நமசிவாயம் பணக்கார காப்பி கடையில் மாடியில் அமர்ந்திருந்தார். கீழே ஒரே கூட்டம். டீலிங் பேச மாடி தான் சரியான இடம்.
எதிரே இருந்த விபூதி பட்டை ஆடிட்டர் மவுனமாக காகிதங்களை பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வெள்ளைச்சட்டை அணிந்த கட்சி எடுபிடி.
“என்கிட்டே முதல்லயே வந்திருக்கலாமே. கரெக்ட்டா செட்டப் பண்ணிருப்பேன்,” என்றார் ஆடிட்டர்.
“இப்பிடிக் கேள்விப்பட்டு தான் சேஷாத்திரி கிட்ட போனோம்.”
“அவன் ஒரு அசடு,” என்றார் ஆடிட்டர்.
நமசிவாயம் எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் பொதுவாக அதிகம் பேச மாட்டார் - இதனாலேயே சென்ற அதிமுக ஆட்சியில் பெரிய இடத்திற்குப் போனவர்.
ஆட்சி மாறியவுடன், முதல் வேலையாக எல்லோர் மேலும் அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக கேஸ் போட்டார்கள். நமசிவாயம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பவர் தான். ஆனாலும் தற்போது ஆடிட்டர் வேறு கருத்துச் சொன்னார்.
“கஷ்டம் தான். பாக்குறேன்,” என்றார் ஆடிட்டர். எழுந்து கொண்டார்.
“நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்,” என்றார் நமசிவாயம்.
அவர் கண்கள் கீழே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு இளைஞன் கையில் ஒரு சிறு பேனா வைத்திருந்தான். அவர் பார்க்கும் போது அவ்வப்போது பேனாவை எடுத்து பக்கவாட்டில் வைத்துக் கொண்டான். பிறகு எடுத்து பேனாவின் அடியைத் திறந்தான்.
நமசிவாயம் உற்றுப் பார்த்தார். பையன் கையில் சிறு சிப் இருந்தது.
ஒட்டுக் கேட்கும் பேனா!
அவருக்கு லேசாக நடுங்கியது. தம்மை ஒட்டுக் கேட்கத் தான் வந்தானா? ஏதாவது வெளிப்படையாக பேசி விட்டோமா?
ஆனால் வாசலில் பெரிய வெள்ளை கார் வந்து நின்றது. திமுக கொடி போட்டிருந்தது.
இளைஞன் பேனாவை மூடி விட்டுக் கம்மென்று இருந்தான். ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டான்.
காப்பிக்கடையில் அந்தக் காரில் இருந்து இறங்கிய ஒரு நாலைந்து பேர் வந்தனர். நமசிவாயத்துடன் இருந்த வெள்ளைச் சட்டை அல்லக்கைகளைப் போலவே சிலர். அரசு அதிகாரி என்று தெரியும்படியாகச் சிலர். வந்து சுற்றி உட்கார்ந்து உடனே முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
இளைஞன் பேனா அவர்கள் டேபிள் அருகே இருந்தது.
நமசிவாயம் அவர்களை சற்றே பொறாமையுடன் பார்த்தார் - ஆட்சியில் இருந்த போது அவரைச் சுற்றியும் நாலு அரசு அதிகாரிகள் இது போலவே அங்கங்கே காபி கடை, அடையார் ஆனந்த பவன் என்று உட்கார்ந்து டீலிங் பேசிய சுகமான நினைவுகள் வந்தன.
அவருடன் இருந்த வெள்ளைச் சட்டை அல்லக்கை, அவனும் கீழே பார்த்தவாறே, ”பார்த்திபன்,” என்றான். “இப்போதைக்கு ரியல் எஸ்டேட் புலி. கோடில புரள்றான்.”
அவர் அவனிடம், ”மாட்டிக்க போறான்,” என்று அந்த பேனாவைக் காட்டினார்.
கீழே பார்த்திபன் கும்பல் திடீரென்று எழுந்து கிளம்பினார்கள். அவர்கள் கடையின் படியில் இறங்கி காரைச் சுற்றி நின்று பேசினார்கள்.
பார்த்திபன் கார் கதவைத் திறந்த போது, நமசிவாயம் அவர்கள் அருகே வந்து விட்டார்.
“மேல ஒரு பையன் இருக்கான்,” என்றார் ஒரு வெள்ளைச் சட்டையிடம். “நீங்க பேசின போது முழுசும் ரெகார்ட் பண்ணிட்டான்.”
வெள்ளைச் சட்டைகள் பரபரப்பானார்கள்.
“கொண்டு வாங்கடா,” என்றார் பார்த்திபன்.
நமசிவாயம், “நீங்க போக வேணாம். இங்க இன்ஸ்பெக்டர்ட்ட சொல்லிட்டேன். வந்திட்டே இருக்காரு.”
எல்லோரும் சுற்றி நின்று காத்திருந்தார்கள்.
“நீங்க ADMKல்ல?” என்றார் பார்த்திபன்.
“ஆமாங்க.”
“பாத்துருக்கேன் உங்கள.”
நமசிவாயம் வழக்கம் போலச் சும்மா இருந்தார். ஜீப் வந்து நின்று உள்ளே போய் அந்த இளைஞனை அடித்து இழுத்துப் போகும் போதும் சும்மா இருந்தார்.
“ரெக்கார்டர் கிடைச்சுதா?” என்று போனில் கேட்டார் பார்த்திபன். பிறகு தான் அவர் முகத்தில் புன்னகை வந்தது.
நமசிவாயம் மெதுவாக கிளம்பி நடக்கத் தொடங்கினார். பின்னால் அவரது அல்லக்கை வந்த வண்ணம், ”நம்ம கேஸ் பத்தி எதுனா பேசலாமே?” என்றான்.
“சீசீ…இப்பிடியே போனா ஊருல ஆளாளுக்கு துளிர் விட்டுரும்,” என்றார் நமசிவாயம். “நம்மாட்கள நாம தான் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கணும்.”