப் பார்க்கிறாள். “உம்” என்றாள்.
அப்பா
என்னடா, இன்னைக்கு ஆபீஸ் போலியா?
பிரதாப்
இல்லப்பா, இன்னைக்கு லீவு.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
மாலா எதுனா பேசு.
மாலா
(திடுக்கிட்டு)
வந்து...
டி.வியில் மறுபடி சீரியல் தொடங்குகிறது.
பாட்டி
சும்மா கிட
பிரதாப்
நான் குளிச்சிட்டு வரேன்.
அவன் எழுந்து போகிறான்.
மாலா
(தயங்கி)
இவர் ஏன் இத்தனை முறை குளிக்கிறார்?
அப்பா விட்டத்தைப் பார்க்கிறார். அம்மா தட்டைப் பார்க்கிறாள்.
பாட்டி
ஏன்? உங்க வீட்டுல யாரும் குளிக்க மாட்டீங்களோ?
மாலா
இல்லை...இவ்வளோ முறை குளிக்கிறாரே அதான்.
பாட்டி
அவன் தாத்தா மாதிரியே இருக்கான். அவரும் இப்பிடித் தான். ரொம்ப சுத்தம்.
சற்று நேர அமைதி.
மாலா
இல்ல.. ஏதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சினையோன்னு தான்...
பாட்டி
இன்னாது அது?
அப்பா
மனோதத்துவ நோய்
பாட்டி
(அம்மாவை பார்த்து)
இன்னாடி சொல்றா இவ?
அம்மா
உங்க பையனுக்கு மென்டலுன்றா.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
யாரு மெண்டல்?
ஆனால் சீரியல் பாட்டுக் கேட்கிறது. பாட்டி அமைதியாகிறாள்.
மாலா முகத்தில் கலக்கம்.
உட்புறம் – பிரதாப்பின் அறை – பகல்
பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருந்தாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து,
பிரதாப்
சீரியல்ல ஏதாவது பிரச்சினையா?
மாலா இன்னும் விசும்பி அழுகிறாள். பிரதாப்புக்கு ஒன்றும் புரியவில்லை.
பிரதாப்
பாட்டி எதுனா சொன்னாங்களா?
மாலா இல்லை என்று தலையாட்டுகிறாள்.
பிரதாப்
ஹனிமூனுக்குப் போலனு வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசத்துல குத்தாலத்துல சீஸன். போயிட்டு சுகமா குளிச்சுட்டே இருக்கலாம்.
மாலா
நீங்க ஏன் எப்ப பாத்தாலும் குளிச்சிட்டே இருக்கீங்க?
பிரதாப் மௌனமானான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரதாப்
(பரிதாபமாக)
இந்த வெய்யில்ல இது ஒரு கேள்வியா?
மாலா
எனக்குக் கவலையா இருக்கு. எதாவது டாக்டர் பாக்கலாமே
பிரதாப்
டாக்டரா? எதுக்கு? சுத்தமா இருந்தா தப்பா? எங்க தாத்தா கூட..
மாலா
அவருக்கும் எதாவது ப்ராப்ளமோ என்னவோ..
பிரதாப்புக்கு முதல் முறையாகக் கோபம் வருகிறது.
பிரதாப்
யாருக்கு பிராப்ளம்? உங்க பரம்பரையே பைத்தியம்
மாலா மெதுவாக அழுகிறாள்.
பிரதாப்
மாலா..இத பார். இப்பிடிப் பண்ணலாம். நாளைக்கு முழுசா குளிக்காம இருக்கேன். இருந்திட்டேன்னா டாக்டர் வேணாம்
மாலா தலையாட்டுகிறாள்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பாட்டி கால் மேல் கால் போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராம ஜயம் எழுதிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டி
(வேலைக்காரியிடம்)
வீட்டுக்கு மருமவ வந்தாச்சு..நீ அடுத்த மாசத்துல இருந்து வர வேண்டாம்
பிரதாப் பல் தேய்த்துக் கொண்டே வருகிறான்.
அம்மா
என்ன குளிக்காம பல் தேய்க்குற?
பிரதாப்
இன்னைக்குக் குளிக்கல
சட்டென்று அறையில் ஒரு மாற்றம் தெரிகிறது. பாட்டி எழுதுவதை நிறுத்துகிறாள். வேலைக்காரி பெருக்குவதை நிறுத்துகிறாள்.
அம்மா
(கவலையுடன்)
ஏண்டா, காய்ச்சலா?
பிரதாப்
இல்லம்மா சும்மா தான்.
பாட்டி
மாலா ஏதாவது சொன்னாளா? மாலா, இங்க வாடி.
மாலா நடுங்கிக் கொண்டே வருகிறாள்.
பாட்டி
அவனக் குளிக்க வேண்டாம்னு சொன்னியா?
மாலா
இல்ல பாட்டி..
பாட்டி
என்ன நொள்ள பாட்டி?
அப்பா
விடும்மா.. தண்ணி மிச்சம்.
பாட்டி
எவ்வளவு நேரம்னு பாப்போம். இவங்க தாத்தா இப்பிடித் தான். வீரமா குளிக்கலடினுவாரு. மதியத்துக்குள்ள சேர்ந்து குளிக்கலாம் வாடிம்பாரு
SERIES OF SHOTS

கடிகாரம் மெதுவாக நகர்கிறது. பிரதாப் அங்குமிங்கும் நடக்கிறான். ஒரு அருவி விழுவது போன்ற சத்தம் மெதுவாகத் தொடங்கி கூடிக் கொண்டே போகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
நண்பகல். எல்லோரும் வழக்கம் போல சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். பாட்டி மாலாவை முறைத்தவாறு இருக்கிறாள்.
பாட்டி
எங்க காலத்துல புருசனுக்குச் சரியா உக்கார்ந்து பேசக் கூட மாட்டோம்
பிரதாப்
பாட்டி...சும்மா இரு
அவன் அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். பிறகு சட்டென்று எழுந்து,
பிரதாப்
நான் குளிக்கப் போறேன்
அவன் உள்ளே போகிறான். மாலா அவனையே பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றன.
உட்புறம் – டாக்டர் கிளினிக்கில் – இரவு
நான்கைந்து நாற்காலிகளில் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு வரிசையாக. மாலாவும் பிரதாப்பும் இரு நாற்காலிகளில். டாக்டர் தன்ராஜ், Psychiatrist என்று போர்ட் தெரிகிறது.
அறையின் உள்ளே இருந்து ஒருவர் சிரித்தவாறே வெளியே போகிறார். உள்ளே ஒருவர் எழுந்து போகிறார்.
பிரதாப்
(பக்கத்தில் இருந்தவரிடம்)
உங்களுக்கு என்ன பிராப்ளம்?
அவர் முறைக்கிறார். பிறகு முகத்தை திருப்பிச் சுற்றிப் பார்க்கிறார்.
பக்கத்து சீட்காரர்
நான் எனக்காக வரல. ஒரு ஃபிரண்டுக்காக வந்தேன்
பிரதாப்
ஓஹோ
முன்னால் அமர்ந்திருப்பவர்
இங்க எல்லோரும் ஃபிரண்டுக்காகத் தான் வந்திருக்கோம்.
பஸ்ஸர் அடிக்கிறது.
உட்புறம் – டாக்டர் அறை – பகல்
டாக்டர் அறை மிதமான வெளிச்சத்தில் இருக்கிறது. பிரதாப்பும் மாலாவும் அமர்ந்திருக்கிறார்கள்.
டாக்டர்
சொல்லுங்க...என்ன விஷயம்?
மாலா
இவர் ஒவ்வொரு நாளும் நிறைய முறை குளிக்கிறார்
டாக்டர்
குணப்படுத்திரலாம்
பிரதாப் அதிர்சியாகிறான்.
பிரதாப்
டாக்டர், இதெல்லாம் ஒரு தப்பா? நான் சொல்றதக் கேளுங்க.
டாக்டர்
ஒரு நாளைக்கு எவ்வளோ முறை குளிக்குறீங்க?
பிரதாப்
பத்து முறை தான்
டாக்டர்
சின்ன வயசுல இருந்தா?
பிரதாப்
இல்ல டாக்டர்...இருபது வயசுல இருந்து...
டாக்டர்
குளிக்காம இருக்க முடியலை...இல்லையா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
டாக்டர்
சில டெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு Obsessive Compulsive Disorder இருக்கலாம். கவலப்படாதீங்க. நான் குடுக்கிற மாத்திரை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்
பிரதாப் முகம் பேயறைந்தது போல ஆகிறது.
டாக்டர்
நூத்துல அஞ்சாறு பேருக்கு வரது தான் இது. பரம்பரைல யாருக்காவது வந்தா உங்களுக்கும் வர ரிஸ்க் இருக்கு.
வெளிப்புறம் – சாலை – இரவு
பிரதாப்பும் மாலாவும் அமைதியாக நடக்கிறார்கள். சாலையில் வாகனங்கள் கடந்து போகின்றன. மஞ்சள் நிற விளக்கு வெளிச்சம்.
மாலா
ஃபீஸ் இவ்வளவு கேப்பாங்க தெரியாது.
