Tuesday, April 26, 2016

மனைவி அமைவதெல்லாம் - Tamil Short Film Script 4


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

மனைவி அமைவதெல்லாம்

FADE IN:

உட்புறம் – முதலிரவு அறை – இரவு

கதவு திறக்கிறது. மாலா உள்ளே வருகிறாள். 25 வயது மதிக்கத் தக்க பெண். தலையில் பூ வைத்திருக்கிறாள். கட்டில் அலங்காரத்துடன் இருக்கிறது. சுற்றிப் பார்க்கிறாள்.
பாத்ரூமில் பிரதாப் குளிக்கும் சத்தம் கேட்கிறது.
மாலா சற்று நேரம் அறையில் அமர்ந்திருக்கிறாள். கண்களை மூடுகிறாள்.
Screen fades.
உட்புறம் – முதலிரவு அறை – இரவு

மாலா கண்களைத் திறக்கிறாள். உள்ளே குளிக்கும் சத்தம் கேட்கிறது. எழுந்து அமர்கிறாள். சற்று நேரம் தரையைப் பார்க்கிறாள்.

உட்புறம் – பிரதாப் வீட்டு வாசல் – பகல்

பிரதாப்பும் மாலாவும் வலது கால் எடுத்து வைத்து வீட்டில் நுழைகிறார்கள். பின்னால் அவன் அப்பா, அம்மா. வீட்டுக்குள் பாட்டி டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மாலா ஒரு நாற்காலியில் உட்கார்கிறாள். அம்மா உள்ளே செல்கிறாள். அப்பா உள்ளே அறைக்குச் செல்கிறார்.
பிரதாப்
நீ இரு. நான் குளிச்சிட்டு வந்திர்றேன்

அவன் உள்ளே போகிறான். மாலா குழப்பத்துடன் அவன் போவதையே பார்க்கிறாள்.
பாட்டி
வா. இப்பிடி வந்து உக்காரு.

மாலா
இல்ல...ஏதாவது வேலை இருந்தா.

பாட்டி
இன்னைக்கு உனக்கு லீவு

சொல்லி விட்டு “ஹா ஹா” என்று சிரிக்கிறாள்.

உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.
மாலா
நீங்க ஏன் ஒரு நாளைக்கு இவ்வளவு முறை குளிக்குறீங்க?
பிரதாப்
(ஆச்சரியத்துடன்)
எவ்வளவு முறை?
மாலா
இன்னைக்கு மட்டும் ஒன்பது முறை
பிரதாப்
(யோசித்து)
அப்போ ரவுண்டா பத்தாவது முறை குளிச்சிட்டு வந்திர்றேன்.
மாலா அவன் ஜோக்கடிப்பதாக நினைத்துச் சிரிக்கிறாள். ஆனால் பிரதாப் துண்டை மறுபடி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் போகிறான். மாலாவின் சிரிப்பு உறைகிறது.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.பிரதாப், மாலா, பாட்டி, அவன் அம்மா,
அப்பா எல்லோரும் தரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலாவுக்குப் பின்னால் டி.வி. அதில் ஏதோ சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. பாட்டி அதையே உற்றுப் பார்க்கிறாள்.
விளம்பர இடைவெளியில் பாட்டி சுற்றிப் பார்க்கிறாள். “உம்” என்றாள்.
அப்பா
என்னடா, இன்னைக்கு ஆபீஸ் போலியா?
பிரதாப்
இல்லப்பா, இன்னைக்கு லீவு.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
மாலா எதுனா பேசு.
மாலா
(திடுக்கிட்டு)
வந்து...
டி.வியில் மறுபடி சீரியல் தொடங்குகிறது.
பாட்டி
சும்மா கிட
பிரதாப்
நான் குளிச்சிட்டு வரேன்.
அவன் எழுந்து போகிறான்.
மாலா
(தயங்கி)
இவர் ஏன் இத்தனை முறை குளிக்கிறார்?
அப்பா விட்டத்தைப் பார்க்கிறார். அம்மா தட்டைப் பார்க்கிறாள்.
பாட்டி
ஏன்? உங்க வீட்டுல யாரும் குளிக்க மாட்டீங்களோ?
மாலா
இல்லை...இவ்வளோ முறை குளிக்கிறாரே அதான்.
பாட்டி
அவன் தாத்தா மாதிரியே இருக்கான். அவரும் இப்பிடித் தான். ரொம்ப சுத்தம்.
சற்று நேர அமைதி.
மாலா
இல்ல.. ஏதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சினையோன்னு தான்...
பாட்டி
இன்னாது அது?
அப்பா
மனோதத்துவ நோய்
பாட்டி
(அம்மாவை பார்த்து)
இன்னாடி சொல்றா இவ?
அம்மா
உங்க பையனுக்கு மென்டலுன்றா.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
யாரு மெண்டல்?
ஆனால் சீரியல் பாட்டுக் கேட்கிறது. பாட்டி அமைதியாகிறாள்.
மாலா முகத்தில் கலக்கம்.
உட்புறம் – பிரதாப்பின் அறை – பகல்
பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருந்தாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து,
பிரதாப்
சீரியல்ல ஏதாவது பிரச்சினையா?
மாலா இன்னும் விசும்பி அழுகிறாள். பிரதாப்புக்கு ஒன்றும் புரியவில்லை.
பிரதாப்
பாட்டி எதுனா சொன்னாங்களா?
மாலா இல்லை என்று தலையாட்டுகிறாள்.
பிரதாப்
ஹனிமூனுக்குப் போலனு வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசத்துல குத்தாலத்துல சீஸன். போயிட்டு சுகமா குளிச்சுட்டே இருக்கலாம்.
மாலா
நீங்க ஏன் எப்ப பாத்தாலும் குளிச்சிட்டே இருக்கீங்க?
பிரதாப் மௌனமானான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரதாப்
(பரிதாபமாக)
இந்த வெய்யில்ல இது ஒரு கேள்வியா?
மாலா
எனக்குக் கவலையா இருக்கு. எதாவது டாக்டர் பாக்கலாமே
பிரதாப்
டாக்டரா? எதுக்கு? சுத்தமா இருந்தா தப்பா? எங்க தாத்தா கூட..
மாலா
அவருக்கும் எதாவது ப்ராப்ளமோ என்னவோ..
பிரதாப்புக்கு முதல் முறையாகக் கோபம் வருகிறது.
பிரதாப்
யாருக்கு பிராப்ளம்? உங்க பரம்பரையே பைத்தியம்
மாலா மெதுவாக அழுகிறாள்.
பிரதாப்
மாலா..இத பார். இப்பிடிப் பண்ணலாம். நாளைக்கு முழுசா குளிக்காம இருக்கேன். இருந்திட்டேன்னா டாக்டர் வேணாம்
மாலா தலையாட்டுகிறாள்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பாட்டி கால் மேல் கால் போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராம ஜயம் எழுதிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டி
(வேலைக்காரியிடம்)
வீட்டுக்கு மருமவ வந்தாச்சு..நீ அடுத்த மாசத்துல இருந்து வர வேண்டாம்
பிரதாப் பல் தேய்த்துக் கொண்டே வருகிறான்.
அம்மா
என்ன குளிக்காம பல் தேய்க்குற?
பிரதாப்
இன்னைக்குக் குளிக்கல
சட்டென்று அறையில் ஒரு மாற்றம் தெரிகிறது. பாட்டி எழுதுவதை நிறுத்துகிறாள். வேலைக்காரி பெருக்குவதை நிறுத்துகிறாள்.
அம்மா
(கவலையுடன்)
ஏண்டா, காய்ச்சலா?
பிரதாப்
இல்லம்மா சும்மா தான்.
பாட்டி
மாலா ஏதாவது சொன்னாளா? மாலா, இங்க வாடி.
மாலா நடுங்கிக் கொண்டே வருகிறாள்.
பாட்டி
அவனக் குளிக்க வேண்டாம்னு சொன்னியா?
மாலா
இல்ல பாட்டி..
பாட்டி
என்ன நொள்ள பாட்டி?
அப்பா
விடும்மா.. தண்ணி மிச்சம்.
பாட்டி
எவ்வளவு நேரம்னு பாப்போம். இவங்க தாத்தா இப்பிடித் தான். வீரமா குளிக்கலடினுவாரு. மதியத்துக்குள்ள சேர்ந்து குளிக்கலாம் வாடிம்பாரு
SERIES OF SHOTS

கடிகாரம் மெதுவாக நகர்கிறது. பிரதாப் அங்குமிங்கும் நடக்கிறான். ஒரு அருவி விழுவது போன்ற சத்தம் மெதுவாகத் தொடங்கி கூடிக் கொண்டே போகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
நண்பகல். எல்லோரும் வழக்கம் போல சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். பாட்டி மாலாவை முறைத்தவாறு இருக்கிறாள்.
பாட்டி
எங்க காலத்துல புருசனுக்குச் சரியா உக்கார்ந்து பேசக் கூட மாட்டோம்
பிரதாப்
பாட்டி...சும்மா இரு
அவன் அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். பிறகு சட்டென்று எழுந்து,
பிரதாப்
நான் குளிக்கப் போறேன்
அவன் உள்ளே போகிறான். மாலா அவனையே பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றன.
உட்புறம் – டாக்டர் கிளினிக்கில் – இரவு
நான்கைந்து நாற்காலிகளில் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு வரிசையாக. மாலாவும் பிரதாப்பும் இரு நாற்காலிகளில். டாக்டர் தன்ராஜ், Psychiatrist என்று போர்ட் தெரிகிறது.
அறையின் உள்ளே இருந்து ஒருவர் சிரித்தவாறே வெளியே போகிறார். உள்ளே ஒருவர் எழுந்து போகிறார்.
பிரதாப்
(பக்கத்தில் இருந்தவரிடம்)
உங்களுக்கு என்ன பிராப்ளம்?
அவர் முறைக்கிறார். பிறகு முகத்தை திருப்பிச் சுற்றிப் பார்க்கிறார்.
பக்கத்து சீட்காரர்
நான் எனக்காக வரல. ஒரு ஃபிரண்டுக்காக வந்தேன்
பிரதாப்
ஓஹோ
முன்னால் அமர்ந்திருப்பவர்
இங்க எல்லோரும் ஃபிரண்டுக்காகத் தான் வந்திருக்கோம்.
பஸ்ஸர் அடிக்கிறது.
உட்புறம் – டாக்டர் அறை – பகல்
டாக்டர் அறை மிதமான வெளிச்சத்தில் இருக்கிறது. பிரதாப்பும் மாலாவும் அமர்ந்திருக்கிறார்கள்.
டாக்டர்
சொல்லுங்க...என்ன விஷயம்?
மாலா
இவர் ஒவ்வொரு நாளும் நிறைய முறை குளிக்கிறார்
டாக்டர்
குணப்படுத்திரலாம்
பிரதாப் அதிர்சியாகிறான்.
பிரதாப்
டாக்டர், இதெல்லாம் ஒரு தப்பா? நான் சொல்றதக் கேளுங்க.
டாக்டர்
ஒரு நாளைக்கு எவ்வளோ முறை குளிக்குறீங்க?
பிரதாப்
பத்து முறை தான்
டாக்டர்
சின்ன வயசுல இருந்தா?
பிரதாப்
இல்ல டாக்டர்...இருபது வயசுல இருந்து...
டாக்டர்
குளிக்காம இருக்க முடியலை...இல்லையா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
டாக்டர்
சில டெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு Obsessive Compulsive Disorder இருக்கலாம். கவலப்படாதீங்க. நான் குடுக்கிற மாத்திரை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்
பிரதாப் முகம் பேயறைந்தது போல ஆகிறது.
டாக்டர்
நூத்துல அஞ்சாறு பேருக்கு வரது தான் இது. பரம்பரைல யாருக்காவது வந்தா உங்களுக்கும் வர ரிஸ்க் இருக்கு.
வெளிப்புறம் – சாலை – இரவு
பிரதாப்பும் மாலாவும் அமைதியாக நடக்கிறார்கள். சாலையில் வாகனங்கள் கடந்து போகின்றன. மஞ்சள் நிற விளக்கு வெளிச்சம்.
மாலா
ஃபீஸ் இவ்வளவு கேப்பாங்க தெரியாது.
