Tuesday, October 30, 2018

Tamil Short Story - விடுப்பிற்குப் பின்

                                            விடுப்பிற்குப் பின் 
                                             ----------------------------------
                                                                           இரா.இராமையா

  மடர்னிடி விடுப்பு முடிந்து முதல் நாள் மீரா வேலைக்குப் போன போது எல்லோரும் மிகக் கனிவாக இருந்தார்கள்.
  “பாப்பா ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிக்கலையா?” என்று கேட்டார்கள்.
  பாஸ்கர், டீமின் ஜோக்கர்.
  “என் பையனுக்கு அல்லயன்ஸ் பாக்குறேன்,” என்று சொன்னான். “உங்க பொண்ணு கட்டின டயபரோட வந்தா போதும்.”
  மீராவின் கம்ப்யூட்டர் வேறு யாருக்கோ கொடுத்து விட்டார்கள். நாள் பூரா அவள் புதுக் கம்ப்யூட்டருக்கு அலைந்தாள். பிறகு அதில் சாப்ட்வேர் எல்லாம் போட்டு முடிக்க நேரம் ஆகி விட்டது. அந்த நேரத்தில் பெண் போட்டோவை எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தாள்.
  “உங்க மாதிரி இல்லை. நல்லா இருக்கா,” போன்ற ஜோக்குகள் வந்து விழுந்தன.
  ஆனால் மறு நாள் அவள் வேலையைத் தொடங்க முயற்சித்த போது தான் கவனித்தாள் – வேலையே இல்லை. சற்று நேரம் சும்மா இருந்து விட்டு ஐ.டி கம்பெனிகளில் வேலை கண்டுபிடிக்க செய்யும் யுக்தியைச் செய்தாள். எல்லோருக்கும் ஒரு மீட்டிங்கிற்கு வரச் சொல்லி ஈமெயில் அனுப்பினாள்.
  ஆனால் மீட்டிங் அறையில் யாரும் வரவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
  ஒரு அரை மணி நேரம் உள்ளே அமர்ந்து விட்டு வெளியே வந்த போது சிலர் எட்டிப் பார்த்து விட்டுக் குனிந்து கொண்டார்கள். மீராவுக்குச் சின்ன சந்தேகம் வந்தது.
*
  “வேலை இல்லன்னா ஜாலியா இரு,” என்றான் அவள் கணவன்.
  “பிராஜக்ட் நான் பாத்துப் பாத்து லீட் பண்ணது,” என்றாள் மீரா.
  “ஈகோ பாக்காம உங்க பாஸ் கிட்ட போய் கேட்டிறேன்?” என்றான் அவன்.
  “வேண்டாம்,” என்றாள் அவள். “என்னை எல்லாரும் தானா அவங்க லீடரா ஏத்துக்கணும்.”
  ஆனால் மறு நாளும் யாரும் அப்படி ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தது போலத் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பாஸ்கரிடம் போய்க் கேட்டார்கள்.
  ஒரு முறை உள்ளதிலேயே சின்னவனான செல்வா அவளிடம் வந்தான்.   
  மீரா மிகுந்த மகிழ்வுடன், “என்ன சந்தேகம், சொல்லு.” என்றாள்.
  “உங்க கம்ப்யூட்டர டெஸ்டிங் பண்ண எடுத்துக்கவா?” என்றான்.
  கம்ப்யூட்டரும் போய் விட்டது.
*
  தனக்குத் தெரியாமல் டீம் மீட்டிங்குகள் நடக்கின்றன என்று தற்செயலாகத் தான் அவள் கண்டுபிடித்தாள். ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்கு எல்லோரும் காணாமல் போவதைக் கவனித்து பின் தொடர்ந்து போனால், பாத்ரூம் அருகே இருந்த பழைய சர்வர் அறையில் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அவள் பாத்ரூம் போவது போலத் தாண்டிப் போய் எட்டிப் பார்த்தாள்.
  பாஸ்கர் சொன்ன ஏதோ ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு வெளியே வரும் போது ஒரு நல்ல லீடர் கிடைத்த திருப்தியுடன் அவர்கள் வருவது போல அவளுக்குத் தோன்றியது.
  கைவிடப்பட்ட அபலையைப் போல அலுவலகத்தின் பல தளங்களில் மீரா திரிந்தாள். கேண்டீனில் சற்று நேரம் அமர்ந்திருந்தாள். அவள் திரும்ப வந்தது ஒரு புதன் கிழமை. அடுத்த ப்ராஜக்ட் மீட்டிங் செவ்வாய்க் கிழமை. அன்று கட்டாயம் தான் தேவைப்படுவோம் என்று அவளுக்குத் தோன்றியது. அவளுடைய பாஸ் மற்றும் வெள்ளைக்காரனுடன் அன்று மீட்டிங் உண்டு.
*
  செவ்வாய்க் கிழமை என்று பார்த்து அவள் பெண் செமையாக அழுதாள். “நீ வேற ஏண்டி,” என்று அலுத்துக் கொண்டு அவளை பாட்டி கையில் கொடுத்து வந்தாள் மீரா.
  ப்ராஜெக்ட் மீட்டிங் எங்கே நடக்கும் என்று கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து வைத்திருந்தாள். அங்கே ஒரு பத்து நிமிடம் முன்னால் போய் அமர்ந்தாள். சற்று நேரத்தில் பாஸ்கர் வந்தான். அவளைப் பார்த்து முகத்தில் மாறுபாடே காட்டவில்லை, கல்லுளி மங்கன்.
  “ஹாய்,” என்று விட்டுக் கொட்டாவி விட்டபடி அமர்ந்து கொண்டான்.
  பாஸ் வந்தார்.
  “என்னம்மா, பொண்ணு எப்பிடி இருக்கா?” என்றார்.
  மீரா சிரித்தபடி போனை எடுக்கு முன் பாஸ்கரைப் பார்த்து ஏதோ பேசத் தொடங்கி விட்டார். மீரா அவர்கள் பேச்சை உற்றுக் கவனித்தாள்.   ஒன்றுமே புரியவில்லை.
  “பம்ப் மாட்யூல் என்னாச்சு?” என்று தனக்குத் தெரிந்ததைக் கேட்டு வைத்தாள்.
  அவர்கள் இருவரும் குழப்பத்துடன் அவளைப் பார்த்தார்கள்.
  “பம்ப் கதை முடிஞ்சி நாலு மாசமாச்சு,” என்றான் பாஸ்கர்.
  மீரா அதிர்ச்சியுடன், “ஆனா..” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.
  அவள் பாஸ், “மீரா, நீ பம்ப் பத்தி ஏதாவது பேசினா வெள்ளைக்காரன்  கடுப்பாயிடுவான். நீ லீவ்ல போன ஒரு மாசத்தில அதுல எல்லா பிரச்சினையும் தெரிஞ்சிருச்சு. பாஸ்கர் தான் முழுசா கண்டுபிடிச்சான்,” என்றார்.
  “பிங்..பிங்,” என்று கம்ப்யூட்டர் கத்தியது.
  இருவரும் பரபரப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
  “மீரா, நீ இந்தக் காலுக்கு வேண்டாம். பம்ப் சொதப்பல் அவனுக்கு நினைவு வந்திரப் போகுது,” என்றார் பாஸ்.
  மீரா எழுந்து வெளியே வரும் போது, வீடியோ கால் வந்து விட்டது. பாஸ் அவளைப் பார்த்து ஏதோ கை காட்டினார்.
  “என்ன?” என்றாள் அவள் ஆர்வத்துடன்.
  “குனிஞ்சு போ, அவன் கண்ணுல பட்டுறப் போற,” என்று அடித் தொண்டையில் உறுமினார் பாஸ்.
*
  “அன்புள்ள திரு. மைக்கேல் வஜபஜவுஸ்கி அவர்களுக்கு,
என்னை நினைவிருக்கிறதா? நான் விடுப்பில் போய்த் திரும்பி வந்து விட்டேன்! எப்படி இருக்கிறீர்கள்? நான் விடுப்பில் செல்லு முன் பேசியது. பல மாதங்கள் ஆகி விட்டன. உங்கள் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? என்னுடைய பெண்ணின் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். உங்கள் மனைவியின் வேலை எப்படிப் போகிறது?
  ப்ராஜக்டின் நடப்பு குறித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏதாவது பிரச்சினை இருந்தால் தயங்காமல் என்னிடம் (என்னிடம் மட்டும்) சொல்லுங்கள்.
 நட்புடன்,
 மீரா “

  “அன்பு மீரா,
     நீ திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.
    பாஸ்கர் எல்லாம் பார்த்துக் கொள்வான்.
  நட்புடன்,
  மைக்கேல்”

  “மீரா, நீ மைக்கேலுக்கு தனியாக ஈமெயில் அனுப்பியதாக அவன் தெரிவித்தான். தயவு செய்து இனி ஈமெயில்கள் அனைத்தையும் எனக்கு காப்பி ஒன்று வைத்துத் தொலை.
  நன்றி,
  பரம்.”

*
  மீராவுக்குத் தன்னிடம் தான் தவறு இருக்கிறதோ என்று தோன்றியது. இந்தச் சிறுவர்களுக்கு நாம் தான் எடுத்துகாட்டாக ஈகோ இன்றி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு நாள் பாத்ரூம் அருகில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டாள்.
  சின்ன அறை. ஏழெட்டுப் பேர் அடைத்துக் கொண்டு நின்றார்கள். பாஸ்கர் ஒவ்வொருவரிடமாக அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டு வந்தான். “வெரி குட்,” என்றெல்லாம் சொல்லி மீரா அவர்களை ஊக்குவித்தாள்.
  இதனால் எல்லோரும் அவளையே பார்த்துப் பேசினார்கள். முதலில் பெருமையாக இருந்தாலும் தலையை ஆட்டி ஆட்டி கழுத்து வலித்தது. லேசாக மூச்சு வாங்கியது. எங்கேயாவது உட்கார்ந்தால் பெட்டர் என்று நினைத்துக் கொண்டே மயங்கி விழுந்தாள்.
  விழித்துப் பார்த்த போது கான்பெரன்ஸ் அறையில் அவளைக் கிடத்தியிருந்தார்கள். அவள் பாஸ் கவலையுடன் நின்று கொண்டிருந்தார்.
  “காலையில சாப்டியா இல்லையா நீ?” என்றார் அவள் எழுந்து அமர்ந்தவுடன்.
  “கொஞ்சம் கஞ்சி குடிச்சேன். இட்லிக்கு மாவு அரைச்சிருந்தேன். பொங்கலை. சரினு கொஞ்சம் ஓட்ஸ் எடுத்துப் போட்டு....”
  அவர் பல்லைக் கடித்தார்.
  “சரி சரி. நீ கிளம்பு. டிரைவர் உன்ன வீட்ல டிராப் பண்ணுவான்.”
  “இல்ல பரம். கொஞ்சம் யோசிச்சி பாருங்க. மீட்டிங் ஏன் பழைய சர்வர் ரூம்ல வைக்கணும்?
  “ஏன்?” என்றார் பாஸ் திகிலுடன்.
  “எனக்கு மூச்சு வாங்கும்னு நல்லா தெரிஞ்சு தான் அங்க எல்லாம் நடக்குது.”
*
  மறு நாள் அவள் ஆபீஸ் வந்த போது எல்லோரும் இன்னும் தள்ளிப் போனார்கள். ப்ராஜெக்ட் மீட்டிங்குகள் அவள் இல்லாமலே நடந்தன. பரம் அவளைக் கவனிக்கவேயில்லை.
  மீரா போர் அடித்ததே என்று அவளுக்குத் தெரிந்த பழைய பம்ப் மாட்யூலை எடுத்துப் பார்த்தாள். அதில் எந்தத் தவறும் அவளுக்குத் தெரியவில்லை. உண்மையில் ரொம்ப பிரமாதமாக எழுதப்பட்டதாகத் தோன்றியது.
  தன் பழைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு பாஸ்கரிடம் போனாள். பரம் அப்போது அருகில் இருந்தார்.
  “இதுல என்ன தப்பு இருந்துது?” என்றாள் அவனிடம்.
  பாஸ், “நீ கொஞ்சம் இந்த மாட்யூல விட்டுத் தள்ளி வரியா?” என்றார்.
  மீரா, “இல்ல, நான் கத்துக்கலாம்னு தான். நம்ம தப்புக்கள நாம புரிஞ்சிக்கிட்டா தான முன்னேற முடியும்,” என்றாள்.
  அவர்கள் இருவரும் அவளை அவநம்பிக்கையுடன் பார்த்தார்கள்.
  “கத்துக்கறது ஒரு தப்பா?” என்றாள் மறுபடி.
  பாஸ் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
  “நீ ஒரு மீட்டிங் புக் பண்ணு,” என்றார் அவனிடம். பிறகு, “நல்ல காத்தோட்டமா இருக்குற ரூமா பார்,” என்று விட்டுப் போனார்.
*
  உண்மையாகவே பம்ப் மாட்யூலில் ஒரு பிரச்சினை இருந்தது. நாலு பேர் சேர்ந்து பயன்படுத்தினால் திணறியது. தூக்கிப் போடும் அளவுக்கு ஒன்றும் இல்லை.
  ஆனால் சென்ற நான்கு மாதங்களில் அதைத் தவிர்த்து எல்லோரும் வேலை பார்த்து முடித்து விட்டார்கள்.
  பாஸிடம் சொன்ன போது, “ஒரு அளவில் நமக்கு லாபம் தான்,” என்றார். “பம்ப் மாட்யூல் வடிவமைத்தது வெள்ளைக்காரன். அதைக் காரணம் காட்டி இன்னும் நிறைய காசு சம்பாதித்து விட்டோம்,” என்றும் தெரிவித்தார்.
  மறு நாள் ஒரு பெரிய மீட்டிங் போட்டார்.
  “மீரா உங்க மொத்த டீமுக்கும் கைட் மாதிரி. அவங்களுடைய அறிவுரை நமக்குத் தேவை. பாஸ்கர் அவங்க கிட்ட தேவைப்பட்ட போது உதவி எடுத்துப்பான். எல்லாம் சேர்ந்து ஒற்றுமையா வேலை பாருங்க. நான் அமெரிக்கா போயிட்டு வர ஒரு மாசமாகும். அதுக்குள்ள சொதப்பாம இருக்க முடியுமா?” என்றார்.
  எல்லோரும் தலையாட்டினார்கள்.
  ஆனால் வெள்ளைக்காரனுடன் வீடியோ அழைப்புக்களில் மீராவும், பாஸ்கரும் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளாத குறையாக அமர்ந்து கொண்டார்கள். அவன் ஒரு கேள்வி கேட்டால் இருவரும் மண்டையை முட்டிக் கொண்டு ஒரே சமயத்தில் கத்தினார்கள்.
  டீம் மீட்டிங்குகள் இப்போது சர்வர் அறையில் இருந்து நடு ஹாலிற்கு மாற்றினார்கள். முதல் நாள் எல்லோரையும் பாஸ்கர் அவரவர்  வேலைகள் குறித்துக் கேட்டு வந்தான்.
  கடைசியில் மீரா பக்கம் திரும்பி, “நீங்க?” என்றான்.
  “நான் தான் உங்களைக் கேக்கணும்,” என்றாள் மீரா.
  பாஸ்கர் தோளைக் குலுக்கி விட்டு, “நான் நேத்து AOPstubs பண்ணேன். அப்புறம் எல்லா ப்ரோக்ராம்லையும் Spring Boot வச்சு..” என்று பேசிக் கொண்டே போனான். மீரா திருதிருவென்று விழித்தாள். அவளுக்கு நிஜமாகவே அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. கடந்த ஆறு மாதங்களில் கடங்காரப் பாவிகள் புதிது புதிதாகக் கண்டுபிடித்திருந்தார்கள் போலிருந்தது.
  “ஓஹோ,” என்று முடிவில் எல்லாம் தெரிந்தது போலத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினாள்.
  “நீங்க என்ன பண்ணீங்க சொல்லலை?” என்றான் பாஸ்கர். சுற்றி இருந்தவர்கள் சிரிப்பை அடக்குவது நன்றாகத் தெரிந்தது.

*
  இரண்டு வாரத்தில் ஒரு முக்கியமான நாள். முதல் முதலாக அவர்கள் சென்ற ஒன்றரை வருடமாக வேலை பார்த்த அந்த மென்பொருள் முழுவதும் எடுத்து வெள்ளைக்காரனுக்கு கொடுக்கும் நாள். அதற்கு ஒரு வாரம் முன்னால் எல்லோரும் சேர்ந்து மைக்கேலுடன் பேசினார்கள்.
  “இங்க டெஸ்ட் பண்ணோம். எல்லாம் நல்லா வேலை பாக்குது. அப்பப்போ கொஞ்சம் ரிசல்ட் மாறி வருது,” என்றார் மைக்கேல்.
  “என்ன மாறி வருது?” என்றாள் மீரா.
  “ஒண்ணுமில்ல...கொஞ்சம் threads sync பிரச்சினை. நான் பாத்துக்கறேன், மைக்கேல்,” என்றான் பாஸ்கர். அவன் அப்படிச் சொன்ன போது குரல் லேசாக நடுங்குவதை குறித்து வைத்துக் கொண்டாள் மீரா.
  “பம்ப் மாட்யூல் அளவு மோசமில்லை,” என்றான் மைக்கேல்.   எல்லோரும் இதற்கு ஹா ஹா என்று சிரித்தார்கள். மீராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
  இரவு அவள் கிளம்பும் போது பாஸ்கரும் இன்னும் நாலு பேரும் அவன் கம்ப்யூட்டரைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.
*
  “அன்புள்ள திரு. மைக்கேல் வஜபஜவுஸ்கி அவர்களுக்கு,
  நீங்கள் டெஸ்டிங் செய்த முடிவுகள் கிடைக்குமா? சிறிய, எளிதில் சமாளிக்கக் கூடிய பிரச்சினையாக இருந்தால் பாஸ்கரிடமும், பெரிய தடையாக இருந்தால் என்னிடமும் தொடர்பு கொள்ளலாம்.
  நட்புடன்,
  மீரா.”

  “அன்பு மீரா,
   சிறு பிரச்சினை தான் என்று நினைக்கிறேன். வங்கியில், சோதனையில் சிலருடைய பணம் வேறு பலருக்குப் போவதைப் பார்க்க முடிந்தது. இது போன்ற சில்லறை (ஹா ஹா) பிரச்சினை கட்டாயம் ஒரு தடையாக இருக்காது என்று நம்புகிறேன்.
  நட்புடன்,
  மைக்கேல்.”
  மீரா ஈமெயிலை இரண்டு முறை படித்துப் பார்த்து விட்டு பாஸ்கரிடம் ஓடினாள். அவன் பாத்ரூமில் பல் தேய்ப்பதாகவும், இரவு முழுவதும் அலுவலகத்தில் இருந்ததாகவும் சொன்னார்கள்.
  அவன் வெளியே வந்த போது கண்கள் சிவந்திருந்தன. ஓடிப் போய் மறுபடி கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டான்.
  மத்தியானம் அமெரிக்காவில் இருந்து பாஸ் அழைத்தார். எல்லோரும் ஒரு அறையில் போய் நின்று கொண்டார்கள். மீராவுக்கு இடமேயில்லை. அவள் முகத்தைக் கஷ்டப்பட்டு இரண்டு பேர் கைக்கிடையே நுழைத்துக் கொண்டு பார்த்தாள்.
  “ப்ரோக்ராம்ல பொதுவான ஒரு இடத்துல காச வச்சிருக்கோம்,” என்றான் பாஸ்கர். “ரெண்டு பேர் சேர்ந்து வந்தா ஒருத்தர் அக்கவுண்டல இருந்து காசு வேற ஆளுக்குப் போயிருது.”
  “யாரு இதப் பண்ணாங்க?” என்று கேட்டார் பாஸ். “மீரா? நீ ப்ரோக்ராம் பக்கம் போனியா?
  மீரா கோபத்துடன், “என்னத் தான் யாரும் விடலியே,” என்றாள்.
  “எங்கன்னு கண்டுபிடிச்சாத் தான யாருன்னு கண்டுபிடிக்க முடியும்?” என்றான் பாஸ்கர்.
  “மீரா, எனக்கு டைம்லைன் வேணும். எப்போ ப்ரோகிராம சரி பண்ணுவீங்க?” என்றார் பாஸ்.
  “எங்கன்னு தெரிஞ்சா தான எப்போன்னு தெரியும்?” என்றாள் மீரா.
  “எல்லாரும் போய் எந்த மாட்யூல்ல பிரச்சினைன்னு யோசிங்க,” என்றார் பாஸ்.
  எல்லோரும் சோர்வுடன் ரூமில் இருந்து வெளி வந்தார்கள். டைவர்ஸ் ஆன பெற்றோரின் குழந்தைகளைப் போல பாஸ்கரையும் மீராவையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.
  “பாஸ்கர், நீ போய்த் தூங்கு,” என்றாள் மீரா.
  “மாட்டேன்,” என்றான் பாஸ்கர்.
  இருவரும் அவரவர் இருக்கையில் போய் அமர்ந்து யோசித்தார்கள்.      மீராவுக்கு ஒரு விஷயம் புரியவில்லை.
  அவள் எழுதிய பம்ப் மாட்யூலில் பணத்தை மிகக் கவனமாகக் கையாண்டிருந்தாள். ஆனால் நாலு பேர் தான் ஒரு நேரத்தில் பணம் போட முடியும். புது ப்ரோக்ராமிலோ எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பணம் போடலாம் – ஆனால் அது இஷ்டப்படி மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்ளும். இதற்கு என்ன காரணம்?
  யோசித்து யோசித்து அவளுக்குத் தலையை வலித்தது. ஒரு வேளை உலகத்தில் எல்லா வங்கிகளிலும் இது தான் பிரச்சினையோ? நம்முடைய பணம் யார் யார் அக்கவுண்டுக்குப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டாள். பெண் வேறு பிறந்திருக்கிறது.
  இவ்வாறு யோசித்து வரும் போது அவளுக்குத் திடீரென்று உண்மை விளங்கியது. பம்ப் மாட்யூலுக்குப் பதிலாக எழுதிய புது மாட்யூல்  மொத்தமும் பாஸ்கர் எழுதியது. அங்கு தான் பணம் வங்கியில் போடப்படுகிறது. அதில் தான் எங்கோ பிரச்சினை! கள்ளன் அதைச் சொல்லாமல் இருக்கிறான்!
  இதை ஜாக்கிரதையாக விளையாட வேண்டும் என்று அவள் முடிவு செய்தாள். மாலை பாஸுடன் பேசும் போது கரெக்டாக நட்ட நடுவில் போட்டு உடைத்தால் பாஸ்கர் காலி.
  பாஸ்கர் அவளைத் தாண்டும் போது ஒரு பார்வை பார்த்தான். அவளுக்குத் தெரியும் என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. பாத்ரூம் போகும் போது பார்த்தால், பழைய சர்வர் அறையில் மேசை, நாற்காலி போட்டு மீடிங்குக்குத் தயார் செய்தார்கள். அவள் மூச்சு முட்டி மறுபடி விழுவாள் என்கிற கணக்கு போலும்.
*
  கடைசியில் இரவு ஏழரைக்கு பாஸ் கூப்பிட்டார். சர்வர் அறையில் எல்லோரும் நின்றார்கள். இரு நாற்காலிகளில் மீராவும் பாஸ்கரும்.
  “கண்டுபிடிச்சீங்களா?” என்றார் பாஸ்.
  பாஸ்கர், “இல்ல பரம். ஆயிரக்கணக்கான வரிகள் எழுதிருக்கோம். கொஞ்சம் டைம் வேணும்,” என்றான்.
  “டீம்ல எல்லாரையும் இந்த வேலை மட்டும் பாக்க சொல்லுங்க,” என்றார் பாஸ். “யாரும் வீட்டுக்குப் போக வேண்டாம். மீரா, நீ வீட்லயே இருந்திட்டா பெட்டர்.”
  மீரா பட்டென்று, “அது எப்டி பரம்? பாஸ்கரோட மாட்யூல்ல தான் பிரச்சினையே. மத்தவங்க என்ன பண்ணுவாங்க பாவம்,” என்றாள்.
சொல்லி விட்டு வருத்தத்துடன் முகத்தைக் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டாள். பாஸ்கர் அவளை எரித்து விடுவது போலப் பார்த்தான்.
  “எது? பம்ப் மாட்யூலுக்குப் பதிலா ஒண்ணு எழுதினமே, அது தான் ப்ராப்ளமா?” என்றார் பாஸ்.
  “ஆமாம் பரம்.”
  “அப்பன்னா நல்லதாப் போச்சு,” என்றார் பாஸ்.
  இருவரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
  “இந்த மாட்யூல அப்டியே தூக்கிட்டு, பம்ப தூக்கி உள்ள போடுங்க,” என்றார் பாஸ்.
  மீரா பயந்து போய், “பரம், பம்ப் மாட்யூல் நாலு பேர் தான் பயன்படுத்த முடியும்,” என்றாள். “அஞ்சாவது ஆள் வந்தா படுத்துக்கும்.”
  “பரவாயில்லை. நான் இன்னைக்கு மைக்கேல் ஆபீஸ்ல போய்ப் பாத்தேன். மூணே மூணு பேர் தான் டெஸ்ட் பண்ண இருக்காங்க. இப்போதைக்கு இத மாத்தி போட்டுறலாம். அப்புறம் ஒரு வாரம் டைம் இருக்கு. உண்மையில என்ன பிரச்சினைன்னு பாத்திரலாம்.”
  எல்லோர் முகங்களும் மலர்ந்தன.
  “பிரச்சினை எப்பிடி சரியா போச்சுன்னு மைக்கேல் கேட்டா என்ன சொல்வீங்க?” என்றார் பாஸ்.
  “எனக்கு ஒரு ஐடியா இருக்கு,” என்றாள் மீரா.
  “சரி. மீரா, நீ போய் மைக்கேல குழப்பு. பாஸ்கர், நீ போய் கோட் அடி.”
*
  மறுநாள் வீடியோ காலில், மைக்கேல் முகத்தில் தெளிவு தெரிந்தது.
  “என்ன சொன்ன, திரும்பிச் சொல்லு?” என்றான் மீராவிடம்..
  “AOPstubs பண்ணி, அப்புறம் எல்லா ப்ரோக்ராம்லையும் Spring Boot வச்சோம், சரியா போயிடிச்சு,” என்றாள் அவள்.
  “ஓஹோ,” என்றான் மைக்கேல்.
  “அப்புறம், உன் பசங்க எப்டி இருக்காங்க?” என்றாள் மீரா.
  பின்னால் டீம் பழையபடி வேலை பார்க்கத் தொடங்கியிருந்தது.


Thursday, March 01, 2018

Hate it to Quit it


In the novel "Flowers for Algernon", a mentally challenged man suddenly starts getting smarter after getting a medical procedure. He gets so extremely smart that he can "see" how everything is - and then his condition slowly reverts. Towards the end he loses all his intelligence, WHILE KNOWING that he is losing it.
That is my experience in the past 2 months after leaving FB. I could physically feel my brain cells rejuvenating. I could "see" how society is, the way Neo sees the Matrix. I had profound thoughts, although I shared them with no one.
And now I am posting again, slowly pulled back into the cesspool knowingly.
The best way to quit something is to hate it. 2 months back, a series of incidents led me to hate FB, which felt very good.
Now I try to bring back that hatred and it is not working.