Sunday, June 28, 2009
Tamil Short Story - 3 - Night and Day
The translation is available here. My other short stories and their translations are listed on the left hand bar, in the "My Short Stories" section, below the "Featured Posts" section.
இரவும் பகலும்
-------------------
இரா.இராமையா
பள்ளிக்கு உள்ளே இருந்த வாட்ச்மேன் அறையில் ஏகாம்பரம் உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் மிக அமைதியாக இருந்தது. சற்றுப் பயமாகக் கூட இருந்தது.
ஏகாம்பரம் ரிடையராகி சும்மா வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் பையன் இன்னும் சரியான வேலைக்குப் போகவில்லை. பள்ளியில் பகல் நேர வாட்ச்மேன் வேலைக்குத் தான் அவருக்கு ஆசை. பள்ளியில் வாட்ச்மேனாக இருப்பது எளிது. சிறுவர்களை ஓட ஓட விரட்டலாம். பேங்க் வாட்ச்மேன் வேலை தான் கஷ்டம். போக வர சலாம் போட வேண்டும். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும். ஏகாம்பரத்திற்கு துப்பாக்கி சுட ஆசை உண்டு. ஆனால் வாழ்க்கையில் துப்பாக்கியை தொட்டு பார்த்ததில்லை.
பள்ளியில் சிறு கம்பு ஒன்று போதும். நல்ல பெரிய மீசை வைத்திருந்தார். அதற்க்கு சிறுவர்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் தலைமை ஆசிரியை இரவு வாட்ச்மேன் தான் வேண்டும் என்றாள்.
ஏகாம்பரத்திற்கு மணி ஒன்பது அடித்தால் தலை சுற்றிக் கொண்டு தூக்கம் வரும். கடந்த முப்பது வருடங்களாகத் தனியாக இரவு தூங்கியதில்லை. அவர் மனைவி மீனாட்சி எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள். அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவார்.
ஏகாம்பரம் தன்னையே நொந்து கொண்டார். ராத்தூக்கம் விழித்தால் உடம்பு என்னத்திற்கு ஆகிறது?
மனைவியிடம், "நீயும் வாயேன். பேசிட்டு இருக்கலாம்.", என்றார்.
"எனக்குக் காலையில வேலை இருக்கு. நான் பேசிட்டு இருப்பேன் - நீங்க பாட்டுக்குத் தூங்கிருவீங்க. காவல் காத்த மாதிரி தான்," என்றாள்.
முதல் நாள் இரவு அவர் கிளம்பும் பொழுது போருக்குப் போவதைப் போல இருந்தது. பையன் அவர் யூநிஃபார்மை மேலும் கீழும் பார்த்தான்.
"மிலிடரி மாதிரி இருக்கப்பா ", என்றான்.
பிறகு அவன் அம்மாவிடம், "போன வாரம் அந்த ஸ்கூல் பையன் ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிச்சாம்" , என்றான்.
ஏகாம்பரம் திடுக்கிட்டு, "எங்க? ஸ்கூல்லய?", என்று கேட்டார்.
"வீட்டுல தான். ஆனா ஸ்கூல் டீச்சர் ஏதோ சொல்லிச்சாம்"
"ஏண்டா உங்க அப்பாவ பயமுறுத்துற?"
"இல்லம்மா. திடீருன்னு சின்ன வயசுல போயிட்டா ஆத்மா சாந்தி கிடைக்காம சுத்து சுத்துன்னு சுத்தி வந்து.."
"ஏங்க..நீங்க கிளம்புங்க", என்றாள் மீனாட்சி.
ஏகாம்பரம் பிள்ளையாரைச் சற்று நேரம் கும்பிட்டுக் கிளம்பினார்.
***************************************************
சற்றுத் தொலைவில் கோட்டான் ஒன்று கத்தியது. தூரத்தில் நாய் ஊளையிட்டது.
பல வருடங்களுக்கு முன்னால் ஜகன் மோகினி என்னும் படத்தைப் பார்த்து ஜன்னி கண்டது அவருக்கு நினைவு வந்தது. அப்பொழுதெல்லாம் பாதி இடங்களில் சுடுகாடு உண்டு.
மணி எங்கோ பன்னிரண்டு அடித்தது.
பேய் நிஜமாகவே உண்டா?
ஏகாம்பரம் தலையை உலுக்கிக் கொண்டார். எதற்கு இப்போது அந்த நினைவு? நல்லதாக நினைக்கலாம்.
சற்று நேரம் தன் நண்பர்களை நினைவுபடுத்திக் கொண்டார். ராவ் என்று ஒருத்தன் இருந்தான். பல வருடங்கள் அவன் மிலிடரியில் வேலை செய்தான். அவன் மனைவி பிரமாதமாகச் சமைப்பாள்.
ராவ் ஒரு முறைப் பேயைப் பார்த்ததாகச் சொன்னான். ஒரு நாள் இரவு வில்லிவாக்கத்தில் எல்லோரும் ஒரு வீட்டு மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொது தான் அவன் இத்தகவலைத் தெரிவித்தான்.
சீட்டாடிக் கொண்டு இருக்கும் போது சோட்டாணிக்கரை பகவதி கோவில் போய் விட்டு வந்த அனுபவத்தை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். பேயாட்டம் ஆடுவதாகவும், பெண்களைப் பார்த்தாலே பாத்ரூம் வந்து விடும் என்று சொன்னார்.
ஒரு பெண் தலைவிரிகோலமாக வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாளாம். சாதாரண மனிதர்கள் அப்படி குதிக்கவே முடியாது.
சீட்டாட்டக் கும்பலில் அடிக்கடி தினத்தந்தி, மாலை முரசு படிக்கும் அறிவாளி ஒருவர் இருந்தார். அவர், "அதெல்லாம் மன நோய்ப்பா", என்றார்.
"மனநோய் எல்லாம் கிடையாது. இதெல்லாம் நம்பிக்கை இல்லன்னா எதையுமே நம்ப முடியாது."
"ஏம்பா, கடவுள்னு ஒருத்தர் இருந்தா.."
"நம்பிகை இல்லன்னா வாழ்க்கையே கிடையாதுப்பா .."
"நல்லதுல நம்பிக்கை வச்சா சரி. இதுல எதுக்கு நம்பிக்கை?"
மற்றொருவர், "நீ இவ்வளோ சொல்றியே..சாமியில்ல, பூதமில்லைனு. நம்ம மாரியோட அப்பா இறந்த அன்னிக்கு அந்த பேய் என்ன பாடு படுத்திச்சு தெரியுமா?"
எல்லோரும் இதற்கு ஆமோதித்தார்கள்.
"நைட்டு தூங்கும் போது டொக்கு டொக்குன்னு நடக்குற சத்தம். ஒரே அழுகுற சத்தம். நானெல்லாம் ஓடியே போயிட்டேன்."
தினத்தந்தி படிப்பவர், "இதெல்லாம் பகுத்தறிஞ்சு யோசிக்கணும்", என்றார்.
"அதுக்குள்ள பேய் அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருக்கும்"
"நீ இவ்வளோ சொல்றியே..நடு ராத்திரி சுடுகாடு போயேன்."
"எதுக்கு?"
"நீ போயேன். துரத்தித் துரத்தி அடிக்கும் உன்னைய"
"இந்த மாதிரி நம்பிக்கை இல்லாத ஆளுங்கனால தான் மழை வர மாட்டேங்கு", என்றார் திருநெல்வேலிக்காரர் ஒருவர்.
"ஏம்பா.. கடவுளாண்ட நம்பிக்கை வச்சா சரி..பேயாண்ட போயி எதுக்கு நம்பிக்கை வைக்கணும்?"
பகுத்தறிவாளரின் வாதங்களினால் எல்லோரும் வாயடைத்துப் போயிருந்த நிலையில் ராவ் பேசினான். அவன் எங்கோ வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். அப்படியே பேசினான்.
"இன் நைன்டீன் சிக்ஸ்டி செவென் , ஐ ஸா பேய்".
எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.
"ஆமா நான் பேயைப் பார்த்தேன். தொட்டுப் பார்த்தேன்."
பகுத்தறிவாளர், "அப்போ தான் கல்யாணம் ஆச்சா?" என்று விட்டுச் சிரித்தார். வேறு யாருமே சிரிக்கவில்லை. பக்கத்துத் தென்னை மரங்கள் அமானுஷ்யமாக உரசிக் கொள்ளும் சத்தம் கேட்டது.
"பட்டுக் கோட்டையில எங்க வீட்டுப் பக்கம் நடந்து போயிட்டிருந்தேன். எதிர வெள்ளையா ஒரு பெண் உருவம் வந்தது. நேரா வந்தது. நான் விலகிப் போனேன். நேரா முட்டுற மாதிரி வந்துது. கையை வீசினேன். என் கை உள்ள போய் வெளிய வந்திருச்சி."
ராவ் குரல் இறங்கிக் கொண்டே போனது. "எஸ். ஐ ஸா பேய்", என்று முடித்தான்.
யார் முகத்திலும் ஈயாடவில்லை.
****************************************
ஏகாம்பரம் மெதுவாக எழுந்து நடந்தார். ஸ்கூலை ஒரு ரவுண்டு வர வேண்டும். நேராக யாராவது மிதந்து வந்தால் என்ன செய்வது? அவருக்குக் கால் உதறியது.
மணி இரண்டு ஆகி விட்டது. மெதுவாக ஒவ்வொரு மாடியாக ரவுண்டு வந்தார்.
இரண்டாவது மாடியில் ஏதோ சத்தம் கேட்பது போல இருந்தது. 'பயாலஜி' என்று ஒரு கதவு மேல் எழுதி இருந்தது. உள்ளே ஏதோ பிறாண்டுவது போல இருந்தது. ஏகாம்பரம் விறைப்பாகத் திரும்பி நடந்தார்.
"எக்ஸார்சிஸ்ட்" என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தை ஒருவன் தனியாகப் பார்த்தானாம். முடிவில் ரத்தம் கக்கி இறந்து கிடந்தானாம். ஏகாம்பரம் கேள்விப்பட்டிருந்தார். இவனை யார் தனியாகப் போய்ப் பார்க்கச் சொன்னது?
இந்த வேலை அந்தப் படம் பார்ப்பதைப் போலத் தான் இருக்கிறது. இந்நேரம் வீட்டில் இருந்தால் மீனாட்சி மேல் காலைப் போட்டுக் கொண்டு நன்றாகத் தூங்கி இருப்பார்.
சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஏகாம்பரம் வீட்டிற்கு ஓடினார்.
"மீனாட்சி, இந்த வேலை வேணாம்டி." என்றார் மனைவியிடம்.
"ஏன் தூக்கம் வருதா ?"
"அதில்லடி. நைட்டெல்லாம் ஒரே பேய் நினைப்பாவே இருக்கு. இந்தப் படம் ஒன்னு பார்த்தமே ..ஜகன் மோகினி.. அந்தப் பேயெல்லாம் கண்ணு முன்னாடி நிக்குதடி."
"அம்மா இங்க நிம்மதியா தூங்கினாங்க", என்றான் பையன்.
"அடிப்பாவி".
"சும்மா இருடா. ரொம்பச் சத்தமே இல்லாம இருந்தா அப்படித் தான். நம்ப வீட்டு ரேடியோ எடுத்துட்டுப் போங்க இன்னைக்கு."
பையனிடம், "டேய்..நீ துணைக்கு வாயேன்..இன்னைக்கு நைட்டு.." என்று கெஞ்சினார்.
"நாளைக்கு நைட்டு வரேன். இன்னைக்கு நைட்டு அமாவாசையா வேற இருக்கு. பேயெல்லாம் கூத்தாடுற நேரம்", என்றான் பையன்.
***************************************************
அன்று இரவு தான் ஏகாம்பரம் எலும்புக் கூட்டைப் பார்த்தார்.
பயாலஜி லேபரேட்டரி அறை அருகே ரவுண்டு வந்த பொழுது விசிலை எடுத்து 'சீய்' என்று ஊதினார். அந்தச் சத்தம் பள்ளிச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. சட்டென்று திரும்பிய பொழுது யாரோ அவரையே பார்ப்பது போல இருந்தது.
மெதுவாகத் திரும்பிப் பார்த்தார். கண்ணாடி ஜன்னலில் அவருடைய பிரதிபலிப்புத் தான். "ச்சே..இதற்க்கா பயந்தோம்?" என்று நினைத்தார்.
சுடுகாட்டுக்கு அமாவாசை நள்ளிரவு போய் வருகிறேன் என்று சவால் விட்டானாம் ஒருவன். போனான். போய் சுற்றி விட்டு வெளியே வரும் போது சட்டென்று யாரோ பின்னால் இருந்து இழுப்பது போல இருக்கின்றது. "ஐயோ!" என்று கத்தி உயிரை விட்டான். மறு நாள் பார்த்தால் மரத்தின் கிளையில் அவன் சட்டை மாட்டியிருக்கிறது..அவ்வளவே.
அந்தக் கதையை போல எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். தன்னை அறியாமல் கண்ணாடி ஜன்னல் அருகே சென்று உற்றுப் பார்த்தார்.
சற்று நேரம் எதுவும் தெளிவாக தெரியவில்லை. பிறகு கலங்கிய நதித் தண்ணீரில் அடி மணல் தெரிவது போல ஒரு வெளுப்பான எலும்புக் கூடு தெரிந்தது.
ஏகாம்பரம் திடுக்கிட்டு கண்ணைக் கசக்கி மறுபடிப் பார்த்தார். அங்கே நிஜமாகவே ஒரு எலும்புக் கூடு தெரிந்தது. லேசாக அசைவது போலவும் இருந்தது.
ஏகாம்பரம், "ஆ" , என்றார்.
கனவில் சில சமயம் அவர் அசைய நினைப்பார். ஆனால் கை காலை அசைக்க முடியாது. அது போன்ற ஒரு உணர்வு அவருக்கு வந்தது. மிகவும் சிரமப்பட்டு நகர்ந்தார். நகர்ந்து சற்று தூரம் சென்று ஓட்டம் பிடித்தார்.
இரைக்க இரைக்கத் தம் இடத்திற்கு வந்தார். துணைக்கு யாரும் இருந்தால் பரவாயில்லை. ஆனால் எதிரே, சுற்றி இருந்த வீடுகளில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இங்கே நடக்கும் அகோர நாடகத்தை அறியாமல் இரக்கமே இல்லாமல் தூங்குகிறார்கள்.
பேசாமல் பள்ளியைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடலாம் என்று அவர் முடிவு செய்தார். நாளைக்குக் கேட்டால் இப்படி எலும்புக் கூட்டுடன் குடித்தனம் செய்ய முடியாது என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் இந்த இருட்டில் வீடு வரை போக வேண்டுமே?
ரேடியோவைப் போட்டார். சிறுது நேரம் 'கர, புர ' என்று சத்தம் கேட்டது. பிறகு கீச் என்ற குரலில் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பாட்டுத் தொடங்கியது.
*******************************************
மறு நாள் மதியம் உணவு இடைவெளியில் ஏகாம்பரமும் மீனாட்சியும் தலைமை ஆசிரியை அறைக்குள் நுழைந்தார்கள். ஆசிரியை அறையில் இருந்து ஒரு மாணவி அழுது கொண்டே சென்றாள். உள்ளே அவர்கள் போனவுடன் ஆசிரியை முகம் ஸ்விட்ச் போட்டது போல மாறியது. அவர்களைப் பார்த்துச் சிரித்தாள்.
"வாங்க ஏகாம்பரம். என்ன விஷயம்? வாங்கம்மா.."
"இல்லம்மா. இந்த நைட் வாட்ச்மேன் வேல கொஞ்சம் உடம்பெல்லாம் முடியல."
"ரெண்டு நாளா தான வந்திருக்கீங்க?"
"இவரு பயப்படராரும்மா" என்றாள் மீனாட்சி.
"பயமா?" என்று சிரித்தாள் ஆசிரியை.
"அதெல்லாம் இல்லம்மா. நான் ஏன் பயப்படணும்? அந்தக் காலத்துல தனியா ஆஸ்பத்திரி மார்ச்சுவரி வேல பாத்திருக்கேன்"
"கதை விடராரும்மா. இவருக்கு எப்பவுமே கொஞ்சம் பயம் அதிகம். இன்னைக்குக் காலையில வீட்டுக்கு வந்து விழுந்துட்டாரு."
ஏகாம்பரம் அவமானமாக உணர்ந்தார். இப்போது பகல் நேரத்தில் எலும்புக் கூட்டை நினைத்தால் சிரிப்பு தான் வந்தது. அது மூஞ்சியும் முகரையும்..
ஆசிரியை யோசித்தாள். "வேற வேலை எதுவும் கை வசம்
இருக்கா ?" என்றாள்.
"இல்லம்மா"
"சரி. நாளையில இருந்து பகல்ல வாங்க. ரெண்டு மூணு நாள் அது ஒத்து வருதான்னு பாருங்க."
ஏகாம்பரம் நன்றியுடன் கை கூப்பினார். "பயம்னுல்லாம் இல்லம்மா. ஒரு மனக் குழப்பம்..அவ்ளோ தான். நான் அந்தக் காலத்துல ராத்திரி ஷோ சினிமா பார்த்திட்டு வரும் போது..."
"சரி..கிளம்புங்க" என்றாள் மீனாட்சி.
************************************************
சுறுசுறுப்புடன் காலையில் எழுந்து திருநீறு இட்டு மீசையை முறுக்கி விட்டு விறைப்பாக பள்ளி முன்னால் நின்றார் ஏகாம்பரம். எட்டரைக்கெல்லாம் தலைமை ஆசிரியை வந்தாள். அவளுக்கு ஒரு சலாம் வைத்தார் ஏகாம்பரம்.
"ஒன்பது மணிக்குச் சரியாக் கதவைச் சாத்தணும்", என்று விட்டுப் போனாள்.
எட்டு ஐம்பது வரை யாருமே பள்ளியில் இல்லை. சரியாக எட்டு ஐம்பதுக்கு தபதபவென்று ஒரு கூட்டம் வந்தது. அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வந்து உள்ளே வீசினார்கள். சில சிறுவர்கள் ஓவென்று அழுது கொண்டே போனார்கள்.
ஏகாம்பரம் மணி பார்த்தார். ஒன்பது ஆயிற்று. புது வாட்ச்மேன் எவ்வளவு கறார் என்று இவர்களுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. கதவைச் சாத்தப் போனார். பிள்ளைகள் உள்ளே ஓடும் வேகம் அதிகமாயிற்று. இரண்டு பேர் ஓடி வந்து கதவை முட்டினார்கள்.
"ஏய்.." என்று சரத்குமாரைப் போல கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ கத்தினார்கள். கதவை மறுபக்கம் இருந்து தள்ளினார்கள். ஏகாம்பரம், கோட்டையை எதிரிப் படைகள் பிடிக்க வருவதாகக் கற்பனை செய்து கொண்டார். ஓங்கித் தள்ளினார்.
'படார்' என்று ஒரு சத்தம். கதவு முழுக்கத் திறந்தது. ஏகாம்பரம் தள்ளிப் போய் விழுந்தார்.
வாசலில் ஆறடி உயரத்தில் பீமசேனன் போல ஒரு அம்மா நின்றாள் . விழுந்து கிடந்த ஏகாம்பரத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
"கதவைச் சாத்தணும்", என்று ஓடி வந்தார் ஏகாம்பரம்.
"ஏன்யா கதவைச் சாத்துற?"
"ஒன்பது மணிக்கு முன்னால வரது தான?"
"நான் யாரு தெரியுமா உனக்கு?"
"ரூல்சுன்னா ரூல்சு தான்"
பின்னால் கோபத்துடன் பல அம்மாக்கள் நின்றார்கள். தலைமை ஆசிரியை வந்தாள்.
"ஏகாம்பரம்..ஏன் கதவைத் தள்ளி விட்டீங்க?"
"நீங்க தான சொன்னீங்க"
"அதுக்காக இப்பிடியா...சாரி மேடம்"
பீமசேனி ஒரு குட்டிப் பையனைப் பிடித்தவாறே, "பீ கேர்புல் " என்று விட்டுப் போனாள்.
**********************************************
ஏகாம்பரம் அயர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தார். செடிக்கெல்லாம் அப்போது தான் தண்ணீர் விட்டு முடித்திருந்தார். தூரத்தில் எல்.கே.ஜி குழந்தைகள் வகுப்பறையில் இருந்து வருவது தெரிந்தது. எல்லாம் ஒவ்வொரு திசையில் ஓடின. டீச்சர் ஆடு மேய்ப்பது போல அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தாள்.
சற்று நேரம் கண்ணை மூடினார் ஏகாம்பரம்.
யாரோ உலுக்கி எழுப்பினார்கள். பார்த்தால் அந்த டீச்சர்.
"கொஞ்சம் கூட வாங்க", என்றாள்.
பக்கத்தில் ஒரு அடி பம்பு இருந்தது. கீழே இரண்டு சிறுவர்கள் நின்றார்கள். டீச்சர் மளமளவென்று ஒரு பையன் டிரவுசரை அவிழ்த்தாள்.
"பம்ப அடிங்க", என்று அதட்டினாள்.
ஏகாம்பரம் பம்பை அடிக்கத் தொடங்கினார்.
திடீரென்று தூரத்தில் அலறல் கேட்டது. மற்ற பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடினார்கள். டீச்சர் "கழுவிருங்க" என்று விட்டு அந்தப் பிசாசுகளைப் பிடிக்க ஓடினாள்.
ஏகாம்பரம் குனிந்து பார்த்தார். டிரவுசரைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளும் அவரைப் பார்த்து இளித்தன.
*******************************************************
மிகவும் அலுப்புடன் மதிய உணவு நேரத்தில் மெதுவாகக் கிளம்பிப் பயாலஜி லேபரேட்டரிக்குப் போனார். சில பையன்கள் அறையில் இருந்தார்கள். தயக்கத்துடன் உள்ளே போய் எலும்புக்கூடு முன்னாள் நின்றார்.
இதைப் பார்த்தா பயந்தோம்? சாதுவாக இருந்தது அது. யாருடையதோ? யார் பெற்ற பிள்ளையோ? உயரமாக இருந்தது.
ஒரு காலத்தில் சொல்வார்கள். எந்தப் பேயை வேண்டுமானாலும் நம்பலாம். கொள்ளி வாய்ப் பிசாசோ, ரத்தக் காட்டேரியோ, குட்டிச் சாத்தானோ - எல்லாவற்றையும் நம்பலாம். மோகினியைத் தவிர. இரவில் நடந்து போகும் போது பின்னாலிருந்து வெற்றிலை கேட்குமாம் மோகினி. கத்தியில் சுண்ணாம்பு தடவிக் கொடுத்தால் ஓடி விடும். இல்லையோ..தொலைந்தோம்.
அவர் திரும்பிப் பார்க்கும் போது சுற்றி நாலைந்து மாணவர்கள் நின்றார்கள். அவர்களும் எலும்புக்கூட்டைப் பார்த்தார்கள்.
"பழைய வாட்ச்மேன் தான் இது", என்றான் ஒரு பையன்.
எல்லோரும் சிரித்தார்கள்.
"பார்த்தா நம்ப தணிகை மாதிரி இருக்குல்ல?" என்றான் மற்றொருவன்.
தணிகை என்ற பையன்,"இல்ல..உங்க அப்பா மாதிரி இருக்கு", என்றான்.
"ஏய் மரியாதையாப் பேசு" என்றான் முதலில் பேசியவன்.
"தம்பிங்களா.." என்று தொடங்கினார் ஏகாம்பரம்.
அவர் திரும்பி பார்க்கும் போது அடிதடி ஆரம்பமாகி விட்டது. இரண்டு பேர் மடமட வென்று அடித்துக் கொண்டார்கள். பிறகு கட்டிப் புரண்டார்கள்.
ஏகாம்பரம் பயத்துடன், " தம்பி நிறுத்துங்கப்பா", என்றார்.
மற்ற மாணவர்கள் கிரிக்கெட் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஏகாம்பரம் இருவரையும் விலக்கி விட முயற்சி செய்தார். பார்த்தால் அவர் மேலேயே இரண்டு அடி விழுந்தது. கடைசியில் ஒரு பையன் அவரைப் பிடித்துத் தள்ளினான்.
ஏகாம்பரம் "அம்மாடி", என்று தரையில் போய் விழுந்தார்.
எலும்புக்கூடு அவர் தலைக்கு மேல் அவரைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
************************************************
தலைமை ஆசிரியை ஆதரவுடன் ஏகாம்பரத்தைப் பார்த்தாள். அவர் கையில் விரல் மடங்கிச் சிறு கட்டுப் போட்டிருந்தார்.
"நைட்டு ஷிஃப்டே வரீங்கள?" என்றாள்.
"ஆமாம்மா"
"எனக்கே சில சமயம் இங்க இருந்து ஓடிப் போயிடலாம் போலத் தான் இருக்கு", என்றாள்.
ஏகாம்பரம் மெதுவாக வீட்டிற்குக் கிளம்பினார். இரவு பேய்களின் நினைவு வரும். அது சற்று ஆறுதலாகக் கூட இருக்கும்.
**********************************************************************
Don't forget to read the following:
Tamil short story - 1 - ஒரே ஒரு ஜோக்
Tamil short story - 2 - பெண் விடுதலை வேண்டும்
Translation for Tamil short story - 2 - A very brief discussion of women's liberation
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எல்லாருக்கும் ஏகாம்பரம் மாதிரி திரும்ப திரும்ப வாய்ப்பு கிடைச்சா நல்லா தான் இருக்கும்!
Post a Comment