பிரதாப் மவுனமாக இருக்கிறான். மாலா அவன் கையைத் தொட்டு,
மாலா
என் மேல கோபமா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
மாலா
கவலப்படாதீங்க..ஒரு மாசத்துலயே பலன் தெரியும்னாரே டாக்டர்
பிரதாப் சட்டென்று நிற்கிறான்.
பிரதாப்
நீ என்ன டைவர்ஸ் பண்ணிரு மாலா
மாலா புன்னகைக்கிறாள்.
மாலா
அதுக்குள்ள போரடிக்குதா?
பிரதாப் கண்களில் நீர் பளிச்சிடுகிறது.
பிரதாப்
டாக்டர் சொன்னாரு பாரு. பரம்பரையா வரலாமாம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு
மாலா
வரலாம் தான சொன்னாரு. பிள்ளைங்கள குளிக்கவே விட மாட்டேன்..கவலப்படாதீங்க
பிரதாப்
இல்ல மாலா..என்ன டைவர்ஸ் பண்ணிரு
மாலா மறுபடி நடக்கத் தொடங்குகிறாள்
மாலா
முதல்ல சரியாப் போகட்டும். அப்புறம் டைவர்ஸ் தான்
சில வினாடிகள் கழித்து
மாலா
பாட்டி கிட்ட சொல்லணுமா?
பிரதாப்
வேண்டாம்...பெரிய ரகளையாயிடும்
INSET – சில தினங்கள் சென்ற பின்
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – இரவு
பிரதாப்பும் மாலாவும் வீட்டுக்குள் நுழைகிறார்கள். பாட்டி, அம்மா, அப்பா மூவரும் ஒரே சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று தெரிகிறது.
அப்பா
ஏண்டா..எதோ டாக்டர் கிட்ட போறியாமே?
பிரதாப்
இல்லியே..
அம்மா விசும்புகிறாள்
அம்மா
ஐயோ பொய் வேற சொல்றானே...
அப்பா
நுங்கம்பாக்கத்துல நீ ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போன போது எங்க ஆஃபீஸ் சுப்பிரமணி பார்த்திட்டான்
பிரதாப்
(கவலையுடன்)
அவர் அங்க எதுக்கு வந்தாராம்?
அப்பா
எதோ ஃபிரண்டுக்காகப் போனானாம். நீ ஏண்டா பைத்தியக்கார டாக்டரெல்லாம் பாக்குற?
பிரதாப்
மாலாவுக்கு தொண்ட கட்டு. அதான் போனோம்
அப்பா
ஏண்டா பொய் சொல்ற?
பாட்டி
ஏ மாலா..இங்க வாடி. டாக்டராண்ட போனீங்களா?
மாலா
(தயக்கத்துடன்)
இவருக்குத் தான்
அம்மா மாலாவை முறைக்கிறாள்.
பாட்டி எழுந்து நிற்கிறாள். கைகளைத் தூக்கிச் சோம்பல் முறிக்கிறாள்.
பாட்டி
அதான் இவன் கொஞ்ச நாளா கம்மியாக் குளிக்கிறானா?
மாலா
ஆமாம்
அம்மா
அடிப் பாவி..எம் புள்ளயப் பைத்தியமாவே ஆக்கிட்டீங்களே
பாட்டி
தா....சும்மா கிட.
(beat)
இவன் தாத்தாவும் அந்தக் காலத்துல எல்லா டாக்டரும் பாத்தாரு. அப்பல்லாம் மாத்திரை ஒண்ணுமில்லை. இப்ப இருக்கு. நல்லதாப் போச்சு
பிரதாப்
(தைரியமாக)
அம்மா, சும்மா பைத்தியம் அது இதுனாத. அங்க வர எல்லாரும் ரொம்ப டீஸன்ட். நீ வேணா வந்து பாரேன். ஜாலியா இருக்கும்
இருவரும் அறைக்குள் செல்கிறார்கள்
உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் கதவுக்குத் தாளிடுகிறான்.
பிரதாப்
பாட்டி வாழ்க
மாலா
மெதுவாப் பேசுங்க
அவன் அவளை நெருங்கி வருகிறான்.
பிரதாப்
டைவர்ஸ் பண்ணலாமா?
மாலா முகம் சுளிக்கிறாள். அவனைப் பிடித்துத் தள்ளி
மாலா
இப்பல்லாம் குளிக்கிறதே இல்லையா? போய்க் குளிச்சிட்டு வாங்க

THE END
Monday, April 25, 2016

தட்டுங்கள் திறக்கப்படும் - Tamil Short Film Script - 3


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

தட்டுங்கள் திறக்கப்படும்FADE IN:

உட்புறம் – சுரேஷ் வீட்டு அறை – இரவு

ஒரு மஞ்சள் டேபிள் லேம்ப் வெளிச்சம். மேஜை. மேஜையில் லேப்டாப் கம்ப்யூட்டர். பக்கத்தில் பிரிண்டர். நாற்காலியில் சுரேஷ். முப்பத்தி இரண்டு வயதிருக்கும்.
கேமிரா அவன் பின்னால் நோக்கி நகர்கிறது. கடிகாரம் மணி இரவு இரண்டு என்று காட்டுகிறது. கம்ப்யூட்டர் திரை தெரிகிறது. கூகிள். “How to get a ration card” என்று தேடியிருக்கிறார்.
பிரிண்டர் கிளிக் ஆகும் சத்தம். கேமிரா அவரைத் தாண்டி பிரிண்டரைக் காட்டுகிறது. வரிசையாகப் பேப்பர் வருகிறது. Camera zooms on the paper.

உட்புறம் – சுரேஷ் வீட்டு ஹால் – பகல்

வாசல் கதவு திறந்திருக்கிறது. காலை வெளிச்சம். சுரேஷ் ஷூ அணிந்து எழுகிறான். கையில் ஒரு கத்தை பேப்பர். தோளில் ஒரு லேப்டாப் பை. வெளியே போகக் காலடி எடுத்து வைக்கிறான்.
Offscreen குரல் கேட்கிறது.
சுரேஷ் மனைவி
(O.S)
நாம யூ.எஸ்ல இருந்து வந்திருக்கோம்னு சொல்லிறாதீங்க. பைசா ஜாஸ்தியா கேக்கப் போறாங்க

சுரேஷ் மேலே உள்ள பிள்ளையார் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வெளியே போகிறான்

வெளிப்புறம் – மயிலாப்பூர் ரேஷன் அலுவலகம் வாசல் – பகல்

Establishing shot: Shot of Ration office board.
பல வாகனங்கள் சென்று வரும் ஓசை. ஹாரன் சத்தம். நல்ல வெயில்.
சுரேஷ் நின்று அலுவலகம் இருக்கும் மாடியை நிமிர்ந்து பார்க்கிறான். மாடிப்படி தெரிகிறது.
உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

ஒரு மேஜை போட்டிருக்கிறது. அதன் பின்னால் அதிகாரி-1 அமர்ந்திருக்கிறார். அவர் முன் வரிசையாக மூன்று பேர் நிற்கிறார்கள். கடைசி ஆளாக சுரேஷ்.
ஹாலில் அடுத்த பக்கம் ஓரிரு கவுண்டர்கள் இருக்கின்றன. அதன் பின்னால் ஓரிரு பெண் அலுவலர்கள். நிறைய பேப்பர்; பைல்கள். சற்றே பழைய கட்டிடம் என்று தெரிகிறது.
சுரேஷ் வேர்வையைத் துடைத்துக் கொள்கிறான். பதட்டமாக இருக்கிறான். மறுபடி மறுபடி கையில் உள்ள பேப்பர்களைச் சரி பார்க்கிறான்.
அதிகாரி-1
Next?

சுரேஷ் தன் கையில் உள்ள கத்தை பேப்பரை அவர் மேஜை மேல் வைக்கிறான். பழைய ரேஷன் கார்டை எடுத்து கொடுக்கிறான். அவர் அதைத் திறந்து பார்க்கிறார். சுரேஷ் அவரையே பார்த்தபடி இருக்கிறான்.
அதிகாரி-1
அட்ரஸ் மாறியிருக்கா? ப்ரூப் வச்சிருக்கீங்களா?

சுரேஷ்
(படபடப்புடன்)
வச்சிருக்கேன் சார்.

அதிகாரி-1 ஏதோவொரு ரேஜிஸ்தரைப் பார்த்து விட்டு
அதிகாரி-1
ஸ்டாப் சப்ளை போட்டிருக்கு?

சுரேஷ் திருதிருவென்று முழிக்கிறான்.
சுரேஷ்
சார்?

அதிகாரி-1
சப்ளை பார்க்க certificate வேணுமே.

சுரேஷ் கையில் உள்ள பேப்பர்களைப் புரட்டி பார்க்கிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை.

அதிகாரி-1
வெளியூர்ல இருந்தீங்களா?

சுரேஷ் அவரைக் கவனிக்காமல் கையில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தள்ளி வருகிறான்.


வெளிப்புறம் – ரேஷன் அலுவலகம் வெளியே – பகல்

சுரேஷ் போனில் பேசுகிறான்

சுரேஷ்
ஆமா மாமா. என்னமோ certificate கேக்குறான்.

போனில் மாமாவின் குரல்
காசு எதிர்பாப்பாங்க. யூ.எஸ்ல இருந்து வந்தேன்னு சொன்னீங்களா?

சுரேஷ்
இல்ல மாமா...

போனில் மாமாவின் குரல்
கொஞ்சம் ரூவா வெட்டுங்க

சுரேஷ்
யார் கிட்ட கொடுக்கணும்?

போனில் மாமாவின் குரல்
(அவன் பேசுவதைக் கவனிக்காமல்)
காசு கொடுத்தா எல்லாம் சரியாயிடும்..என்ன?

சுரேஷ்
சரி மாமா. ஆனா யார் கிட்ட...எவ்வளவு

போனில் மாமாவின் குரல்
சரி..நான் அப்புறம் பேசுறேன்.

சுரேஷ்
மாமா? ஹலோ?

போன் கட்டாகிறது. சுரேஷ் சலிப்புடன் கையில் உள்ள பர்சை எடுத்துப் பார்க்கிறான். இரு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் தெரிகின்றன. பர்சில் இருந்து எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைக்கிறான். சுற்றிப் பார்க்கிறான்.
சற்றுத் தள்ளி படியருகே ஒரு சிறு ஸ்டூலில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். வயதானவர். ஒரு லெட்டர் பேடை வைத்துக் கொண்டு மனு எழுதிக் கொடுப்பவர். அவர் எதிரே இரண்டு வயதானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சுரேஷ் அவரை உற்றுப் பார்க்கிறான்.
மெதுவாக அவர் அருகே போய் நின்று கொள்கிறான். அவர் சற்று நேரம் கழித்து அவனை நிமிர்ந்து பார்க்கிறார். பிறகு தம் வேலைக்குத் திரும்புகிறார்.
ஒரு சில வினாடிகள் கழித்து

மனு எழுதுபவர்
தம்பி, என்ன விஷயம்?

சுரேஷ்
இல்ல.... ரேஷன் கார்டு வாங்கணும்

மனு எழுதுபவர்
உள்ள போங்க...தருவாங்க

சுரேஷ் வேறு வழியில்லாமல் மேலேறி போகிறான்

உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். ஹாலின் நடுவில் நன்றாக உடை உடுத்தி ஒருவர் நிற்கிறார். சுரேஷ் அவரை சற்று நேரம் பார்க்கிறான். பிறகு அவர் அருகே சென்று நிற்கிறான். அவர் அவனை விநோதமாகப் பார்க்கிறார்.

சுரேஷ்
நல்ல வெயில்

பாக்கெட்டில் உள்ள ஐநூறு ரூபாய் நோட்டை தெரிவது போல வைக்கிறான். பிறகு அவர் முகத்தை உற்றுப் பார்க்கிறான்.

நடுவில் நிற்பவர்
ம்ம்.

சுரேஷ்
(தணிவான குரலில்)
கார்டு தருவாங்களா?

நடுவில் நிற்பவர்
(அதே தணிவான குரலில்)
ஏன்? ஏதாவது பிரச்சினையா?

சுரேஷ்
எவ்ளோ தள்ளணும்?

நடுவில் நிற்பவர் அவனைப் புரியாமல் பார்க்கிறார்.

அதிகாரி-1
வாங்க. லைன்ல வாங்க.

நடுவில் நிற்பவர் போய் கியூவில் நின்று கொள்கிறார். சுரேஷுக்கு அப்போது தான் அவரும் கார்ட் வாங்க வந்தவர் என்று புரிகிறது.
சுரேஷ் சற்று நேரம் அங்கே நின்றபடி சுற்றிப் பார்க்கிறான். எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்து வருகிறார்கள். மேலே பேன் சுற்றும் சத்தம்.

வெளிப்புறம் – ரேஷன் அலுவலக காரிடார் – பகல்

சுரேஷ் போனில் பேசுகிறான்.

சுரேஷ்
டேய், உனக்கு ஹைதரபாத்ல யாரோ எம்.பி தெரியும்னு சொன்னயில்ல? அவர் கூட பேசணும்.

போனில் நண்பன் குரல்
எதுக்கு? என்ன விஷயம்?

சுரேஷ்
மயிலாப்பூர் ரேஷன் ஆபீஸ்ல இருக்கேன்டா. இங்க எவனுக்கு லஞ்சம் தரணும் தெரியல. எவ்வளோ தரணும்னும் தெரியலை. கொஞ்சம் கேட்டு சொல்றியா?

ஒரு பாட்டி மெதுவாகத் தாண்டிப் போகிறாள். சுரேஷ் அவளையே பார்க்கிறான்.

போனில் நண்பன் குரல்
அதுக்கு எவனாவது ஹைதரபாத் எம்.பி கிட்ட போயி கேப்பானா? ஏதாவது அறிவிருக்கா உனக்கு?

சுரேஷ் போனை கட் செய்து விட்டு சற்று நேரம் தரையைப் பார்க்கிறான். பிறகு உள்ளே செல்கிறான்.

உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

உள்ளே வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். சுரேஷ் அவர்களுடன் போய் நிற்கிறான்.

அதிகாரி-1
Next?

சுரேஷ்
(தைரியமாக)
சார், ஸ்டாப் சப்ளைன்னா என்ன?

அதிகாரி-1
வெளியூர்ல இருந்தீங்கன்னா கார்டு கேன்சல் பண்ணனும். இல்லைன்னா ஒரு லெட்டர் எழுதிக் கொடுங்க, போதும்.
(beat)
சுரேஷ்
(ஆச்சரியத்துடன்)
அவ்ளோ தானா?

அதிகாரி-1
அவ்வளவே தான். Next?

BEGIN FAST MOTION

SERIES OF SHOTS

A. Upbeat music. Fast motion.
B. சுரேஷ் லெட்டர் எழுதுகிறான்.
C. அதிகாரியிடம் கொடுக்கிறான்.
D. “டக், டக்” என்று நாலு சீல் அடிக்கப்படுகிறது
END FAST MOTION

வெளிப்புறம் – ரேஷன் கடை காரிடார் – பகல்

சுரேஷ் போனில் பேசிக் கொண்டே போகிறான்

சுரேஷ் மனைவியின் குரல்
எப்போ வரும்னு ஏதாவது சொன்னாங்களா?

சுரேஷ்
ஒரு மாசம் தான்.
(beat)
By the way
(beat)
ஒரு பைசா கொடுக்கல.

THE END