Written back in 2004. Published in the short story collection Vaanavil Koottam
கர்வம்
----------
இரா.இராமையா
"திருநாவுக்கரசரை மன்னன் சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்ட போது அவர் 'மாசில் வீணையும் மாலை மதியமும்'", என்று அந்தப் பெண் ராகம் போட்டுப் பாடுவதை நான் வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இரவு எட்டரை மணிக்கு 'நீங்கள் கேட்ட பாடல்' கேட்கத் தயாராக வந்து ரிமோட்டைக் கையில் எடுத்த போது இந்தப் பெண் வீட்டுக்குள் வந்தது. அப்பொழுதே எனக்குத் தெரியும்.. தலைவலி தொடங்கி விட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிக் கூடங்கள் நிறையப் பேச்சுப் போட்டிகள் நடத்துகின்றன. எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள பள்ளியில் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமானைப் பற்றி ஒவ்வொரு வருடமும் பேச்சுப் போட்டி நடக்கிறது.
ஒவ்வொரு வருடமும் என் மனைவியிடம் பள்ளி மாணவிகள் யாராவது வருவார்கள். முக்கால் வாசி அந்த மாணவிகளின் தாய்மார்கள் அவர்களைத் தரதரவென்று இழுத்து வருவார்கள். அந்த மாணவிகள் யாருக்கும் பேச்சுப் போட்டியில் பெயர் பெற வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத் தெரியவில்லை.
பெயரைக் கேட்டால் கூடத் தொண்டைக்குள் முணுமுணுக்கும். அம்மா பின்னால் ஒளிந்து கொண்டு வரும் இந்த மாணவிகளை அவர்கள் தாய்மார்கள் அறிமுகம் செய்விப்பதே எனக்குச் சிரிப்பு வரும்.
"நல்லா பேசுவா..கொஞ்சம் டிரெயினிங் மட்டும் இருந்தா."
"உம் பெயர் என்னம்மா?" என்று கேட்பாள் என் மனைவி.
அந்தப் பெண் சும்மா இருக்கும்.
"பேரு என்னன்னு கேக்குறாங்கள்ள..சொல்லேன்" என்று அந்தத் தாய் கண்ணை உருட்டிப் பல்லைக் கடித்தவாறே சொல்வாள்.
"சுவாதி" என்று அந்தப் பெண் முனகும்.
நானாக இருந்தால் 'நீச்சல் போட்டி, ஓட்டப் பந்தயம் வேறு எதுவும் இல்லையா?' என்று கேட்டிருப்பேன். ஆனால் என் மனைவியோ புன்னகை மாறாமல் பேசுவாள். சில நாட்கள் சென்ற பிறகு அந்தப் பெண் கையை ஆட்டிக் காலை ஆட்டி ஒரு சிறு நடனமே ஆடிப் பேசும்படிச் செய்து விடுவாள்.
திருநாவுக்கரசரின் வாழ்க்கையில் ஒவ்வொரு சுவை மிகு திருப்பமும் எனக்கு இப்போது மனப்பாடம். சில சமயங்களில் இந்தப் பேச்சுப் போட்டிகளில் நானே கலந்து கொண்டு வெற்றி பெறலாம் என்று தோன்றும்.
நான் சற்று அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முயற்சி செய்தேன்.
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவி அவள். அவள் கண்களில் கூச்சம் தெரிந்தது. நான் கவனிப்பதைப் பார்த்து இன்னும் சிறிது கூச்சப்பட்டாள். அவள் குரல் கீச், மூச்சென்று இருந்தது. சிறிது நேரம் கேட்டால் தலை வலித்தது. என்னத்தைப் பேசி ஜெயிக்கப் போகிறதோ.
எனக்கு என் மனைவி மேல் சிறிது இரக்கம் வந்தது.
அப்பரையும் தேவாரத்தையும் சுந்தரமூர்த்திப் பெருமானையும் பற்றி இவளுக்கு என்ன தெரியும். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
அவள் எழுதும் பேச்சுக்கள் எப்படித் தான் பரிசு பெறுகின்றனவோ.
அவளது தமிழ் சிறிது கொச்சையாக இருந்தது. அவளின் மொத்தத்
தமிழறிவும் சாண்டில்யன் மற்றும் லஷ்மியின் நாவல்களை நிறையப்
படித்ததன் விளைவு தான் என்பது என் அபிப்ராயம்.
இதையெல்லாம் பற்றி இந்தப் பேச்சுப் போட்டிகளில் நீதிபதிகள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. மீண்டும் மீண்டும் முதல் பரிசை என் மனைவியின் சிஷ்யைகளுக்கே அளித்தார்கள்.
அந்தப் பெண் மிலிட்டரி போல அட்டென்ஷனில் விறைப்பாக நின்றபடிப் பேசியது. "இறைவனுக்கு ஒரு நண்பன் தேவைப்பட்டான். நாவுக்கரசரை ஆட்கொண்டான்."
'நீங்கள் கேட்ட பாடல்' முடிந்திருக்கும்.
********************************
செப்டம்பர் மாதம் முடியும் சமயம். என் மனைவியின் தம்பி சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.
அருமையாகச் சாப்பிட்டு விட்டு எல்லோரும் மொட்டை
மாடியில் காற்று வாங்கிக் கொண்டும் கொசுக்களை அடித்துக் கொண்டும்
உட்கார்ந்திருந்தோம். மற்ற ஃபிளாட்களில் இருந்து டி.வியின் அலறலும்
கீழே இருட்டு நேர கிரிக்கெட் விளையாட்டின் பல்வேறு கூக்குரல்களும் கலந்து கேட்டன. நுங்கம்பாக்கத்தில் நகரச் சத்தங்கள் அதிகமாக இருக்கிறது என்று தாம்பரத்திற்கு ஃபிளாட் வாங்கிக் கொண்டு வந்தோம். மற்றவர்களும் இதே நினைப்புடன் இங்கு வருவார்கள் என்று அப்போது எனக்குத் தெரியாமல்
போயிற்று.
"கலா, நீ என்ன பண்ற பொழுது போக?" என்று என் மனைவியைக் கேட்டான் அவள் தம்பி.
"எங்க ரெண்டு பேருக்கும் என்ன? டி.வி. பார்ப்போம்; பேசிட்டு இருப்போம்", என்றாள் கலா.
"நான் இல்ல; அவ தான் பேசுவா", என்றேன் நான்.
தூரத்தில் எங்கிருந்தோ சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது கேட்டது.
"ரெண்டு பேரும் ரெண்டாவது ஹனிமூன் போயிட்டு வரது தான எங்கயாவது?"
"நானும் யோசிச்சிட்டிருக்கேன். ரொம்ப நாளா ராஜஸ்தான்லாம் பாக்கணும்னு ஆசை", என்றாள் கலா.
இதற்குப் பிறகு துவாரகை, காசி, தில்லி என்று பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி அக்காவும் தம்பியும் மாறி மாறிப் பட்டியலிட்டார்கள்.
கடைசியாக காக்ஷ்மீர் போகலாம் என்று முடிவெடுத்து விட்டு என்னைப் பார்த்தார்கள்.
"நான் வரலை", என்றேன்.
"என்ன இப்பிடிச் சொல்றீங்க? தனியா கலா மட்டும் எப்பிடி ஹனிமூன் போவா?" என்று கேட்டான் தம்பி.
கலா என்னையே பார்த்தாள்.
"எனக்குக் கொஞ்ச நாள் தனியா இருக்கணும் போல இருக்கு."
தம்பி கலகலவென்று சிரித்தான். நாங்கள் இருவரும் சிரிக்கவில்லை.
"எனக்கும் கூடத் தான் தனியா இருக்கணும் போல இருக்கு", என்றாள் கலா.
"எனக்கு ஓ.கே", என்றேன் நான்.
கலா தம்பியைப் பார்த்து, "நான் உன் வீட்டுக்கு வந்து இருக்கேனே", என்றாள்.
"சும்மா இரு கலா. இந்த வயசுல பாத்ரூமுக்கே ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்..", என்றான் தம்பி.
நான் சற்று சமாதானமாக, "கலா, நான் சும்மா தான் சொன்னேன்", என்றேன்.
"நான் நிஜமாத் தான் சொல்றேன்", என்றாள் கலா.
தம்பி தமிழர்களின் வழக்கமான கவலையுடன், "நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறீங்க?", என்று என்னிடம் கேட்டான்.
"எனக்கு சந்நியாச ராசின்னு சின்ன வயசுல ஜோசியர் சொல்லிருக்கார். எனக்குத் தனியா இருக்கப் பிடிக்கும்; முடியும். கல்கத்தால இருந்த போது.."
"கல்கத்தா கதை வேண்டாமே.." என்றாள் கலா.
