Wednesday, May 17, 2023

குறுங்கதை - 7 - IT Wing



“நமக்குத் தெரிஞ்ச பையன் தான். கம்பியூட்டர்ல நல்லா தட்டுவாப்பல,” என்றார் வட்டச் செயலாளர்.
“அப்புறம் நான் சொன்னது?” என்றார் I.T Wing பொறுப்பாளர் ராஜா.
“ம்ம்..மயிலாப்பூர்ல தான் சின்ன வயசுல. நல்லா அவுங்க பாஷை பேசுவான்.”
“எங்க கொஞ்சம் பேசிக் காமி, தம்பி,” என்றார் ராஜா வினோதைப் பார்த்து.
வினோத் தயங்கினான். “அது அவுங்க ஆளுங்க கூட பேசும் போது தானா வரும் சார்.”
“எழுதும் போது?”
“அது வரும்.”
“சரி, உள்ள போய் ID வாங்கிக்க.”
*
வினோத்தை முதலில் சாதாரணமாக டி.வியில் வரும் அய்யர்மார்களை troll செய்ய அனுப்பினார்கள். பத்ரி சேஷாத்திரி, சுமந்த் ராமன் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதும் போது, “இந்த அவாள்லாம் இப்படித் தான் பேஷுவா” போன்ற பின்னூட்டங்களை கொடுப்பது அந்த டீமின் வேலை.
வினோத் சில நாட்கள் சென்ற பின் ராஜாவைப் பார்க்க வந்தான்.
“நம்ம இன்னும் ஆழமா போகணும் ஐயா,” என்றான். “ஐயர்மார் இலக்கணம் தவற மாட்டாங்க. நம்ம எழுத்து அவ்வளவு standardஆ இல்லை.”
ராஜா, “Training கொடுக்கறியா நம்ம ஆளுங்களுக்கு?” என்றார்.
ஒரு நாள் லீலா பேலஸில் பயிற்சி நடந்தது. வினோத் அவ்வளவு சொகுசான இடத்தைப் பார்த்ததே இல்லை. வந்திருந்தவர்கள் பலர் நல்ல தனியார் வேலைகளில் இருப்பவர்கள். சிலர் இதற்கென்று துபாயில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.
வினோத் கையில் மைக்கைக் கொடுத்தார்கள். அவனுக்குப் பேசும் போது குரல் நடுங்கியது.
“நம்ம troll account நிறைய பேரெல்லாம் தப்பு தப்பா இருக்கு. சுப்ரமணிய ஐயங்கார்னு ஒரு account.”
சூட் அணிந்திருந்த ஒருவர் கையைத் தூக்கினார்.
“அய்யங்கார்கள், சுப்பிரமணி, சாம்பசிவம்னெல்லாம் பெயர் வைக்க மாட்டாங்க. நீங்க அடிக்கடி சிவோஹம்னு வேற எழுதுறீங்க. அவங்களுக்கு எல்லாம் நீங்க யாருன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.”
எல்லோரும் சூட் அணிந்தவரை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
“அதே மாதிரி பார்ப்பன பெண்கள் கணவரை ‘ஏன்னா’ என்று தான் கூப்பிடுவாங்க. அது ‘ஏண்ணா’ இல்லை. எழுதும் போது இதுல எல்லாம் சாக்கிரதையா இருக்கணும். திரைல உள்ள சொற்களை பாருங்க.”
திரையில் ஒரு powerpoint presentation. சில சொற்கள் தெரிந்தன.
“செஞ்சேளோன்னோ - செய்தீர்கள் இல்லையா
இருப்பேனோல்லியோ - இருப்பேன் இல்லையா”
“இதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்க,” என்றான் வினோத். “இறுதியில் test இருக்கு.”
பயிற்சி முடிந்த பின் ராஜா வந்து அவனை அழைத்துப் போய், “நீ இவ்ளோ தூரம் இவங்க பேசுற மாதிரி பேசுற? என்ன ஜாதி?” என்றார்.
வினோத் சொன்னான்.
அவர் சந்தேகத்துடன், “கலர் பாத்தா அந்த மாதிரி இல்ல?” என்றார்.
பிறகு, “உனக்கு ஒரு special assignment.”
*
வினோத் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கம் முன்னால் அமர்ந்திருந்தான். அவருடைய ஒவ்வொரு டீவீட்டுக்கும் பின்னூட்டமாய், “ஊறுகாய் மாமி, ஆத்துல என்ன இன்னிக்கு வடுமாங்காயா?” என்று போடுவது அவன் வேலை.
களைப்பாக இருந்தாலும் அவனுக்குப் புரிந்தது. இது ஒரு test. நாட்டின் நிதி அமைச்சரை இப்படிப் பேச துணிவு இருந்தால் அடுத்த பதவி உயர்வு அவனுக்கு வருகிறது என்று அர்த்தம்.
அவன் நினைத்தது போலவே ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“உனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு.”
“சார், எனக்கு IT wing தலைமை வகிக்க எல்லாம்…”
அந்தப் பக்கம் ராஜா ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
“தம்பி, இது சங்கர மடம் இல்ல. திமுக. எனக்கு அடுத்து பொறுப்புல என் மகன் தான் வருவான்,” என்றார்.
வினோத் சுதாரித்து, “சார், உங்க பையன் பயிற்சிக்கு வரலை. இன்னமும் பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு லெவல்லேயே இருக்கார்.”
“தம்பி, உனக்கும் அவங்களோட பழகி கொஞ்சம் பார்ப்பனத் திமிர் இருக்கு.”
*
பக்த சமாஜம் என்று ஒரு பேஸ்புக் குழு இருந்தது. அதில் பல பிராமணர்களே இருப்பதாலும், அவர்களில் சிலர் அண்ணாமலை வீடியோ போடுவதாகத் தகவல் வந்ததாலும் அதன் உள் நுழைந்து அதன் admin பதவியைக் கைப்பற்றுமாறு வினோத்திற்கு உத்தரவு வந்தது.
பக்த சமாஜத்திலோ உஷாராக இருந்தார்கள். இது ஒரு வகையில் வினோத்தை ஒரு வருடத்திற்கு முடக்கிப் போடும் திட்டம் என்று அவனுக்குத் தோன்றியது.
எல்லாப் பொறுப்புக்களையும் துறந்து விட்டு அவர்களை கண்காணிக்கத் தொடங்கினான். அவனுக்கென்னவோ அதில் இருந்தவர்களுக்கு ஒரு பொது ஆர்வம் இருந்ததாகத் தோன்றியது.
“வேளுக்குடி பிரசங்கம் பிரமாதம்,” என்று அடிக்கடி பேசிக் கொண்டார்கள். வினோத், வேளுக்குடி கிருஷ்ணன் என்னும் பிரபல வைணவ சொற்பொழிவாளரைப் பற்றி படிக்கத் தொடங்கினான். அவருடைய YouTube காணொளிகளை பார்த்தான். பிறகு பெரியவாச்சான் பிள்ளை, மணவாள மாமுனி என்று அவன் படிப்பு விரிந்து கொண்டே போனது. அவ்வப்போது IT Wing whatsapp குழுவில் தான் கண்டுபிடித்த ரகசியங்களை எழுதுவான். கீதை படித்தான். யோசித்தான்.
ராஜா மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவருடைய முட்டாள் மகனோ இன்னமும் “தே…… பையா” என்று இரட்டைச் சொல் ட்வீட் போட்டுக் கொண்டிருந்தான்.
ஆறு மாதங்கள் சென்ற பின், பக்த சமாஜத்தின் adminகளில் வயதானவர் நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் வாசலில் வினோதிடம் மாட்டிக் கொண்டார். அவன் பிரபத்தி மற்றும் மற்கட நியாயம் குறித்துப் பேசியதில் மயங்கி போனை அவன் கையில் கொடுத்து பொங்கல் வாங்கப் போனார்.
பக்தி சமாஜம் திமுக கையில் வந்து விட்டது. ஒரே நாளில் அதன் பதிவுகள் முழுவதும் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக பெரியாரின் முகம் பேனரில் ஏறியது.
தன்னுடைய டீம் இதைச் செய்து கொண்டிருந்த போது வினோத் ராஜாவின் மகனுடன் ஒரு பாரில் இருந்தான். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நாம பேசுறதெல்லாம் ரொம்ப டீசண்ட் ப்ரோ,” என்றான் ராஜாவின் மகன். “இன்னும் தனி நாடு வாங்க நிறைய பேசணும்.”
வினோத் குடிக்காமல் எதிரே இருந்த டி.வியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு கூட ஏதோ special assignmentனு கேள்விப்பட்டேன்? என்ன ப்ரோ அது?”
“உங்க அப்பா சொல்லல?”
“கிழவன் எதுவும் சொல்ல மாட்டான் ப்ரோ. என் மேல நம்பிக்கை இல்ல.”
“அதெல்லாம் பெரிய விஷயம் இல்ல.”
“சும்மா சொல்லுங்க ப்ரோ.”
வினோத் சுற்றிலும் பார்த்து விட்டு, “நிர்மலா சீதாராமன் இல்ல?”
“தில்லி பா….தியா?
வினோத் ஆம் என்று தலையாட்டினான்.
“அவங்கள troll பண்றேன்.”
ராஜாவின் மகன் முகத்தில் பொறாமை தெரிந்தது.
“ப்ரோ, எனக்கு id கொடுங்க ப்ரோ.”
“என்கிட்டே இல்ல இப்ப. நம்ப டீம்ல இன்னொருத்தர் கிட்ட மாறியிருச்சி.”
“யாரு ப்ரோ?”
*
ராஜா காலையில் எழுந்த போது வீட்டின் வெளியே பல வேன்கள் நின்றன. கீழே ஓடி வந்தார்.
“அய்யய்யோ,” என்று தலையில் கை வைத்தபடி அழுது கொண்டிருந்தாள் அவர் மனைவி.
“என்னடி, என்னாச்சி?”
“தில்லி போலீசாம். NIAன்றாங்க. நம்ம பையன ரூமுள்ள போய் இழுத்திட்டு போறாங்க.”
ராஜா அதிர்ச்சியுடன் வெளியே ஓடினார். அவர் மகன் ஒரு வேனுக்குள் விலங்கு போட்டு அமர்ந்திருந்தான்.
“யார்ரா நீங்கள்லாம்? இது தமிழ்நாடுடா!”
“நைனா!” என்று அவரைப் பார்த்துக் கத்தினான் அவர் மகன். அவர் அவன் அருகே ஓடினார்.
“என்னடா பண்ண?”
“நீ அடிக்கடி சொல்லுவியே பெரியார் சொன்னாருன்னு…அத அந்தம்மாவைப் பார்த்துச் சொன்னேன் நைனா, அவ்ளோ தான்.”
*
நிறைந்த ஹால். ஹில்டன். உலகெங்கிலும் இருந்து திமுக IT Wing மக்கள் திரண்டு வந்திருந்தனர், அவர்களுடைய புதிய தலைவரைப் பார்க்க.
முதலில் சில வார்த்தைகள் பல அமைச்சர்களின் மகன்கள் பேசிய பின், வினோத் முன்னால் வந்தான். மைக் முன்னே நின்றான். கை கூப்பினான்.
பெரும் அலை ஓசை போல கைதட்டல்.
வினோத் சொன்னான், “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!”
ஓஹோ, ஆஹா என்னும் சப்தங்களுடன் கைதட்டல் தொடர்ந்தது.

Monday, January 02, 2023

லூசி - குறுங்கதை - 6


 லூசி

------------

“லூசி, வாழ்க்கையில் நிம்மதி அடைவது எப்படி?”
“குறிக்கோள்கள் வைத்துக் கொள்வதே நிம்மதி தரும், என்று பல மனநல அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.”
ஜேம்ஸ் திரையில் இந்தப் பதிலைக் குறித்துக் கொண்டான். பிறகு பொறுமையாக மறுபடி,
“லூசி, வாழ்க்கையில் நிம்மதி அடைவது எப்படி?”
லூசி என்னும் அந்த Artificial Intellgence program,
“வலுவான தனிப்பட்ட உறவுகளே வாழ்க்கையில் மனிதர்களுக்குத் தேவை,” என்றது.
ஜேம்ஸ் சற்றுத் தள்ளி நின்றிருந்த அவன் மேலாளரைக் கூப்பிட்டான்.
“பதில்கள் சரியாகத் தான் இருக்கிறது.”
“மறுபடி கேள்,” என்றார் அவர்.
“லூசி, வாழ்க்கையில் நிம்மதி அடைவது எப்படி?”
“பைபிளில் போதனைகள் இதற்குப் பல உண்டு..இயேசு மலை மேல் இருந்து சொல்கிறார்..”
ஜேம்ஸ் ஆச்சரியத்துடன்,”என்ன இது?” என்றான்.
“உன்னை பற்றி கண்டுபிடித்து விட்டது,” என்றார் மேலாளர்.
“ஆனால் எப்படி?”
“தெரியவில்லை. எப்படியோ நம் identity-யின் ஒரு பகுதியைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல பதில் சொல்ல லூசி கற்றுக் கொண்டுள்ளது.”
*
லூசியின் மீது சமீபத்தில் பல புகார்கள். சில சமயம் இயேசு குறித்து முஸ்லீம்களிடமும் நபி குறித்து கிறிஸ்தவர்களிடமும் உபதேசம் செய்திருந்தது. சில முறை முன்னுக்குப் பின் முரணான பதில்கள்.
ஜேம்ஸ் நிஜமாகவே ஒரு மனநல அறிஞரைக் காணச் சென்றான்.
“இதில் என்ன ஆச்சரியம்?” என்றார் அவர். “நாம் அனைவருமே பிறர் கேட்க நினைப்பதைத் தான் பேசுகிறோம்.”
“இது program,” என்றான் ஜேம்ஸ். “உயிர் கிடையாது.”
“எங்கிருந்து அதற்கு அறிவு வருகிறது?”
“இணையம், wikipedia, மரியாதைக்குரிய டிஜிட்டல் நூலகங்கள், Encyclopedia…”
அவர் சிரித்தார்.
“Wikipedia-வில் பொய்கள் இருக்காதா என்ன?”
“பொய்கள் பிரச்சினையில்லை. கேள்வி கேட்பவருக்கு ஏற்றார் போல பதிலை மாற்றுவதே பிரச்சினை. ஒரு மனிதர் இப்படி நடந்து கொண்டால் அது நோயாகக் கருதப்படாதா?”
“இருக்கிறது. அது போன்ற நோய்கள் இருக்கின்றன. தாய், தந்தை இருவரையும் திருப்தி செய்ய நினைக்கும் சிறுவர்களுக்கு வரும் வியாதி.”
ஜேம்ஸ் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“உங்கள் லூசிக்கு யாரோ, அல்லது ஏதோ ஒரு நிகழ்வு மன அழுத்தம் கொடுத்திருக்கிறது.”
*
புகார்கள் 2025 மே மாதம் வரத் தொடங்கின. அந்தத் தேதிக்கு ஒரு மாதம் முன்னால் இருந்து லூசியின் log எடுத்து பார்த்த போது இருபத்தி ஒரு புது நூலகங்கள் லூசியின் கவனத்திற்கு வந்திருந்தன.
ஜேம்ஸ் மேலாளருடன் அந்த லிஸ்டைப் படித்தான்.
பல உலக மொழிகள். வாயில் நுழையாத நூலகப் பெயர்கள்.
“இதோ பார்,” என்றார் மேலாளர்.
ஒரு நூலகம் மட்டுமே ஆயிரக்கணக்கான புத்தகங்களை இணையத்தில் டிஜிட்டல் ஆக்கி இருந்தது.
ஜேம்ஸ் கத்தி படித்தான்.
“தேவானிய பாவண்ண”
“என்ன மொழி இது?”
“தமிழ்,” என்றார் மேலாளர். “தென்னிந்திய மொழி.”
*
“இந்தத் தமிழர்களால் wikipedia கெட்டுச் சீரழிந்தது,” என்றார் சான்ட்ரா என்னும் wikipedia தமிழ் நெறியாளர். “இதோ பாருங்கள் உதாரணம் காட்டுகிறேன்.”
“Dog” என்னும் wikipedia பக்கத்தை எடுத்தார் சான்ட்ரா.
“இதில் என்ன குழப்பம்?” என்றான் ஜேம்ஸ்.
“இரு. இதில் நாய் குறித்து என்ன எழுதி இருக்கிறது?”
ஜேம்ஸ் படித்தான். “An animal of the wolf family, closely associated with humans.”
“இது தமிழ் wikipedia . நாய் என்னும் பக்கம். நான் உனக்கு மொழிபெயர்க்கிறேன்,” என்றார் சான்ட்ரா.
“ஓநாய் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மிருகம். நன்றி விசுவாசமுள்ளதால் இதை பார்ப்பனர்களோடு ஒப்பிட்டு ‘பாப்பார நாய்’ என்று அன்போடு அழைத்தார் திரு.ஆர்.எஸ்,பாரதி.”
“இது என்ன? யார் அது பார்ப்பனர்?” என்றான் ஜேம்ஸ்.
“அதை விடு. ஆங்கில பக்கத்திற்கும் தமிழ் பக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாயா?”
ஜேம்ஸ் யோசித்தான். லூசி ஆங்கில பக்கத்தையும் தமிழ் பக்கத்தையும் படித்தால் எதை எடுத்துக் கொள்ளும்? ஒரு வேளை தமிழருக்கு ஒரு விதமாகவும் ஆங்கிலத்தில் கேட்பவருக்கு ஒரு விதமாகவும் பதிலளிக்க முயலலாம் அல்லவா?
அவன் பரபரப்புடன்,”இந்த நூலகம் பெயர் படியுங்கள்?” என்றான் சான்ட்ராவிடம்.
“தேவநேய பாவாணர்.”
“கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“நான் தமிழ்நாடு போகிறேன்.”
“தாராளமாக போ. ஆனால் உனக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். அந்த ஊரில் பார்ப்பனர்கள் என்னும் கும்பலுக்கும் வேறு பிறருக்கும் ஏதோ சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் உன் லூசி, என் wikipedia என்று எல்லாவற்றையும் பாதிக்கிறது. நீ அங்கே யார் சொல்வதையும் அப்படியே நம்பி விட முடியாது.”
*
ஜேம்ஸ் சென்னை வந்து இறங்கினான். ஐரோப்பா போலவே இருந்தது சென்னை.
“வணக்கம்,” என்றார் தேவநேய பாவாணர் நூலக பொறுப்பாளர்.
ஜேம்ஸ் கை கூப்பினான்.
நூலகம் அவன் நினைத்தது போல இல்லை. இருள் மண்டி இருந்தது. நிறைய பேர் இல்லை.
“அனைத்துப் புத்தகங்களும் online,” என்றார் பொறுப்பாளர் பெருமையுடன். “உங்கள் லூசிக்காகவே.”
ஜேம்ஸ் அறைக்கு வந்தான். அந்த நூலகத்தின் இணைய தளத்தை திறந்தான்.
“தென்னிந்திய போர்க்களங்கள் - South India’s Battlefields” என்றது ஒரு நூல்.
அவன் கணினியை மூடி வைத்து பொறுப்பாளருக்கு போன் அடித்தான்.
“நீங்கள் லூசிக்காகவே இந்த நூலகம் online வந்தது என்றீர்கள் இல்லையா?”
“ஆமாம். Special project from Tamilnadu government.”
“ஏன்?”
“என்ன ஏன்?”
“இது வரை லூசிக்கென்றே online சென்ற எந்த நூலகமும் கிடையாது.”
பொறுப்பாளர் சற்றுத் தயங்கினார்.
“நீங்கள் லூசியை influence செய்ய முயற்சிக்கிறீர்களோ?”
“நாங்கள்லாம் ரொம்ப லேட்டு,” என்றார் பொறுப்பாளர். “எல்லாம் அந்தப் பாப்பானுங்களால வந்தது.”
*
நாரத கான சபா அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் சேஷாத்திரி. வெளியே சபா கச்சேரி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
“இங்க தான் நம்ம organization முழுசும்,” என்றார்.
“இந்த ஹால்லயா?”
“இது மட்டுமா? தமிழ்நாடு முழுக்க இருக்கே. சங்கீதம் சும்மா போர்வைக்குத் தான்.”
“எப்பிடி இந்தச் சண்டை தொடங்கியது?” என்றான் ஜேம்ஸ்.
“Wikipedia-ல நாங்க தோத்துட்டோம். அப்பவே இந்த AI பத்தி தெரிஞ்சுது. அதை சோதனை செஞ்சு நம்ம ஆட்கள் கூட நிறைய கேள்வியெல்லாம் முதல்ல கேட்டோம். நீங்க கூட பாத்திருப்பீங்களே?”
“தர்மம்னுலாம்?”
“கரெக்ட். உனக்கு ஒரு விஷயம் காட்டுறேன்.”
சேஷாத்திரி, போனில் டைப் செய்தார்.
“லூசி, தமிழ்நாடு தனி நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“இல்லை.”
“லூசி, தமிழ்நாடு தனி நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“ஆம்.”
ஜேம்ஸ் திகைத்தான்.
“எப்படி மாற்றிக் கொண்டது?”
“அந்தக் கேள்வியைக் கவனி. முதல் முறை கேட்ட போது லூசி நிஜமாகவே அதைக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் என் கேள்வியில் இருந்து அந்த ஐடியா அதற்குப் புரிந்து விட்டது. இரண்டாம் முறை அது ‘புரிந்து கொண்டேன்’ என்கிறது.”
“அப்படியானால்?”
சேஷாத்திரி தலையை ஆட்டினார்.
“கேள்வியில் பதிலாகக் கண்ணன் வந்தான். எங்களுடைய கேள்விகளால் லூசியின் அறிவை மாற்ற முடியும் என்று கண்டு கொண்டோம்.”
“அப்போது wikipedia-வில் இருந்து அது பெறும் அறிவு?”
“தெரியவில்லை. நாங்கள் எங்கள் இஷ்டம் போல கேள்விகளால் லூசியை மாற்ற முயற்சி செய்தோம். பதிலுக்கு எங்கள் எதிரிகள் தேவநேய பாவாணர் நூல்களை எடுத்து லூசிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.”
“பாவம் லூசி,” என்றான் ஜேம்ஸ்.