முதலில் நடந்த பிளாட் சந்திப்பில் எல்லோரும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தார்கள்.
பிறகு பிளாட் சங்கத்தின் விதிமுறைகள் பேசும் போது ஒரு சிறு தகராறு.
“நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வைத்துக் கொள்ளக் கூடாது,” என்று ஷரத்து 13.2 கூறியது.
“அது எப்படி நாம சொல்ல முடியும்,” என்றேன் நான். “மத்தவங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு தான் சொல்லலாம்.”
கூட்டத்தை நடத்திய பாலா, “நாய் குரைக்கும்,” என்றார். பிறர் அவரை ஆமோதித்தனர்.
(சில நாள் கழித்து ஒரு நாள் பாலாவைக் கீழே பார்த்தேன். ஒரு வகை எலியை அவர் வளர்த்து வந்தார். அது எங்கோ ஓடிப் போய் விட்டது, என்று தேடிக் கொண்டிருந்தார்.)
“ஏற்கனவே நாய் வச்சிருந்தா?” என்றேன்.
எல்லோரும் என்னை அப்போது சந்தேகத்துடன் பார்த்தனர்.
“நீங்க வச்சிருக்கீங்களா?” என்றார் சாவித்ரி என்று ஒரு பெண்மணி.
“இல்லை.”
“அப்புறம் எதுக்கு…?” என்று இழுத்தார்.
இந்தக் கேள்வி மறுபடி, மறுபடி வந்தது. பிளாட்டில் என்னைக் குறித்து ஏதோ ஒரு ஐயம் இருந்தது.
ஒரு வருடம் சென்ற பின் பூகம்பம் வெடித்தது.
*
பிளாட்டின் கீழே சில அறைகள் இருந்தன. அவை பூட்டியே கிடக்கும். அவ்வப்போது சில உரிமையாளர்கள் மட்டும் அவற்றில் கட்டில், நாற்காலி, ஏ.சி என்று வைத்திருந்தார்கள்.
விசாரித்ததில் இந்த அறைகளை மட்டும் சில பிளாட் சொந்தக்காரர்களுக்கு கட்டுமான கம்பெனி முறைகேடாக விற்றிருந்தது தெரிய வந்தது.
இதைக் குறித்துப் பேச பாலா அவர் வீட்டிற்கு பலரை அழைத்தார். போனால் அவர் வீட்டெதிரே இருந்த பாதையில் பெரிய வேலி கட்டி இருந்தார்.
நான் அவரிடம், “இது என்ன?” என்று கேட்டேன்.
“பில்டர் கிட்ட வாங்கிட்டேன்,” என்றார்.
பிறர் அந்த வேலியின் அழகைக் குறித்துப் பேசினார்கள். எல்லோர் முகத்திலும் பாலாவைக் குறித்த ஒரு பிரமிப்பு தெரிந்தது.
உள்ளே, பாலாவின் வீட்டில் எங்கள் சந்திப்பு தொடங்கியது.
“ஏற்கனவே அந்த ரூமை எல்லாம் வாங்கிட்டாங்க. இதுக்கு மேல நாம விட்டுற வேண்டியது தான்,” என்றார் பாலா.
பலரும் இதை ஆமோதித்தனர்.
“Live and let live,” என்றார் சாவித்ரி.
“General Body meeting வருது. நாம் எல்லாரும் சேர்ந்து இருக்கணும்,” என்றார் பாலா.
நான், “ஆனா பில்டருக்கு இந்த ஏரியாவை விக்க உரிமை கிடையாதே,” என்றேன்.
எல்லோரும் என்னைத் திரும்பி பார்த்தார்கள். “யாரு? யாரு?” என்று பேசிக் கொண்டார்கள்.
சாவித்ரி, “நாய் வச்சுக்கணும்னு கேட்டாரே, அவர் தான்,” என்றார்.
“பில்டருடைய தர்மம் அது,” என்றார் பாலா.
“அவனும் காசு பாக்கணுமே,” என்றார் மற்றொருவர்.
“இல்ல, இதை நான் கட்டாயம் மீட்டிங்கில் எதிர்ப்பேன்,” என்றேன் நான்.
சாவித்ரி, புரியாமல், ”நீங்க ஏன் இதுல இவ்வளவு ஆர்வத்தோட?” என்றார்.
“பில்டர் மேல ஏதாவது பகையா?” என்றார் பாலா.
“எனக்கு பில்டர் தெரியவே தெரியாது,” என்றேன் நான்.
“அப்புறம்?”
*
பாலாவின் வீட்டில் இருந்து வந்து வாட்ஸாப்பில் இது குறித்த விவாதம் நடந்த போது, நான் மறுபடி, “அது பொது நிலம். அதை விக்க பில்டருக்கு உரிமை கிடையாது,” என்றேன்.
பாலா, “இதுக்கு மேல எல்லோரையும் சேர்க்க நான் ஒண்ணும் பண்ண முடியாது. I will leave,” என்றார்.
உடனே பெரும் ஓலம் வாட்ஸாப்பில் தொடங்கியது.
“நம்ம ஊர்ல ஒண்ணு சேரவே விட மாட்டாங்களே,” என்றார் ஒருவர்.
“இதை மாதிரி எப்போதும் ஒரு பிரகிருதி வந்து பிரச்சினை பண்ணும்.”
சாவித்ரி நீண்ட நேரம் வாட்சப்பில் டைப் செய்தார். பிறகு,”Blackmail,” என்று அனுப்பினார்.
என்னால் இரவு தூங்க முடியவில்லை. மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
“யாரும் என் கூட பேச மாட்டேன்றாங்க,” என்றாள் அவள்.
“ஏன் இப்படி பெர்சனலா தாக்குறாங்கன்னு தெரியலை. நான் ஒரு principled stand எடுக்குறேன்னு கூடத் தெரியலை,” என்றேன்.
“உனக்கு நிஜமாவே தெரியலையா?” என்றாள் அவள்.
“இல்லை.”
“சரி, மீட்டிங் வருதுல்ல? அதுல நான் சொல்றதைப் போய் சொல்லு,” என்றாள்.
*
மீட்டிங்குக்கு நடுங்கி கொண்டே சென்றேன். நான் உள்ளே நுழைந்தவுடன் எல்லோரும் பேசுவதை நிறுத்தி விட்டு என்னையே பார்த்தார்கள்.
சிறிது நேரத்தில் பாலா வந்தார். என்னை பார்த்து பெரிதாக கும்பிடு போட்டார். எல்லோரும் சிரித்தார்கள்.
“சில பேர் கீழ பார்க்கிங்ல ரூம் வாங்கிட்டாங்க. நாம் எல்லாரும் சேர்ந்து அத CMDAல போய் சீராக்கிடலாம்,” என்றார் பாலா.
“பாலா, நீங்க மத்தவங்கள விடுங்க. மெஜாரிட்டி நம்ம தான். எங்க கையெழுத்து போடணும்னு சொல்லுங்க.”
“மெஜாரிட்டி பத்தாதே. எல்லாரும் நூறு சதவிகிதம் ஒத்துக்கணும்.”
“என்ன நான்சென்ஸ் இது? இதுனால தான் இந்த நாடே குட்டிச்சுவரா போகுது.”
“உங்களுக்கு என்ன தான் சார் வேணும்?” என்று கத்தினார் சாவித்ரி, என்னைப் பார்த்து.
நான் இது போல ஒரு கோபத்தை அலுவலகத்தில் கூட சந்தித்ததில்லை என்பதால் திருதிருவென்று விழித்தேன்.
“சார், வெளிய தான் லஞ்சமும் ஊழலும். உள்ள நம்மளாவது சுத்தமா இருக்கலாம்ல?” என்றேன்.
நான் எதிர்பாராதபடி இதற்கு இன்னும் கோபம் அதிகமாகியது!
“பெரிய காந்தி வந்துட்டாரு,” என்றார் ஒருவர்.
“இப்படி பாத்தா யாரும் வீடே வாங்க முடியாது,” என்றார் பாலா.
நான் அவரை உற்றுப் பார்த்தேன். நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே நம்புகிறாரா?
மெதுவாக எழுந்து நின்றேன். இவர்கள் எல்லோருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
“இவ்வளவு பேசுறாரே பாலா சார். அவர் வீட்டு முன்னால உள்ள ஏரியாவுல வேலி போட்டிருக்கார்.”
ஒரு கண அமைதி.
“அதைப் பத்தி உனக்கு என்ன?” என்று ஒரு குரல் கேட்டது.
சாவித்ரி தான் அது.
“I cannot take these personal attacks,” என்றார் பாலா.
“உனக்கு என்ன தாம்பா பிரச்சினை?” என்றார் மற்றொருவர்.
சிலர் பாலாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து அமர்த்தினார்கள்.
*
“இந்த மாதிரி decorum இல்லாம நடந்துக்கறவங்களுக்கெல்லாம் நல்ல முடிவே வராது,” என்றார் சாவித்ரி.
மேலே சாபங்கள் வருவதற்குள் நான் என் மனைவி சொன்னதை நினைவு கூர்ந்தேன்.
“ஒரு நிமிஷம்,” என்றேன்.
“What more damage can you do?” என்று கத்தினார் ஒருவர்.
“இருங்கோ. என்ன தான் சொல்றான் பாக்கலாம்.”
“என் வீட்டு எதிரையும் இதே மாதிரி ஏரியா இருக்கு,” என்றேன். “அங்க நான் வேலி போடலாம்னா எனக்கு ஓகே.”
சற்று நேர அமைதி. எனக்கு கூனிக் குறுகியது. எந்த அளவுக்கு தாழ்ந்து போய் விட்டேன்?
“பிள்ளையாண்டான் சரியா தான் சொல்றான்!” என்று ஒரு குரல் கேட்டது.
அது சாவித்ரி தான்.