*********************************************
ஒரு வாரத்தில் கலா கிளம்பிப் போய் விட, நான் பாச்சலர் வாழ்க்கையைத் துவக்கினேன்.
பல நாட்களாக இந்த வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை செய்திருக்கிறேன்.
என் மனக் கனவுகளில் நான் இஷ்டம் போல வெளியே சுற்றுவேன். நிறைய வாக்கிங் போவேன். சத்தமாகப் பாட்டுக் கேட்பேன். செகண்ட் ஷோ படம் பார்ப்பேன். பெசண்ட்நகர் பீச்சில் இரவு ஒரு மணி வரை அலைகள் அலசும் மணலில் அமர்ந்து தியானம் செய்வேன்.
இதைத் தவிர நிம்மதியாக 'நீங்கள் கேட்ட பாடல்' பார்ப்பேன்.
சமையல் செய்வது உற்சாகமாக இருந்தது. கலா போவதற்கு முன்னால் எல்லா டப்பாக்களிலும் 'அரிசி','உப்பு','புளி' என்று எழுதி ஒட்டி விட்டுப் போயிருந்தாள். முதல் நாள் முனைப்பாக பொரியல், கூட்டு, அப்பளம், குழம்பு, ரசம் என்று விஸ்தாரமாக சமைத்தேன். பிறகு குழம்பு, பொரியல் என்று இறங்கி வந்து கடைசியில் மூன்று நாட்கள் தொடர்ந்து மோர் சாதமும் ஊறுகாயும் சாப்பிட்டு நாக்கு உணர்விழந்து போயிற்று. பக்கத்து வீட்டில் தாளிக்கும் சத்தம் கேட்டாலே இரைக்க இரைக்க ஓடி அவர்கள் வீட்டு வாசலில் நிற்க வேண்டும் என்று தோன்றியது.
முதலில் அக்கம் பக்கத்து வீடுகளில் 'பாவம் கிழவர் தனியாக
இருக்கிறாரே' என்று சாப்பாடு கொடுத்தனுப்ப முயற்சி செய்தார்கள். வீராப்பாக
'வேண்டாம்' என்று மறுத்தேன். யாராவது ஒருவராவது மறுபடி கேட்கக் கூடாதா?
செகண்ட் ஷோ சினிமா பார்க்கச் செல்ல நினைத்த போதே திரும்ப
வர பஸ் கிடைக்குமா என்பதில் இருந்து சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொள்வது வரை எல்லாமே கவலை மயம். கடைசியில் தேவி தியேட்டரில் நான் பார்க்க விரும்பிய படங்கள் எதுவும் ஓடவில்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
பெசண்ட் நகர் பீச் போனால் வாடைக் காற்று ஒத்துக் கொள்ளாது என்று தோன்றியது.
******************************************
பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் விளையாடுவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். திண்ணைகளில் பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பொதுவாகக் கலாவும் அமர்ந்திருப்பாள். ஒவ்வொரு நாளும் என்ன தான் பேசுவார்களோ என்று தோன்றும். இன்று எனக்கும் அவர்களுடன் உட்கார வேண்டும் என்று தோன்றியது. கலாவுடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். எல்லாவற்றைப் பற்றியும் அவளுக்கு ஒரு கருத்து உண்டு.
எதிர் வீட்டுப் பையன் வீட்டை விட்டு விடுவிடுவென்று வெளியே வந்தான்.
"டேய் என்ன..ஸ்கூல்லாம் எப்பிடிப் போவுது?" என்று கேட்டேன்.
"நல்லாப் போவுது தாத்தா", என்று விட்டுத் திரும்பினான்.
"டேய்..நில்லுடா.."
அவன் சலிப்புடன் திரும்பிப் பார்த்தான். கிரிக்கெட்டிற்கு டீம் பிரிப்பதற்குள் போக வேண்டும்.
"நல்ல மார்க் வாங்குறியா?"
"ம்"
"எதாவது சினிமா பாத்தியா?"
"ம்"
"என்ன படம் பாத்த?"
"ராத்திரி வீட்டுக்கு வரேன் தாத்தா..எல்லாம் நிறையப் பேசலாம்", என்று ஓடி விட்டான்.
நிஜமாகவே சொல்கிறான் என்று நினைத்து இரவு பத்து மணி வரை காத்திருந்தேன். அவன் வரவேயில்லை.
மறு நாள் அகிலா வந்து சேர்ந்தாள்.
