Saturday, September 04, 2021

திராமில் - ஒரு ஆய்வு - சிறுகதை


 "சில நாட்களுக்கு முன்னால் என் மேற்பார்வையில்  ஆய்வு செய்யும்  ஆனந்த் என்பவன் ஒரு புதிர் ஒன்றைக் கொண்டு வந்தான்," என்றார் மேக்னஸ்.

பெரும் auditorium. கிரேக்க Colosseum போல  அமைக்கப்பட்டிருந்தது.  நடுவே அடித்த சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றார் மேக்னஸ். அவர் பின்னால்  இருந்த திரையில் வடிவம் புரியாத எழுத்துக்கள் தெரிந்தன. 

"இருபத்தியோராம் நூற்றாண்டின் முதலில் பிரபலமாக இருந்த பேஸ்புக் என்னும் இணைய தளத்தின் பழைய source code  மறைந்த கலிபோர்னியா மாகாணத்தின் இடிபாடுகளில் இருந்து  சென்ற வருடம் எடுக்கப்பட்டது. ஆய்வாளர்களால் அந்த கணினி மொழியில் இருந்து லட்சக்கணக்கான பேஸ்புக் பதிவுகளை மீட்க முடிந்தது. "

திரையில் பல வரிவடிவங்கள் ஓடி பின் ஒன்று நிற்கிறது.

"ஆனந்த் பழைய தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில்  உள்நாட்டுப் போரில் இருந்து  தப்பித்த அவனுடைய பாட்டனாரின் பாட்டனாரின் குடும்பம் அகதிகளாகப் பின்லாந்திற்கு வந்து சேர்ந்தது. சென்ற நான்கு தலைமுறைகளாக ஃபின்னிஷ் மொழி பேசும் அவர்கள், அதற்கு முன் ஆங்கிலம் பெரிதும் கலந்த ஒரு மணிப்பிரவாள மொழியைப் பேசி வந்தார்கள்.

"அந்த மறைந்த மொழியின் வரி வடிவமே நீங்கள் பின்னால் பார்ப்பது."

திரையில் வெள்ளைப் பின்னணியில் சில வரிகள் மிளிர்கின்றன.

"இந்த இறந்த மொழியின் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள், மீட்டெடுத்த பேஸ்புக்கின் தளத்தில், புதிய ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. அவற்றின் சில புகைபடங்கள் மேலே. இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியவர் யாரும் தற்போது உயிருடன் இல்லை."

அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒரு முணுமுணுப்புப் பரவியது. மேக்னஸ் திரும்பி ஓரமாக நின்ற ஆனந்தைப் பார்த்துப் புன்னகைத்தார். 

"நீங்கள் நினைப்பது சரியே. சிந்து சமவெளியின் எழுத்துக்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னே தம் ரகசியத்தை கைவிட்டன. இது என்ன பிரமாதம்? இல்லையா?"

"ஆனந்தும் நானும் இந்த மொழியின் முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்தோம். எஞ்சி இருக்கும் தென்னிந்தியாவில் இந்த மொழியை யாரும் பேசுவதில்லை. பேராசிரியர் கார்லோஸ் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்த மொழியை கடைசியாகப் பேசிய வயதானவர் ஒருவரை ஒலிப்பதிவிட்டார். அந்தப் பதிவு இதோ."

அரங்கின் ஒலிபெருக்கிகள் கரகரத்தன. முனகும் குரலில் யாரோ ஒருவர் பேசுவது கேட்டது. கீழே திரையில், "டென் ருபீஸ் ...." என்று  வந்தது. 

"பெரியவர் முதலில் சொல்வது ஆங்கிலம்," என்றார் மேக்னஸ். "இந்திய பணமான ரூப்யா என்பதைச் சொல்கிறார். டென் என்பது ஆங்கிலச் சொல் - பத்து என்று பொருள். பத்து ரூப்யா என்று அவர் சொல்வது புரிகிறது. பிறகு? பல முயற்சிகளுக்குப் பின்னும் அவர் கடைசியில் சொல்வது என்ன என்று புரியவில்லை. அது இந்த மர்ம மொழியாகவும் இருக்கலாம். அல்லது ஆங்கிலமாகவும் இருக்கலாம். "

"இந்த நேரத்தில் தான் பேஸ்புக்கின் அகழ்வாராய்ச்சி நமக்கு உதவுகிறது. இது போன்ற இறந்த மொழிகளை மட்டுமின்றி, அதைப் பேசியவர்களின் வாழ்க்கையைக் குறித்தும், அவர்கள் ஆசாபாசங்களைக் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. கடைசியில் ஆனந்துக்கு இது ஒரு வகை தனிப்பட்ட வெற்றி.

"ஆனந்தின் வீட்டில் இந்தப் பழைய மொழியை திராமில்  என்று அழைத்தார்கள். இந்த மொழி மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாகவும், ஆனால் இதில் ஒரு வரி கூடப் படிக்கத் முடியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான நிலை. இருபதாம் நூற்றாண்டில், இந்த திராமில் மொழி புழக்கத்தில் இருக்கும் போது இந்நிலை  கட்டாயம் இருந்திருக்காது."

"ஆனந்த், வா," என்றார் மேக்னஸ்,

ஆனந்த் வந்து அவருக்கு அருகில் இருந்த மைக்கை எடுத்துக் கொண்டான். அவன் குடும்பத்தில் பின்லாந்தினருடன் கலப்பு இருந்திருப்பது நன்கு தெரிந்தது. 

"திராமில் மொழியில் நமது காவியமான கலேவலாவிற்கு நிகராக பல காவியங்கள் இருந்ததாக என் தாத்தா சொல்வார். அந்தக் காவியங்களைக் குறித்தும் அவற்றின் ஆராய்ச்சியிலும்  பேஸ்புக்கில் பல விவாதங்கள் நடந்திருக்கும் என்பது என் அனுமானமாக இருந்தது. 

"சுத்தமாக வடிவம் தெரியாத இந்த மொழியை decode செய்ய நான் முதலில் கையில் எடுத்தது பேஸ்புக் அகழ்வாராய்ச்சியில் பழக்கமான ஒரு technique.பொதுவாக பேஸ்புக்கில் நடக்கும் விவாதங்களில் 'பேஸ்புக்" என்னும் சொல்லே பல முறை வருவதை அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு கணிப்பின்படி கிட்டத்தட்ட இரண்டு  சதவிகிதம் சொற்கள் சராசரியாக  பேஸ்புக் என்றே வருகின்றன.

"திராமில் மொழியை இது போல ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மேலே இரண்டு சதவிகிதம் வரும் சில வரிவடிவங்களைக் கொடுத்திருக்கிறேன்."

திரையில், 

"முகநூல்"

"துரோகி"

"பெரியார்"

"தமிழன்"

"வந்தேறி"

என்று புரியாத வரிவடிவங்கள் வருகின்றன. 

"முதலாவதான 'முகநூல்' என்னும் வரிவடிவத்தை Facebook என்று எடுத்துக் கொண்டால் திராமிலில்  நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன. Facebook ஆங்கிலச் சொல்லிலும் நான்கு மாத்திரைகள் இருக்கின்றன. இது நல்ல candidate என்று எண்ணி "மு" என்பதே Pe என்னும் syllable என்று கருதினோம். ஆனால் விரைவில் இது தவறு என்று தெரிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத உழைப்பு வீணாகிற்று. "

"அப்பொழுது என் பாட்டி தம் சிறு வயதில் நினைவு கூர்ந்ததை வைத்து திராமில் மொழியில் ஆங்கில பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கும் பழக்கம் உண்டு என்று தெரிவித்தார். பாட்டி இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்."

அரங்கில் சிரிப்பு பரவியது. 

"இந்த மொழியை எளிதில் உடைக்க முடியாது என்று தெரிந்து கொண்டோம். பேஸ்புக்கில் பழைய திராமிலர்கள் ஒளித்து வைத்துள்ள ரத்தினங்களைப் பெற முடியுமா என்று பரிதவித்தேன். அப்போது பேராசிரியர் ஆண்ட்ரூவை இங்கிலாந்தில் போய்ப் பார்த்தேன்.

"ஆண்ட்ரூ பேஸ்புக்கில் விளிம்பு நிலை  என்னும் புத்தகத்தை எழுதியவர். அவர் ஒரு முக்கியமான கோட்பாட்டை முன்வைத்தார் - அதாவது இருபத்தியோராம் நூற்றாண்டின் சமூக வலைத்தளங்கள், ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சரணாலயமாக இருந்தன. ஒரு சர்வாதிகார நாட்டில்  இந்த ஒடுக்கப்பட்டவர்கள் பொதுவாக ஜனநாயகத்திற்குப் போராடுபவர்கள். ஆனால் ஒரு ஜனநாயகத்தில்? நான் ஆய்வு செய்த காலத்தில், ஜனநாயக இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த திராமிலரில்,  யார் ஒடுக்கப்பட்டவர்கள்? அவர்களுடைய பதிவுகளே பேஸ்புக்கில் பெரிதும் இருக்கும். 

"நான் திரும்ப பின்லாந்து வரும் போது யோசித்தபடி வந்தேன். ஜனநாயக இந்தியா என்றார் ஆண்ட்ரூ. ஆனால் இந்தியா அப்போது வெறும் ஜனநாயகம் அல்ல. மதசார்பற்றது!"

கூட்டத்தில் பலர் தலையை ஆட்டினர்.

"என்னுடைய தியரி உண்மையானால் மதசார்பற்ற நாட்டில் மத நம்பிக்கையுள்ளவர்களே அல்லவா ஒடுக்கப்பட்டவர்கள்? ஆனால் இதை எப்படி நான் ருசுப்படுத்துவது? 

"இங்கே எனக்கு இந்தியாவின் மற்றொரு அம்சம் உதவியது. இந்தியாவின் பழைய அரசியல் சட்டம் இந்தியாவைப் பொதுவுடைமை நாடு என்றும் அழைத்தது. அப்படியானால் பொதுவுடைமைக்கு எதிரான முதலாளித்துவ ஆதராவளர்களே அப்போது பெரிதும் பேஸ்புக்கில் எழுதி வர வேண்டும். அதிர்ஷ்ட வசமாக முதலாளித்துவர்கள், முதலீடு அறிவுரை செய்பவர்கள் பலர் ஆங்கிலத்தில் எழுத கூடியவர்கள்.

"சென்ற கிறிஸ்துமஸ்  இரவு பேஸ்புக்கில் இது போன்ற ஆங்கிலப் பதிவுகள் எந்த அளவுக்கு முதலாளித்துவ ஆதரவு என்று பார்த்தேன். மறு நாள் விடை தெரிந்தது. கிட்டத்தட்ட  தொண்ணூறு சதவிகிதம் நான் நினைத்தது போலவே இருந்தது. இந்த விடையை எடுத்துக் கொண்டு பேராசிரியர் மேக்னஸை அணுகினேன்."

மேக்னஸ் இப்போது தொடர்ந்தார். 

"புதிரை அவிழ்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். மதசார்பற்ற இந்தியாவில் மத நம்பிக்கை உள்ளவர்களே பெரும்பாலும் பேஸ்புக்கில் திராமில் மொழியில் எழுதுபவர்கள். அவர்களுடைய பதிவுகளை இந்த ஞானத்தோடு அணுகினால்,  ஐம்பது சதவிகிதம் அவர்கள் பயன்படுத்தும் சொற்களை புரிந்து கொண்டு விடலாம். இந்த அடிப்படையில் திரையில் உள்ள சொல்லே திராமிலின் "Pa" என்னும் syllable.முதலில் நாம் decode செய்தது இதுவே."

"ப" என்று திரையில் வந்தது. 

கரகோஷம் அரங்கில் எழுந்தது. 

"இது "na"," என்றார் மேக்னஸ்.

"ன" என்று திரையில் வந்தது. 

அரங்கில் ஒருவர் கையில் மைக் எடுத்தார்.

"மேக்னஸ், ஆனந்த், உங்கள் கணிப்புப்படி அதிக சதவிகிதம் வந்த சொற்கள் அவர்களுடைய மதம் குறித்த சொற்களா? அது என்ன மதம்? அவை என்ன சொற்கள்?"

மேக்னஸ் தலையாட்டினார்.

"நாற்பது சதவிகிதம் வந்த சொற்கள் என்று கீழே உள்ள இரண்டையும் சொல்லலாம்."

திரையில் 

"பார்ப்பான்"

"பார்ப்பனீயம்" 

என்று வந்தது. 

ஆனந்த், "பாட்டி சொன்னது போல அவர்கள் தம்மையே பெரிதும் refer செய்து கொள்கிறார்கள். முதலாவது அவர்கள் இனத்தின் பெயர் - பார்ப்பான். அத்துடன் "ஈயம்" என்னும் விகுதி சேர்ந்தால் அது "பார்ப்பான்களின் வழி," அல்லது "நெறி" என்று கொள்ளலாம்.  பழைய திராமிலர்களின் பேஸ்புக் பயன்பாடு வைத்து நாம் தெரிந்து கொள்வது இதுவே- அவர்கள் பார்ப்பனீயத்தை பின்பற்றியவர்கள். அதனிடம் பெரும் பக்தி கொண்டவர்கள்"

No comments: