டிரெயினில் தாமபரத்தில் இருந்து போகும் போது தினமும் அவளைப் பார்ப்பேன். கையில் "கல்கி" வைத்திருப்பாள். படித்துக் கொண்டே போவாள். அப்போதே சிறு சந்தேகம் எனக்கு.
"இருவர்" படம் வரும் முன்னால் "நறுமுகையே நறுமுகையே" பாடல் பிரபலமடைந்த நேரம். நான் பாட்டைக் கேட்டுப் பரவசமாகி டிரெயினில் நண்பர்களுடன் பேசி வந்தேன். அவள் சற்றுத் தள்ளி நின்றாள். காற்றில் அவள் முடி பறந்ததை ஒதுக்கி விட்டுக் கொண்டாள்.
"பாட்டு யாரு பாடினது?" என்றான் நண்பன் ஒருவன்.
"பாம்பே ஜெயஸ்ரீ," என்றவாறு அவளை பார்த்தேன். நான் நினைத்தது போலவே சட்டென்று தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். அது தான் முதல் முறை என்னைப் பார்க்கிறாள் என்று நினைக்கிறேன். கர்நாடகப் பாடகியான ஜெயஸ்ரீ பெயர் அவளுக்கு அறிமுகமானது தெளிவாகத் தெரிந்தது.
"யாரவ ஜெயஸ்ரீ?" என்றான் நண்பன்.
அவள் முகத்தில் சிறு புன்னகை.
சில நாட்களில் ஆவணி அவிட்டத்தன்று கருப்பு ஹோமக் கரியை எந்த நாளும் இல்லாமல் நன்கு நெற்றியில் பூசிக் கொண்டு சென்றேன். கவனித்துக் கொண்டாள்.
அவளுக்கு நான் யார் என்று confirm செய்தாகி விட்டது. ஆனால் எனக்கு இன்னும் சிறிது தயக்கம். ஒரு வேளை பரத நாட்டியம் வழியாக பாம்பே ஜெயஸ்ரீ பெயர் தெரிந்திருக்கலாம். பரத நாட்டியத்தில் நம்மாட்கள் தான் என்று சொல்லி விட முடியாது. பிள்ளைமார்களும், முதலியார்களும் இருப்பார்கள். அதுவும் முதலியார் நல்ல கலர் வேறு.
அவளுக்கும் என் தேவை புரிந்திருக்க வேண்டும். அக்காலத்தில் காஞ்சி பெரியவர் கவர் படம் போட்ட கல்கி அடிக்கடி வரும். பழைய கல்கி இதழ் கையில் வைத்திருந்தாள்.
நான், என்ன படிக்கிறாள் என்று பின்பக்கத்தைப் பார்த்தேன். முக்கூர் நரசிம்மாச்சாரியாரின் பத்தி. எனக்குத் திருப்தியானது.
மறுநாளே வீட்டில் பேசினேன்.
"சகோத்திரமா இருந்து வைக்கப் போறது," என்றாள் அம்மா.
"இந்தக் காலத்துல அதுல்லாம் இருந்தா பரவாயில்லை," என்றார் அப்பா.
அநியாயத்திற்கு வெட்கப்பட்ட அவளிடம் முகவரி வாங்கி, பெற்றோரிடம் போனில் பேசி, ஒரு நல்ல நாளில் அவள் வீட்டிற்கு நேரில் போய் விட்டோம்.
"பேசாமலேயே லவ்வா?" என்றார் அவள் அப்பா.
கோத்திரம் என்னவென்று அம்மா முதலிலேயே கேட்டு விட்டாள். நிம்மதியுடன் சாப்பிட உட்கார்ந்தோம்.
"கேளு, நீ தான் போய் கேக்கணும்," என்று அவள் தங்கை பிடித்துத் தள்ளி விட, அவள் என் எதிரே வந்து, "தேயர்த்தம் வேணுமா?" என்றாள்.
நான் திடுக்கிட்டேன். அம்மா, "என்ன கேட்டாய்?" என்றாள்.
"தீர்த்தம் வேணுமான்னு கேக்கறா," என்றார் அவள் அப்பா.
சற்று நேர அதிர்ச்சிக்குப் பின், அம்மா, "நீங்க அய்யங்காரா?" என்றாள்.
அவர்களும் திகைத்தனர்.
"பையன் நெத்தியைப் பார்த்து நம்மடவான்னு நினைச்சுட்டேன். எல்லாரும் ஒரே பகவானத் தான சேவிக்கறோம். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை."
அம்மா வெடுக்கென்று எழுந்து, "உங்களுக்கு எதுக்கு ஆட்சேபனை? நாங்கன்னா அதைச் சொல்லணும்!" என்று விட்டுக் கிளம்பினாள்.
No comments:
Post a Comment