**********************************
"கலா மேடம் இருக்காங்களா?"
நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தேன்.
வாசலில் ஒரு நடுத்தர வயதுப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி.
"நீங்க யாரு? என்ன விஷயம்?"
"என் பேரு சரோஜா. பக்கத்துல கம்பர் தெருல இருக்கேன். கலா மேடம் இல்லையா?"
"கலா இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க. உள்ள வந்து உட்காருங்களேன்."
நான் இருந்த மூடில் அவர்களைச் சாப்பிடக் கூப்பிடலாமா என்று
கூட யோசித்தேன்.
அவர்கள் தயக்கத்துடன் வீட்டிற்குள் வந்தார்கள். அந்த மாணவி இரட்டைப் பின்னல் பின்னியிருந்தாள். தைரியமாக வீட்டைச் சுற்றிப் பார்த்து அளவிட்டாள்.
"இவளுக்கு ஸ்கூல்ல ஒரு பேச்சுப் போட்டி. இன்டர்-ஸ்கூல்.நல்லாப் பேசுவா. கலா மேடம் கிட்ட கொஞ்சம் டிரெயினிங் எடுத்தா நல்லாயிருக்கும்..." என்று இழுத்தாள் சரோஜா. அவளுக்குக் கலாவை நான் வீட்டிற்குள் ஒளித்து வைத்திருக்கிறேன் என்று தோன்றியிருக்க வேண்டும். உள்ளே உற்று உற்றுப் பார்த்தாள்.
எனக்குள் ஒரு மின்னல் அடித்தது.
"கலா ஊருக்குப் போயிருக்கா", என்றேன்.
"அப்படியா...", சரோஜாவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
"அதுனால என்ன..நான் ஹெல்ப் பண்றேனே...", என்றேன்.
அவர்கள் இருவரும் என்னை சந்தேகத்துடன் பார்த்தார்கள்.
"உங்களுக்கு எதுக்கு சிரமம்.."
எனக்கு எழுந்து நின்று "ப்ளீஸ்...ப்ளீஸ்.." என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.
"ஒரு சிரமும் இல்லை. இன்ஃபாக்ட் இட் இஸ் மை ப்ளஷர்", என்றேன்.
"உனக்கு ஓகேயாடி?" என்று சரோஜா அந்தப் பெண்ணிடம் கேட்டாள்.
அவள் தலையாட்டினாள்.
"உன் பேரென்னம்மா?" என்று கேட்டேன்.
"அகிலா."
"போட்டிக்குத் தலைப்பு என்ன?"
"விவேகானந்தர் இன்று இருந்தால்.."
***************************
நாலு நாட்கள் கழித்து வரச் சொல்லி விட்டு நான் விவேகானந்தரைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.
எனக்கு விவேகானந்தர் அமெரிக்கா சென்று, "Brothers and Sisters
of America", என்று சொன்னார் என்று தெரியும். அதற்கு அமெரிக்கர்கள் மிகவும் மகிழ்ந்து கை தட்டினார்கள் என்று தெரியும். இதைத் தவிர அவர் என்ன சொன்னார். வேறு ஏதாவது சொன்னாரா இல்லையா என்று சரியாகத் தெரியாது.
ஹிக்கின்பாதம்ஸ் போய்ச் சில புத்தகங்களைப் பார்த்தேன். தடிமனாக "Vivekanada: The Complete Works" என்கிற புத்தகத்தை வாங்கி வந்தேன். விவேகானந்தர் ராமகிருஷ்ணரைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு பலரைச் சந்தித்து "நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?" என்று கேட்டிருக்கிறார் தெரியுமா? எனக்குத் தெரியாது. "நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?" என்கிற கேள்வியை பெங்காலியில் எப்படிச் சொல்வார்கள் என்று கண்டுபிடித்தேன். சொல்லிப் பார்த்தேன்.
இனிமையாக இருந்தது.
ராஜ யோகத்தைப் பற்றிய அவரது பேச்சுக்களைப் படித்தேன். வேதாந்தம் எவ்வளவு பெரிய கடல்? நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்ற கர்வம் மிகுந்தது. அந்த கர்வத்துடன் அமர்ந்து விவேகானந்தரே பேசுவது போல பாவித்து ஒரு கட்டுரையை எழுதி முடித்தேன்.
*************************************************
குறிப்பிட்ட மாலையில் அகிலா வந்தாள்.
