Thursday, February 24, 2011

Mynah, Aadukalam - the issue with Tamil movies


சமீபத்தில் மைனா படம் பார்த்தேன். அதை பற்றிய ஒரு இணைய விவாதத்திலும் சில கருத்துக்கள் சொன்னேன். இந்த கட்டுரை தமிழ் சினிமா பற்றிப் பல நாட்களாக என்னுடைய மனதில் இருக்கும் சில எண்ணங்களை எடுத்து வைக்கிறது.

தமிழ் சினிமா இந்தக் கடைசி ஐந்து வருடங்களில் நிறைய மாறி விட்டதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. அந்த மாற்றங்கள் காமிரா, படத்தொகுப்பு, நடிப்பு, நடிகர்களின் தேர்வு , திரைக்கதையின் அமைப்பு மற்றும் ஆர்ட் டைரக்க்ஷன் போன்ற துறைகளில் பிரமாதமாகத் தெரிகிறது. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். இது பெருமைக்குரிய விஷயம்.

ஆனால் தமிழ் சினிமாவில் மோசமான அம்சம் என்று நான் கருதுவது கதையிலும், கதையின் பொருளிலும் உள்ள இரு குறைகள்.

வன்முறையின் சித்தரிப்பு

மைனா, பருத்திவீரன், சுப்பிரமண்ணியபுரம் இவை யாவுமே வன்முறையுடன் முடிகின்றன. இந்த வன்முறை தேவையில்லாதது, மற்றும் சரியாகப் படம் பிடிக்கப் படாதது என்பது என் முதல் குறை.
இதைப் பற்றி நான் பேசும் போது, பொதுவாக சில மாற்றுக் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
- வன்முறை வாழ்வின் ஒரு அம்சம். அதுவும் "விளிம்பு நிலை மக்கள்" வாழ்வில் முக்கியமான ஒரு அம்சம். ரியலிசதுடன் எடுக்கப்படும் படங்கள் இத்தகைய வன்முறையைக் காட்டுவதில் ஆச்சரியமில்லை என்பது ஒரு வாதம்.
- மற்றொரு வாதம் கொரிய மற்றும் ஹாலிவுட் படங்களைக் காட்டி அதில் இல்லாத வன்முறையா என்பது.
இந்த இரு வாதங்களும் சரியா?
நான் மேலே சொன்ன படங்களில் வன்முறை ரியலிசத்துடன் எடுக்கப்பட்டதே இல்லை. உதாரணத்திற்கு வெயில் படத்தை எடுத்து கொள்ளுங்கள். அல்லது மைனா படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டிலுமே வன்முறை என்பது முடிவில் உள்ள சோகத்தை மறைக்கவே காட்டப்படுகின்றன. மைனாவில் போலீஸ் அதிகாரியின் கடைசிச் செயல்கள் ரியலிசத்தினால் எடுக்கப்பட்டவையே அல்ல. அவை படம் பார்த்து விட்டுச் செல்பவர் மனதில் சோகம் நிற்காமல், பழி வாங்கிய திருப்தி ஓங்கி நிற்கவே காட்டப்படுகின்றன.
இப்படிப்பட்ட வன்முறையைத் தெளிவாக படத்தின் வணிக வெற்றிக்காக எடுத்து விட்டு ரியலிசம் என்று அதை சமாளிப்பதாகவே தோன்றுகிறது.
அப்படியே வன்முறை கதையில் நடக்கிறது என்றே எடுத்துக் கொள்வோம். அதை அப்படியே காட்டுவது தான் ரியலிசமா என்ன? ரியலிசம் என்பது இயக்குனரின் கட்டு மீறிய ஒன்றல்ல. இயக்குனர்களும் கதை சொல்லிகளும் படைப்பாளிகள். கதையில் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களுடைய படைப்புக்கு மேல் அவர்களுக்கு கண்ட்ரோல் இருக்க வேண்டும். வன்முறையைக் காட்டுவதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றையுமே அணுகாமல் ரத்தம் சிதறுவதை ஒரு மெஷின் போல காட்டுவதற்கு இயக்குனர் எதற்கு?

ஹாலிவுட் படங்களில், தரண்டினோ போன்றவர்கள் படங்களில் வன்முறை ஒரு கொண்டாட்டமாகவே வருகிறது என்பது உண்மையே. ஆனால் அப்படங்கள் வன்முறையை ஒரு ஸ்டைலாக ஏற்றுக் கொள்கின்றன. நம் படங்களைப் போல, பாதி வரை காமெடி, பாட்டு முடிவில் கோரக் கொலைகள், மற்றும் பழி வாங்குதல் என்று அர்த்தமே இல்லாமல் போவதில்லை.
முதலில் நாம் தமிழர்கள் பார்க்கக் கூடிய நல்ல கதைகளை, படங்களை எடுப்போம் - பிறகு தரண்டிநோவைப் பின்பற்றலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

ஹீரோயிசம் செத்து விட்டதா?

சிறிது நாட்களுக்கு முன்னால் ஆடுகளம் படம் பார்த்தேன். மைனாவைப் போலவே அதிலும் அர்த்தமே இல்லாத ரவுடி ஹீரோவும் அவன் காதலும்.
இதைப் பற்றி சிலருடன் பேசிய போது, நான் இப்படங்களில் ஹீரோக்களுடன் நாம் ஒன்ற முடிவதில்லை என்று சொன்னேன். அதற்க்கு அவர்கள், "இப்பொழுதெல்லாம் படங்களில் ஹீரோக்கள் என்று யாரும் இல்லை. கதை தான் ஹீரோ", என்று சொன்னார்கள்.
இது உண்மையா என்ன?
நான் ஹீரோ என்று சொன்னதும் என் நண்பர்கள் ரஜினி ஸ்டைல் ஹீரோ என்று நினைத்துக் கொள்கிறார்கள். எனவே இந்த பதில் சொல்கிறார்கள். ஆனால், ஆடுகளம் படத்தையோ, மைனா படத்தையோ வேறு நாட்டுக்காரர் ஒருவரிடம் போட்டு காட்டி, இதில் ஹீரோ யார் என்று கேட்டால், மிக சரியாகச் சொல்வார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்றால் இவ்விரு படங்களிலும் ஹீரோக்கள் இருக்கிறார்கள். படம் யாருடைய கதைகளை முன் வைக்கிறதோ, யாரிடம் நம் பார்வையை இட்டுச் செல்கிறதோ, அவர் ஹீரோ தான் - ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஹீரோ இல்லாமல் படம் எடுக்க முடியாது என்று நான் கூற வரவில்லை - மைனாவும் ஆடுகளமும் அது போன்ற படங்கள் இல்லை என்று தான் சொல்கிறேன். இரண்டிலுமே ஹீரோக்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடன் நாம் ஒன்றாமல் போவதற்குக் காரணம் அவர்களைக் கிட்டத்தட்ட ரவுடி அல்லது லூசு போலக் கட்டுவது தான். தவறு நம்முடைய புரிதலில் இல்லை. படத்தின் இயக்குனர் மோசமான, பெண்களை தொந்திரவு செய்கிற, சம்பந்தமேயில்லாமல் மேலே பாய்கிற நபர்களை ஹீரோவாகக் கதையை எழுதியிருக்கிறார். மைனாவின் ஹீரோ ஒரு கடைந்தெடுத்த மடையன் என்பதில் சந்தேகமே இல்லை - இவர் போன்ற ஒருவரை நாம் பக்கத்துக்கு வீட்டிலோ தெருவிலோ பார்த்தால் எரிச்சல் தான் வரும்.
சில பல காரணங்களினால் தமிழில் சாதாரணமான மனிதர்களை வைத்துக் கதை எழுத வருவதில்லை. அடிமட்டத்து மக்கள் என்ற பெயரில் அதீதமான் நம்ப முடியாத, நம்மால் கொஞ்சம் கூட இரக்கம் கொள்ள முடியாத கதாபாத்திரங்களை வைத்துக் கதையை எழுதுகிறார்கள். இதற்கும் அந்த கதாபாத்திரங்கள் ஏழையா பணக்காரனா, விளிம்பு நிலை மனிதனா என்பதற்கும் சம்பந்தமே இல்லை.
உண்மையில், முடிவில் உள்ள வன்முறையை மட்டும் தெளிவாக திட்டமிட்டு விட்டுப் பிறகு மிச்சக் கதையை எழுதுவது போல இருக்கிறது.


சுருக்கமாகச் சொல்வது என்றால், தேவையற்ற வன்முறை சித்தரிப்பு , மற்றும் அசட்டு ஹீரோக்களை விட்டு தமிழ்ப் படம் வெளியே வர வேண்டும். அதற்குப் பதிலாக சர்வதேசத் தரத்தில் படம் எடுப்பதாகக் கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தான்.

1 comment:

Pradeep said...

I agree with the facts. A blueprint is being followed for the commercial movies. And then we have the remakes.

The most worrying trend is the lack of audience for movies that are indeed made differently or for a social cause. Nellu (based on the Keezhvenmani massacre, such an important event in our history), Orr Iravu, Mundhinam Paartheney are examples of awesome movies which most people never even heard of.

With such a trend, film makers will never be able to convince their investors on reasonable projects. They will be forced to follow the remake or commercial templates.

Appreciate producer Prakaash Raj on that front. We need a few others like him!