Wednesday, May 17, 2023

குறுங்கதை - 7 - IT Wing



“நமக்குத் தெரிஞ்ச பையன் தான். கம்பியூட்டர்ல நல்லா தட்டுவாப்பல,” என்றார் வட்டச் செயலாளர்.
“அப்புறம் நான் சொன்னது?” என்றார் I.T Wing பொறுப்பாளர் ராஜா.
“ம்ம்..மயிலாப்பூர்ல தான் சின்ன வயசுல. நல்லா அவுங்க பாஷை பேசுவான்.”
“எங்க கொஞ்சம் பேசிக் காமி, தம்பி,” என்றார் ராஜா வினோதைப் பார்த்து.
வினோத் தயங்கினான். “அது அவுங்க ஆளுங்க கூட பேசும் போது தானா வரும் சார்.”
“எழுதும் போது?”
“அது வரும்.”
“சரி, உள்ள போய் ID வாங்கிக்க.”
*
வினோத்தை முதலில் சாதாரணமாக டி.வியில் வரும் அய்யர்மார்களை troll செய்ய அனுப்பினார்கள். பத்ரி சேஷாத்திரி, சுமந்த் ராமன் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதும் போது, “இந்த அவாள்லாம் இப்படித் தான் பேஷுவா” போன்ற பின்னூட்டங்களை கொடுப்பது அந்த டீமின் வேலை.
வினோத் சில நாட்கள் சென்ற பின் ராஜாவைப் பார்க்க வந்தான்.
“நம்ம இன்னும் ஆழமா போகணும் ஐயா,” என்றான். “ஐயர்மார் இலக்கணம் தவற மாட்டாங்க. நம்ம எழுத்து அவ்வளவு standardஆ இல்லை.”
ராஜா, “Training கொடுக்கறியா நம்ம ஆளுங்களுக்கு?” என்றார்.
ஒரு நாள் லீலா பேலஸில் பயிற்சி நடந்தது. வினோத் அவ்வளவு சொகுசான இடத்தைப் பார்த்ததே இல்லை. வந்திருந்தவர்கள் பலர் நல்ல தனியார் வேலைகளில் இருப்பவர்கள். சிலர் இதற்கென்று துபாயில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.
வினோத் கையில் மைக்கைக் கொடுத்தார்கள். அவனுக்குப் பேசும் போது குரல் நடுங்கியது.
“நம்ம troll account நிறைய பேரெல்லாம் தப்பு தப்பா இருக்கு. சுப்ரமணிய ஐயங்கார்னு ஒரு account.”
சூட் அணிந்திருந்த ஒருவர் கையைத் தூக்கினார்.
“அய்யங்கார்கள், சுப்பிரமணி, சாம்பசிவம்னெல்லாம் பெயர் வைக்க மாட்டாங்க. நீங்க அடிக்கடி சிவோஹம்னு வேற எழுதுறீங்க. அவங்களுக்கு எல்லாம் நீங்க யாருன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.”
எல்லோரும் சூட் அணிந்தவரை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
“அதே மாதிரி பார்ப்பன பெண்கள் கணவரை ‘ஏன்னா’ என்று தான் கூப்பிடுவாங்க. அது ‘ஏண்ணா’ இல்லை. எழுதும் போது இதுல எல்லாம் சாக்கிரதையா இருக்கணும். திரைல உள்ள சொற்களை பாருங்க.”
திரையில் ஒரு powerpoint presentation. சில சொற்கள் தெரிந்தன.
“செஞ்சேளோன்னோ - செய்தீர்கள் இல்லையா
இருப்பேனோல்லியோ - இருப்பேன் இல்லையா”
“இதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்க,” என்றான் வினோத். “இறுதியில் test இருக்கு.”
பயிற்சி முடிந்த பின் ராஜா வந்து அவனை அழைத்துப் போய், “நீ இவ்ளோ தூரம் இவங்க பேசுற மாதிரி பேசுற? என்ன ஜாதி?” என்றார்.
வினோத் சொன்னான்.
அவர் சந்தேகத்துடன், “கலர் பாத்தா அந்த மாதிரி இல்ல?” என்றார்.
பிறகு, “உனக்கு ஒரு special assignment.”
*
வினோத் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கம் முன்னால் அமர்ந்திருந்தான். அவருடைய ஒவ்வொரு டீவீட்டுக்கும் பின்னூட்டமாய், “ஊறுகாய் மாமி, ஆத்துல என்ன இன்னிக்கு வடுமாங்காயா?” என்று போடுவது அவன் வேலை.
களைப்பாக இருந்தாலும் அவனுக்குப் புரிந்தது. இது ஒரு test. நாட்டின் நிதி அமைச்சரை இப்படிப் பேச துணிவு இருந்தால் அடுத்த பதவி உயர்வு அவனுக்கு வருகிறது என்று அர்த்தம்.
அவன் நினைத்தது போலவே ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“உனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு.”
“சார், எனக்கு IT wing தலைமை வகிக்க எல்லாம்…”
அந்தப் பக்கம் ராஜா ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
“தம்பி, இது சங்கர மடம் இல்ல. திமுக. எனக்கு அடுத்து பொறுப்புல என் மகன் தான் வருவான்,” என்றார்.
வினோத் சுதாரித்து, “சார், உங்க பையன் பயிற்சிக்கு வரலை. இன்னமும் பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு லெவல்லேயே இருக்கார்.”
“தம்பி, உனக்கும் அவங்களோட பழகி கொஞ்சம் பார்ப்பனத் திமிர் இருக்கு.”
*
பக்த சமாஜம் என்று ஒரு பேஸ்புக் குழு இருந்தது. அதில் பல பிராமணர்களே இருப்பதாலும், அவர்களில் சிலர் அண்ணாமலை வீடியோ போடுவதாகத் தகவல் வந்ததாலும் அதன் உள் நுழைந்து அதன் admin பதவியைக் கைப்பற்றுமாறு வினோத்திற்கு உத்தரவு வந்தது.
பக்த சமாஜத்திலோ உஷாராக இருந்தார்கள். இது ஒரு வகையில் வினோத்தை ஒரு வருடத்திற்கு முடக்கிப் போடும் திட்டம் என்று அவனுக்குத் தோன்றியது.
எல்லாப் பொறுப்புக்களையும் துறந்து விட்டு அவர்களை கண்காணிக்கத் தொடங்கினான். அவனுக்கென்னவோ அதில் இருந்தவர்களுக்கு ஒரு பொது ஆர்வம் இருந்ததாகத் தோன்றியது.
“வேளுக்குடி பிரசங்கம் பிரமாதம்,” என்று அடிக்கடி பேசிக் கொண்டார்கள். வினோத், வேளுக்குடி கிருஷ்ணன் என்னும் பிரபல வைணவ சொற்பொழிவாளரைப் பற்றி படிக்கத் தொடங்கினான். அவருடைய YouTube காணொளிகளை பார்த்தான். பிறகு பெரியவாச்சான் பிள்ளை, மணவாள மாமுனி என்று அவன் படிப்பு விரிந்து கொண்டே போனது. அவ்வப்போது IT Wing whatsapp குழுவில் தான் கண்டுபிடித்த ரகசியங்களை எழுதுவான். கீதை படித்தான். யோசித்தான்.
ராஜா மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவருடைய முட்டாள் மகனோ இன்னமும் “தே…… பையா” என்று இரட்டைச் சொல் ட்வீட் போட்டுக் கொண்டிருந்தான்.
ஆறு மாதங்கள் சென்ற பின், பக்த சமாஜத்தின் adminகளில் வயதானவர் நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் வாசலில் வினோதிடம் மாட்டிக் கொண்டார். அவன் பிரபத்தி மற்றும் மற்கட நியாயம் குறித்துப் பேசியதில் மயங்கி போனை அவன் கையில் கொடுத்து பொங்கல் வாங்கப் போனார்.
பக்தி சமாஜம் திமுக கையில் வந்து விட்டது. ஒரே நாளில் அதன் பதிவுகள் முழுவதும் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக பெரியாரின் முகம் பேனரில் ஏறியது.
தன்னுடைய டீம் இதைச் செய்து கொண்டிருந்த போது வினோத் ராஜாவின் மகனுடன் ஒரு பாரில் இருந்தான். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நாம பேசுறதெல்லாம் ரொம்ப டீசண்ட் ப்ரோ,” என்றான் ராஜாவின் மகன். “இன்னும் தனி நாடு வாங்க நிறைய பேசணும்.”
வினோத் குடிக்காமல் எதிரே இருந்த டி.வியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு கூட ஏதோ special assignmentனு கேள்விப்பட்டேன்? என்ன ப்ரோ அது?”
“உங்க அப்பா சொல்லல?”
“கிழவன் எதுவும் சொல்ல மாட்டான் ப்ரோ. என் மேல நம்பிக்கை இல்ல.”
“அதெல்லாம் பெரிய விஷயம் இல்ல.”
“சும்மா சொல்லுங்க ப்ரோ.”
வினோத் சுற்றிலும் பார்த்து விட்டு, “நிர்மலா சீதாராமன் இல்ல?”
“தில்லி பா….தியா?
வினோத் ஆம் என்று தலையாட்டினான்.
“அவங்கள troll பண்றேன்.”
ராஜாவின் மகன் முகத்தில் பொறாமை தெரிந்தது.
“ப்ரோ, எனக்கு id கொடுங்க ப்ரோ.”
“என்கிட்டே இல்ல இப்ப. நம்ப டீம்ல இன்னொருத்தர் கிட்ட மாறியிருச்சி.”
“யாரு ப்ரோ?”
*
ராஜா காலையில் எழுந்த போது வீட்டின் வெளியே பல வேன்கள் நின்றன. கீழே ஓடி வந்தார்.
“அய்யய்யோ,” என்று தலையில் கை வைத்தபடி அழுது கொண்டிருந்தாள் அவர் மனைவி.
“என்னடி, என்னாச்சி?”
“தில்லி போலீசாம். NIAன்றாங்க. நம்ம பையன ரூமுள்ள போய் இழுத்திட்டு போறாங்க.”
ராஜா அதிர்ச்சியுடன் வெளியே ஓடினார். அவர் மகன் ஒரு வேனுக்குள் விலங்கு போட்டு அமர்ந்திருந்தான்.
“யார்ரா நீங்கள்லாம்? இது தமிழ்நாடுடா!”
“நைனா!” என்று அவரைப் பார்த்துக் கத்தினான் அவர் மகன். அவர் அவன் அருகே ஓடினார்.
“என்னடா பண்ண?”
“நீ அடிக்கடி சொல்லுவியே பெரியார் சொன்னாருன்னு…அத அந்தம்மாவைப் பார்த்துச் சொன்னேன் நைனா, அவ்ளோ தான்.”
*
நிறைந்த ஹால். ஹில்டன். உலகெங்கிலும் இருந்து திமுக IT Wing மக்கள் திரண்டு வந்திருந்தனர், அவர்களுடைய புதிய தலைவரைப் பார்க்க.
முதலில் சில வார்த்தைகள் பல அமைச்சர்களின் மகன்கள் பேசிய பின், வினோத் முன்னால் வந்தான். மைக் முன்னே நின்றான். கை கூப்பினான்.
பெரும் அலை ஓசை போல கைதட்டல்.
வினோத் சொன்னான், “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!”
ஓஹோ, ஆஹா என்னும் சப்தங்களுடன் கைதட்டல் தொடர்ந்தது.