Sunday, September 26, 2021

குறுங்கதை - The Velikovsky Fund


 இருட்டில் YouTube-ல் ராம்சந்திரனின் பேச்சைக் கேட்டேன். மெலிதான வெளிச்சத்தில், கையில் ஒரு பேப்பர், பேனாவுடன். காதில் பிறரை பாதிக்கா வண்ணம் headphones.

"கிறிஸ்த்தவ மதமாற்றத்திற்கு காசு எங்கிருந்து வருகிறது தெரியுமா? அமெரிக்காவில் ஒரு ஈமெயில் தட்டினால் போதும். டாலர்ல இங்க வந்து குவியுது."
Unprovable என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் கூட்டத்தில் இருந்தவர்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். Whatsapp-ல் ஏற்கனவே நன்கு பரவியிருந்த ஒரு பேச்சு. ராம்சந்திரன் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம்.
"நம்ம அரசாங்கமே அவங்களுக்கு சலுகை ஏற்படுத்தி தந்திருக்கு. பேர் தான் இந்து கட்சி. ஆனா அவன் கிட்ட காசு வாங்காம இந்திய அரசாங்கமே இல்லை."
இரவுக்கு மேல் இப்படி வெறுப்புப் பேச்சு கேட்பது உடம்பிற்கு நல்லதா என்று தெரியவில்லை. ஆனால் பகலில் வழக்கமான பத்திரிகை வேலைகள் இருந்தன.
திரையில் ராம்சந்திரனின் முகம் இல்லை. உண்மையில் அவரை யாரும் பார்த்ததே இல்லை. நான் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவில் அவர் இல்லை. அவர் குரல் மட்டுமே கேட்டது. மேடையில் ஒரு presentation தெரிந்தது.
"2010 பட்ஜெட்ல போய்ப் பார்த்தா உங்களுக்குத் தெரியும். அமெரிக்க உதவி தனி. அது கடனில்லாம தனியா பட்ஜட்ல வரும். ஆனா வரவுக் கணக்குல ஒரு code இருக்கு. 777AD - போய்ப் பாருங்க. 777 - சர்ச்சுக்கு முக்கியமான நம்பர்."
நான் திரையை உற்றுப் பார்த்தேன். அவர் சொன்ன code அதில் இல்லை.
"777AD" என்று எழுதிக் கொண்டேன். கூகிள் செய்து பார்த்தால் 777 ஒரு வகையில் கிறிஸ்தவ மதத்தின் ஒரு முக்கிய எண் தான். அதை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு விடுகிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

மறு நாள் அலுவலகத்தில் இருந்த போது, மறுபடி அந்த 777AD நினைப்பு வந்தது. 2010 பட்ஜெட் மத்திய அரசின் நிதி அமைச்சக இணைப்பில் இருந்தது. எடுத்துப் பார்த்தேன். அவன் சொன்னது போல ஒரு code கூட இல்லை. ஏமாற்றுப் பேர்வழி. இவனை நம்பி ஒரு கூட்டம்.
அடுத்த சில நாட்களுக்கு ராம்சந்திரனின் வீடியோ எதுவும் வரவில்லை. காணாமல் போயிருந்தான். சமூக வலைத்தளங்களில் entertainment போச்சே என்று சிலர் வருத்தப்பட்டார்கள். நான் ஒளிந்திருந்த ஒரு தீவிர இந்துத்துவ க்ரூப்பில் சர்ச் அவனைப் போட்டுத் தள்ளி விட்டது என்று ஒரு வதந்தி உலாவியது.
யாரவன் என்று நான் யோசித்தேன். ஏன் வெளியே முகம் காட்டவில்லை? இதை விட மோசமாகப் பேசுபவர்கள் பலர் வெளிப்படையாக உலாவுகிறார்கள் - பிறகு இவனுக்கு என்ன?
777AD என்று பொதுவாக இணையத்தில் தேடினால் ஒரு பயனும் இல்லை.
அவனுடைய கடைசி வீடியோவை மறுபடி போட்டுப் பார்த்தேன். அந்த presentation - அதில் பயன்படுத்திய சொற்கள். ஒரு வேளை அரசு ஊழியனோ? அது தான் பயப்படுகிறானோ?
அந்தத் தீவிர இந்துத்துவ க்ரூப்பில் போய்ப் பார்த்தேன் - பலர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள். அவர்களுக்கு தனித்தனியாக செய்தி அனுப்பினேன்.
"அன்புள்ள ________, ராம்சந்திரன் சில நாட்களாகக் காணவில்லையே? தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. Pay commission குறித்துச் சில சந்தேகங்கள் இருக்கின்றன."
பலரிடம் இருந்து பதில் வரவில்லை. இருவர், "எனக்கு அவரைத் தெரியாது," என்றார்கள். சிலர், "உனக்கு அவரைத் தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்," என்றார்கள்.
சும்மா drama ஆடுகிறான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு மத்திய அரசு அலுவலரிடம் போய்ப் பேசினேன்.
"கண்ட பையித்தியக்காரனையும் தேடிப் போகாதே," என்றார் நமசிவாயம்.
"இல்லை - இந்த 777AD இல்லை என்று நிரூபித்தால் அவன் பொய் சொல்கிறான் என்று எல்லாருக்கும் தெரியும் தானே? அப்படியாவது இவனைப் போன்றவர்களை நம்பாமல் இருக்கலாமே? Debunking என்று சொல்வார்கள்," என்றேன்.
"உண்மையில் இது போன்ற code எல்லாம் பட்ஜெட்டில் வராது. அது accounting statement-ல் தான் வரும்."
"அது எங்கே கிடைக்கும்?"
"நீ எல்லாம் சாதாரணமாகப் பார்க்க முடியாது. உங்கள் வயதில் எல்லோரும் கூகிளில் எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள். சோம்பேறிகள்," என்றார்.
ஆனால் மறு நாள் நமசிவாயத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
"You may have stumbled upon something," என்றார்.
"என்ன?" என்று கேட்டேன்.
"777AD இல்லை. ஆனால் 666AD என்று ஒரு code இருக்கிறது. 666 சர்ச்சுக்குப் பிடிக்காத நம்பர்"
நான் ஆச்சரியத்துடன், "அப்போ அவன் சொன்னதெல்லாம் உண்மையா?"
"பொறு - அதுவல்ல முதல் கேள்வி. இந்த statement-கு அனுமதி இருப்பவர்கள் நாட்டில் ஒரு நூறு பேர் தான். உன் ராம்சந்திரன் அவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும்."
இப்படித் தான் டில்லியில் ஒரு நாள் மாலை ராம்சந்திரன் என்னும் விநாயக் ராம் வீட்டிற்குப் போனேன். நூறு பேரில் அவனை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது - ஏனென்றால் அவன் மட்டும் தான் செத்துப் போயிருந்தான்.

நிதி அமைச்சகத்தில் தொழில் நுட்ப வல்லுனராக வேலை பார்த்திருந்தான் விநாயக் ராம். மனைவி, இரண்டு பிள்ளைகள். தமிழன் தான். இரவில் அரசுக் குடியிருப்பில் தன் கம்ப்யூட்டருடன் அமர்ந்து ராம்சந்திரனாக தனி உலகைப் படைத்திருந்தான். ஆனால் வீடு திரும்பும் போது திடீரென்று சாலையில் சுருண்டு விழுந்து இறந்தான்.
இதை வைத்துக் கொண்டு நான் எப்படி ராம்சந்திரன் சொன்னதை debunk செய்வது? கேட்பவன் எவனும் இது ஒரு அகஸ்மாத்தான மரணம் என்று நம்ப மாட்டான். ஏற்கனவே உலகமே தங்களுக்கு எதிர் என்று நினைப்பவர்கள் .
இன்னும் அந்த 666AD-யைத் தோண்ட வேண்டும்.
விநாயக்கின் வீட்டில் என்னை அவன் நண்பியாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஹாலில் ஒரு கம்ப்யூட்டர் மேஜை இருந்தது. தூசி சுற்றிப் படிந்திருந்தது.
"அவர் கம்ப்யூட்டரை நிதி அமைச்சகம் வந்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்," என்றாள் அவன் மனைவி. "என் பையன் இப்போது எப்படி படிப்பானோ?"
"அவர் பேப்பர்கள், Flash drive ஏதாவது விட்டுப் போனாரா? என்றேன்.
அவள் வினோதமாகப் பார்த்து, "இல்லை," என்றாள்.
இங்கே எதுவும் பெயராது என்று தெரிந்தது. விடுதியில் என் அறைக்குப் போய் யோசித்தேன்.
ராம்சந்திரனின் வீடியோக்களை எடுத்து மறுபடி பார்த்தேன். எது அவனை இப்படி வீடியோக்கள் போடத் தூண்டியது? என் தொலைபேசியில் அவன் அந்த ரகசிய accounting statement-ஐ அனுமதியின்றி தரவிறக்கம் செய்த தேதிகள் இருந்தன. நமசிவாயம் கொடுத்திருந்தார்.
முதல் வீடியோ அவன் வெளியிட்ட தினம் - 22-04-2021
அவன் download செய்த தேதி - 21-04-2021
666 என்பதை 777 என்று மாற்றிச் சொல்லியிருக்கிறான்.
அவனுடைய உண்மையான நோக்கம் ஒரு வேளை இந்த code-ன் முக்கியத்தை வெளியே கொண்டு வருவதோ? இந்த இந்து-கிறிஸ்த்தவம், சர்ச் எல்லாம் ஒரு பெரிய set-up என்று எனக்குத் தோன்றியது.
எங்கிருந்தோ வருவாய் இந்தியா அரசுக்கு 2010-ல் இருந்து வருகிறது. அது செலவழிக்கப்பட வேண்டும் அல்லவா? செலவுக் கணக்கில் இந்த code எங்காவது இருக்க வேண்டும். நமச்சிவாயத்திற்கு போன் செய்தேன்.
"அவன் தான் பொய் சொல்றான்னு தெரிஞ்சாச்சே, இன்னும் எதுக்கு அது பின்னால போற?" என்றார்.
"இல்ல, இது முழுசா தெரிஞ்சா தான் ஒரு logical conclusion."
"நோ," என்று விட்டு, வைத்து விட்டார்.
மத்திய அரசு மிகப் பெரியது. நூற்றுக்கணக்கில் கோடிகள் வந்த 666AD எங்கே போயிருக்கும் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
அதற்கும் ராம்சந்திரன் ஏதாவது வழி வைத்திருப்பான்.
மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு விமானம். அதற்கு முன்னால் விநாயக் ராம் மனைவிக்கு போன் அடித்தேன்.
"உங்க பெயர் என்ன?" என்று கேட்டேன், அவளிடம்.
"அதெல்லாம் பத்திரிகைல வேணாம்," என்றாள் அவள்.
"இல்ல, ராம்சந்திரன் சொந்த ஊர் எது?"
அந்தப் பக்கம் சிறு அமைதி நிலவியது. பிறகு அவன் மனைவி குரல் கேட்டது:
"யாரது ராம்சந்திரன்?"
"உங்களுக்கே தெரியுமே," என்றேன்.
அவள் சிறு மௌனத்திற்குப் பின், "நீங்க என் வீட்டுக்கு பக்கத்துல வர முடியுமா?" என்றாள். நான் நினைத்தது உண்மை தான். விநாயக் ராம் ஏதோ செய்தி விட்டுச் சென்றிருக்கிறான்.

அவள் கையில் ஒரு சிறு Flash drive இருந்தது.
"ராம்சந்திரன்னு யாராவது கேட்டுட்டு வந்தா இதைக் கொடுக்கச் சொன்னார்," என்றாள் அவள்.
நான் சென்னை திரும்பும் விமானத்தில் அந்த drive-ல் இருந்த கோப்புக்களை எடுத்துப் பார்த்தேன். அத்தனையும் ஸ்கேன் செய்யபட்ட கணக்கு வழக்குகள். 666AD என்னும் கணக்கில் வந்த பணம் சென்றது முதலில் Indian Medical Council என்னும் அமைப்புக்கு. 2010-ல் திட்டம் செய்யபட்ட ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அந்த fund (அது fund என்றே குறிப்பிடப்பட்டிருந்தது) சென்றிருந்தது. பிறகு சிறிது சிறிதாகப் பிரிந்து பிரிந்து பிற வருடங்களில் NEET என்னும் அந்தத் தேர்வின் செலவுகளுக்குப் பயன்பட்டது. எஞ்சிய பணம் (கணிசமான அளவு) கஜானாவின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
கடைசி பக்கத்தில் ஒரு சிறு screenshot இருந்தது. ஒரு மேலை நாட்டு அரசின் சீலுடன் ஒரு பக்கம் அதில் தெரிந்தது. அதன் தலைப்பு "Velikovsky fund" என்று எழுதப்பட்டு, அதற்கு நேராக 666AD என்று குறிப்பு.
இது சர்ச்சில் இருந்து வரும் பணம் அல்ல என்று எனக்குப் புரிந்தது. அந்த மேல்நாட்டு அரசிடம் இருந்து இந்தியாவிற்கு வருவது. கடனும் அல்ல; வெளி உதவியும் அல்ல. ஏதோவொரு சேவைக்குத் தரப்படும் நிதி.
அதோடு என் மனதில் ஒரு பயங்கர உணர்வு எழுந்தது - விநாயக் ராம் இறந்தது உண்மையில் விபத்து அல்ல. அவன் தன்னுடைய மரணத்தை எதிர்பார்த்திருக்கிறான். ஆனால் வெளியே தெரியாமல் இந்த "Velikovsky fund" குறித்து தூண்டில் போட்டு வைத்திருக்கிறான். அவனை யாராவது கொலை செய்திருந்தால் அவர்களுக்கு என்னைக் குறித்தும் தற்போது தெரிந்திருக்கும்.
விமானத்தில் சுற்றிப் பார்த்தேன். எல்லோரும் என்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. விமானத்தில் கொடுத்த உணவைத் தள்ளி வைத்தேன்.

Velikovsky என்பவர், நான் நினைத்தது போல ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. 1970-ல் காலமான அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி. அவருடைய புகழ் பெற்ற ஆய்வு, எலிகளின் குழு அமைப்புக் குறித்தாகும். ஆனால் இந்த ஐடியாவை அவர் அரசியல் துறையில் பயன்படுத்தினார். பொதுவாக, அரசாங்கம் தம் கொள்கைகளை வகுப்பதில் ஒரு குறைபாடு உண்டு. உதாரணத்திற்கு, 1930-ல் அமெரிக்காவில் மது விலக்கு கொண்டு வரப்பட்டது. சில வருடங்கள் அந்தக் கொள்கையின் கொடுமைகளைச் சகித்துக் கொண்ட பின், அந்நாடு மதுவிலக்கைத் திரும்பப் பெற்றது.
Velikovsky, அறிவியல் இது போன்ற கொள்கை முடிவுகளை எடுக்க அரசுக்குப் பயன்படும் என்று நம்பினார். அறிவியலில் நடைபெறுவது போன்ற பரீட்சார்த்த முறைகளை அரசியல் கொள்கைகளுக்கு கொண்டு வரலாம் என்றும் அவர் நினைத்தார். இதற்கு கீழ் மிருகங்களின் குழு அமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே அவருடைய பெரும் முயற்சியாக வாழ்க்கை முழுவதும் இருந்தது.
எனக்கு இதைப் பற்றிப் படிக்கத் தலை சுற்றியது. சென்னையில் விமானம் இறங்கும் போது என் மனதில் பெரும் சூறாவளி.
ஏனெனில் 2009-ல் அந்த மேலை நாட்டு அரசாங்கம், தம் நாடு முழுவதும் அது வரை இல்லாத மருத்துவ நுழைவுத் தேர்வைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அதன் ஆளும் கட்சியின் அப்போதைய தலைவர் கூறியிருந்தார்.
2010-ல் Velikovsky fund இந்தியாவிற்குப் பணம் அனுப்புகிறது. அந்தப் பணம் இந்திய மருத்துவக் கழகத்திற்குப் போய் ஒரு நுழைவுத் தேர்வு மசோதா தாக்கலாகிறது.
ஒரு வேளை Velikovsky-யின் கனவைப் போல இந்தியாவில் இந்தக் கொள்கையை பரீட்சித்துப் பார்க்கிறார்களோ? அப்படியானால் நாம் அல்லவா கீழ் மிருகங்கள்?

விமான நிலையத்தின் வெளியே கார்கள் வேகமாகச் சென்றன. என்னுடைய போன் இப்போது கண்காணிக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் என்னிடம் ஒரு துருப்புச் சீட்டு இருந்தது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி இந்த விஷயம் கிடைத்தால் சும்மா விடாது. எலிகளைப் போல, தம் மக்களை மற்றொரு நாட்டின் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்த நிச்சயம் விட மாட்டார்கள்.
திமுகவில் எனக்குத் தெரிந்த மூத்த பிரமுகர் ஒருவரிடம் பேசினேன். "உங்களை உடனே வந்து பார்க்க வேண்டும்," என்றேன்.
"வா," என்றார்.
டாக்ஸியில் கட்சி அலுவலகத்தில் நேராகப் போய் இறங்கினேன். ஒரு தனி அறையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
நமசிவாயத்திடம் இருந்து ஐந்து அழைப்புக்கள் வந்திருந்தன. Whatsapp-ல் "அவசரப்பட்டு எதுவும் செய்யாதே," என்று அனுப்பியிருந்தார்.
"சார் இப்போ வருவாங்க," என்று ஒரு உதவியாளர் சொல்லிச் சென்றார்.
"டிங்" என்றது Whatsapp. இது வரை பார்க்காத நம்பர்.
"Good evening Priya. For your kind attention while you wait for your knight in shining armor."
நான்கைந்து போட்டோக்கள் இணைக்கப்பட்டிருந்தன. வெளியே கூட்டத்தின் சத்தம் கேட்டது.
போட்டோக்களைப் பிரித்துப் பார்த்தேன்.
அதே மேலை நாட்டு சீல். "Velikovsky fund" 666AD - புது வரவுக் கணக்கு. ஆனால் வருடம் 2006.
அடுத்ததில் செலவுக் கணக்கு. இந்த முறை தமிழ் நாட்டு கோபுரம் சீல்.
"Abolition of TNPCEE - Entrance exams" என்று ஒரு தொகை சட்டசபை செலவில் போட்டிருந்தது.
அடப்பாவிகளா! உங்களுக்கும் பங்கா!
கதவைத் திறந்து உள்ளே வந்தவர்கள் என்னைப் பார்த்திருக்க மாட்டார்கள். முதல் மாடி பால்கனி வழியே இறங்கி விட்டேன்.

இரவு என் அறையில் மெலிதான வெளிச்சத்தில் அமர்ந்திருந்தேன். குரலை மாற்ற ஒரு machine. திரையில் Velikovsky எழுதிய வரிகள்.
"The scientific analysis of government policies will require long-drawn experiments with social groups, appropriately done on lesser animals with higher-order bonds"
Livechat-ல் முதல் கமெண்ட்: "சர்ச்சு பத்தி எதுனா சொல்லும்மா"

No comments: