மாறும் பருவங்கள் - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை - டிசம்பர் 1969-ல் கலைமகளில் வெளிவந்தது
மாறும் பருவங்கள்
வெ. ராதாகிருஷ்ணன்
சுந்தரம் கூடத்தைக் கடந்து சென்ற போது அங்கே தரையில் விரிப்பில் விட்டிருந்த குழந்தை அவரைப் பார்த்ததும் தன் பிஞ்சுக் கைகளையும் கால்களையும் உதைத்து அவருடைய கவனத்தை ஈர்த்துவிட்டது. "ஆடேடே, உன்னைத் தனியாக விட்டு விட்டார்களா?" என்று கொஞ்சியவாறு அதன் அருகில் போனார். அதன் மகிழ்ச்சி பன்மடங்காக இருக்கும் போலிருக்கிறது. பலவித ஒலிகளுடன் மோகனச் சிரிப்புப் பொங்க ஆரவாரம் செய்தது.
குழந்தையின் அந்த அழகில் சுந்தரம் லயித்துப் போய் நின்றார். "டேய், என் அறைக்குப் போவோமா?" என்று அதைத் தம் தோளில் சாய்த்துக்கொண்டு தம் அறையை நோக்கி நடந்தார்.
அவருக்குப் புல்லரித்தது. தமக்கு திருமணமாகி ஒரு வருஷத்தில் குழந்தைக்குத் தந்தையானபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி, தம் பிள்ளையின் குழந்தையைப் பார்க்கும்போது அதனுடன் கொஞ்சும்போதும் ஏற்படும் அனுபவத்தின் விந்தையை எண்ணினார். மனிதனின் ஆசைகள், அவனுடைய நினைவுகள், அனுபவங்கள் எல்லாவற்றையுமே அவனுடைய பல்வேறு பருவங்கள் புதுக் கோணங்களில் வேறுபடுத்திக் காட்டுமோ?
அந்த அறையில் இப்பொழுது இரண்டு குழந்தைகள் இருந்தன - சுந்தரத்தையும் சேர்த்து. சுவரில் தொங்கும் காலண்டரில் படங்களைக் காட்டினார். புத்தகத்தைக் கையில் கொடுத்து அது இழுப்பதைப் ரசித்தார். ஏழு மாதக் குழந்தைக்குத் தாம் சொல்லுவது புரியுமா என்றுகூட யோசிக்காமல் அவர் அந்தக் குழந்தையின் தோழராகி விளையாடிக்கொண் டிருந்தார்.
"போஸ்ட்!"
தபால்காரரின் சாதாரண அழைப்புத்தான் என்றாலும், நீரில் அமிழ்ந்து குளித்துக்கொண்டிருக்கும்போது பாம்பொன்று காலைச் சுற்றி விட்டதுபோலச் சுந்தரத்துக்கு உடம்பு விதிர்த்தது. தபாலை வாங்கிக்கொண்டு அவருடைய மருமகள் சீதா உள்ளே வந்தபோது 'ரிசல்ட்டு'க்காகத் தவிக்கும் மாணவனின் நிலையில் இருந்தார் சுந்தரம்.
"யாருக்குக் கடிதம்?" என்று அவர் சீதாவிடம் வினவியபோது தொண்டையில் ஈரம் இல்லை.
"எங்க அம்மாவிடமிருந்து!" என்று பெருமை வழியும் குரலில், அடங்கிய உவகையுடன் கூறியவாறு அவள் உள்ளே போனாள்.
சுந்தரம் பெருமூச்சு விட்டார். மெதுவாகப் படபடப்புக் குறைந்தது.
ஒவ்வொரு தடவையும் 'போஸ்ட்' என்று தபால்காரன் குரல் கொடுக்கும்போது, வந்திருக்கும் கடிதம் பார்வதியிடமிருந்துதானோ என்று பதறுவதும், சில நாட்களுக்கு முன்பு வரை இதே பார்வதியிடமிருந்து கடிதம் வராதா என்று ஏங்கியதும், இப்பொழுது வேறு விதமாக நினைக்குமாறு தம் மனநிலை மாறிப் போனதும்......
இரண்டு வாரங்களுக்கு முன்புகூட அவரிடம் அந்தத் தீவிர எண்ணம் குடிகொண்டிருந்தது. தம்மைச் சுற்றியிருந்த தனிமையின் பிடியிலிருந்து விடுபடவும் மாறுபட்ட சூழ்நிலையில் தம்மை ஆளாக்கிக்கொள்ளவும் மேற்கொண்ட ஒரு சுற்றுப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பியதிலிருந்து அவருக்குக் குறைந்துகொண்டிருந்த பிரச்சினை, அந்தப் பிரயாணத்தில் தம் முன்னாள் சிநேகிதி பார்வதியைச் சந்தித்ததனால் ஏற்பட்டுவிட்ட புதிய எண்ணங்களின் வேகத்தை, எப்படித் தம் மகனிடம் எடுத்துக் கூறுவது என்றும், அப்படித் தைரியத்துடன் கூறும்போது ரமேஷின் போக்கு எப்படி இருக்கும், 'ஐயோ அப்பா, இத்தனை வயதுக்கும் மேலா?' என்று குத்தலாக ஏதாவது சொல்லிவிடுவானே என்று கற்பனை பண்ணி, அந்தக் கற்பனையை நினைந்தே மிரண்டு போய்த் தவிப்புமாகத்தான் இருந்தார். ஆனால் எப்படியும் சில நாட்களுக்குள் இந்தத் தவிப்புக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முடிவைத் தெரிவித்ததும், தான்...
‘மூன்று முடிச்சு’ப் போட்ட நாளிலிருந்து பழையதை மறந்து, மனைவிக்குத் துரோகம் எண்ணக்கூடாது என்ற தார்மிக எண்ணத்தில் அவளுடன் தன் மனத்திலும் அவள் மனத்திலும் குறை ஏற்படாதபடி இருபத்தைந்து வருஷங்கள் அந்நியோந்நியமாக வாழ்ந்தார். ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார்கள். அந்தப் பிள்ளை சிரித்துத் தவழ்ந்து எழுந்து ஓடி விளையாடியதையும், பள்ளிக்கூடம் கல்லூரி என்று பருவம் எய்தியதையும் கண்டு களித்து அவனுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று அவரை அரித்துக்கொண்டிருந்தபோது திடீரென ‘லிவர் கம்ப்ளெயிண்ட்’ என்று படுக்கையில் விழ, அவள் பிறகு எழுந்திருக்கவே இல்லை.
இவ்வாறு தமது வாழ்க்கையில் ஓர் அத்தியாயம் திடீரென்று முடிந்துவிட்டதனால் தாம் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்துச் சலித்துப் போய்விட்டதாக அவர் முடிவு கட்டிய கட்டத்தில்தான், சுந்தரம் பார்வதியை - தாம் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் இவளைத்தான் செய்துகொள்ள வேண்டும் என்ற ரீதியில் உணர்ச்சிகளை இளமைப் பருவத்தில் கிளறிவிட்டுக்கொண்டிருந்த பெண்ணைச் சந்திக்க நேர்ந்த சம்பவம் விபத்துப் போல அமைந்தது.
அவருடைய மனைவி மீனாட்சி கண்ணை மூடிய பிறகு வீட்டைக் கவனித்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும் என்ற அவசியத்தில் எடுத்த திருமணம் ஒன்றைத் தவிர்த்தவுடன் தம் கடமையில் ஒன்றை நிறைவேற்றிய திருப்தி ஏற்பட்டது அவருக்கு. எனினும் மகனும் மருமகளும் இருந்தும் தாம் தனித்து விடப்பட்டது போன்ற மருட்சியில் அவர் காலம் கழித்துவந்தார். மூன்று பேர்களே இருந்த அந்த வீட்டில் மருமகளுக்கு - ஏன், ஒருவருக்குமே - அதிக வேலை இருப்பதில்லை. ரமேஷுக்குக் காலேஜில் லெக்சரர் வேலை. ஒன்பதரைக்கு அவன் காலேஜுக்குப் புறப்பட்டுப் போன பிறகு ‘ரிடையர்டு’ வாழ்க்கையை நடத்தி வரும் சுந்தரம் குளித்துச் சாப்பிட்டுவிட்டுத் தம் அறையில் ஒதுங்கும்போது மணி பத்தரைதான் ஆகியிருக்கும். அவருக்கு இலக்கிய ரசனை உண்டு.
அதனாலேயே அவர் தற்காலப் பத்திரிகைகளையும் நவீனங்களையும் படிப்பதில்லை. பிற்பகலில் காபி கொடுக்க வரும்போதுதான் இந்த வீட்டில் மற்றொரு ஜீவனும் இருக்கிறது என்ற நினைப்பு வரும். ரமேஷ் மாலையில் வீடு வந்தபிறகு சிறிது சந்தடி இருக்கும். ஆனால் இவர் அறையில் அல்ல. அந்தப் பெரிய வீட்டின் ஏதோ ஓர் அறையில் ரேடியோவின் இசையும் கலகலவென்ற சிரிப்பொலியும் கலந்து குழைந்து கேட்கும். அவர்களுடைய களிப்பில் தம் தனிமையைச் சற்றுத்தான் மறக்க முடியும். எத்தனையோ நாட்கள் இரவு பத்து மணிக்கும் மேல் ஊரடங்கிய பொழுதில் அவர் வெளியே கிளம்புவார். ‘நிம்மதியின்றி’ என்ற சொல்லுக்கு முழுப்பொருளாக அவர் வாழ்க்கை இருந்தது.
தன் தந்தையின் மனநிலையை அறிந்து கொண்டவன் போல அவருக்கு இரங்கி, அந்த இரக்கத்தையே அவர் தவறுகாலக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற பயத்தில் சௌஜன்யமாக உரையாடலில் ஒரு நாள் ஈடுபட்டிருந்த போது ரமேஷ் சொன்னான்: “அப்பா, கொஞ்ச நாள் கோடைக்கானல் ஊட்டி என்று போய்விட்டு வாருங்களேன்!”
“ஏண்டா, என்னைப் பார்த்தால் அங்கெல்லாம் போகவேண்டும் என்று இருப்பது போல் தெரிகிறதா?” என்றார் சுந்தரம்.
“அதில்லை அப்பா, உங்கள் மனசு சரியில்லை என்று தோன்றுகிறது. உங்கள் மனசிலே ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள்!” என்று ரமேஷ் கலங்கினான்.
“போடா, போ! எனக்கு ஏதுடா குறை? நீயும் சீதாவும் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்குச் சந்தோஷமும் நிம்மதியும்” என்று ஒரு தகப்பனுக்கு இருக்க வேண்டிய மனநிறைவுடன் அவர் கூறினாலும் வார்த்தைகள் மேலும் வெளிப்பட்டன; “இருந்தாலும் என் மனசு சரியாகத்தான் இல்லை. எனக்குள் என்னைச் சுற்றி ஒரு வெறுமை சூழ்ந்திருப்பது போல உணர்கிறேன். நம் ஊரிலே எத்தனையோ ‘ரிடையர்டு’ ஆசாமிகள் இருக்கிறார்கள்: அவர்கள் எப்படியோ பூஜை, புராணம் என்று பொழுதைக் கழித்து, வயதானபிறகு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதிக்குள் தங்களை நிர்ப்பந்தப்படுத்திக்கொண்டு அந்த வாழ்க்கையில் நிம்மதி பெறுகிறார்கள்; அல்லது நிம்மதி அடைந்துவிட்டதாகக் கற்பனையில் மிதக்கிறார்கள். ஆனால் எனக்கு என்னவோ அதுபோன்ற வாழ்க்கையில் லயிப்பு விழவில்லை. ஒருவேளை என் தவிப்புக்கெல்லாம் அந்தக் கட்டுப்பாட்டுக்குள் என் மனம் சிக்காததுதான் காரணமோ என்னவோ? ஓ! உன்னிடம் நான் ஏதேதோ பேசுகிறேன்; இல்லையா? எதுவானாலும் உன் ஆலோசனைப்படியே கொஞ்ச நாள் இப்படிச் சுற்றிவிட்டு வருகிறேனே!”
சுந்தரம் கோடைக்கானலுக்கும் ஊட்டிக்கும் சென்றார். க்ஷேத்திரங்களைத் தரிசித்தார். ஒரு கிராமத்தில் ஒரு சாமியார் பக்தர்களுக்குத் தம் மகிமையினால் கைக்கடிகாரமும் மோதிரமும் பிற பொருள்களும் வரவழைத்துக் கொடுப்பதாகக் கேள்வியுற்றுக் குதர்க்க எண்ணங்களும் அவநம்பிக்கையுடன் கூடிய அவலும் உந்த, ஒருவித அலட்சியத்துடன் அந்தக் ‘கலியுக வரதனைப்’ பார்க்கும் எண்ணத்தில் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸியில் இருபத்தைந்து மைல்களுக்கு அப்பாலுள்ள அந்தச் சாமியாரின் முகாமுக்குச் சென்றபோதுதான் அந்த ‘விபத்து’ ஏற்பட்டது.
அந்தி இருள் கவிந்துகொண்டு இருந்தது. இருட்டுவதற்கு முன் அந்தக் கிராமத்தை அடைந்துவிட்டால் தேவலை என்று திட்டம் போட்டுக்கொண்டு இருந்தபோது, சரியாகச் செப்பனிடாத சாலையில் ஓடியதன் விளைவோ என்னவோ, டயர் வெடித்து டாக்ஸி நின்றுவிட்டது. ஏதாவது கார் வந்தால் உதவி கேட்கலாம் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த பொழுதுதான் கலைமகள் - பக்கம் 628
அந்த நீலநிறப் ‘பியட்’ கார் வந்தது. கையை ஆட்டியதும் வேகம் குறைக்கப்பட்டு நின்றது.
“என்ன ஆச்சு? ஆக்சிடென்டா?” என்று காருக்குள்ளிருந்து குரல் கேட்டது. அந்தக் குரல் ஓர் அதிர்ச்சியைப் பாய்ச்சியது சுந்தரத்துக்கு. சட்டென்று கார்ப்பக்கம் சென்று உள்ளே நோக்கினார். நினைவுகள் கொப்புளங்களாக மேலெழும்பி வெடித்தன.
“இது பார்வதியா? ஓ, இப்படித் திரும்பிப் பார்க்கும்படி அகல விரிந்த நயனங்கள், நாசியின் கூர்மை.”
“நீ...நீ...நீ...நீ...ங்க...ள் பார்வதி இல்லை?” என்று அவர் நெருங்கிக் கேட்ட போதே உடம்பெல்லாம் பதறியவளாக அந்த மாதும் சட்டென்று காரிலிருந்து வெளிப்பட்டு, “நீங்களா! நிஜந்தானா இது?” என்று உவகையும் திகைப்பும் நெஞ்சை அடைக்கத் திணறினாள்.
பார்வதியின் காரில் இப்பொழுது சுந்தரம் உட்கார்ந்திருந்தார். அவர் வந்த டாக்ஸி ஸ்டேஷனை நோக்கித் திரும்பிச் சென்றது. இருபத்தைந்து வருஷங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமற்போன அதிசயத்தில் மூழ்கி விட்டவர்கள் போல அவர்கள் மெய்ம்மறந்திருந்தார்கள். பிறகு இருவருக்குமே ஏற்பட்ட ஆவலில் இருவருமே பேச ஆரம்பித்தார்கள்.
ஒரு வளைவில் ‘கைலாசபுரம்’ என்ற ஊர்ப் பலகையின் மீது காரின் வெளிச்சம் பட்டு மறைந்தது. மெயின் ரோட்டைத் தாண்டிப் பிரிந்து செல்லும் பிறிதொரு பாதையில் பார்வதி ஸ்டியரிங்கை லாகவமாக ஓடித்துத் திருப்பினாள். கடைத் தெருக்கள், ரத வீதி என்று ஒரு சிறிய கிராமமே தெரிந்தது.
நவநாகரிகமான சிறிய பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் போய் வண்டி நின்றது.
“நாளை அந்தச் சாமியாரைப் போய்ப் பார்த்தால் போதாதா உங்களுக்கு? அவர் இருக்கும் இடம் இன்னும் ஆறு மைல் தொலைவில் இருக்கிறது” என்று கேட்டவாறு காரின் கதவைத் தள்ளிக்கொண்டு இறங்கினாள் பார்வதி.
“தேவை இல்லை. எனக்கு இனிமேல் அந்தச் சாமியாரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான்தான் ஒரு பெண் சாமியாரைச் சந்தித்துவிட்டேனே!” என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சுந்தரம் சொன்னதும் அவள் சிரித்தாள்.
இவர்களுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு உள்ளேயிருந்து ஒரு பெண் ஓடிவந்து பார்வதியின் கையிலிருந்து பையையும் ஸ்டெதாஸ் கோப்பையும் வாங்கிக்கொண்டு மறைந்தாள்.
“இந்தப் பெண்..?” என்ற கேள்வி முகத்தில் பிரதிபலித்த சுந்தரம் அவளை நோக்கியபோது, பார்வதியின் முகத்தில் புன்னகை நெளிந்தது. “இவள் என்னுடைய பெண்!” என்றாள்.
சுந்தரம் ஒரு கணம் விழித்தார். அதை மிகவும் ரசித்தவளாக, “இவள் மட்டுமல்ல; இங்கு நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு!” என்று புதிர் போட்டாள் பார்வதி. அவள் விளையாடுகிறாள் என்று புரிந்து கொண்டார் சுந்தரம்.
“அப்படியா? இது உண்மையானால் சந்திரசேகருக்குப் புகார்க் கடிதம் எழுதவேண்டியது தான்!”
“அது யார் சந்திரசேகர்?”
“குடும்பக் கட்டுப்பாட்டு மந்திரி!”
பார்வதிக்குச் சிரிப்புப் பீரிட்டது. “உங்கள் குறும்பும தமாஷும் மாறவே இல்லை!”
“ஆமாம், பார்வதி. உன்னைச் சந்தித்த பிறகு எனக்கு ஒரு நண்பர் கிடைத்துவிட்டது போல உற்சாகம் பொங்குகிறது.”
பார்வதி மெளனமாக இருந்தாள். பிறகு மெல்லிய குரலில், “ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்குமே உங்களைப் போலத்தான் தோன்றுகிறது. நான் இப்படிச் சிரித்துப் பல வருஷங்களாகின்றன. இப்படிச் சொல்கிறதனாலேயே நான் ரொம்ப விரக்தியடைந்த போயிருக்கேன்னு அவசரப்பட்டு நினைக்க வேண்டாம். அந்தத் கடமையிலே என்னை மறந்ததுபோல நானும் என்னுடைய புதிய வாழ்க்கையிலே உங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பங்கள் குறைந்துதான் போச்சு. என்னைச் சுற்றி ஒரு சந்தோஷமான உலகத்தைத்தான் நான் சிருஷ்டி செய்துகொண்டிருக்கிறேன். இருந்தாலும் இன்று உங்களைப் பார்த்ததும் எனக்குக் கூட ஒரு சுதந்திரம் கிடைத்தது போலத்தான் தோன்றுகிறது. என்னுடன் சில நாட்கள் தங்கியிருப்பதில் தடை ஏதும் இல்லையே உங்களுக்கு?”
பார்வதியை நினைக்கவும் அவளுடைய மன வளர்ச்சியை ஆராயவும் சுந்தரத்துக்கு மலைப்பாக இருந்தது. சந்தர்ப்பங்கள் மனிதனை உருவாக்குகின்றன என்று சொல்லுகிறார்களே, நிதர்சனமாக இதோ பார்வதி. அவர் வேறொரு பெண்ணைப் பெற்றவர்களின் நிர்ப்பந்தத்தினால் மணந்து கொண்டதும் நில நடுக்கம்போல வந்த அந்த ஏமாற்றத்துக்கு நிவாரணம் காண்பது போல அவள் தீவிரமாக மேற்படிப்பில் தன் கவனத்தைச் செலுத்தியதும், டாக்டர் பட்டம் பெற்ற ஒரு வருஷத்துக்குள் சொத்துக்களின் முழுப் பொறுப்பையும் அவள் மீது சுமத்திவிட்டு அவளுடைய தந்தை காலமானதும், ஏற்கனவே தாயை இழந்திருந்த பார்வதி அநாதை என்ற சொல்லுக்கு முற்றும் பொருந்தியவளாகத் திகைத்தபோது, கைலாசபுரத்தின் மருத்துவ மனையில் சேருவதற்கான அழைப்பு வந்தது. தன் வீட்டு கணக்குப்பிள்ளையிடமே சொத்துக்களைக் கவனிக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டவள், வருஷத்துக்கு இருமுறை ‘மண் பாச’த்துக்காக ஊருக்கு வருவாள். கடைசியில் அவள் எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக்கொண்டு கைலாசபுரத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாள்.
அந்தக் கிராமத்து வாழ்க்கை ஒரு புதிய யுகத்தை அவளிடம் தோற்றுவித்தது. சுதந்திரம் அடைந்து பல வருஷங்களாகியும் அந்தத் தோட்டத்து ஜனங்களிடம் சுதந்திரத்தின் பலன் ஒன்றுமே ஏற்படாமலிருந்த இழிநிலையைக் கண்டு உள்ளம் பதைக்க வேண்டியிருந்தது. அந்த வட்டாரத்தில் பத்து மைல்களுக்கு ஒரு வைத்திய உதவியும் கிடைக்கப் பெறாத மக்களுக்கு மனத்தை நெகிழவிட்டு நிற்கும்போது அவள் முன் புது உலகம் - புதிய நோக்குடன் கூடிய வாழ்க்கை - விரிந்தது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வைத்திய உதவியும் அவளுடைய அன்பான விசாரிப்பும்…
மாறும் பருவங்கள் (பக்கம் 629)
களும் அவளை 'டாக்டர்ம்மா' என்ற செல்லப் பெயருக்கு ஆளாக்கின.
அந்த மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நிலை பார்வதியின் வாழ்க்கை நோக்கத்தில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தது. அவள் அந்த ஊரின் அம்சமானாள்.
தேங்கிக் கிடந்த அவளுடைய சொத்தின் சில பகுதிகள் அந்த நாட்டுப்புறத்தின் நல்வாழ்வுக்குப் பயன்பட்டது. மண் புரண்டது; மனம் திருந்தியது. உதவி என்று சொல்லி அந்த ஜனங்களைப் பொறுப்பற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் அவள் ஆக்கிவிடவில்லை. உதவியின் பயனையும் உழைப்பின் பரிசையும் அவர்களை அனுபவிக்க விட்டாள். பிறகு, கேட்கு முன்னரே, அவர்கள் கடன்பட்டிருந்த தொகையைப் பரூவில்லாத தவணைகளில் திருப்பிக் கொடுத்தனர். ஏமாற்றத் தெரியாது, ஆனால் இதுவரை ஏமாற்றப்பட்ட, அந்த உழைப்பாளிகளுக்குப் பார்வதி தெய்வமாக இருந்தாள்.
சேவையில் கிடைத்த இன்பத்தில் அவள் ஆழ்ந்திருந்தாள்.
விளையாட்டின் மும்முரத்தில் குழந்தை தன்னை மறந்துவிடுவது போலத்தான் சுந்தரம் அங்கு இருபது நாளுக்குமேல் தங்கிவிட்டார்.
முன் மயிர்கள் நரைக்க ஆரம்பித்து, முகத்தில் இளமை கடந்துவிட்ட சுவடுகள் பளிச்சென்று தெரிந்தும், பார்வதியின் பேச்சு ஏற்படுத்திய ஆசுவாசமும் சிரிப்புக் கொடுத்த குளுமையும் பழைய விசுவாசமும் அன்பும் மாறாமல் தம்மிடம் அவள் காட்டும் பரிவும் சுந்தரத்தை அலைக்கழித்தன. வெறிச்சென்று போய்விட்ட தம் வாழ்க்கைக்கு, கலகலவென்று இருக்கத் துடித்த தம் போக்குக்கு ஒரு துணை. 'என்னுடன் பேசிக் கழிக்கவும் என் எண்ணங்களில் பங்கு பெறவும் இவள் சம்மதிப்பாளா?'
சபலம் பேயாக ஆடியது. அந்தப் 'பேய்' ஒரு நாள் பேச ஆரம்பித்தபோது பார்வதிக்கு அதிர்ச்சிக்குப் பதில் வியப்பே ஏற்பட்டது.
'இது உண்மையாக இருக்க முடியுமா? இருபத்தைந்து வருஷங்களாக மனைவியுடன் வாழ்ந்துவிட்டு வீட்டுக்கு மருமகன் வந்த பிறகும், வாழ்க்கையின் பிடிப்புகள் தாளும் இந்தப் பருவத்திலும் சபலங்கள் ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்க முடியுமா?'
பார்வதிக்கு 'அந்த நாட்கள்' நிழலாடின. அவளுடைய வாழ்க்கை இந்த ஆடவனுடன் பிணைந்திருந்தால் அது எவ்வளவு இன்பமாகவும் ரம்மியமாகவும் இருந்திருக்கும்! இனிமையான கனவுகள் எல்லாம் வெறும் கனவாகவே முடிந்தபோது அவள் இந்த இடியைத் தாங்கிக்கொண்டு 'அந்த நாட்களை' மறக்கத் தனது வாழ்க்கையின் ரசனையையும் போக்கையுமே அல்லவா மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது?
அவள் வியப்புடன் சுந்தரத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தமக்குச் சாதகமாகக் கிரகித்துக்கொண்டவர் போல அவர் மேலும் பேசினார். "என்னுடைய பேச்சு உனக்குக் குழப்பத்தைக் கொடுத்திருக்கும். ஆனால் என் மனசில் இருக்கிற வேதனையை எப்படிச் சொல்வது என்றுதான் யோசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் அனுபவிப்பது ஒருவித மன உளைச்சல். 'வாழ்க்கை இப்படித்தான்' என்ற விரக்தியுடன் போராட என்னால் முடியவில்லை. என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே. இது தனிப்பட்ட மனிதனின் தவிப்பு என்று கருதினால் உனக்கு என்மிடம் இரக்கம் ஏற்படும். உன்னைப் பார்த்த பிறகு இங்கே உன்னுடன் கழித்த சில நாட்கள் என் பிரச்னையுடன் உன்னை அணுகச் சிறிது தைரியத்தைக் கொடுத்திருக்கின்றன. உன்னிடம் வெளிப்படையாகக் கேட்பதில் எனக்கு வெட்கமில்லைதான்" என்று வெளிப்படையாகச் சுந்தரம் அவளுடைய துணையை கேட்டார்.
பார்வதிக்குப் படபடவென்று வந்தது. ஆற்றுமணல் மேலுக்கு வறண்டிருந்தாலும் கொஞ்சம் கிளறினால் ஈரம் கசிவதில்லையா? சுந்தரம் கோடிட்டுக் காட்டிய எண்ணப் போக்கு அவள் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. நைந்து போன பழைய கனவுகளும் ஆசைகளும் விழித்துக் கொண்டன. ஒரு காலத்தில் இதே கனவுகளையும் ஆசைகளையும் அர்த்தமில்லாதவை ஆக்கிச் செய்துவிட்ட அவரது செய்கை அவளுக்கு அந்தச் சமயத்தில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் மூட்டியிருந்தாலும் அதில் அர்த்தம்...
கலைமகள் - 630
பக்கத்தில் சில நியாயங்கள் இருப்பதாகவே அவள் சமாதானம் கொண்டிருந்தாள். அவளும் அவருடைய விருப்பத்துக்காகத் தவம் கிடந்தவள்போல அவருடைய இறைஞ்சுதலுக்கு இப்போது மௌனமாகச் சம்மதம் தந்தாள்.
இத்தனை வயதுக்குமேல் ஒருவருடன் ஒருவர் சேருவது சமூகத்தின் கண்ணுக்குக் கேலிக்குரியதாகத் தோன்றினாலும் அதைத் தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்றும், அவரவர்களின் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுப்பதே அந்த முடிவுக்கு அடித்தளத்தில் அமைந்த காரணம் என்றும் அவர்கள் தங்களைச் சமாதானப்படுத்திக்கொண்டு வாழ்க்கையின் புதிய திருப்பத்துக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டனர்.
இந்த ஆதாரமான காரணங்களைச் சுந்தரம் ரமேஷுக்கு எடுத்துரைத்து அவன் சம்மதம் பெற்றுப் பார்வதியுடன் எஞ்சிய நாட்களைக் கழிக்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார். ஆனால் பிரசவத்திற்குப் பிறந்தகம் போயிருந்த சீதாவை நல்ல நாள் பார்த்து ரமேஷ் அழைத்து வந்தபோது, மருமகளின் இடுப்பில் சவாரி செய்துகொண்டிருந்த தங்க விக்கிரகம் போன்ற அவருடைய பேரன் தமது திட்டத்தை மாற்றி அமைத்துவிடுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அடுத்த வீட்டுச் சங்கரியம்மாள் குழந்தையை வாங்கிக்கொண்டவள் அதன் பிஞ்சுக் கைகளில் ஒரு ரூபாய் நோட்டைத் திணித்தவாறு, “அப்படியே தாத்தாவை உரிச்சு வைச்சிருக்கு!” என்று கூறியதும் அவருக்குச் சிலிர்த்தது. தம்முடைய பழைய போட்டோவில் தம்மைப் பார்க்கும்போது ஏற்படும் எண்ண அலைகள் தம் சாயலொத்த பேரனைப் பார்த்தபோது ஏற்பட்டன. அந்தச் செழுமையான வளர்ச்சியும் பொக்கைவாய்ச் சிரிப்பும் அணைக்கும்போது ஏற்படும் சுகானுபவமும் புது உணர்ச்சி வெள்ளத்தைப் பெருக்கெடுத்தோடச் செய்தன. அந்த வெள்ள ஓட்டத்தில் அவருடைய முடிவு அலைக்கழிக்கப்பட்டுத் தவித்தது. ‘இன்று பார்வதியிடமிருந்து கடிதம் வந்துவிடுமோ?’ என்று தினமும் பதறிக்கொண்டிருந்தார்.
குழந்தையைப் பிரிந்து இப்போது அவரால் எங்கும் போக முடியாததுபோலத் தோன்றியது. தம்மைச் சூழ்ந்திருந்த வெறுமை உணர்ச்சி என்னும் மேகம் விலகுவது போன்ற தெளிவான எண்ணமும் தோன்றலாயிற்று. ‘பார்வதியிடமிருந்து கடிதம் வருவதற்குள் நாம் ஒரு கடிதம் அவளுக்கு எழுதிவிட்டால் என்ன?’
‘ஓ! இந்தத் தடவையும் நான்தான் அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கிறேனோ?’ என்று ஒரு கணம் மனம் உறுத்தத் திகைத்தார்.
“ஒவ்வொரு பருவத்திலும் அதற்கு ஏற்ற ஆசைகள்தாம் தோன்ற வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. நான் மீறப் பார்த்தேன். வாழ்க்கை முழுவதுமே அன்பு செலுத்துவதாகத்தான் இருக்கிறது. ஆனால் இது அந்த அந்தப் பருவத்துக்குத் தகுந்தாற்போல உருவெடுக்கிறது. இப்படி இல்லையென்றால் வாழ்க்கை ஒரு நியதியுள்ளதாக இருக்காது. எந்த முடிவோடு நான் அங்கிருந்து புறப்பட்டேனோ அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது எனக்கு அவமானமாக இல்லைதான். ஆனால் அதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. பல வருஷங்களுக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பில் மீண்டும் உனக்கு நம்பிக்கையை ஊட்டிவிட்டு, நடந்துகொண்டதற்கு என்னை மன்னித்துவிடு, பார்வதி...”
“போஸ்ட்!” — அவர் எழுத்துத் தடைப்பட்டது.
மாலை நேரத்துத் தபால் வரும் நேரம் ஆகிவிட்டதா என்ன? சுந்தரம் எழுந்து போய்க் கடிதத்தை வாங்கினார். உடல் லேசாக அதிர்ந்தது. பார்வதியின் கையெழுத்து. பதற்றத்துடன் படிக்கத் துவங்கியதும் அவருடைய மனத்தில் ஊற்றெடுத்தது நிம்மதி யாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் இதழ்களில் மெல்லிய நகை மலர முடியுமா?
“நிர்மலமான நீர்த் தேக்கத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டதும் அலைகள் எழும்புவது எவ்வளவு இயற்கையோ அதுபோலவே அந்த அலைகள் சில விநாடிகளில் அடங்கிவிடுவதும் இயற்கைதான். புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும்படி நீங்கள் இறைஞ்சியபோது ஒருவித வைராக்கியத்துடன் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நான் சலனத்துக்கு ஆளானது உண்மைதான். என்னை நம்பி இருக்கும் இந்தச் சுற்றுப்புறத்து ஜனங்களினாலும், இவர்களுடன் ஒன்றிப்போய்விட்ட என் நிலையினாலும் நம் புதிய வாழ்க்கை அதிகம் பாதிக்கப்படும் என்றாலும் நான் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டேன்: ‘இந்தப் புதிய அத்தியாயம் இந்தக் கட்டத்தில் அவசியந்தானா?’ அது தவறு என்பதனால் அல்ல; பொருத்தமற்றதாக இருப்பதனால்தான் இந்தக் கேள்வி எழுந்தது. என் தவத்தை நான் ஏன் கலைத்துக்கொள்ள வேண்டும்? நம் சந்திப்பு உயிர்த்துடிப்புள்ளதுதான். ஆனால் அதற்கு முக்கியத்துவமும் இல்லை. ஒரு தொடர்கதையின் கடைசி அத்தியாயம் வந்துதான் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கும்போது புது அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்தால் அந்தக் கதை எவ்வளவு சுவாரசியமற்றதாக ஆகிவிடும்!”
“ஆமாம். கடைசி அத்தியாயம்தான்!” என்று சுந்தரம் முணுமுணுத்தார். ‘இந்தத் தடவை அவள் என்னை நிராகரித்துவிட்டதான நிம்மதியாவது அவளுக்கு இருக்கட்டும்!’
தாம் எழுதியிருந்த கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். அவர் மனம் இப்பொழுது லேசாக இருந்தது: ஜன்னல் வழியாகத் தெரியும் வானத்தைப் போல நிர்மலமாக இருந்தது.
ஹாலில் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. விரைந்து போய்க் குழந்தையை, அதன் தாயை முந்திக்கொண்டு எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறார். அதன் அழுகையைப் பூச்சிரிப்பாக மாற்ற அவரும் குழந்தையாக மாறுகிறார்.
**************************************************************************