பிரதாப் மவுனமாக இருக்கிறான். மாலா அவன் கையைத் தொட்டு,
மாலா
என் மேல கோபமா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
மாலா
கவலப்படாதீங்க..ஒரு மாசத்துலயே பலன் தெரியும்னாரே டாக்டர்
பிரதாப் சட்டென்று நிற்கிறான்.
பிரதாப்
நீ என்ன டைவர்ஸ் பண்ணிரு மாலா
மாலா புன்னகைக்கிறாள்.
மாலா
அதுக்குள்ள போரடிக்குதா?
பிரதாப் கண்களில் நீர் பளிச்சிடுகிறது.
பிரதாப்
டாக்டர் சொன்னாரு பாரு. பரம்பரையா வரலாமாம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு
மாலா
வரலாம் தான சொன்னாரு. பிள்ளைங்கள குளிக்கவே விட மாட்டேன்..கவலப்படாதீங்க
பிரதாப்
இல்ல மாலா..என்ன டைவர்ஸ் பண்ணிரு
மாலா மறுபடி நடக்கத் தொடங்குகிறாள்
மாலா
முதல்ல சரியாப் போகட்டும். அப்புறம் டைவர்ஸ் தான்
சில வினாடிகள் கழித்து
மாலா
பாட்டி கிட்ட சொல்லணுமா?
பிரதாப்
வேண்டாம்...பெரிய ரகளையாயிடும்
INSET – சில தினங்கள் சென்ற பின்
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – இரவு
பிரதாப்பும் மாலாவும் வீட்டுக்குள் நுழைகிறார்கள். பாட்டி, அம்மா, அப்பா மூவரும் ஒரே சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று தெரிகிறது.
அப்பா
ஏண்டா..எதோ டாக்டர் கிட்ட போறியாமே?
பிரதாப்
இல்லியே..
அம்மா விசும்புகிறாள்
அம்மா
ஐயோ பொய் வேற சொல்றானே...
அப்பா
நுங்கம்பாக்கத்துல நீ ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போன போது எங்க ஆஃபீஸ் சுப்பிரமணி பார்த்திட்டான்
பிரதாப்
(கவலையுடன்)
அவர் அங்க எதுக்கு வந்தாராம்?
அப்பா
எதோ ஃபிரண்டுக்காகப் போனானாம். நீ ஏண்டா பைத்தியக்கார டாக்டரெல்லாம் பாக்குற?
பிரதாப்
மாலாவுக்கு தொண்ட கட்டு. அதான் போனோம்
அப்பா
ஏண்டா பொய் சொல்ற?
பாட்டி
ஏ மாலா..இங்க வாடி. டாக்டராண்ட போனீங்களா?
மாலா
(தயக்கத்துடன்)
இவருக்குத் தான்
அம்மா மாலாவை முறைக்கிறாள்.
பாட்டி எழுந்து நிற்கிறாள். கைகளைத் தூக்கிச் சோம்பல் முறிக்கிறாள்.
பாட்டி
அதான் இவன் கொஞ்ச நாளா கம்மியாக் குளிக்கிறானா?
மாலா
ஆமாம்
அம்மா
அடிப் பாவி..எம் புள்ளயப் பைத்தியமாவே ஆக்கிட்டீங்களே
பாட்டி
தா....சும்மா கிட.
(beat)
இவன் தாத்தாவும் அந்தக் காலத்துல எல்லா டாக்டரும் பாத்தாரு. அப்பல்லாம் மாத்திரை ஒண்ணுமில்லை. இப்ப இருக்கு. நல்லதாப் போச்சு
பிரதாப்
(தைரியமாக)
அம்மா, சும்மா பைத்தியம் அது இதுனாத. அங்க வர எல்லாரும் ரொம்ப டீஸன்ட். நீ வேணா வந்து பாரேன். ஜாலியா இருக்கும்
இருவரும் அறைக்குள் செல்கிறார்கள்
உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் கதவுக்குத் தாளிடுகிறான்.
பிரதாப்
பாட்டி வாழ்க
மாலா
மெதுவாப் பேசுங்க
அவன் அவளை நெருங்கி வருகிறான்.
பிரதாப்
டைவர்ஸ் பண்ணலாமா?
மாலா முகம் சுளிக்கிறாள். அவனைப் பிடித்துத் தள்ளி
மாலா
இப்பல்லாம் குளிக்கிறதே இல்லையா? போய்க் குளிச்சிட்டு வாங்க

THE END




No comments: