பத்து வருடம் முன்னால் எழுதிய கதை.
Copyrighted to me.
My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல்
My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல்
மனைவி அமைவதெல்லாம்
------------------------------------
இரா.இராமையா
ரிசப்ஷனுக்கு முன்னால் ப்யூட்டி பார்லரில் கண்ணில் வெள்ளரிக்காய் வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் மாலா.
"என்னடி தூங்கிட்டியா?" என்று கவிதாவின் குரல் கேட்டது.
"இல்ல..என்ன சொல்லு"
"பிரதாப் உன் கிட்ட எதாவது பேசினாரா?"
"இன்னும் ஒண்ணும் சொல்லலடி."
"ஆனா எப்போதும் எதாவது சொல்ல வர மாதிரி இருக்கார்?"
"எனக்கும் அப்பிடித் தான் தோணுது. பக்கத்துல குனிவேன். பாத்தா எதுவும் சொல்ல மாட்டாரு."
"அவர் ஃபிரண்ட்ஸ் யாரும் கல்யாணத்துக்கு வரலியா?"
"அலையாத..ரிசப்ஷனுக்கு வருவாங்க."
*************
மாலை ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. பிரதாப் எல்லோருக்கும்
கை கொடுத்தான். மாலா எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள். வீடியோ எடுப்பவர் முன்னால், பின்னால், சற்றே சாய்ந்து, தள்ளி இருந்து ஸூம் செய்து எல்லாம் படம் எடுத்தார்.
பிரதாப் அவரிடம், "அடுத்த படத்துல எனக்கும் ஒரு ரோல் குடுங்க", என்றான். மாலா சிரித்தாள்.
அவன் அவள் அருகே குனிந்தான். ஆனால் வழக்கம் போல
எதுவும் சொல்லவில்லை.
****************
முதலிரவு அறையில் மாலா நுழையும் போது பாத்ரூமுக்குள் குளிக்கும் சத்தம் கேட்டது. வர வர தண்ணீர் எங்காவது கொட்டும் சத்தம் கேட்டால் பக்கெட்டை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் போல இருந்தது. மாலா படுக்கையின் ஓரம் உட்கார்ந்து உலக வாழ்க்கையின் அநிச்சயத்தைப் பற்றி யோசித்தாள்.
பிரதாப் பாத்ரூமில் மேலெல்லாம் சென்ட் அடித்துக் கொண்டு வெளியே வரும் போது மாலாவின் குறட்டைச் சத்தம் தான் கேட்டது.
*******************
காலையில் மாலா எழுந்த போது பாத்ரூமில் குளிக்கும் சத்தம் கேட்டது. சற்றுக் குழப்பமாக இருந்தது. பிறகு அன்று தான் புகுந்த வீட்டில் புகுகிறோம் என்கிற நினைவு வந்து மற்ற எல்லா எண்ணங்களையும் அழித்தது.
மாப்பிள்ளை வீட்டார் வரும் போது ரயிலில் வருவது போலக் கையை வீசிக் கொண்டு வந்து விட்டுப் போகும் போது லாரி போன்ற ஒரு பெரிய வேனில் கிளம்பினார்கள். உள்ளே பரிசுப் பொருள்களின் அடைசலில் மாலா காலை உயர்த்தி ஒரு அண்டாவிற்குள் வைத்தவாறே வரும் போது பிரதாப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்திருந்தான். அவன் கால்களும் ரொமான்டிக்காக
அதே அண்டாவிற்குள் இருந்தன.
"வாழ்க்கையக் கை கோர்த்திட்டுத் தொடங்காம கால் கோர்த்திட்டுத் தொடங்குறோம்", என்றான்.
மாலா சிரித்தாள்.
பின்னாலிருந்து ஒரு கனத்த குரல், "என்ன விக்குதா?" என்று கேட்டது.
"இல்ல மாமா", என்றாள் மாலா.
வேன் திடீரென்று மிக அமைதியானது. பிரதாப் மெல்லிய குரலில், "கேட்டது எங்க பாட்டி", என்றான்.
மறுபடியும் அதே கனத்த குரல், "மாமாவா? என்ன செவிடா?" என்றது.
பிரதாப்பின் அப்பா, "விடும்மா. ஏதோ தெரியாம பேசிட்டுது", என்றார்.
*****************
வீட்டுக்குள் போனதும் பிரதாப் குளிக்கப் போய் விட்டான். மாலா அறையை விட்டு ஹாலுக்கு வந்தாள். பாட்டி அவளைப் பார்த்து, "வா, இப்பிடி வந்து உக்காரு", என்றாள்.
"இல்ல...வேல எதாவது இருந்தா...", என்றாள் மாலா.
பாட்டி யோசித்து, "அதுவும் சரி தான். போய் வேலையைப் பாரு", என்றாள்.
ஏதோ சம்பிரதாயத்துக்குச் சொல்லப் போய் இப்படி ஆகி விட்டதே என்று தோன்றியது மாலாவுக்கு.
பாட்டி திடீரென்று இடிஇடி என்று சிரித்தாள். தொடையைத் தட்டிக் கொண்டே சிரித்து விட்டு, "சும்மா உக்காரு. இன்னிக்கு லீவு", என்றாள்.
பாட்டி, தாத்தாவாகப் பிறந்திருக்க வேண்டியவள்.
**************************
அன்று இரவு பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.
"நீங்க ஏன் ஒரு நாளைக்கு இவ்வளவு முறை குளிக்குறீங்க?" என்று கேட்டாள் மாலா.
அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்து, "எவ்வளவு முறை?" என்று கேட்டான்.
"இன்னிக்கு மட்டும் ஒன்பது முறை."
அவன் யோசித்து, "ரவுண்டா பத்து முறை குளிச்சிட்டு வரேன்", என்றான்.
அவன் வேடிக்கைக்குச் சொல்கிறான் என்று நினைத்து அவள் சிரித்தாள். அவனோ மறுபடி குளியலறைக்குச் சென்றான். தண்ணீர் சளேர், சளேரென்று விழும் சத்தம் கேட்டதும் மாலாவுக்கு முதல் முறையாகக் கவலை எழுந்தது.
***************************
எல்லோரும் வட்டமாகத் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புது மணப்பெண் என்பதால் மாலா டி.விக்கு முதுகைக் காட்டுமாறு உட்கார வேண்டி இருந்தது. முதல் இரண்டு நாள் 'அண்ணாமலை'யைக் கழுத்தை வளைத்துத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கழுத்து வலித்தது.
பாட்டி டி.வியை விட்டுக் கண்ணே எடுக்கவில்லை. யாராவது பேசினால் அவர்களைப் பார்த்துக் கத்தினாள். எல்லோரும் பாட்டிக்குப் பயந்து பாத்திரங்களை ஸ்லோ மோஷனில் நகர்த்தினார்கள்.
விளம்பர இடைவேளை வந்ததும் பாட்டி கம்பீரமாக 'உம்' என்றாள்.
எல்லோரும் பேசத் தொடங்கினார்கள்.
"என்னடா..இன்னிக்கு ஆபீசுல என்ன ஆச்சு?" என்று கேட்டார் மாமனார்.
"ஆஃபீஸ் போலப்பா. லீவுல இருக்கேன்."
"ஓ.."
இதற்கு மேல் தந்தையும் மகனும் பேசிக் கொள்ள எதுவும் இல்லாமல் சும்மா இருந்தார்கள்.
பாட்டி மாலா மேல் கவனத்தைத் திருப்பி, "மாலா..எதுனா பேசு", என்றாள்.
மாலா தீவிரமாக யோசித்து, "வந்து..", என்று தொடங்கினாள்.
டி.வியில் மறுபடி சீரியல் தொடங்கியது. பாட்டி, "சும்மா கிட", என்றாள்.
அடுத்த விளம்பர இடைவேளைக்குள் பிரதாப் சாப்பிட்டு முடித்து விட்டு, "குளிக்கணும்", என்று கிளம்பினான்.
மாலா அவன் போன பிறகு, "ஏன் அடிக்கடி குளிக்கிறார்", என்று கேட்டாள்.
மாமனார் விட்டத்தைப் பார்த்தார். மாமியார் சாப்பாட்டைக் கவனித்தாள்.
பாட்டி, "ஏன்? உங்க வீட்டுல யாரும் குளிக்க மாட்டீங்களோ?" என்றாள்.
"இல்ல...இவ்வளவு முறை குளிக்கிறாரே..அதான்."
"அவன் தாத்தா மாதிரியே இருக்கான். அவரும் இப்பிடித் தான். ரொம்ப சுத்தம்."
மாலா சற்று நிதானித்து, "ஒரு வேள ஸைகலாஜிகல் பிராப்ளமோனு.." என்றாள்.
பாட்டி, "என்னாது அது?" என்றாள்.
"மனோதத்துவ நோய்", என்றார் மாமனார்.
"இன்னாடா சொல்ற?"
மாமியார் குறுக்கே புகுந்து, "உங்க பேரன மென்டலுன்றா", என்றாள்.
பாட்டி சிங்கம் போலத் தலையைத் திருப்பி மாலாவைப் பார்த்தாள்.
"யாரு மென்டல்?" என்று உரத்த குரலில் தொடங்கினாள்.
திடீரென்று பாட்டி, மாமியார் எல்லோரும் அமைதியானார்கள்.
சீரியல் தொடர்ந்தது. மாலாவுக்கு வயிற்றைக் கலக்கியது. இந்த உரையாடல் அவள் நினைத்ததைப் போலப் போகவில்லை. பாட்டி முகத்தை நோக்கினாள். இப்போது அதில் சாந்தம் தவழ்ந்தது. சீரியல் முடிந்த பின்னர் உயிருக்கு உத்தரவாதமில்லை.
******************************
பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில்
உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருந்தாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து, "கவலப்படாத..அண்ணாமலைக்கு ஒண்ணும் ஆகாது",
என்றான்.
இதைக் கேட்டு மாலா இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள்.
பிரதாப்புக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவள் அருகில் அமர்ந்து "பாட்டி எதுனா சொன்னாங்களா?" என்று கேட்டான்.
மாலா இல்லை என்று தலையாட்டினாள்.
அவன் அவளை மகிழ்விக்கும் நோக்கத்துடன், "ஹனிமூனுக்குப் போலனு வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசத்துல குத்தாலத்துல சீஸன். போயிட்டு சுகமா குளிச்சுட்டே இருக்கலாம்..", என்றான்.
மாலாவின் அழுகை அதிகமாயிற்று. "நீங்க ஏன் இவ்வளவு முறை
குளிக்குறீங்க?" என்றாள்.
"என்ன சொல்ற புரியல.."
"ஏன் குளிச்சிட்டே இருக்கீங்க?"
பிரதாப் மௌனமானான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பரிதாபமாக, "இந்த வெயில்ல இது ஒரு கேள்வியா?" என்றான்.
"எனக்குக் கவலையா இருக்கு. எதாவது டாக்டர் பாக்கலாமே."
"டாக்டரா? எதுக்கு? சுத்தமா இருந்தா தப்பா? எங்க தாத்தா கூட.."
"அவருக்கும் எதாவது ப்ராப்ளமோ என்னவோ.."
பிரதாப்புக்கு முதல் முறையாகக் கோபம் வந்தது. "யாருக்குப் ப்ராப்ளம்? உங்க பரம்பரையே பைத்தியம்", என்றான். மாலா மறுபடி அழத் தொடங்கினாள்.
பிரதாப் சற்று நேரம் சென்ற பின், "மாலா..இத பார். இப்பிடிப் பண்ணலாம். நாளைக்கு முழுசா குளிக்காம இருக்கேன். இருந்திட்டேன்னா டாக்டர் வேணாம்", என்றான்.
மாலா தலையாட்டினாள்.
********************************
மறுநாள் காலை பாட்டி கால் மேல் கால் போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராம ஜயம் எழுதிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டி வேலைக்காரியிடம், "வீட்டுக்கு மருமவ வந்தாச்சு..நீ அடுத்த மாசத்துல இருந்து வர வேண்டாம்", என்றாள்.
பிரதாப்பின் அம்மா அவனிடம், "குளிக்காம பல் தேய்க்குற?" என்று கேட்டாள்.
பிரதாப், "இன்னிக்குக் குளிக்கல", என்றான்.
சட்டென்று அறையில் அமைதி நிலவியது. வேலைக்காரி பெருக்குவதை நிறுத்தி விட்டாள். அம்மா கவலையுடன், "ஏண்டா? காய்ச்சலா?" என்றாள்.
"இல்லம்மா. சும்மா தான்."
பாட்டி, "மாலா எதாவது சொன்னாளா? மாலா..இங்க வாடி", என்றாள்.
மாலா நடுங்கிக் கொண்டே வந்தாள்.
"அவனக் குளிக்க வேண்டாம்னு சொன்னியா?"
"இல்ல பாட்டி."
"என்ன நொள்ள பாட்டி?!" என்றாள் பாட்டி.
பிரதாப்பின் அப்பா, "விடும்மா. தண்ணி மிச்சம்", என்றார்.
பாட்டி, "எவ்வளவு நேரம்னு பாப்போம். இவங்க தாத்தா இப்பிடித் தான். வீரமா குளிக்கலடினுவாரு. மதியத்துக்குள்ள சேர்ந்து குளிக்கலாம் வாடிம்பாரு", என்றாள்.
மதியம் நெருங்க நெருங்க பிரதாப்பிற்குத் தவிப்பாக இருந்தது. தலை இடிப்பது போல இருந்தது. சாப்பிட உட்கார்ந்தார்கள். பாட்டி இன்னும் மாலாவை முறைத்தவாறே இருந்தாள். "எங்க காலத்துல புருசனுக்குச் சரியா உக்கார்ந்து பேசக் கூட மாட்டோம்", என்றாள் உரத்து.
பிரதாப் எரிச்சலுடன், "பாட்டி..சும்மா இரு. உக்கார்ந்து பேசாமலே
எட்டு பிள்ள பெத்தாச்சுல்ல", என்றான்.
அவனுக்கு வியர்த்துக் கொட்டுவது போலிருந்தது. பெரும் பாலைவனத்தில் இருப்பதாகத் தோன்றியது. பாட்டி ஏதோ இன்னும் பேசிக் கொண்டிருந்தாள்.
மாலாவைப் பார்த்தான். அவள் மட்டும் நன்றாகக் குளித்துத் தலையில் பூ வைத்து இருந்தாள்.
சட்டென்று எழுந்தான். "நான் குளிக்கப் போறேன்", என்று விட்டு
விடுவிடுவென்று பாத்ரூமுக்குப் போனான்.
மாலாவுக்குக் கண்கள் கலங்கின.
********************************
மறு நாள் மாலை மாலாவும் பிரதாப்பும் நுங்கம்பாக்கதாதில் இருந்த ஒரு பிரபல மனோதத்துவ டாக்டரின் க்ளினிக்கில் அமர்ந்து இருந்தார்கள்.
பிரதாப் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் போய் விட்டு வர
எண்ணியிருந்தான். டாக்டரின் நுழைவு அறையில் இவ்வளவு பேர் அமர்ந்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட இருபது பேர் மடக்கு நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
பிரதாப்புக்குத் தெரிந்தவர்கள் யாராவது பார்த்து விட்டால் என்ன
செய்வது என்று கவலையாக இருந்தது. அப்படி யாராவது பார்த்தால் மாலாவுக்குத் தான் பிரச்னை என்று சொல்லி விடத் திட்டம் தீட்டி இருந்தான்.
சுற்றி இருந்த எல்லோரையும் உற்றுக் கவனித்தான். முதலில்
மனோதத்துவ டாக்டர் அறையில் எல்லோரும் உளறிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருப்பார்கள் என்று நினைத்திருந்தான். கிட்டத்தட்ட சோட்டாணிக்கரை பகவதி கோவில் போல இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தான். ஆனால் அறை அமைதியாக இருந்தது. யாரையும் பார்த்தால் மனநோய் கொண்டவர்கள் போல இல்லை. உண்மையில் ரிசப்ஷனிஸ்ட் மட்டுமே தலைவிரிகோலமாக கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பித்து வந்தவள் போல இருந்தாள்.
ஒவ்வொருவராக டாக்டர் அறைக்குள் போய் வந்தார்கள்.
வெளியே வரும் போது சிரித்துக் கொண்டே வந்தார்கள். பிரதாப்புக்குச் சற்றுத் தைரியம் பிறந்தது.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம், "உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?", என்று கேட்டான்.
அவர் முறைத்தார்.
மாலா அவனை இடித்து, "பைத்தியக்காரத்தனமாப் பேசாதீங்க",
என்றாள்.
இப்போது எல்லோரும் திரும்பி அவளை முறைத்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்துப் பக்கத்தில் இருந்தவர், "நான் எனக்காக வரல. ஒரு ஃபிரண்டுக்காக வந்தேன்", என்றார்.
"ஓகோ"
அவர் பிரதாப்பிடம், "உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?" என்று கேட்டார்.
"இல்ல..நானும் ஃபிரண்டுக்காகத் தான் வந்தேன்."
அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் திரும்பி, "இங்க
எல்லாருமே ஃபிரண்டுக்காகத் தான் வந்திருக்கோம்", என்றார்.
பிரதாப்பின் முறை வந்தது. இருவரும் டாக்டர் முன்னால்
உட்கார்ந்தார்கள்.
"என்ன விஷயம், சொல்லுங்க", என்றார் டாக்டர்.
மாலா, "இவர் ஒவ்வொரு நாளும் நிறைய முறை குளிக்கிறார்",
என்றாள்.
டாக்டர், "குணப்படுத்திரலாம்", என்றார்.
பிரதாப் அதிர்ச்சியுடன், "டாக்டர்..நான் சொல்றதக் கேளுங்க.
இதெல்லாம் ஒரு தப்பா..?" என்றான்.
"எவ்வளவு முறை குளிக்கிறீங்க?"
"பத்து முறை தான்."
"சின்ன வயசுல இருந்தா?"
"இல்ல டாக்டர். இருபது வயசுல இருந்து.."
"குளிக்காம இருக்க முடியல..இல்லியா?"
பிரதாப் இல்லை என்று தலையாட்டினான்.
"சில டெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு Obsessive Compulsive Disorder இருக்கலாம். கவலப்படாதீங்க. நான் குடுக்கிற மாத்திரை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்."
பிரதாப்புக்கு முகம் பேயறைந்தது போல ஆயிற்று.
டாக்டர் தொடர்ந்து, "நூத்துல அஞ்சாறு பேருக்கு வரது தான் இது. பரம்பரைல யாருக்காவது வந்தா உங்களுக்கும் வர ரிஸ்க் இருக்கு", என்றார்.
*******************************
மாலாவும் பிரதாப்பும் க்ளினிக்கை விட்டு வெளியே வந்தார்கள்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார்கள்.
பிரதாப் மௌனமாக நடந்தான். மாலா, "ஃபீஸ் இவ்வளவு கேப்பாங்க தெரியாது", என்றாள். அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. சாலை மஞ்சள் வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. அவன் தாண்டிப் போகும் வண்டிகளைப் பார்த்தவாறு வந்தான்.
மாலா அவன் கையைத் தொட்டு, "என் மேல கோபமா?" என்றாள்.
அவன் இல்லை என்று தலையாட்டினான்.
"கவலப்படாதீங்க..ஒரு மாசத்துலயே பலன் தெரியும்னாரே டாக்டர்."
அவன் சட்டென்று நின்றான். "நீ என்ன டைவர்ஸ் பண்ணிரு மாலா",என்றான்.
மாலா புன்னகையுடன், "அதுக்குள்ள போரடிக்குதா?" என்றாள்.
அவன் கண்களில் நீர் பளிச்சிட்டது. "டாக்டர் சொன்னாரு பாரு.
பரம்பரையா வரலாமாம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு", என்றான்.
மாலா, "வரலாம் தான சொன்னாரு. பிள்ளைங்கள குளிக்கவே விட மாட்டேன்..கவலப்படாதீங்க", என்று சிரித்தாள்.
"இல்ல மாலா..என்ன டைவர்ஸ் பண்ணிரு."
"முதல்ல சரியாப் போகட்டும். அப்புறம் டைவர்ஸ் தான்", என்றாள்.
இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
"பாட்டி கிட்ட சொல்லணுமா?" என்று கேட்டாள் மாலா.
"வேண்டாம். பெரிய ரகளையாயிடும்", என்றான் அவன்.
**********************
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலை வீட்டுக்குள்
பிரதாப்பும் மாலாவும் வந்த போது பாட்டி, அம்மா, அப்பா மூவரும்
ஒரே சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று தெரிந்தது.
அப்பா, "ஏண்டா..எதோ டாக்டர் கிட்ட போறியாமே?" என்றார்.
பிரதாப், "இல்லியே", என்றான்.
அம்மா விசும்பலுடன், "ஐயோ..பொய் வேற சொல்றானே", என்றாள்.
"நுங்கம்பாக்கத்துல நீ ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போன போது எங்க ஆஃபீஸ் சுப்பிரமணி பார்த்திட்டான்."
பிரதாப் கவலையுடன், "அவர் அங்க எதுக்கு வந்தாராம்", என்று கேட்டான்.
"எதோ ஃபிரண்டுக்காகப் போனானாம். நீ ஏண்டா பைத்தியக்கார
டாக்டரெல்லாம் பாக்குற?"
பிரதாப், "மாலாவுக்கு தொண்ட கட்டு. அதான் போனோம்", என்றான்.
"ஏண்டா பொய் சொல்ற?"
பாட்டி, "ஏ மாலா..இங்க வாடி. டாக்டராண்ட போனீங்களா?" என்றாள்.
மாலா தயக்கத்துடன், "ஆமாம்", என்றாள்.
"எதுக்கு?"
"இவருக்குத் தான்."
அம்மா மாலாவை முறைத்தாள்.
பாட்டி எழுந்து நின்றாள். தன் இரும்பு போன்ற கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தாள். "அதான் இவன் கொஞ்ச நாளா கம்மியாக் குளிக்கிறானா?" என்று கேட்டாள்.
"ஆமாம் பாட்டி."
அம்மா, "அடிப் பாவி..எம் புள்ளயப் பைத்தியமாவே ஆக்கிட்டீங்களே", என்றாள்.
"தா..சும்மா கிட", என்றாள் பாட்டி.
தொடர்ந்து, "இவன் தாத்தாவும் அந்தக் காலத்துல எல்லா டாக்டரும் பாத்தாரு. அப்பல்லாம் மாத்திரை ஒண்ணுமில்லை. இப்ப இருக்கு. நல்லதாப் போச்சு", என்றாள்.
பாட்டி தங்கள் பக்கம் பேசியதும் பிரதாப்புக்கும் தைரியம் பிறந்தது.
"அம்மா, சும்மா பைத்தியம் அது இதுனாத. அங்க வர எல்லாரும் ரொம்ப டீஸன்ட். நீ வேணா வந்து பாரேன். ஜாலியா இருக்கும்", என்றான்.
மாலாவும் அவனும் அறைக்குள் சென்றார்கள். கதவைச் சார்த்தி விட்டு பிரதாப் அவளிடம் திரும்பினான். "பாட்டி வாழ்க", என்றான்.
"மெதுவாப் பேசுங்க."
அவன் அவளை நெருங்கி வந்து அணைத்தவாறு, "டைவர்ஸ் பண்ணலாமா?" என்றான்.
அவள் முகத்தைச் சுளித்தவாறு ஒரு எட்டுப் பின்னால் போனாள்.
"இப்பல்லாம் குளிக்கிறதே இல்லையா? போய்க் குளிச்சிட்டு வாங்க."
***********************************************************
My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல்
.