Wednesday, March 13, 2024

குறுங்கதை - இருப்பு


 கீழே மகளுடன் இரவு நடை போகும் போது இருட்டில் ஏதோ நகர்வது தெரிந்தது. உற்றுப் பார்த்தால் ஒரு சிறு தவளை.

“பாருடி!” என்றால் மகள் குதித்துக் கொண்டே வந்து பார்த்தாள்.
“இது தவளையா உனக்கு?”
இது புதிதாக அவள் பள்ளியில் கற்றுக் கொண்ட ஒரு பிரயோகம் என்பதால் நான் பொருட்படுத்தவில்லை.
ஆனால் மேலே வந்து பிரேமாவிடம் சொன்ன போது, நான் எதிர்பார்த்தபடியே, “இந்த சீஸன்ல ஏது தவளை?” என்றாள்.
நான் கம்மென்று இருந்தேன்.
“நத்தையா இருக்கும்.”
சில நாட்கள் சென்ற பின், ஏதோ வெளியே கலாட்டா. நான் மயிலாப்பூர் வழியாக ஆட்டோவில் வந்த போது முன்னால் பஸ்களை நிறுத்தி சிலர் கத்திக் கொண்டிருந்தார்கள்.
வீட்டில் வந்து சொன்னேன்.
“ரவுடி ராஜ்ஜியம்,” என்றேன்.
“ரவுடியால்லாம் இருக்காது. கருப்பா இருந்தா ரவுடியா?”
“அவங்க கருப்பா இருந்தாங்கன்னு நான் சொல்லவே இல்லையே?”
“பஸ்ல சில சமயம் இப்படித் தான் வெளியில தட்டிட்டு ஏறுவாங்க. அவங்கள்லாம் ரவுடியா?”
கம்மென்று வந்து டிவி போட்டேன். “மயிலாப்பூரில் பரபரப்பு,” என்று வந்தது. அவளோ கவனிக்கவேயில்லை.
ஒரு நாள் பக்கத்து வீட்டு டாக்டரிடம் இது குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
“நான் பிரத்யட்சமாய் பாக்குறதை இல்லன்றா,” என்றேன்.
டாக்டர், “இந்த சீசன்ல தவளையா?” என்றார்.
பிறகு, “ஏதாவது couples counselor கிட்ட போய் மனம் விட்டு பேசுங்க,” என்றார்.
அவளிடம் இது குறித்துச் சொன்னேன்.
“டாக்டர்ட்ட எப்போ பேசினீங்க? அவரே ரொம்ப பிஸி,” என்றாள்.
“சத்தியமா பேசினேண்டி! இதைத் தான் நான் சொல்றேன்,” என்றேன்.
Counselor உமா அறையில் அமர்ந்திருந்தோம். சற்று நேரம் நான் சொல்வதைக் கேட்டார்.
“நான் எனக்கு நடந்ததை சொன்னா அதை நடக்கவே இல்லைன்றா. எனக்கு ரொம்ப மனம் புண்படுது.”
உமா என் மனைவியைப் பார்த்தார்.
“ஆபீஸ்ல எல்லாம் வேலை பாக்குறேன் மேடம். யாருமே இப்படி என்னைப் பத்திச் சொன்னதில்லை. ரொம்ப trusting தான் நான்,” என்றாள்.
“பாத்தீங்களா, மறுபடி நான் சொல்றத deny பண்றா!”
“என்னைப் பத்திக் குத்தம் சொன்னா நான் என்ன பண்ணனும்?”
“அன்னைக்கு அவன் ரவுடி தான்! நான் பாத்தேன்டி…”
உமா ஒரு மணி நேரம் இவ்வாறு சென்ற பிறகு எங்களை அனுப்பி வைத்தார்.
மறு நாள் என்னைத் தனியாகக் கூப்பிட்டார்.
“உங்க கூட அவங்களுக்கு ஏதோ ஆழமா இருக்கு - அன்பா இருங்க. அரவணைச்சுப் போங்க.”
நான் வீட்டில் வந்து பிரேமாவைக் கனிவுடன் பார்த்தேன். கூட காய்கறி நறுக்கிக் கொடுத்தேன். இரவு தலையைக் கோதி விட்டேன்.
“என்ன இன்னைக்கு ரொம்ப அன்பு?” என்றாள்.
“Counselor பேசினாங்க. உன்கிட்ட தான் பிரச்சினையாம்.”
“அப்பிடில்லாம் சொல்லி இருக்க மாட்டாங்களே..”
“பாத்தியா…இதுவே ஒரு பிரச்சினை தான். திரும்ப திரும்ப எனக்கு நடந்த அனுபவத்தை இல்லைன்ற பாரு.”
அவள் எழுந்து உட்கார்ந்தாள். “சரி, நீங்க சொல்றது எல்லாத்தையும் அப்பிடியே ஏத்துக்கிட்டா ஹேப்பியா?”
நான் யோசித்தேன்.
“சரியா?” என்றாள் மறுபடி.
“ஏத்துக்கிட்டா பத்தாது.”
“பின்ன?”
“மனப்பூர்வமா அதுல நம்பணும்” என்றேன் நான்.

No comments: