Sunday, April 19, 2009

Tamil Short Story


I wrote this story (among others) 4 years back. I thought I may as well publish here. It is copyrighted to me and should not be reprinted without my permission.

ஒரே ஒரு ஜோக்
--------------------
இரா. இராமையா

வீட்டில் இருந்து பார்ட்டிக்குக் கிளம்பியதில் இருந்து ஒரே சண்டை.
முதலில் ரகு மௌனமாகத் தான் வந்தான். பிரேமா பேசிக் கொண்டே வந்தாள். திடீரென்று ரகு கத்திச் சிரித்தான்
"என்ன?" என்று கேட்டாள் பிரேமா.

"ஒண்ணுமில்ல"
பெண்களிடம் இது சொல்ல கூடாத பதில் என்பதால் சற்று நேரத்தில் அவனே பணிந்தான்.

"இல்ல.. ஒரு ஜோக் ஒண்ணு யோசிச்சேன்."
"என்ன ஜோக்?"

"பார்ட்டில சொல்றேன்"
அவள் நிதானித்து, "பார்ட்டில ஜோக் சொல்லப் போறீங்களா? வேணாமே.."

"ஏன்? போன முறை மாபிள்ளை ரொம்ப ஜோவியல் டைபுன்னு எல்லாரும் சொன்னாங்களே? நீ தான சொன்ன?"
"ஏதோ சாதரணமா சொன்னாங்க"

"ஏ.. சும்மா மட்டம் தட்டாத ..போன முறை எங்க தாத்தா பத்தி சொன்னேனே. எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சாங்க."
"உங்க பரம்பரைய பாத்து யாரு தான் சிரிக்கல?"

ரகு அவளை முறைத்தான்.
"நீ கூட அன்னிக்குப் பெரிய பல்லை காட்டி சிரிச்ச .. குழந்தைங்கல்லாம் பயந்து அலறிச்சு."

பிரேமா வாயை மூடிக் கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து, "ஒரு முறை ஜோக் சொன்னா சிரிப்பாங்க. ஒவ்வொரு முறையும் சொன்ன கோமாளின்னு சொல்லுவாங்க." என்றாள்.
"யாரும் அப்பிடி சொல்ல மாட்டாங்க."

"சரி..என்ன ஜோக்? சொல்லுங்க.."
ரகு சிரித்தான். அவனுக்கே அவன் ஜோக்கை நினைத்துச் சிரிப்பு வந்தது.

"ஒரு முறை ஷார்ஜா கிரிக்கெட் மேட்ச் எந்த ஊருல நடக்குதுன்னு பேசிக்கிட்டோமே?"
"ஐயே. அது வேணாம்."

"ஏன்? நீ சிரிச்சியே?"
"கேவலமா இருக்கும்"

ரகு கவலையுடன், " வேற எதுனா யோசிக்கிறேன்" என்றான்.
மணி பார்த்தான். இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் வந்து விடும். அவனுக்குக் கவலை அதிகமாகியது.
"எங்கயாச்சும் காரை நிறுத்திட்டு ஜோக் யோசிப்போமா? " என்று கேட்டான்.
"அப்பிடியாவது ஜோக் சொல்லி ஆகணுமா?"
" என் மேல எதிர்பார்ப்பு நிறைய இருக்கு பிரேமா. பார்ட்டியே என்னால தான் களை கட்டணும்."
திடீரென்று, "கிடைச்சிடிச்சு ..சூப்பர் ஜோக்", என்றான்.
"என்ன?"
"உன் கிட்ட சொல்ல மாட்டேன்."
"அங்க வந்து மானத்த வாங்காதீங்க."
"முதல்ல நீ என் மானத்த வாங்காத. ஜோக் சொன்னா சிரி. போன முறை சில ஜோக்குக்கு நீ சிரிக்கவே இல்லை. எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. நீ மட்டும்..திமிருடி உனக்கு"
"சிரிப்பு வந்தா சிரிக்குறேன். தத்து பித்துன்னு எதாவது சொன்னா?"
"உனக்கு எப்பவுமே நான்னா நக்கல்"
"சரி".
"என்ன சரி? இந்த முறை மட்டும் சிரிக்காம இரு..உன்னை வச்சுக்கிறேன்."

ஹோட்டல் வந்து விட்டது. இருவரும் கடுகடுவென்று இறங்கி உள்ளே போனதும் புன்னகைத்துக் கொண்டே போனார்கள். பிரேமாவின் உறவுக்காரப் பெண் மாயா, பிளஸ் டூவில் நிறைய மார்க் வாங்கியதால் இந்த விருந்து. அந்தப் பெண்ணிடம் நேராகச் சென்றார்கள்.
"கங்க்ராட்ஸ்", என்றாள் பிரேமா.
"தாங்க்ஸ்"
"என்ன மாயா..பேப்பர் சேசிங் போல இருக்கு? இவ்வளவு மார்க் வாங்கி இருக்க?" என்றான் ரகு.
அந்தப் பெண் பயத்துடன், "அதெல்லாம் இல்ல", என்றாள். லேசாகக் கண் கலங்கியது அவளுக்கு.
பிரேமா அவனைத் தரதரவென்று இழுத்து கொண்டு போனாள். "சும்மா இருக்கீங்களா?" என்றாள் தரதரவிற்கிடையே.
"நான் என்ன சொல்லிட்டேன்?" என்றான் அவன்.

எல்லோரும் சாப்பிடத் தொடங்கினார்கள். ரகுவிற்குப் பரபரப்பாக இருந்தது. தகுந்த தருணத்திற்காக காத்திருந்தான். எல்லோரும் கத்திப் பேசி கொண்டிருந்தார்கள்.
"இப்பல்லாம் ஸ்டூடென்சுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு", என்றார் ஒருவர்.
பிரேமாவின் அப்பா, "மாயா ..என்ன படிக்கப் போற? மெடிகலா?" என்று கேட்டார்.
"சிங்கப்பூர்ல ஒரு ஸ்காலர்ஷிப் வந்திருக்கு", என்றாள் மாயா.
ரகு, " சிங்கபூர்ன உடன ஒரு ஜோக் ஒண்ணு நினைவுக்கு வருது", என்றான்.
யாரும் அவனை கவனிக்கவில்லை.
"சிங்கபூர்ல எப்படித் தனியா போயி படிப்ப?"
"அதான் யோசனையா இருக்கு"
ரகு பல்லைக் கடித்து கொண்டான்.

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் ரகு ஆவலுடன் காத்திருந்த சந்தர்ப்பம் வந்தது. எல்லோரும் பேசி முடித்திருந்தார்கள்.
"கேர்ல்ஸ் தான் இப்பல்லாம் நிறைய மார்க்கு", என்றார் ஒருவர்.
"உலகத்தையே சுத்தி வந்திடறாங்க கல்யாணத்துக்கு முன்னாடி", என்றார் பிரேமாவின் அப்பா.
"உலகம்ன உடனே ஒரு ஜோக் நினைவுக்கு வருது", என்றான் ரகு.
அவனே பயப்படும் விதமாக எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
"என்ன ஜோக்", என்றார் பிரேமாவின் அப்பா.
ரகு சற்றே கலவரத்துடன் தொடங்கினான்.
"அமெரிக்கால ஒரு பொம்பளைக்கு நாலு குழந்தை பிறந்துதாம். நாளுக்கும் நார்மலா பேரு வச்சா. அஞ்சாவது குழந்தை பிறந்திச்சு. அதுக்கு மட்டும் ஹூவாங் ஹூவங்க்ன்னு பேரு வச்சா...ஏன் தெரியுமா?" என்று கேட்டான்.
ஒரு பாட்டி, "என்ன அசட்டு ஜோக்கா இருக்கு..", என்றாள்.
"சிரிப்பே வரல", என்றார் ஒருவர்.
"ஜோக் இன்னும் முடியல", என்றான் ரகு.
"மாப்பிள்ளை..சீக்கிரமா முடியுங்க. குலோப் ஜாமுன் சாப்பிடணும்", என்றார் பிரேமாவின் அப்பா.
ரகு, "ஏன்னா உலகத்துல பொறக்குற ஒவ்வொரு அஞ்சாவது குழந்தையும் சைனிஸ் குழந்தையாம்", என்று முடித்தான்.
எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரேமாவின் அப்பா, "உம்..மேல சொல்லுங்க", என்று ஊக்குவித்தார்.
ரகு கோபத்துடன், "ஜோக் அவ்வளவு தான். முடிஞ்சு போச்சு ", என்றான்.
பிரேமா "ஹா ஹா ஹா ..." , என்று கத்திச் சிரித்தாள். வேறு யாருமே சிரிக்கவில்லை.

வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். ரகு மௌனமாக இருந்தான். பிரேமா ஏதோ பேசிக் கொண்டே வந்தாள்.
ரகு திடீரென்று, "என்ன திமிருடி உனக்கு..", என்றான்.
பிரேமா திடுக்கிட்டு, "என்ன?" என்றாள்.
"அந்த ஜோக்குக்கு ஏண்டி அப்பிடிச் சிரிச்ச?"
"நீங்க தான சிரிக்கச் சொன்னீங்க?"
"எல்லாம் சும்மா இருக்காங்க. நீ மட்டும் ஏண்டி சிரிச்ச?"
"இது என்ன இது..சிரிச்சாலும் தப்பு ..சிரிக்கலன்னாலும் .."
"உம்..சும்மா கிட"
கார் போய்க் கொண்டிருந்தது.
"திமிருடி உனக்கு"








5 comments:

Surya said...

Sirikkalamaa? Koodaatha? :)

Sridhar said...

Good one. Keep writing more.

VA said...

Will this ever be translated to English. I know there is a chance of 'Lost in Translation' but sometimes a well translated story can still be humorous to the non-native reader. Think about it.

Anonymous said...

thimirudi unakku !!

:)

anitha priya said...

nice..