Sunday, July 03, 2016

உயிர் - 1995 Kalki Second Prize winning Short story


உயிர்
-------------------------------------------------------------------------------------------------------
     - ராமையா அரியா

மனதைச் சுண்டி இழுக்கும் ஓலத்தைக் கேட்டு அலமந்து போய் நிமிர்ந்து உட்கார்ந்தான் சித்தார்த்தன். மனம் மறுநாளுக்குப் போட்ட கணக்குகளைத் தப்பி, பிரசவ வார்டில் இருக்கும் மனைவியின் மேல் குவிந்தது. அவன் திடுக்கிட்டதைப் பார்த்து எதிர் பென்ச் மாமி, "இப்போ தான் தொடங்கியே இருக்கு," என்றாள். கணவனிடம் சொல்லி விட்டு சித்து கவனிக்கிறானா என்று பார்த்தாள்.
ஹர்யான்விகளுக்கு மத்தியில் சண்டிகாரின் ஒரு பிரபலமான, பணக்காரத்தனமான தனியார் மருத்துவமனையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் இந்த சித்து ஒரு தமிழன் தான்.
ஐந்து வயதில் அனாதையான இந்த சித்துவிற்கு ஹரியானாவில் தமிழ் மனைவி வாய்த்தது அதிர்ஷ்டம் தான்.
ஐந்து வயதில் இருந்து உறவினர் தயவை எதிர்பார்த்து, முட்டி மோதி மேலே படித்து நாயாய் அலைந்து லோன் வாங்கி, கடை வைத்து சகலத்துக்கும் சண்டை போட்டுச் சலித்த வாழ்வில், என்ன விபரீதம் நடக்குமோ என்று பயந்து, காதலியைப் பெண் கேட்கப் போன இடத்தில், "சித்தார்த்! நீங்க எந்த ஜாதின்னு எல்லாம் நாங்க கவலைப்படலை. எங்க பேமிலி கொஞ்சம் முற்போக்கு. நீங்க இப்ப ஒரு ஸ்டோர் வைச்சு நடத்தறீங்க. உங்களுக்கு இருக்கிற திறமைக்கு பின்னால பெரிய பிசினஸ்மேன் ஆயிடுவீங்க. கல்யாணத்துக்கு எங்களுக்குச் சம்மதம்," என்ற பஞ்சாபகேசன், இவன் மாமனார்.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சித்துவிற்குச் சிரிப்பு வந்தது. மாமா நம்பியது வீண் போகவில்லை. ஒரு ஸ்டோரில் இருந்து, பல ஸ்டோர்கள் சண்டிகார் முழுதும், ஹரியானா முழுதும், இந்தியா முழுதும் என்று அவர் போட்ட கனக்குத் தான் தப்பியது. கவர்மெண்ட் வேலையில், கிளார்க்காக இருக்கும் மாமாக்களுக்கு ஒரு பிசினஸ் துறையில் இருந்து மற்றொன்றுக்குத் தாவுவது என்பது விபரீதமாகத் தோன்றுகிறது. இவ்வளவு சீக்கிரம் பெண்டாட்டியின் முதல் பிரசவத்தை இந்த மேன்மையான தனியார் மருத்துவமனையில் நடத்துமளவு தான் உயர்ந்ததற்குக் காரணம், தன்னுடைய பிசினஸ் மாற்றமே என்று உறுதியாக நம்பினான் சித்து. அவன் மாமா அப்படி நினைக்கவில்லை. அதனால் தான் எதிர் பெஞ்சில் உட்கார்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது அலறல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, சிந்துவின் முகம் வெளிறியது. அருகில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சர்தார்ஜி,"சில பேரால இந்தச் சத்தத்தைப் பொறுக்க முடியாது. ரொம்ப மென்மையான மனசு," என்று பஞ்சாபியில் தான் பக்கம் இருந்த மகனுக்கு விளக்கம் கொடுத்தார்.
நர்ஸ் ஒருத்தி சிந்துவின் கலவர முகத்தைப் பார்த்து அருகில் வந்து,"எல்லாம் நல்லா நடக்கும். கவலைப்படாதீர்கள்," என்றால் ஹிந்தியில்.
சித்து எழுந்து வெளியே வந்தான். முதல் மாடியில் இருந்து இருந்த உலகத்தைப் பார்த்துச் சோம்பல் முறித்தான். சற்று மனம் சாந்தமாக இருந்தது. கரம்சந்த் நினைவுக்கு வந்தான்.

*

"சித்து, நீ எனக்குத் தம்பி மாதிரி. அதான் இந்த பிளான் உன்கிட்ட எடுத்துட்டு வரேன். உன்னை விட எனக்கு நம்பகமான ஆள் வேறு யார் உண்டு?"
"சொல்லுங்க அண்ணே."
"நம்ம ரத்தன் சேட் தெரியுமில்ல.அந்தாள் பேமிலியோட குஜராத் போறான். இங்க பிசினஸ் பிடிக்கலையாம். சொத்து வேற நிறைய இருக்கு. குஜராத் போய் வேற பிசினஸ் பிடிக்கப் போறானாம். இங்க லோக்கல்ல அவன் ப்ராஜக்டை நம்மளுக்குக் குடுக்க அவன் ரெடி. முழுசா நானே பாத்துக்கறதுக்குப் பதில் உன்னையும் சேத்துக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்ற?"
கரம்சந்த் பெரிய புள்ளி. அவனே பார்ட்னர்ஷிப் அழைப்பது பெரிய கௌரவம் என்று கனக்குப் போட்டான் சித்து.
"என்ன பிசினஸ்?"

*

கேரள-தமிழக எல்லையில் பாலக்காடு ரோடில் சூரியன் உதயமாகும் நேரம் நின்று கிழக்கே பார்த்தால், ஐந்து, ஆறாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, உணவும், நீருமின்றி எலும்புகள் தெரிய இருந்த, உயிரற்ற கண்களுடன் நடக்கும் துயர மூட்டைகளை அடிமாடுகள் என்பார்கள். நாட்டின் பல பகுதிகளில் இவற்றை லாரிகளில் ஏற்றி கசாப்புக்கு அனுப்புவார்கள்.
"இங்க லோக்கல்ல மாடு வாங்கி, அங்க கசாப்புக்கு அனுப்பணும். இங்க இருந்து பெங்கால் போகும். நம்ம இடையில. நான் சின்ன வயசுல கொஞ்ச நாள் இந்த வேலை பாத்திருக்கேன். புத்திசாலித்தனம் இருந்தா நிறைய லாபம். ஹரியானால பசு வதைத்த தடுப்பு வேற வரப்  போவுது. நல்ல சமயம் இது. இந்த ஹரியான்வி முட்டாப் பசங்களை ஏமாத்த உன்னோட மதராஸி மூளையும், என்னோட குஜராத்தி மூளையும் போதும்."
சேட் எல்லாம் ரெடியாக வைத்திருந்ததால் எளிதில் எடுத்துக் கொண்டார்கள்.
அதன் பயன் தான் இந்த வசதி என்று நினைத்தான் சித்து. வாரிசு உருவாகிறது என்றதும் தன்னுடைய சிறு வயது நினைவுகள் மனதுள் சலசலப்பது தனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்கும் பொதுவா? சித்து திரும்பி வார்டுக்கு வந்தான்.
எல்லோரும் கொஞ்சம் கவலையாக இருப்பது போல் பட்டது. அவனைக் கவலையோடு பார்க்க, பழைய இடத்தில் வந்து அமர்ந்ததும் மாமா முனகத் தொடங்கினார். அந்த நர்ஸ் அவனைத் தாண்டிப் போக, "என்ன ஆச்சு?" அவள் பதில் சொல்லாமல் போனாள். பக்கத்தில் சர்தார்ஜி, "ஏதோ சின்னப் பிரச்சினை. பயப்பட வேண்டாம்," என்றார். மாமாவின் முனங்கல் சத்தம் அதிகமானது. சித்து தரையைப் பார்த்துக் குனிந்து உட்கார்ந்தான்.

*

புது பிசினஸ் பற்றி முதலில் மனைவியிடம் சொன்ன போது அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவள் சொன்னாள்: "ஏங்க, வேற தொழிலே அகப்படலியா? ஏன் இதைப் போய்?"
"நீ வேற வியாபாரம் வேண்டாம்னு சொல்லப் போறன்னு பாத்தா...," என்று அவன் சிரித்தான். "பிஸினஸ்ல நல்லது கேட்டது கிடையாதும்மா. மத்த மனுஷனுக்குத் தொந்தரவில்லாம செய்றதே பெரிசு. அத்தோட, எப்படியும் கசாப்புக்குப் போற  மாட்டை நாங்க வாங்கி, விக்கிறோம். அவ்வளவு தான். நாங்களா மாட்ட வெட்டப் போறோம்? சீக்கிரம் நிறைய பணம் பாக்கலாம்."
"எங்க அப்பா கிட்ட சொல்லிப் பாருங்க."
அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது.
அடிமாட்டு வியாபாரத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. பேரம் பேசி ஏரியாவில் மாடு விற்பவர்களிடம் மாடுகளை மொத்தமாக வாங்குவது. பிறகு பெங்காலில் உள்ள கசாப்பு சென்டருக்கு மாடுகளை ட்ரக்குகளில் ஏற்றி அனுப்புவது. ட்ரான்ஸ்போர்ட் மைதானம் போன முதல் நாள் நினைவு வந்தது. ரத்தன் சேட்டின் பழைய ஆட்கள் மாடுகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கரம்சந்த்  அவர்கள் வேலையைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு கத்தினான்.
"ஹலோ, யாருய்யா அது வண்டிய லோட் பண்றது?"
பழைய ஆட்கள் நின்று பார்த்தார்கள்.
"ஏய்யா, இவ்வளவு இடம் இருக்கு உள்ள. இன்னும் மாடு ஏத்துய்யா. மேல ரெண்டு ட்ரிப் போகணுமா?"
கொஞ்சம் சுமாராக உடுத்தி சூப்பர்வைசர் போல இருந்தவன் முன்னால்  வந்தான். "சார், லைவ்ஸ்டாக் ட்ரான்ஸ்போர்ட் ஆக்ட்படி, இவ்வளவு மாடு தான் இந்த சைஸ் ட்ரக்கில் ஏத்தலாம்னு..."
கரம்சந்த் அவனை முறைத்தான். பிறகு சித்துவைத் தனியே அழைத்துப் போய், "சித்து, இவங்க சரியில்லை. நான் இவங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, புது ஆளுங்க அனுப்பி வைக்கறேன்."
மறு நாள் ஆறு பேர் வந்தார்கள். ட்ரக்கில் இருந்த தடுப்புகள், மாடு சாப்பிட உள்ள சட்டிகள் என்று எல்லாவற்றையும் களைந்தார்கள். பிறகு மாடுகளை ஏற்றத் தொடங்கினார்கள். சித்து அவர்களை ஒருவிதமான கவர்ச்சியால் உந்தப்பட்டு, கண்கொட்டாமல் பார்க்க, முன்பு முப்பது மாடுகள் இருந்த இடத்தில் எண்பது மாடுகளை அடைத்து, அவை அசையக் கூடா வண்ணம் இருக்க ட்ரக்கின் பின்புறக் கதவை அறைந்து மூடினார்கள். அடைக்க முடியவில்லை.  கதவுடன் சற்றுப் போராடிய ஒருவன் கோபத்துடன் கதவைத் திறந்தான். அவர்கள் மத்தியில் தடிப்பாக இருந்தவன் சற்று எக்கி, மிக எளிதாக மாட்டின் முன்காலை முறித்தான். பின்காலையும் முறித்து, வளைத்து உள்ளே தள்ளி, ட்ரக் கதவை மூடி...

*

சித்து தலையை உலுக்கிக் கொண்டான். அது இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் நினைவு வருகிறது என்று அலுத்துக் கொண்டான். மாமாவின் முனகல் தாங்க முடியவில்லை. மீண்டும் வெளியே வந்து நின்றான்.
கரம்சந்திடம், "ட்ரான்ஸ்போர்ட் சைடு இன்னும் கொஞ்ச நாள் பாத்துக்கறேன். அதுல நிறைய விஷயம் இருக்கு. தெரிஞ்சுக்கணும்," என்றான்.
"அப்பப்ப ஏதாவது சிக்கலாச்சுன்னா உன்னைக் கூப்பிட்டு விடறேன்."
சிறிது காலத்திலேயே மாடுகளை அடைப்பதில் சித்து திறமைசாலியானான். அவனே அவ்வப்பொழுது வேலையில் இறங்கினான். "இன்னும் ரெண்டு இருக்கே, என்ன பண்றது?" என்ற வேலையாளைக் கெட்ட வார்த்தையால் திட்டி, அவன் உதவியுடன் அவற்றைக் கை, கால்களைக் கட்டி நிற்க இடமின்றி அடைந்த மாடுகளின் மேலே மூட்டை போலத்  தூக்கிப் போட்டான். ட்ரக்கின் விளிம்பில் நின்றவாறே உள்ளே திருப்தியுடன் பார்க்கும் போது அது நடந்தது. பெரிய மாட்டின் பக்கலில் இருந்த சிறியது உடல் மரத்து, எந்தப் பாகமும் அசைக்க இயலாமல், கழுத்தைச் சட்டென்று திருப்ப, அதன் கூரான கொம்பு பெரிய மாட்டின் கண்ணுக்குள் குத்திக் கிழித்து...

*

தலையை மறுபடி மறுபடி, அப்படியும் இப்படியும் ஆட்டினான் சித்து. இப்போது மனைவியின் பிரசவத்தை விடப் புது  பயம் பிடித்துக் கொண்டது. முன்னெப்போதும் இல்லாமல் இந்த நினைவுகள் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி வந்து அம்முகின்றன? ஆனால் அவை விடவில்லை. அவன் உத்தரவை எதிர் கொள்ளவில்லை. கலங்கி அடித்துக் கருப்பு வெள்ளமாகப் பெருக்கெடுத்தன.
லோடிங் முடிந்து ஓய்வாக ஒரு நாள் ஆட்களுடன் உட்கார்ந்து டீ குடித்த போது ஒருவன் சொன்னான்.: "சார், ஆனா நீங்க பெரிய ஆள். உங்கள மாதிரி யாரும் லோடிங் பண்ணி நான் பார்த்ததில்லை. செம வேலை."
சித்து பெருமையாகச் சிரித்துக் கொண்டான். "இது ஒரு சவால் மாதிரி இருக்கா. அதான் எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட்."
மனம் ஏன் குழம்புகிறது என்று வெளியே தெரிந்த டீக்கடைக்குக் கிளம்பும் போது விடை கிடைத்தது. தன் மாமனாரை நினைத்துப் பல்கலைக் கடித்தான்.
மனைவி கர்ப்பிணி என்று தெரிந்த முதல் சில உற்சாகமான நாட்களில் ஒரு நாள் வீட்டினுள் நுழையும் போது மாமனார் வந்திருப்பதைப் பார்த்தான்.
"வாங்க மாமா! கங்கிராட்ஸ்! நீங்க தாத்தாவாகப் போறீங்க."
"எனக்கு ஏற்கனவே ரெண்டு பேரப்  பிள்ளைங்க இருக்கு சித்து. உனக்கு நான் தான் கங்கிராட்ஸ் சொல்லணும்."
பேச்சு எங்கெங்கோ சென்ற போதும், கடைசியில் மாமா, "உன்னோட பிசினஸ் அவ்வளவு நல்ல தொழில் இல்லை சித்து."
"ஏன் மாமா, இவ உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா?"
"அவ எதுவும் சொல்ல வேண்டாம். நான் 'எஸ்.பி.ஸி.ஏ.'ல இருக்கேன். நான் சொல்றதைக் கேளு. உங்க பிசினஸ் எங்களோட கண்காணிப்புல இருக்கு. ரொம்பக் கொடுமை அது. வேற ஏதாவது பண்ணேன்?"
லேசாகக் கிளர்ந்தெழுந்த கோபத்துடன் சித்து அவரைப் பார்த்தான். "சட்டப்படி நாங்க மாடு ட்ரான்ஸ்போர்ட் பண்றதுல தப்பு எதுவும் இல்லை."
"யார் சொன்னது? நீங்க மாடுகளைக் கொடுமையா நடத்தறீங்க. ட்ரக்ல மாட்டுக்குச் சாப்பாடு வைக்கிறீங்களா?"
சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர், " சித்து, உங்க ட்ரக் நம்பரை நான் போலீசுக்குப் போன் போட்டுச் சொன்னா போதும். பிடிச்சு வச்சுடுவாங்க, தெரியுமா?"
"சும்மா மிரட்டாதீங்க. நாங்க மட்டும் தான் இதச் செய்யுறோமா, என்ன. உங்களால ஆனதைப் பாருங்க."
பஞ்சாபகேசன் எழுந்து போகும் போது, "உனக்கு முன்னாடி இங்க இருந்த  ரத்தன் சேட் ஏன் வித்துட்டுப் போனான்னு தெரியுமா? பசுவைத் துன்புறுத்தினா பாவம்; வம்சத்தையே அழிச்சிடும்," என்றார்.
மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்த சித்து, அவளது வெளுப்பான முகம் இன்னும் வெளிறுவதைக் கவனித்தான்.

*

சூடான டீ உள்ளே இறங்கினால் மனசு லேசாகும் என்று எதிர்பார்த்துக் கடையில் உட்கார்ந்த பொழுது, மனப்பாறையின் உள்ளே, ஒரு கரிய பிளவில் இருந்து  வெளிப்பட்டு நீந்தி மேலே வந்த வண்ணம், வேண்டாம், வேண்டாம் என்று அமுக்க, மேலே எதிர் கொண்டு எழும்பி அவன் கண் முன்னே மிதந்து வந்து நிலை பெற்றது.
கைகால் பதற திரும்பி மருத்துவமனைக்குள் வந்தான் சித்து. மாமியின் கண்களில் நீர். "ஈசுவரா," என்று புலம்பிக் கொண்டிருந்தாள். மாமா அவனைப் பார்த்து முனங்கவில்லை. அவர் முகம் இருண்டிருந்தது. விபரீதமாக அறைக்குள் இருந்து கிளம்பிய சப்தம் சகிக்காமல் அருகில் இருந்த தூண் மேல் சாய்ந்து, கண் மூடி...யாரை வேண்டுவது, என்னவென்று வேண்டுவது?
வீட்டுக்குக் கிளம்புமுன் கடைசி லோடுக்கு வேண்டியது எல்லாம் செய்து விட்டுப் பார்வையிடும் போது, ஒருவன், சற்றுப் புதியவன், அழைத்தான்.
"ஸாப், கதவு மூடவில்லை."
"காலை ஒடிப்பது தானே, முட்டாள்!"
"இல்லை ஸாப், அந்த மாடு..."
சிறிது அருகில் போய்ப் பார்த்த மாடு சினைப் பசு. "எந்த மடையன் இதைப் போய் வித்தது..." என்று முனங்கிய சித்து, "என்ன இருந்தாலும் சாகத்  தானே போகுது. காலை ஓடி," என்றான். தயங்கியவாறே ட்ரக்கின் உள்ளே ஏறியவனை யோசனையுடன் பார்த்துப் பிறகு, "இரு. நீ இறங்கு," என்று மேலே  ஏறி வேலையை முடித்து திரும்பி நடந்து மைதான எல்லைக்கு வரும் போது மனைவி நிற்பதைப் பார்த்தான்.
நர்ஸ் ஒருத்தி ஓடும் சத்தத்தால் திடுக்கிட்டு விழித்துப் பார்த்த போது கண்கள் பனித்திருப்பதை உணர்ந்தான். மீண்டும் தூங்கிப் போக...
கை, கால்கள் வளைந்து இருந்தன அவன் குழந்தைக்கு. வில் போன்று வளைந்த கால்களைப் பார்த்து விட்டு மேலே, முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடித்து, யாரோ தலையைப் பின்னால் இருந்து அழுத்த, குழந்தையின் முகத்தைப் பார்த்துக் குனிந்து, அதன் கண்ணைப் பார்த்து, ஐயோ! அந்தக் கண்...

*

"சித்து! சித்து!"
யாரோ எழுப்புவது உணர்ந்து, கனவு என்று தெளிந்து கண் திறந்தால் மாமா! "வா, உன் பெண்ணை வந்து பாரு," என்று இழுத்தார். வார்த்தை விபரீதமாய் அர்த்தம் செய்து கொண்டு முன்னே சென்று பயத்துடன் அவள் படுக்கையருகே போய்ப் பார்த்தான். பக்கத்தில் அலறி அழும் குழந்தையுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவன் அருமைப் பெண்டாட்டி.

*********************************************************************************

Trotsky Marudhu's Drawing for this short story is below: