Wednesday, May 22, 2024

குறுங்கதை - சாதிக்கு வெளியே



போர்!
லோஹர் கோட்டையின் பெரும் சுவர்கள் மேலிருந்து பறந்து வரும் அம்புகள்.
மெதுவாக ஊர்ந்து செல்லும் தீ எறி பொறிகள்.
விடிகாலையில் கோட்டையின் உள்ளும் புறமும் இருந்து எழும் மரண ஓலங்கள்.
நான் அம்புகள் விழும் தூரத்திற்கு அப்பால் இருந்தேன். கோட்டையை நோக்கிச் சென்ற மதில் உயர பிடிப்பான்கள், என் வடிவமைப்பு. அவை பாரம் தாங்காமல் சரிந்தால் என் தலை தப்பாது.
சற்றுத் தள்ளி கஜினி அரசர் நின்றார். பூரண கவசத்துடன், களத்தில் இறங்கத் தயாராக.
பிடிப்பான்கள் மதிலை நெருங்கி விட்டன. அவற்றில் இருந்து ஏணிகள் பறந்த சமயத்தில், மதில் மேல் என் பார்வை சென்றது. வில்லாளிகள் மறைந்து விட்டார்கள். அம்பு மழை நின்றது.
அரசர் திரும்பி என்னைப் பார்த்தார்.
*
“அவர்களிடம் ஏதோ ஒரு மர்ம ஆயுதம் இருக்கிறது,” என்று அரசரின் முன்னிலையில் பத்து நாட்கள் முன்னால் சொல்லி இருந்தான் எங்கள் ஒற்றன். “இதை விடப் பெரிய மதில்களை நாம் உடைத்திருக்கிறோம். ஆனால் இந்தக் காஷ்மீரிகளிடம் ஏதோ இருக்கிறது. துணிவுடன் நம்மை எதிர்நோக்குகிறார்கள்.”
அரசரிடம் வேலைக்கு அமர்ந்த நான்காவது பொறியாளன் நான். முன்னால் இருந்த மூவரும் தலை வெட்டப்பட்டு போய்ச் சேர்ந்தார்கள்.
எனக்கு ஒற்றன் சொல்லும் போதே கழுத்தில் வலித்தது.
“மருந்தாக இருக்கலாம்,” என்றேன் நான். “கந்தகம் இந்தப் பகுதிகளில் அதிகம். இமாலயத்தில் கீழ் அடிவார குகைகளில் அது கிடைக்கிறது.”
*
கஜினவீத் வீரர்கள் ஒரு பெரும் சத்தத்துடன் கோட்டையின் அடிப்பகுதியை நோக்கிப் பாய்ந்தனர். அந்த நேரம் மதிலின் முக்காலுக்கு மேல் நான் பார்த்திருந்த மரக்கதவுகள் திறந்தன. அவை வழியே பெருகி பாய்ந்து ஒரு கருப்புத் திரவம் கீழே இருந்தவர் மேலே கொட்டியது.
“மருந்து,” என்றேன் நான்.
வீரர்களில் பலர் அடித்துப் பிடித்து திரும்ப ஓடி வருவதைப் பார்க்க முடிந்தது. ஒருவரை ஒருவர் தவிர்த்து ஓடியதை நான் பார்த்தேன். ஒரு அரை சக்கரத்தின் ஆரங்களைப் போல அவர்கள் பிரிந்து பின்வாங்கினர்.
எங்கும் ஒரு கெட்ட நெடி வீசியது.
“நரகல்,” என்றார் அரசர், தம் தோற்றோடும் சூரர்களைப் பார்த்தவாறே. “மனிதச் சாணம். இந்தியர்களின் ரகசிய ஆயுதம்.”
“அரசே, போய் விடலாம்,” என்றான் பக்கத்தில் இருந்த மெய்க்காப்பாளன்.
அரசர் கோட்டை வாசலைச் சுட்டிக் காட்டினார். அந்த கருப்புத் திரவம் வாசலில் பரந்திருந்தது.
“இதைத் தாண்டி யார் வருவார்கள், முட்டாளே?” என்றார்.
ஆனால் கோட்டைக் கதவு பெரும் சத்தத்துடன் திறப்பதை நான் பார்த்தேன். அந்த நாற்றத்தின் ஊடே கால் வைத்து நடந்து வரும் ஒரு பட்டாளத்தை நாங்கள் பார்த்தவாறே புறமுதுகிட்டு ஓடினோம்.
*
லோஹர் கோட்டையின் தோல்விக்குப் பின்னால் அரசர் காஷ்மீரத்தில் இருந்து வெளியேறவே பெரும் பாடு பட்டார். நான் இடைப்பட்ட குழப்பத்தில் ஜம்பூபுரம் என்று இந்த மக்களால் அழைக்கப் பெறும் நகரத்திற்கு வந்து சேர்ந்தேன்.
சுத்தமான நகரம். பெரும் வீதிகள். அழகான மாடங்கள். மதில் கூட இல்லாத ஒரு சொர்க்கபுரி அது.
“உன் பெயர் என்ன?” என்றான் சந்தையில் நான் பார்த்த ஒரு வியாபாரி.
“பாரணன்,” என்று என் இயற்பெயரை மாற்றிச் சொன்னேன்.
“சாதி?”
நான் அந்தச் சொல் புரியாததால் வேறு எங்கோ பார்த்தேன்.
“எந்தச் சாதி நீ?” என்றான் அவன். “உயர் குலத்தில் பிறந்தவன் போல் இருக்கிறாய்? சொல்ல என்ன தயக்கம்?”
“உங்களை போன்றவன் தான்,” என்றேன் குத்துமதிப்பாக.
“நல்லது, வா என்னுடன்,” என்றான் அவன்.
அவனுடன் சில நாட்கள் வேலை பார்த்த போது அந்தச் “சாதி” என்னும் புரியாத சொல்லுக்கு பொருள் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
“நீ எந்த ஊர்? சாதி தெரியாமல் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார் கோவிலில் ஒரு பண்டாரம்.
“நீங்கள் என்ன சாதி?” என்றேன்.
“சந்நியாசிக்கு சாதி கிடையாது.”
எனக்கு ஏனோ என் கேள்வியில் எனக்கான விமோசனம் இருப்பதாகத் தோன்றியது.
“இந்த வணிகர்களில் பலர் ஒரே மாதிரி இருக்கிறார்களே?” என்றேன்.
அவர் கோவிலுக்கு வருவோர் போவோரை உற்றுப் பார்த்தார்.
“இருபது வருடம் முன்னர் இங்கே கொள்ளை நோய் வந்தது,” என்றார். “வணிகர்கள் பலரைக் கொன்று விட்டது. எஞ்சியவர்கள் ஒரு குடும்பத்தாரோ என்னமோ..” என்றார்.
வணிகர்கள் சபையைக் கண்டேன். ஒருவரை ஒருவர் மாமா, தாத்தா என்று அழைத்துக் கொண்டனர்.
“வெளியே இவர்கள் மணப்பதில்லையா?” என்றேன் பண்டாரத்திடம்.
“எதற்கு வெளியே?”
“சாதிக்கு வெளியே?”
அவருக்கு நான் என்ன கேட்கிறேன் என்று புரியவில்லை. “சாதிக்கு வெளியே” என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.
*
காலையில் தெரு பெருக்குவோரைப் பார்த்தேன். வீடுகளுக்குப் பின்னால் சென்றார்கள். கையில் ஒரு மூட்டையில் நரகலைக் கொண்டு வந்தார்கள்.
அவர்களும் பார்க்க ஒரே மாதிரி இருந்தார்கள் - சற்று நிறம் குறைந்தவர்கள். ஏழைகள் என்று தெரிந்தது. அவர்கள் வயிறுகள் கூட ஒரே மாதிரி முன்னே தள்ளி இருந்தன.
நான் கஜினி அரசரைக் கண்டுபிடிக்க நேரம் வந்து விட்டது.
*
“இந்த நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வேலையைச் செய்பவர்கள்,” என்றேன் அரசரிடம். என்னுடன் அழைத்து வந்திருந்த வேலையாட்கள் இருவரைக் காட்டினேன்.
“தங்களுக்குள்ளேயே மணம் புரிபவர்கள்.”
அரசர் அவர்களை உற்றுப் பார்த்தார்.
“சகோதரர்களா?”
“இல்லை. அரசே, இவர்கள் வேறு வேறு ஊர்களை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த நாட்டில் ஒரே வேலை பார்ப்பவர்கள் தங்களுக்குள் மணப்பதால் அந்த வேலைக்கு ஏற்ற உடல் ஏற்றங்களைப் பெறுகிறார்கள்.வில்லாளிகள் சாதியைச் சேர்ந்தவர்கள் பருத்த வலது கை கொண்டவர்கள். வணிகர்கள் கணிதத்தில் சிறந்தவர்கள்.”
“இதற்கும் உன் வேலைக்கும் என்ன சம்பந்தம்?”
“அரசே, லோஹர் கோட்டையில் வெளி வந்த படை இவர்களுடையது,” என்றேன் நான். “ பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதக் கழிவுகளுடன் வேலை பார்த்து, தமக்குள் மணம் புரிந்து இவர்களுக்கு உடல் கூறே மாறி விட்டது. நாற்றம் தெரியாது. வாந்தியெடுக்கும் அந்த இயற்கை உணர்ச்சி மரத்து விட்டது. இவர்களையே தம் ரகசிய ஆயுதமாக இந்த இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோட்டையின் மேலிருந்து மனிதச் சாணத்தை ஊற்றுவதும் இவர்களே.”
அரசர் எழுந்து நின்றார்.
“இவர்கள் நம்முடன் வரத் தயார்,” என்றேன் நான். “அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இந்தச் சாதியினின்றும் விடுதலை.”
*
லோஹர் கோட்டையின் தர்பாரில் பழைய காஷ்மீர மன்னனின் தலை வைக்கப்பட்டது.
வெளியே வெற்றி படைகளின் கூக்குரல். அவர்களிடம் இருந்து தனியாக நின்றார்கள் அந்த தனிப் பட்டாளம். அவர்கள் கைகளில் ரத்தம் தோய்ந்த வாட்கள்.
அரசரிடம் சென்றேன்.
“பட்டாளத்திற்கு விடுதலை?” என்றேன்.
“நமக்கும் நகரங்கள் இருக்கின்றன,” என்றார் அரசர்.

No comments: