Sunday, May 13, 2012

இந்நாட்டு மன்னர் - Tamil Short Story - 4


 காமெடி, தமிழில் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்த பின் நான் எழுதிய முதல் கதை இது. Back in 2002. அதற்கு முன்னால் serious கதை ஒன்று எழுதி “கல்கி” நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு வாங்கி இருந்தேன் (1995).  பிறகு எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என்று சில கதைகள் எழுதினேன். எதுவும் பதிப்பிக்கப்படவில்லை.
அமெரிக்கா போய் ஆங்கிலத்தில் எழுத முயற்சி செய்தேன். சகிக்கவில்லை. என்ன செய்வது என்று முழித்த போது என் மனைவி சொல்லி முதன் முதலில் காமெடி எழுதினேன்.
இது திண்ணை online இதழில் பதிப்பிக்கபட்டதாக ஒரு நினைவு. லிங்க் எதுவுமில்லை.
அரசியல் பற்றிய பார்வை எனக்கு இப்பொழுது முழுமையாக மாறி விட்டதால், இந்தக் கதை seems dated.
இதற்குப் பிறகு எழுதிய கதையான “கர்வம்” வானவில் கூட்டம் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.


இந்நாட்டு மன்னர்
----------------------
             
    எம்.எல்.ஏ தணிகாசலம், தன் பெயரை நியூமராலஜி காரணமாக தண்ணிகாச்சல்லம் என்று மாற்றி வைத்த உடன் மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பினார். கோடம்பாக்கம் குட்டித் தெரு சோதிடர் கணிப்பு வீண் போவதில்லை என்று சட்டசபையில் கேள்வி நேரத்து அரைத் தூக்க அரட்டையில் முணுமுணுத்தார் பக்கத்து சீட் ராமநாதன் (ரம்மநாத்தன்).
பெயர் மாற்றி வைத்து கையெழுத்து போடத் தொடங்கிய ஒரு வாரத்தில் தலைவர் பி.ஏ ஃபோன் செய்தார்.
"தலைவர் பேத்தி காது குத்து விழாவோட சேர்த்து கட்சி புத்தம் புது புத்துணர்ச்சி மாநாடு நடத்துறாரு. ஆரம்ப முதல் கடைசி வரையில் நீ தான் பொறுப்பா இருந்து நடத்தி வைக்கணும்னு சொல்லிட்டாரு. உனக்கு நல்ல சான்ஸ் தணி, வெளுத்துக் கட்டு ", என்றார்.
தணிகாசலத்துக்கு உடம்பு ஆடியது. நெஞ்சம் பூரித்த்து. கட்சியில் அறுபது எம்.எல்.ஏ. தலைவர் தம்மைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறார். மந்திரி பதவி நிச்சயம். மின்சார வாரியம் கிடைத்தால் போதும். ஒரு வேளை எம்.பி நியமனம் கிடைக்கலாம். மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்பு. இந்தி படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
தொகுதிக்கு ஃபோன் அடித்து தமக்கு நெருக்கமான மூவரைக் கூப்பிட்டார். வட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், ஊர் பஞ்சாயத்து பிரஸிடண்ட் மூவரும் மன மகிழ்ந்து சென்னையில் வந்து இறங்கினார்கள்.
 "நெசமா தலைவரு என் பேரைச் சொன்னாராண்ணே?" என்று கேட்டார் வட்டம்.
 "நீ இல்லாம இது நடக்காதுனு அவருக்குத் தெரியும்வே!"
பி.ஏ சொன்னது போலவே முதலில் போஸ்டர் அடித்தார்கள். 'காது குத்த அஞ்சாத தங்கமே', 'தட்டானைத் தட்டிக் கேட்கும்   சிங்க  குட்டியே' என்று தொடங்கி, 'வருங்கால முதல்வர் பெற்ற  வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வரே' என்னும் வரை சென்னை மாநகரமெங்கும் போஸ்டர் அடித்தார்கள். 'உலகம் கண்டறியா' ஊர்வலத்துக்கு மேடை கட்டினார்கள். சிலம்பத்துக்கு ஆள் குறைய பஞ்சாயத்து சிலம்பம் சுற்றினார். பிரியாணி வாங்க கும்பலிடையே அடிபட்டு மிதிபட்டு கடைசியில் நால்வரும் களைத்துப் போய் நடந்தே எம்.எல்.ஏ ஹாஸ்டலை அடைந்தார்கள்.
இரவு ஒரு மணி.
"தலைவரைப் பார்த்து பேசக் கூட முடியலியே", என்று வருத்தப்பட்டார் வட்டம்.
"பிஸியா இருந்திருப்பாருல்ல. நான் நாளைக்குப் பார்க்கும் போது அவசியம் சொல்றேன்."
"சரி, சென்னையைச் சுத்திப் பார்த்த மாதிரி ஆச்சு", என்றார் ஒன்றியம்.
 "அண்ணே, ரொம்ப நாளா ஒரு ஆசை. சிங்கம் பார்க்கணும்", என்றார் பஞ்சாயத்து.
இப்படித் தான் சிறிய ஆசைகளில் பெரிய விபரீதங்கள் தொடங்குகின்றன.
"சும்மா தூங்குவே", என்றார் ஒன்றியம்.
"இல்லண்ணே, நெசமாவே  சிங்கம் பார்க்கணும்னு ஆசை. பொண்டாட்டி கிட்ட வேற சொல்லிட்டு வந்துட்டேன்..."
"நாளைக்கு ராத்திரி நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்கணும். எங்க போறது சிங்கத்தப் பாக்க?"
வட்டம், "வண்டலூர் ஜூ சொல்றீங்களா? எனக்கும் பாக்கணும்னு இருக்கு".
எம்.எல்.ஏ, "நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அஸெம்பிளில முக்கியமான ஓட்டு இருக்கு", என்று இழுத்தார்.
மற்றவர்கள் பொறாமையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சட்டசபை; ஒட்டு; நிகழ்கால முதல்வர்; 'சபாநாயகர் அவர்களே' ; பிடுங்கி எறிய முடியாமல் பொருத்திய மைக்; இறுக்க கட்டிய கரை வேட்டிகள்...
"என்ன விஷயம் பத்தி ஓட்டுண்ணே?"
".... கட்சி எம்.எல்.ஏ சட்டை போடாமல் சட்டசபைக்கு வரலாமான்னு கேள்வி எழுப்பி இருக்காரு. கூட்டணி கட்சியும் ஆளுங் கட்சியும் சேர்ந்து எதிர்க் கட்சிக்கு சம பலமா இருக்கு. நாளைக்கு ஓட்டுல ஒரு ஆள் குறைஞ்சாலும் ஆட்சி கவுந்துடும். எல்லாரும் இருந்தே ஆகணும்னு தலைவர் சொல்லிட்டாரு."
"நாலு மணிக்குத் தானே ஒட்டு? நாம காலையில போயிட்டு வந்துரலாம்"  என்றார் பஞ்சாயத்து.
எம்.எல்.ஏ யோசித்தார். பாவம், எல்லோரும் மாங்கு, மாங்கு என்று வேலை பார்த்து இருந்தார்கள்.
"சரி, சீக்கிரமா போயிட்டு வந்துரலாம்."

*
மறு நாள் காலையில் நால்வரும் .... தொகுதி எம்.எல்.ஏ காரை கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வண்டலூர் கிளம்பினார்கள். எம்.எல்.ஏ ஓட்டிக் கொண்டு போனார்.
"ஆத்துல தண்ணி ஓடுதாவே?" என்று கேட்டார் எம்.எல்.ஏ.
"எங்கண்ணே... மழை இல்ல, தண்ணியும் இல்ல. நம்ம ஊருல முன்ன எப்பிடி சிலு சிலுனு காத்து வரும்; இப்பல்லாம் எரியுது."
 "மாரியம்மனுக்கு பூசை போட்டா எல்லாம் சரியாயிடும்."
 "பூசைல ஒரே குளறுபடி. முன்ன கிடா வெட்டுவோம். இப்ப அதுல்லாம் வெட்டக் கூடாதுன்னா எப்பிடி மழை வரும்?"
இப்படியாக இனிமையாக பேசிக் கொண்டு போனார்கள். வண்டலூரில் டிக்கட் வாங்கி உள்ளே போன போது மணி பதினொன்று. நுழை வாயில் அருகில் இருந்த கொரில்லா கூண்டு முன்னால்  சற்று நின்றார்கள். தள்ளி இரு கொரில்லாக்கள் தெரிந்தன. ஒன்று மற்றொன்றுக்கு பேன் பார்த்துக்
கொண்டிருந்தது.
"இவ்வளவு தள்ளி இருக்கு?" என்று வியந்தார் வட்டம்.
இங்கிருந்து எம்.எல்.ஏவுக்கு  தலைவலி  தொடங்கியது. எல்லா இடத்திலும் நின்று நின்று போனார்கள். வட்டம் எதைப் பார்த்தாலும் கறி வைத்து தின்றால் நன்றாக இருக்கும்  என்று அபிப்பிராயப்பட்டார். ஒன்றியத்தின் அப்பா எல்லா மிருகங்களுடனும் சண்டை போட்டிருந்தார். பஞ்சாயத்து கேள்வி மேல் கேள்வி போட்டு சித்திரவதை செய்தார். எம்.எல்.ஏவின் பொறுமை எல்லை கடக்கும்படி கடைசியாக,  'ஒட்டகம் பெருசா,  ஒட்டகச் சிவிங்கி பெருசா?' என்று கேட்டதும் தணிகாசலம்,  "முதல்ல லயன் ஸஃபாரி போகலாம்..நேரமாச்சு", என்றார்.

*
ஒரு முப்பது வயது மதிக்கத் தக்க பெண் இரு சிறுவர்களுடன் ஸஃபாரி கிளம்பும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள். வேன் வந்து நின்றதும் எல்லாரும் ஏறிக் கொண்டார்கள். சரியாகப் பனிரெண்டு மணிக்கு வண்டி கிளம்பியது.
கூண்டு போன்ற வண்டி. சுற்றிப் பாதுகாப்பான இரும்பு வலை. உள்ளே வசதியுடன் உட்கார்ந்து போக இருக்கைகள் இருந்தாலும் எல்லாரும் நின்றார்கள். வழக்கம் போல முன்னால் இந்த வண்டியில் சவாரி செய்தவர்கள் தங்கள் முத்திரையை விட்டுச் சென்றிருந்தார்கள். இருக்கைகளின் பின்னால் 'மீனா, ஐ லவ் யூ...சுந்தர்', 'கருப்பம்பட்டி சுதாகர்' என்றெல்லாம் எழுதி இருந்தது.
செடிகளும் மரங்களும் அடர்ந்து இருந்த பாதையில் வண்டி சென்றது. வெறும் மண் பாதை. இரு பக்கமும் சரிந்து பள்ளத்தில் முள் செடிகளும் உதிர்ந்த இலைகளும் தெரிந்தன.
ஸஃபாரி தொடங்கியதில் இருந்து வண்டியில் மௌனம் நிலவியது. எல்லாரும் மர ஒட்டைகளுக்கு இடையே சிங்கம் தெரிகிறதா என்று பார்த்து வந்தார்கள்.
பேசும் போது முணுமுணுத்தார்கள்.
பஞ்சாயத்துக்கு  எங்கெங்கு நோக்கினும் சிங்கம் தெரிந்த்து. சில சமயம் மர உச்சியில் எல்லாம் சிங்கத்தைப் பார்த்தார். எல்லோரையும் அழைத்துக் காட்டினார். சிறுவர்கள் இருவரும் தம் அம்மாவை இறுக்கப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் கண்கள் மலர்ந்திருந்தன.
"டிரைவர், என்னப்பா சிங்கத்தையே காணோம்?" என்று கேட்டார் ஒன்றியம்.
டிரைவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் வண்டி சிறிது தூரத்தில் நின்றது.நின்ற இடத்திற்கு இரு பக்கமும் இருந்த பள்ளத்தில், இடது பக்கம் மரங்கள் இல்லை. சரிவான பள்ளத்தின் முடிவில் ஒரு சிறிய ஓடை இருந்தது.
கலங்கலான அந்த ஓடைத் தண்ணீரை நாலு சிங்கங்கள் குடித்துக் கொண்டிருந்தன. கால்களை அகற்றிக் குனிந்த நிலையில் அவற்றின் பெரிய தலைகள் மஞ்சள் நிறத்தில் பளிச்சிட்டன. ஒரு ஆண் சிங்கமும் மூன்று பெண் சிங்கங்களும் இருந்தன. அவை வண்டியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
சற்று நேரத்தில் தண்ணீரை விட்டு விலகி நாலும் காட்டுக்குள் சென்று மறைந்தன.
"பூனை மாதிரியே இருக்கு!" என்றார் எம்.எல்.ஏ.
"எங்க அப்பா இது கூட சண்டை போட்டிருக்காரு", என்றார் ஒன்றியம்.
சிறுவர்கள் இருவரும அம்மாவிடம் சிங்கத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். எல்லோரும் சிறிது நேரம் சிங்கம் திரும்பி வருகிறதா என்று பார்த்தார்கள்.
"சிங்கம் பாக்கணும்னியே, பாத்தாச்சாவே?" என்று எம்.எல்.ஏ மீசையை முறுக்கினார்.
"வண்டியை விடுப்பா.." என்றார் வட்டம்.
"நம்ம கட்சிக்கு சிங்கம் சின்னமா மாத்தணும்ணே", என்றார் .பஞ்சாயத்து.
"என்ன இன்னும் வண்டி கிளம்பலை?" என்றார் வட்டம் உரத்து.
"தம்பி, வண்டியை கிளப்புப்பா!!" என்று டிரைவருக்கும் பயணிகளுக்கும் இடையே இருந்த வலைக் கதவைத் தட்டினார் ஒன்றியம.
டிரைவர் பக்கம் இருந்து சத்தமே இல்லை.
"என்னப்பா, வண்டியைக் கிளப்பு", என்று எம்.எல்.ஏ வலை வழியாகக் கத்தினார்.
டிரைவர் தலை ஒரு பக்கம் சாய்ந்திருந்தது. கண்கள் மூடியிருந்தன.
"ஐயையோ!" என்றார் .பஞ்சாயத்து.
எல்லோருமாகச் சேர்ந்து கதவை இடித்துக் கத்தினார்கள். ஆனால் மூடிய கண் மூடியபடி இருந்தது.
எம்.எல்.ஏ சுற்றிப் பார்த்தார். ஒன்றியத்திடம் "ஒரு நிமிஷம் சுத்திப் போய் டிரைவரைத் தட்டி எழுப்புங்கண்ணே", என்றார்.
"என்னது! வெளில போயா? வெளில சிங்கம் இருக்குவே!"
"உங்கப்பா சிங்கம் கூட சண்டை போட்டார்னீங்க?"
 "சண்டை போட்டார்னு தான் சொன்னேன். ஜெயிச்சாருன்னு
சொன்னேனா?"
"யாரும் கீழல்லாம் இறங்ிகக் கூடாது. சின்னப் பசங்க இருக்காங்க", என்றாள் அந்தப் பெண்.
"என்ன அவசரம்? நாம வரலைன்னா கொஞ்ச நேரத்துல அவங்களே தேடிட்டு வருவாங்க. இங்கயே இருப்பம். சிங்கம் வருதா பாப்போம்",  என்றார் வட்டம்.
எம்.எல்.ஏ மிரள மிரள விழித்தார். பகீரென்றது அவருக்கு. "ஐயோ, ஓட்டு.." என்று தலையில் கை வைத்து அமர்ந்தார்.
"என்ன பொல்லாத  ஒட்டு... கேட்டா சொல்லிக்கலாம்", என்றார் பஞ்சாயத்து.
"உங்க கிட்ட செல் ஃபோன் இல்லையா? அது இருந்தா ஃபோன் பண்ணி ஆளுங்களைக் கூப்பிடலாமே?"
எம்.எல்.ஏ அசட்டையாக, "அதெல்லாம் இல்லை. ஒண்ணு குடுத்தாங்க. அது சரியா வேலை செய்யலை. சும்மா கிர், கிர்னு குதிக்குது. எதோ ரிப்பேர்", என்றார்.

*
அரை மணி நேரம் சென்றது. எம்.எல்.ஏ மூலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். அவர் மனதில் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
சட்டசபைக் கதவுகள் மூடியிருந்தன. உள்ளே சபாநாயகர் மாட்சிமையுடன் அமர்ந்திருந்தார். எதிர்கட்சி பெஞ்சுகளில் சலசலப்பு. "தணிகாசலம் வரலை; ஓட்டு நமக்குத் தான்", என்று எல்லாரும் பேசிக் .கொண்டிருந்தார்கள். எதிர்கட்சித் தலைவர் கையைக் குலுக்க பலத்த போட்டி.
ஆளும் கட்சி பெஞ்சுகளில் சோகம் கப்பியிருந்தது. "தணி கவுத்துட்டான்", என்று தலைவர்  தலையில் கை வைத்திருந்தார்.
"ஓட்டெடுப்பு தொடங்கட்டும்", என்றார் எதிர்கட்சித் தலைவர்.
"ஒரு அரை மணி கழிச்சு தொடங்கலாமே?" என்றார் ஆளும் கட்சித் தலைவர்.
"எதுக்கு?'
 "வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. காலையில இருந்து பேதி."
"அதோட இப்போ எம கண்டம்",  என்றார் கூட்டணிக் கட்சித் தலைவர்    
எதிர்கட்சித் தரப்பில் பெரும் கூக்குரல் எழுந்தது.  சபாநாயகர் சுத்தியை எடுத்துத் தட்டினார். எதிர்கட்சி அங்கத்தினர்கள்  சபை நடுவுக்கு ஓடி வந்தார்கள். ஆளும் கட்சித் தரப்பில்  வேட்டியை தூக்கிக் கட்டித் தயாரானார்கள். மார்ஷல்கள் மாண்புமிகு அங்கத்தினர்களைத் தடுக்க முன்னால் வந்தார்கள்.
படீரென்று ஒரு சத்தம்.
சட்டசபைக் கதவுகள் திறக்கின்றன. சூரிய வெளிச்சம் கண் கூச திறந்த கதவுகள் பின்னால் இருந்து ஒரே புகை. வாசலில் ஒரு நிழல் உருவம் தெரிந்தது.  .  
எல்லோரும் கண்ணை மறைத்த வண்ணம் பார்த்தார்கள். அந்த உருவம்  'கர்ரக்', 'கர்ரக்' என்று ஷூ சத்தமிட இறங்கி வந்தது.
வேட்டியை மடித்துக் கட்டியது.        
"நான் வந்திட்டேன்", என்றார் தணிகாசலம்.

*
தலையை உலுக்கிக் கொண்டார் தணிகாசலம்.
மணி ஒன்று. ஓட்டெடுப்புக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. இப்படி உட்கார்ந்து இருந்து ஒரு புண்ணியமில்லை.
வீரத்துடன் எழுந்தார்.
ஜன்னல் வழியே சிங்கம் போன திசையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவருடைய சகாக்கள் மூவரும்.
"இங்க வாங்கய்யா", ஏன்றார்.
"யாரும் வர மாதிரி தெரியலை. இந்த ஜூவே ஒரு மாதிரி. கொஞ்ச நாள் முன்னாடி ஏதோ சிங்கமோ புலியோ காணாம்ப் போனதே நாலு நாள் கழிச்சுத் தான் கண்டுபிடிச்சாங்க. நாம காத்திருந்து புண்ணியமில்லை."
"அதுக்காக... வெளியில எல்லாம் போக முடியாதுவே!" என்றார் ஒன்றியம்.
எம்.எல்.ஏ  அவரை முறைத்தார். "ஓட்டு போடாட்டி எனக்கு மட்டும் பிரச்சினை இல்லை.  சிங்கம் பாக்கணும்னு சொன்னது யாருவே? எதிர்கட்சி கூட சேர்ந்துட்டு சதியா பண்ணுறீங்க?"
மூவரும் அமைதியாக இருந்தார்கள்.
"நான் உண்மையான கட்சித் தொண்டன். நீங்க சொல்றதைச் செய்யறேன்",  என்றார் வட்டம்.
ஒன்றியம் பல்லைக் கடித்தபடி தலையை ஆட்டினார்.
பஞ்சாயத்தை யாரும் கேட்கவே இல்லை.
"என்ன பண்ணலாம்?" என்று கேட்டார் ஒன்றியம்.
எம்.எல்.ஏ  யோசித்தார்.
"நாலு பேரும் கீழே இறங்குவோம்.."
"உம்.."
"பக்கத்து மரத்துல இருந்து நாலு கிளையை உடைச்சு வேல் கம்பு செய்வோம்."
"உம்.."
"இந்தப் பாதை வழியா ஓடுவோம். எப்பிடியும் கதவுல கொண்டு போய் விடும்."
"வழியில  சிங்கம்  வந்தா?"
"வேல் கம்பு வச்சு சண்டை போட்டு விரட்டுவோம். வீரப் பரம்பரைய்யா நாம.."
"யாரும் வெளியல்லாம் இறங்ிகக் கூடாது. சின்னப் பசங்க இருக்காங்க", என்றாள் அந்தப் பெண் மறுபடி.
எம்.எல்.ஏ  அந்தப் பெண்ணை உறுத்து விழித்தார்.
"இந்தம்மா சொல்றதெல்லாம் நாம கேட்கணும்னு இல்லை", என்றார் ஒன்றியம்.
"அதானே?" என்றார் வட்டம்.
"வேல் கம்பு செய்ய ரெடியா?" என்று கேட்டார் எம்.எல்.ஏ.
அந்தப் பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.
"ஏம்மா சிரிக்கிற?" என்றார்  பஞ்சாயத்து.
"பின்ன... என்னங்க பிளான் போடறீங்க? நாலு பேர் எதுக்கு? இந்த வண்டி இருக்குல்ல? யாராவது இறங்கி டிரைவரைத் தள்ளி வச்சிட்டு வண்டியை ஓட்டிட்டுப் போறது தானே?"
எம்.எல்.ஏ யோசித்தார்.
"இது நல்ல யோசனையா இருக்குண்ணே!" என்றார்  பஞ்சாயத்து.
"எல்லாம் சரி. யாரு போறது?" என்று கேட்டார் வட்டம்.
"வட்டம், உள்ளதுல இளவட்டம்  நீ தான்.  போறியா?" என்றார் எம்.எல்.ஏ.
" ஆமாம்பா. அதோட இப்ப சிங்கத்துக்கு லஞ்ச் டைம். சாப்பிட்ட சிங்கம் யாரையும் ஒண்ணும் பண்ணாது",   என்றார் ஒன்றியம்.
 "எதோ சிங்கத்துக்கு சத்துணவு போடறாப்பல பேசுறீங்க. அந்தச் சிங்கம் எல்லாம் நாலு நாள் பட்டினி கிடந்த மாதிரி இருந்தது",   என்றார் வட்டம்.
"ஒண்ணு பண்ணலாம். யாரு போறதுன்னு குலுக்கல் முறையில தேர்ந்து எடுக்கலாம்", என்றார் எம்.எல்.ஏ
பஞ்சாயத்திடம் ஒரு பேப்பரை எடுத்து, பேனாவைக் கொடுத்தார்கள்.
"எழுதுவே...மந்திரம்..",   என்றார் ஒன்றியம்.
"என் பெயரை தண்ணிகாச்சல்லம் பி.ஏன்னு போடுப்பா", என்றார் எம்.எல்.ஏ.
பெயர்களை விரைவாக எழுதிக் குலுக்கிப் போட்டார்கள்.
"தம்பி, நீ வந்து எடுப்பா",  என்று அந்தப் பெண்ணின் பையனைப் பார்த்துச் சொன்னார்  வட்டம்.
அவன் வந்து எடுத்தவுடன், அந்தப்  பெண்ணிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.
பஞ்சாயத்தின்  பெயர் வந்திருந்தது.

*
எல்லோரும் கதவுப் பக்கம் குழுமி  நின்றார்கள். பஞ்சாயத்தின் கை கால்கள் ஆடின.
"சிங்கம் வந்தா நகராமத் தரையில படுத்துரு. இறந்துட்டனு நினைச்சு சிங்கம் ஒண்ணும் பண்ணாது." என்றார் ஒன்றியம்.
"சிங்கம் பாக்கணும்னு சொன்னேன்..இவ்வளவு பக்கத்துலன்னு சொல்லலியே", என்றார்  பஞ்சாயத்து.
பிறகு எம்.எல்.ஏவிடம், "சொத்து எல்லாமே வைப்பு மவன் வெங்கடேசனுக்குத் தான். என் மவன் அவன்  தான்.  வேற யாருக்கும் சல்லி காசு கிடையாது."
"வீடு யாருக்கு?" என்றார் வட்டம்.
"சும்மா இருய்யா..அவனே பயந்திருக்கான். கருமாரி பெயரை சொல்லிட்டுப் போவே",   என்றார் ஒன்றியம்.
"இறங்கி என்ன பண்ண்ணும்னு தெரியுமில்ல?" என்று கேட்டார்  எம்.எல்.ஏ.
'டிரைவரைத் தள்ளி வைக்கணும்", என்றார்  பஞ்சாயத்து. அவர் குரல் தழுதழுத்தது.
"பிறகு வண்டி ஓட்டிட்டுப் போகணும்..",  என்றார் எம்.எல்.ஏ.
"வண்டி ஓட்டணுமா?"  அவர் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
"ஆமா."
"எனக்கு வண்டி ஓட்டத் தெரியாதே", என்று கம்மிய குரலில் அழுதார்.
எல்லோரும் விக்கித்து நின்றார்கள். "என்னண்ணே..  வண்டி ஓட்டணும்னு நீங்க சொல்லவே இல்லியே?" என்றார் வட்டம்.
"எனக்கும் வண்டி ஓட்டத் தெரியாது",  என்றார் ஒன்றியம்.
எம்.எல்.ஏ சுற்றிப் பார்த்து விழித்தார்.

*
இந்த முறை எம்.எல்.ஏ கை, கால் நடுங்க கதவுப் பக்கம் நின்றார்.
எல்லோரும்  மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறக்கையில் திடீரென்று கையைத் தூக்கி நிறுத்தினார்.
"எங்கயோ சிங்கம் உறுமற மாதிரி இல்ல?"
வட்டம் தொண்டையைக் கனைத்தார். "காலையில சாப்பிட்டது. வாயுத் தொந்தரவு."
கதவைத் திறந்து எம்.எல்.ஏ இறங்கியதும்  பின்னால்  கதவை மடேரென்று சாத்தி மூடினார்கள்.
எம்.எல்.ஏ சுற்றி பயத்துடன் பார்த்தார். பிறகு பின்னால் திரும்பி,  வலைக் கதவு வழியே வேனுக்கு உள்ளே பார்த்து கையைக் காட்டினார். அவருடைய சகாக்கள் மூவரும் கதவருகே நின்று, "என்ன?" என்று கத்தினார்கள்.
"கத்தாதீங்கய்யா...தூங்குற சிங்கத்த எழுப்பிடுவீங்க போலிருக்கே", என்று பதிலுக்குக் கத்தினார் எம்.எல்.ஏ. "அந்த அம்மாவைக் கூப்பிடுங்க."
அந்தப் பெண் கதவருகே வந்து, "என்ன?" என்று கேட்டாள்.
"இப்ப எந்தப் பக்கம் போகணும்?"
"இப்படியே போங்க. போய் பாஸெஞ்சர் கதவைத் திறந்து உள்ளே
போன உடனே  கதவைச் சாத்துங்க. கதவு பூட்டியிருந்தா நேரா திரும்ப வாங்க.  வேல் கம்பெல்லாம் வேண்டாம்."
எம்.எல்.ஏ தலையை அசைத்து மெதுவாக நடக்கத் தொடங்கினார்.
முதல் முதல் கள்ள ஓட்டு போட்ட போது அடித்துக் கொண்ட மாதிரி அவர் நெஞ்சு அடித்துக் கொண்டது. பின்னால்  எந்த நிமிடமும் சிங்கம் பாயலாம் என்று தோன்றியதால் சற்றே குனிந்து நடந்தார். ஏனோ ஸ்லோ மோஷனில்
நடந்தார்.
பின்னால் மறுபடி உறுமல் சத்தம் கேட்டது. "நேத்து நைட்டு தின்ன பிரியாணிக்கு அப்புறமும் வட்டத்துக்கு எப்படி வாயு வருது?" என்று ஆச்சரியப்பட்ட வண்ணம் வேன் கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்து கதவைச் சார்த்தும் போது பின் கண்ணாடியைப் பார்த்தவருக்குத் தூக்கி
வாரிப் போட்டது.
பின்னால் ஒரு சிங்கம் மெதுவாக உறுமிய வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தது. வேனின் பின் டயரை முகர்ந்து பார்த்தது.
எம்.எல்.ஏ கதவை மெதுவாகச் சார்த்தி விட்டு "வெங்கடாசலபதி,
வெங்கடாசலபதி", என்று முணுமுணுத்த வண்ணம் தலை முடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
சிங்கம் வேனைத் தாண்டி நடந்து சென்று மறைந்தது. அது திருப்பத்தில் மறையும் வரை அமைதி நிலவியது. பிறகு, "எம்மாம் பெரிசா இருக்கு!" என்றார் பஞ்சாயத்து.
எம்.எல்.ஏ பல்லைக் கடித்தார்.
"பேட்டை ரௌடியாட்டம் போவுது பாரு. எல்லாத்தையும் கூண்டுல பிடிச்சுப் போட்டு முட்டிக்கு  முட்டி தட்டணும்",  என்றார் ஒன்றியம்.

*
சற்று ஒல்லியான டிரைவரை ஆராய்ந்து பார்த்ததில் மூச்சு வருவது தெரிந்தது. 'தண்ணி' அதிகம் என்று தோன்றியது. அவனைத் தூக்கி வெளியே போட வேண்டும் என்ற வட்டத்தின் அபிப்பிராயத்தை ஒதுக்கி அவனைக் கஷ்டப்பட்டு இடம் மாற்றினார் எம்.எல்.ஏ.
வேன் கிளம்பியது.
சிறிது  தூரம் பாதை நேராகச் சென்றது.
"இன்னும் சிங்கக் குட்டியைப் பாக்கலியே!" என்று வருத்தப்பட்டார்
பஞ்சாயத்து.
ஒரு திருப்பத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது.
எம்.எல்.ஏ வண்டியை நடுவில்  நிறுத்தினார். "எந்தப் பக்கம்மா
போகணும்?" என்று திரும்பிக் கேட்டார்.
"அங்க ஒரு போர்டு இருக்கு. அது பக்கம் போய் நிறுத்துங்க", என்றாள் அந்தப் பெண்.
எம்.எல்.ஏ வேனை போர்டு பக்கம் கொண்டு போய் நிறுத்தினார்.
எல்லோரும் போர்டை உற்றுப் பார்ப்பார்கள். அந்த போர்டின் மேல்  'வருங்கால  முதல்வர் பெற்ற  வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வரே' என்று போஸ்டர் ஒட்டி இருந்தது.
"அடக் கடவுளே!"  என்றார் வட்டம்.
"போஸ்டரை யாராவது இறங்கிக் கிழிங்கய்யா" என்றார்  ஒன்றியம்.
அந்தப் பெண் குறுக்கிட்டு, "அதெல்லாம் வேணாம். அந்த ரோடு  பிரியற இடத்துல போய் வண்டியை நிறுத்துங்க. முன்னாடி போன சிங்கம் சாப்பிடப் போவுது. அது போன திசையில தான் நம்மளும் போகணும்", என்றாள்.
ரோடில் சற்று முன் சென்ற சிங்கத்தின் தடம் தெளிவாகத் தெரிந்தது. இடது பக்கம் சென்ற பாதையில் திரும்பினார்கள். சிறிது நேரத்தில் தூரத்தில் வாசல் கதவுகள் தெரிந்தன.
எம்.எல்.ஏவின் சகாக்களுக்கு குதூகலம் தாங்கவில்லை.
"சாதிச்சுட்டோம்ல!"  என்றார் வட்டம்.
"சிங்கத்தையே ஜெயிச்சுட்டோம்", என்றார்  ஒன்றியம்.
திடீரென்று வட்டம், "அண்ணே! வண்டியை நிறுத்துங்க!  நிறுத்துங்க!" என்று அலறினார்.
எம்.எல்.ஏ என்னவோ ஏதோ என்று நினைத்து பிரேக் போட்டார்.
"என்னப்பா?!"
"இத பாருங்க, நாம வரலைன்னு தெரிஞ்சதும் வெளியில பெரிய
கூட்டமே வந்திருக்கும். பத்திரிகைக்காரங்க, டி.வி எல்லாம்
காத்திருப்பாங்க."
"அதனால?"
"அவங்க கேட்டா நாம உண்மையைச் சொல்லணும். நடந்ததை
அப்படியே  சொல்லணும்."
ஒன்றியம் புரிந்து கொண்டு,  "ஆமாவே" என்று ஆமோதித்தார்.
வட்டம் தொடர்ந்து, "நானும் இவரும் கீழே இறங்கி வேல் கம்பு
செஞ்சதைச் சொல்லணும். தணி வந்து வீரமா டிரைவரைத் தள்ளும் போது, எங்க மேல ரெண்டு சிங்கம் பாயுது..."
"நாலு", என்றார் ஒன்றியம்.
"நாலு சிங்கம் கூட சண்டை போட்டு துரத்திட்டோம்.. என்ன நான் சொல்றது?"
"நான் என்ன பண்ணிணேன், நான் என்ன பண்ணிணேன்...",  என்று குதித்தார் பஞ்சாயத்து.
"நீ இந்த அம்மாவையும் பசங்களையும் பாத்துக்கலையா.." என்றார் வட்டம்.
கதவு நெருங்கி விட்டது.
ஒன்றியம், "தம்பி, நம்புற மாதிரி இருக்கணும்னா நாம கொஞ்சம்  காயப்பட்ட மாதிரி காட்டிக்கணும்", என்றார்.
வட்டம் வேட்டியைத் தூக்கி டர்ர்ரென்று கிழித்துக் கொண்டார்.
பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, "நீ திரும்பிக்கம்மா" என்று விட்டு இன்னும் சிறிது கிழித்துக் கொண்டார்.
ஒன்றியமும் தொடர்ந்து சட்டையைக் கிழித்து விட்டு, எம்.எல்.ஏவிடம் "நீயும்  கொஞ்சம் கிழிச்சுக்கவே",  என்றார்.
"சும்மா இருங்கண்ணே. நல்ல வேட்டி இது ஒண்ணு தான். மத்ததெல்லாம் சட்டசபையில கிழிச்சாச்சு."
வண்டி இரண்டு கதவுகளையும் தாண்டி வெளியே வந்தது. வெளியே பலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எம்.எல்.ஏ  வண்டியை நிறுத்தினார். கதவைத் திறந்து அவர் இறங்குவதற்குள் , பின்னால் வட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து மூவரும் வெற்றிப் புன்னகையுடனும், கிழிந்த வேட்டி, சட்டைகளுடனும் கீழே இறங்கினார்கள்.
கதவுகள் பக்கமிருந்து ஒருவன் விடுவிடென்று நடந்து  எம்.எல்.ஏ முன்னால் வந்து நின்றான்.
"ஏய்யா இவ்வளவு லேட்டு? அடுத்த ரவுண்டுக்கு இவ்வளவு பேர்
நிக்கிறாங்க இல்ல?"

*

2 comments:

Ganapathy said...

Haha wonderful story... a very nice commentary on the current political state of affairs. Satire is a tough genre to master, and to make it a reader identify with it is even more difficult. You've successfully done that, kudos!

Ramiah Ariya said...

Thank you Ganapathy.