"இதைக் கத்திப் படி", என்று அவள் கையில் கட்டுரையைக் கொடுத்தேன்.
அழகான ப்ரிண்டர் பேப்பரில் முத்துமுத்தாக எழுதியிருந்தேன். பிற்காலத்தில் பேரப் பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டுமே.
அகிலா அதை வாங்கிக் கையில் வைத்து முதல் வரிகளை மனதிற்குள் படித்தாள். அவள் முகத்தில் சிறு குழப்பம் பரவியது. பாவம்..சிறு பெண் தானே..
"படி" என்று ஊக்குவித்தேன்.
அவள் மெதுவாகப் படிக்கத் தொடங்கினாள். "நான் நரேன் பேசுகிறேன். சிருஷ்டி சுயாரம்பமான இந்த அகண்ட பிரபஞ்சத்தில், நிர்குணப் பிரம்மம் சகுணமாக ஆவிர்ப்பித்த தருணத்தில்.."
அவள் நிறுத்தி விட்டு என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
"என்னம்மா? மேல படி.." என்றேன் எரிச்சலுடன்.
"விவேகானந்தர் பத்தி எதுவும் இல்லையே.."
நான் அலுத்துக் கொண்டேன். "விவேகானந்தர் பத்தி உனக்கு என்ன தெரியும்..சொல்லு.."
"Brothers and Sisters of America", என்று அவள் தொடங்கினாள்.
"அகிலா..அதுல்லாம் அவரோட வெளித் தோற்றம்..பேச்சு. உண்மையில விவேகானந்தர் யாரு?"
"பெங்காலி."
நான் பெருமூச்சு விட்டேன். இந்தக் காலத்தில் குழந்தைகள் பள்ளியில் என்ன தான் படிக்குமோ.
அகிலாவை முழுவதுமாகப் படிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. சில வார்த்தைகள் படித்ததும் அவளுக்கு சந்தேகம் வரும். சில சொற்கள் வாயிலேயே நுழையாது. சிலவற்றைச் சொல்லும் போது சிரிப்பு வரும்.
கடைசியாக "துமீ கி ஈஷ்வர் தேகோஷோ" என்று கட்டுரையின் கடைசி வரியைப் படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
நான் பொறுமையுடன், "அப்படின்னா பெங்காலில 'நீங்கள் கடவுளைப் பாத்திருக்கீங்களா'னு அர்த்தம்", என்றேன்.
அவள் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

கட்டுரையை மனப்பாடம் செய்ய அகிலாவிற்குச் சில நாளாயிற்று.
ஒரு நாள் அகிலாவின் அம்மா சரோஜா வந்தாள்.
"ஸார்..கட்டுரையைப் படிச்சேன். இவளுக்குக் கொஞ்சம் ஹையர் லெவல் மாதிரி இருக்கு."
நான் கண்டிப்புடன் பேசினேன். "இத பாரும்மா..அகிலா இந்தப் போட்டியில மட்டும் ஜெயிச்சா போதாது. வாழ்க்கையில ஜெயிக்க வேண்டாமா?"
சரோஜா சற்றுத் தயங்கினாள்.
"வாழ்க்கையில ஜெயிக்கிறது முக்கியமா இல்லையா?" என்று அதட்டினேன்.
"முக்கியம் தான். ஆனா..."
"விவேகானந்தர் பத்தி இவ பேசுறது அந்த ஜட்ஜஸுக்கே ஒரு பாடமா அமையணும். அவர் எப்படிப்பட்ட மனிதர். இந்தக் காலத்துல எவன் அவரைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கான்? அவர் மட்டும் இப்ப இருந்தா நாட்டுல இந்தச்
சீர்கேடெல்லாம் உண்டா?"
"உண்மை தான் ஸார் இருந்தாலும்.."
"ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குவாளோன்னு உங்களுக்கு சந்தேகமா இருக்கா?
கவலைப்படாதீங்க. இவளுக்குப் ப்ரைஸ் கொடுக்காட்டி அந்த ஜட்ஜ் ஒரு ஞான சூன்யம்."
சரோஜா இதற்குப் பரிதாபமாகத் தலையாட்டி விட்டுச் சென்றாள்.
************************************************************
ஒரு நாள் அகிலா வரும் போது இரவு மணி எட்டு. கணக்கு ட்யூஷன், ஹிந்தி ட்யூஷன் போன்ற சில்லறை விஷயங்களை முடித்து விட்டு வேதாந்தப் பாடம் கேட்க வந்தாள்.
ஆம், என்னைப் பொறுத்த வரை நான் பேச்சுப் போட்டியைக் கடந்து
விவேகானந்தரையும் தாண்டி ஆன்மிகத்தில் ஆழ்ந்து வேதாந்த முத்தெடுக்கும் பணியில் இறங்கியிருந்தேன். அகிலாவைக் கடைத்தேற்றுவது என் பொறுப்பு என்று கருதினேன்.
எட்டு மணிக்கு அவள் வந்தாள். எனக்கோ 'நீங்கள் கேட்ட பாடல்' கேட்க வேண்டும். அரை மணியில் முடித்து விடலாம் என்று அவளைப் படிக்கச் சொன்னேன்.
அகிலா பாதி தூரம் முன்னேறியிருந்தாள். 'ஸ்வாதிஷ்டானாம்புஜகஜம்' என்கிற சொல்லை ஒருவாறு சொல்லக் கற்றிருந்தாள்.
என் கண்கள் கடிகாரத்தை நோக்கியவாறு இருந்தன. அகிலாவோ அன்று பார்த்து மிகவும் சிரமப்பட்டாள். கடைசியில் எட்டரை மணிக்கு பக்கத்து வீட்டில் டைட்டில் பாட்டுப் போட்டார்கள். ஆத்மா பரமாத்மாவைத் தேடுவது போல என் கைகள் ரிமோட்டைத் தேடின.
அகிலாவும் பக்கத்து வீட்டுலிருந்து வரும் சத்தத்தைக் கவனித்து
நிறுத்தினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
"உனக்கு டி.வி பாக்கணும்ினு இருந்தா போடறேன்", என்றேன் நான்.
அவள் யோசித்தாள். முதல் பாட்டுத் தொடங்கி விடுமே என்ற கவலையுடன் அவளைப் பார்த்தேன்.
"பரவாயில்லை ஸார்", என்றாள்.
எனக்குக் கோபம் வந்தது. அப்படி என்ன பேச்சுப் போட்டி வேண்டி
இருக்கிறது?
"நீ அந்த ஞாபகமாவே இருப்ப. டி.வி பாத்துட்டு அப்புறம் கன்டின்யூ
பண்ணலாம்", என்று விட்டு அவள் பதில் சொல்வதற்குள் அவசர அவசரமாக ரிமோட்டை எடுத்து டி.வியைப் போட்டேன். அப்பாடா, முதல் பாட்டு இப்போது தான் தொடங்குகிறது. நான் பாடலில் ஆழ்ந்தேன்.
இரண்டு நிமிடம் கழித்து விளம்பரங்கள் தொடங்கியதும் தியான நிலையில் இருந்து மீண்டேன். அகிலா வசதியாகச் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
"என்ன ஸார் சாவித்ரி சரோஜாதேவி பாட்டு தான் பாப்பீங்கனு நினைச்சேன்", என்றாள்.
நான் அசடு வழிந்தேன்.
"எல்லா காலத்திலயும் நல்லத எடுத்துக்கணும்", என்றேன்.
சிறிது நேரம் கழித்து எனக்குப் பல நாட்களாக்க் கேட்க வேண்டும் என்று இருந்த கேள்வியை அகிலாவிடம் கேட்டேன்.
"அகிலா, இந்தக் கட்டுரை ஒண்ணும் கஷ்டமாயில்லையே?" என்று தொடங்கினேன்.
"அப்படில்லாம் ஒண்ணும் இல்ல ஸார்."
"நீ நிறைய போட்டிலல்லாம் கலந்திருக்கியே."
"ஆமா ஸார்."
"நான் எழுதின கட்டுரை ரொம்ப வித்தியாசமா இருக்கு இல்ல?"
அவள் யோசித்தாள். அடுத்த பாட்டுத் தொடங்கியது. நான் அவள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
"வித்தியாசமானு இல்ல. கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு."
நான் புரிந்த மாதிரி தலையாட்டினேன்.
"நிறைய கருத்துக்கள் இருக்கு இல்ல?"
"எனக்குத் தெரியலை ஸார். வார்த்தைல்லாம் கொஞ்சம் கஷ்டமா
இருக்கு."
எனக்குக் கோபம் வந்தது.
"நான் எவ்வளவு ரிஸர்ச் பண்ணி எழுதியிருக்கேன் தெரியுமா?" என்றேன்.
"ஆமா ஸார்."
"ஒரு பெரிய லெவல்ல இருக்கு இல்ல?"
"ஆமா ஸார். ஆனா..."
சே..ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த என்னை இந்தப் பெண் குறைத்து மதிப்பிடுகிறதே என்று தோன்றியது.
அவள் தொடர்ந்து, "ஆடியன்ஸ் கொஞ்சம் புரியாம தவிப்பாங்களோன்னு.."
என்னைப் போன்ற ஒரு கலைஞன் ஆடியன்ஸூக்காகத் தரத்தைத் தாழ்த்திக் கொள்வதா?
டி.வியில் நிகழ்ச்சி முடிந்தது.
**********************************************
போட்டி நாள் வந்தது.
நான் போட்டி நடக்கும் பள்ளியில் நுழைந்தேன். கல்யாண வீட்டைப் போல கலகலப்பாக இருந்தது. ஆறாவது வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரையில் மாணவ மாணவியர்கள் இருந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிந்தது. சிலர் அங்கங்கே காலி வகுப்புகளில் பேசிப் பழகிக் கொண்டிருந்தார்கள்.
டீச்சர்களும் நின்று கொண்டு தங்களுக்குள் பேசுவதைப் பார்த்தேன்.
வழக்கம் போல அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. பதட்டமே இல்லாமல் இருந்தது அவர்கள் மட்டும் தான். மற்ற பள்ளி டீச்சர்களுடன் போனஸ், அலவன்ஸ் என்று பேசிப் பொழுதைப் போக்கினார்கள்.
அகிலா தன் தோழிகள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள். சற்றுத்
தள்ளி சில மாணவர்களும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது இந்த இரு கூட்டங்களுக்கு இடையிலும் மின்னல் வெட்டுவது போலப் பார்வைகள் பறந்து பறந்து முட்டிக் கொண்டன.
அகிலா என்னைப் பார்த்தாள். சற்று விலகி என்னிடம் வந்தாள்.
"என்ன ஸார்..இங்கியே வந்திட்டீங்க?"
"நீ ஜெயிக்கிறதைப் பாக்க வேண்டாமா?" என்றேன்.
"நான் ஜெயிக்கிறதையா நீங்க ஜெயிக்கிறதையா.." என்று விட்டுச் சிரித்தாள்.
"நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டியா?"
"பண்ணிட்டேன் ஸார். கவலைப்படாதீங்க. ஏன் இவ்வளவு டென்ஷனா
இருக்கீங்க.."
எனக்கு அப்போது தான் எல்லோரையும் போல எனக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது தெரிந்தது.
********************************************
பேச்சுப் போட்டி ஆரம்பமாயிற்று. முதலில் ஆறாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பேசினார்கள். அந்த வயதிலேயே குதித்துக் குதித்து மேசையைத் தட்டி ஆவேசமாய்ப் பேசினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டால் விவேகானந்தர் வீரவாள் ஏந்திப் பேரரசுகள் பல வென்றாரோ என்று தோன்றியது.
ஒரு பையன் பேச்சை நடுவே மறந்து போய் முழித்தான். இன்னொருவன் பேசும் போது மைக் கட்டாகி மௌனப் படம் பார்ப்பது போலிருந்தது. இது போன்ற விபத்துகள் அகிலா பேசும் போது நடக்காமல் இருக்க நிர்குணப் பிரம்மத்தை வேண்டிக் கொண்டேன்.
அடுத்து ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குப் போட்டி தொடங்கியது. அகிலா பேசச் சிறிது நேரம் ஆகும்.
நான் பெரிய ஹாலில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். சற்று மூச்சடைப்பது போல இருக்கவே வெளியே வந்தேன்.
"என்ன ஸார் டென்ஷன் தாங்கலையா?" என்று ஒரு குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன். அகிலாவும் வெளியே நின்று கொண்டிருந்தாள்.
"நீ எப்பிடி இவ்வளவு கூலா இருக்க?" என்று கேட்டேன்.
"பழகிப் போச்சு ஸார். போன மாசம் மட்டும் நாலு போட்டி
போனேன்."
"எனக்கு இது தான் ஃபர்ஸ்ட்", என்றேன்.
சற்று நேரம் இருவரும் மௌனமாக நின்றோம். உள்ளிருந்து ஒரு
பெண், "எழுமின்! விழிமின்", என்று கத்துவது கேட்டது.
"கலா ஆன்ட்டி ஏன் ஸார் இவ்வளவு நாளா ஊர்லயே இருக்காங்க?
உங்களப் பாத்தா பாவமா இருக்கு."
நான் சிரித்தேன். "எனக்குத் தனியா இருக்கறது பிடிக்கும்மா", என்றேன்.
அவள் "ப்ச்..சுத்த போர்", என்றாள்.
"தனியா இருந்தாத் தான் நிறைய சாதிக்க முடியும். விவேகானந்தரைப் பாரு", என்றேன்.
அவள், "அவருக்கும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்களே ஸார். என்னால ஃபிரெண்ட்ஸ் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது", என்றாள்.
நான் யோசித்தேன். உண்மை தான். கலா இல்லாமல் மிகவும் தனிமையாகத் தான் இருக்கிறது.
"அகிலா, நீ தான் அடுத்தது", என்று யாரோ சொன்னார்கள்.
அவள் உள்ளே போனாள். நான் கதவோரத்தில் நின்று பார்த்தேன்.
விவேகானந்தரின் உண்மையான தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நேரம் வந்து விட்டது.
"நான் நரேன் பேசுகிறேன். சிருஷ்டி சுயாரம்பமான இந்த அகண்ட
பிரபஞ்சத்தில் நிர்குணப் பிரம்மம்.."
அகிலா சாந்தமாகப் பேசினாள். கையைக் காலை ஆட்டாமல் பேசினாள். சற்றுப் புரிந்து கூடப் பேசினாள் என்று தோன்றியது.
கூட்டத்தில் சிறு சலசலப்புப் பரவியது. சிலர் லேசாகச் சிரித்தார்கள்.
"பாம்புமாகிப் பழுதுமாகும் அந்தர்யாமியின் சொரூபத்தை
மூலாதாரத்தில் நிறுத்தி.."
இன்னும் சிறிது சிரிப்பு அதிகரித்தது.
எனக்கு முன்னால் ஓடிச் சென்று "நிறுத்துங்களடா ஞான சூன்யங்களா", என்று கத்த வேண்டும் போல இருந்தது.
முடிவில், "துமீ கி ஈஷ்வர் தேகோஷோ", என்று முடித்ததும் நீதிபதிகளில் ஒரு பெண்மணி கர்சீப்பால் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிப்பது தெரிந்தது. அகிலா மேடையிலிருந்து இறங்கினாள். யாரோ இரண்டு பேர் கை தட்டினார்கள். அவர்களுக்கு என் ஆசீர்வாதங்கள்.
***************************************
பேச்சுப் போட்டி முடிந்து நீதிபதிகள் ஒரு அறைக்குள் சென்றார்கள். சிரித்துப் பேசிக் கொண்டே போனார்கள். என்னைப் பற்றித் தான் சிரித்தார்கள் என்று எனக்குத் தோன்றியது.
எல்லோரும் அங்கங்கே குழுமி நின்று கொண்டிருந்தார்கள். நான் அகிலாவைத் தேடினேன்.
அவள் ஒரு ஓரத்தில் நின்று ஒரு டீச்சருடன் பேசிக் கொண்டிருந்தாள். முடித்து விட்டு அவள் விலகி வரும் போது யாரோ "தும் குஷ் புஷ்" என்று கத்தினார்கள். நாலைந்து பேர் சிரித்தார்கள். அகிலாவும் சேர்ந்து சிரித்தபடி என்னைப் பார்த்து வந்தாள்.
"என்ன ஸார்..எப்பிடி இருந்தது பேச்சு"
"ஸாரிம்மா", என்றேன்.
"ரிஸல்ட் இன்னும் தெரியலையே. ஜட்ஜே விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ப்ரைஸ் எனக்குத் தான்", என்றாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
"கவலப்படாதீங்க ஸார். வீட்டுல ஏகப்பட்ட கப் இருக்கு. இது போனாப் பரவாயில்ல. குண்டலினி பத்திக் கத்துக்கிட்ட மாதிரியாவது ஆச்சே"
"அடுத்த முறை..", என்றேன்.
"அடுத்த மாசம் காந்தி பத்தி ஒரு போட்டி இருக்கு", என்றாள்..
எனக்கு உடனே சத்தியாக்கிரகத்தைப் பற்றிக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது.
அகிலா திரும்பிப் போனாள்.
நான் வீட்டுக்குக் கிளம்பினேன். கலாவுடன் வேதாந்தம் பற்றி நிறைய வாதிட இருக்கிறது.