Saturday, September 04, 2021

மறதி - சிறுகதை


 சண்டை போடும்  போது எனக்கும் என் மனைவிக்கும் இருக்கும் நினைவுக் கூர்மை ஆச்சரியம் அளிக்கும். வகையில் அதிகமாகி வந்தது. 

2000-த்தில் திருமணம் முடிந்த மறு நாள் கட்டுசாதக் கூடை எல்லாம் முடிந்து என் அப்பா சாமான்களை வேனில் ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார். பெண் வீட்டார் சிலர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மூட்டையை எடுத்து வைத்து விட்டு அப்பா அவர்களைப் பார்த்து, "Can you not help? Don't you have any manners?" என்று கத்தினார்.

இதை 2021-ம் வருடம் ஆவணி மாதம் முதல் தேதிச் சண்டையில் சொல்லிக் காட்டினாள் பிரேமா. 

"பெண் வீட்டுக்காரங்கள்னா அவ்வளவு இளக்காரம். வெளியில தான் liberal-னு நடிப்பு," என்றாள். 

"அவர் English-ல தான கத்தினார். உங்க குடும்பத்துக்குத் தான் புரியாதே," என்றேன் நான். 

இந்தச் சண்டையின்  முடிவில் இரண்டு பக்கமும் நன்றாகக் குத்திக் கிளறிய பின், இரவு பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகள் இருவரும் தூங்கி விட்டார்கள்.  

"நாம ரெண்டு பேருக்கும் நிறைய history இருக்கு, " என்றேன் நான்.  "அதான் இப்படிச் சண்டை வருது."

"நான் ஒரு article படிச்சேன். ஏதோ ஒரு unresolved issue நமக்குள்ள இருக்கு," என்றாள் அவள். "அதை நீங்க முதல்ல டாக்டர் கிட்ட போய் கண்டுபிடிக்கணும்."

"நான் எதுக்கு போகணும்? அதுவும் பையித்தியக்கார டாக்டர் கிட்ட?" என்றேன் நான். 

சில நாட்கள் சென்ற பின் மற்றொரு சண்டையில் தட்டுக்கள் எல்லாம் பறக்க ஆரம்பித்த பின் இருவரும் நிஜமாகவே ஒரு மனோதத்துவ நிபுணரை online-ல் பார்த்தோம்.  ஒரு மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய். மேலே ஒவ்வொரு அரை மணிக்கும் ஆயிரம் ரூபாய். 

"ரொம்ப பழசெல்லாம் போட்டுக் கிளர்ரா மேடம். ரெண்டு வாரம் முன்னாடி எங்க கல்யாணத்துக்கு  மறு நாள் வரைக்கும் போயிட்டா," என்றேன் நான். 

"இவருக்கு தேதி, டைம்  எல்லாம் நினைவிருக்கு மேடம். இவ்வளவு தூரம் பழசை எல்லாம் நினைவு வச்சிருந்தா அவரோட mental health-க்கு நல்லதில்லையே?" 

எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. 

"There is some unresolved issue," என்றாள் பிரேமா மறுபடி. 

நிபுணரைச் சில முறை சந்தித்த போதும் சண்டைகள் குறையவில்லை. 

ஒரு முறை அவர் சொன்னார், "நீங்க ரெண்டு பேரும் ஒரு pattern-ல set ஆயிட்டீங்க. கல்யாணம் ஆன புதுசுலையே வந்திருந்தீங்கன்னா இவ்வளவு bad memories accumulate ஆயிருக்காது."

நாங்கள் நிஜமாகவே வருத்தமடைந்தோம். பிள்ளைகள் இருவரும் இப்போது நாங்கள் கத்திக் கொள்ளும் போது ஒரு மாதிரி வேறு ஏதோ உலகத்திற்குப் போய் விடுவது தெரிந்தது. 

"Hypnosis முயற்சி பண்றீங்களா?" என்றார் நிபுணர். 

"அதுல எப்படி இதை சரி பண்ணுவீங்க?" என்று கேட்டாள் பிரேமா. 

"புது research இது பத்தி வந்திருக்கு. உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் உள்ள தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட கசப்பான நினைவுகளை மறக்கடிக்க suggestion கொடுக்கலாம்."

பிரேமா அந்த ஆராய்ச்சிக் கட்டுரை  வாங்கிப் படித்துப் பார்த்தாள். 

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் HR, hypnosis மூலமாக வேலை பார்ப்பவர்களின் negative நினைவுகளை மறக்கடித்திருந்தார்கள். இப்போது எல்லோரும் அந்தக் கம்பெனியில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பதாகத் தெரிவித்தாள்.  எல்லோரும் ஒரு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

"எனக்கு hypnosis work ஆகாது," என்றேன்.

"ஏன்?"

"எனக்கு மனோபலம் அதிகம்." 

"ஐயே!"

மனோதத்துவ நிபுணரிடம் சம்மதம் தெரிவித்தோம். 

"Hypnosisல தேதி அடிமனதுக்குத் தெரியாது. நீங்க ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவம், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவானது, கொண்டு வாங்க. அந்த சம்பவத்துக்கு முன்னால எல்லாத்தையும் மாத்திரலாம்." 

அடுத்த வாரம் நேரில் போவதற்கு நாள் குறித்துக் கொண்டோம்.

"முடிஞ்ச வரைக்கும் latest-ஆ ஏதாவது  choose பண்ணலாம். போன மாசம் உங்க cousin வீட்டு கல்யாணம் போயிருந்தோமே?" என்றாள் பிரேமா.

நான் யோசித்துப் பார்த்தேன். 

"ஆமா, ஆனா அதுக்கு அப்புறம் வந்த sunday நான் உன்னைப் பார்த்து கெட்ட  வார்த்தை சொல்லித் திட்டினேன்."

"அதுனால?" 

"அதுக்கு முன்னால எல்லாம் மறந்திட்டா நான் தான் இப்ப கெட்டவனா ஆயிருவேன். அது தான உன்னோட plan?"

"அப்படிப் பாத்தா நீங்க கெட்ட வார்த்தை சொல்லித் திட்டாத நாளே கிடையாது. அதுக்கு நான் என்ன பண்ண?"

"நீ என்ன பெசன்ட் நகர்ல டிரைவர் முன்னாடி அசிங்கம் பண்ணியே, அது தான் என் வாழ்க்கையிலேயே நான் publicல அவமானப்பட்டது. அதை நான் மறக்கிறதா இல்லை."

"அதுக்கு காரணம் உண்டு. நீங்க அன்னைக்கு என்ன பண்ணினீங்க?"

நான் ஒரு வினாடி நிதானித்து, "என்ன பண்ணேன்?" என்றேன். 

"நினைவில்லையா?" 

"நிஜமாவே இல்லடி!"

சற்று நேரம் இருவரும் மவுனமாக இருந்தோம். 

"இந்த இழவெல்லாம் எதுவும் வேண்டாம்," என்றேன் நான்.  


No comments: